நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 24 டிசம்பர், 2010

குறுந்தொகை இன்பம்

புதுச்சேரியில் எனக்கு வாய்த்த நண்பர்களுள் பிரஞ்சுப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். வாழ்க்கையில் பல தெளிவுகளைக் கண்டு உணர்ந்து அதன்படி அமைதியாக வாழ்ந்து வருபவர். அறிஞர் மு.வ. போலும் குறிக்கோள் வாழ்க்கை வாழ்பவர். நம் போல் உலகியல் மாந்தர்களால் அவரின் சிறப்பை உணர இயலாது.

பேராசிரியர் அவர்கள் அவ்வப்பொழுது தமிழ் இலக்கியம் சார்ந்து உரையாட நம் இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் வருவார். பிரஞ்சு இலக்கியம் பற்றியும் உரையாடுவோம். பல பிரஞ்சு சிறுகதைகளை மொழிபெயர்த்து வழங்கும்படி அவரைத் தூண்டிப் பெற்று இதழ்களில் வெளியிட்டதும் உண்டு.

அண்மையில் குறுந்தொகையைப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வழங்கும்எண்ணத்தைப் பேராசிரியர் முன்மொழிந்ததும் அதற்குரிய திட்டமிடலில் கலந்துகொண்டேன். அவர்களும் ஈடுபாட்டுடன் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்து வருகின்றார்கள். அது தொடர்பாக அவ்வப்பொழுது பல ஐயங்களை எழுப்புவார்கள். இப்பொழுது பேராசிரியர் நாயக்கர் அவர்கள் குறுந்தொகை சார்ந்த பல செய்திகளை ஆழமாக அறிந்துள்ளார் என்பதறிந்து மகிழ்கின்றேன். இதே நிலையில் அவர் உழைத்தால் சங்க நூல்களை மிகச்சிறப்பாக அவரால் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்க்கமுடியும்.பிறநாட்டு அறிஞர்கள் பெயர்ப்பதற்கும் தமிழைத் தாய்மொழியாக அறிந்தவர்கள் பெயர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பேச்சின் ஊடே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் செழுமையான சில பாக்களையும் பிரஞ்சில் மொழிபெயர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

இப்பொழுது பிரஞ்சுப் பேராசிரியரின் வினாக்கள் எனக்குக் குறுந்தொகையைப் புதிய பார்வையில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதலை உண்டாக்கியுள்ளது. கல்லூரியில் பயின்றபொழுது குறுந்தொகை உ.வே.சாமிநாதையர் பதிப்பைப் படித்தோம். அதன் சிறப்பை எழுதி உணர்த்தமுடியாது. பெரும்பேராசிரியர் உ.வே.சா. போலும் உழைக்க இன்று ஆள் இல்லை.

பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் அவர்கள் குறுந்தொகையைப் பெயர்த்து வரும்பொழுது அவருக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள தமிழ் இலக்கணம், இலக்கியம் பயின்றவர்கள், விலங்கியல், நிலைத்தினையியல் பயின்றவர்களை அண்மிப் பல உண்மைகளைக் கண்டுகாட்டியுள்ளார். மருத்துவம் சார்ந்த சில நூல்களையும், அகரமுதலிகள்,பல்வேறு குறுந்தொகைப் பதிப்புகளையும் ஒப்பிட்டு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாகப் பிரஞ்சுமொழியில் குறுந்தொகையை உருவாக்கி வருகின்றார்.

அவ்வாறு பணிசெய்யும் பேராசிரியரின் தந்தையார் அவர்கள் உடல் நலமிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிந்து ஓரிரு நாளுக்கு முன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்தேன். தந்தையாருக்குப் பணிவிடை செய்தபடி ஓய்வான நேரத்தில் தம் குறுந்தொகை மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்து வருகின்றார். நான் இருமுறை சென்று அவருக்கு உதவியாக உரையாடினேன்.
குறுந்தொகையில் எங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை எழுதினால் அறிஞர்களுக்கு அது உவப்பான செய்தியாக இருக்கும் என்று எழுதுகின்றேன்.

குறுந்தொகையில் யானை குளகு(தழை-செந்தமிழ் அகராதி ந.சி.கந்தையா) என்பதை உண்டதும் அதற்கு மதம் பிடிக்கும் என்று ஒரு குறிப்பு வருகின்றது. குளகு என்பது தழையா? செடியா? கொடியா? பூவா? என்பது அறியாமல் திகைத்தோம். தழை என்றே அறிஞர்கள் குறிக்கின்றர்.அவ்வாறு என்றால் அந்தத் தழை எப்படி இருக்கும்? இன்று உள்ளதா என்று அறிய விரும்பினோம். பி.எல்.சாமி இது பற்றி என்ன எழுதியுள்ளார் என்று பார்க்க வேண்டும் என்று பல நூலகங்களுக்கு அலைந்து அவர் எழுதிய கழகப் பதிப்பிலான நூல் ஒன்றைப் பெற்றேன்.

அதில் குளகு பற்றிய விவரம் இல்லை. நாம் அறிந்த புன்னை,காந்தள்,முருக்கம்,தாழை போன்றவற்றை அறிஞர் சாமி அவர்கள் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும் காட்டுத்துறையில் அதிகாரியாகப் பணிபுரியும் என் அருமை நண்பர் திரு.இலதானந்து அவர்களுக்கு இதுபற்றி விவரம் வேண்டி மின்னஞ்சல் விடுத்தேன்.அவரும் வழக்கம்போல் தரும் விடைகளைத்தான் தந்தார். நாகர்கோயில் திரு.செல்வதரனைத் தொடர்புகொண்டேன். அவர் மலையின மக்களுடன் தொடர்புடையவர்.அவர் வினவிச் சொல்வதாகத் தப்பித்தார். குளகு பற்றி மேலும் தொடர்புடையவர்களையும் வினவியவண்ணம் உள்ளேன்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி என்பதால் உண்மை காண சில காலம் ஆகலாம். இது நிற்க.

காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
குளகுமென் றாண்மதம் போலப்
பாணியு முடைத்தது காணுனர் பெறினே(136)

(பொருள்: காமம் காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்; அக் காமம் புதியதாகத் தோன்றும் வருத்தமும் அன்று; உடலில் தோன்றும் நோயும் அன்று.
கடுத்தலும்(மிகுதலும்),தணிதலும் இன்று; யானை குளகு என்ற தழையுணவை மென்று தின்று அதனால் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால்
அக்காமம் வெளிப்படும் சிறப்பினை உடையது).

அடங்கியிருந்த யானையின் மதம் குளகு என்ற தழையுணவை உண்டதும் வெளிப்படுவதுபோல ஊழின் வலிமையல் காணற்குரியவரைக் காணப்பெறின்
இயல்பாக உள்ளத்தில் அடங்கியிருந்த காமம் வெளிப்படும் என்று உவமையை விரித்தால் பொருள் புலப்படும்.

சிந்தாமணியிலும் நச்சர் உரையில் " குளகுபோல் மதத்தை விளைவிப்பவள் இவளும் ஆதலால் விடுத்தலரிதென்றான்"(சிந்தமணி உரை 750) என்று குளகு பற்றிக் குறித்துள்ளார்.

மேலும் மதம் கொண்ட யானையின் மத்தகம் வாழையின் குருத்தைத் தடவும்பொழுது மதம் அடங்கும்(வலிமை அழியும்) என்று ஒரு குறிப்பு வருகின்றது.

" சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை யருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்கு துயருற்ற மையல் வேழம்"( குறுந்தொகை 308)

யானைக்கும் வாழைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி (அகம் 302-1-4),அகம் 8- 9-11) என்னும் சங்க நூல் வரிகளாலும் இதனை உறுதிசெய்துகொள்ளலாம்.

எனவே யானைக்குக் குளகு உண்டால் மதம் பிடிக்கும் என்றும் வாழை இலையின் குருத்து மதத்தை நீக்கும் என்று குறுந்தொகை வழியாக அறியமுடிகின்றது

வாழையினால் யானையின் வலி கெடும் என்றது " யானைக்கு வாழைத்தண்டு,ஆளுக்குக் கீரைத்தண்டு" என்று சிற்றூரில வழங்கும் பழமொழியாலும் உணரலாம் என்று உ.வே.சா பழமொழியை எடுத்துக்காட்டுகின்றார்.

இது பற்றி பிரஞ்சு நாட்டுப் பேராசிரியர் செவியார் அவர்களிடம் உரையாடியபொழுது அவர் புதுமைச்செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.அவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரையை எழுத்தெண்ணிக் கற்றுப் பிரஞ்சுமொழியில் மொழிபெயர்த்தவர்.சேனாவரையர் உரையில் இடம்பெறும் (தொல்.சொல். நூற்பா 37 உரை) "யானைநூல் வல்லானொருவன்" என்னும் தொடரை எடுத்துக்காட்டி யானை இலக்கணம் குறிப்பிடும் நூல் தமிழில் இருந்ததையும் "கஜ சாஸ்திரம்" என்னும் நூல் சரசுவதிமகால் நூலகத்தில் உள்ளது என்றும் குறிப்பிட்டு யானை நூல் படித்தால் நான் தேடுவதற்கு விடை கிடைக்கலாம் என்று ஒரு குறிப்பை விளக்கினார்.
இதுவும் நிற்க.

குறுந்தொகை 394 ஆம் பாடலிலும் ஓர் ஐயத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்பராய நாயக்கர் எழுப்பினார்.

"முழந்தா ளிரும்பிடிக் கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமக ளீன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னா ளினிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்தந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே"(குறுந்தொகை 394)

பொருள்: முழந்தாளையுடைய கரிய பிடியினது மென்மையான தலையையுடைய கன்று, கள் மிகுந்த மலைப்பக்கத்தில் உள்ள ஊரில் குறத்தி பெற்ற குறிய கைச்சந்தையுடைய பிள்ளைகளோடு சுற்றி விளையாடி இனிமை தந்தது. முன்பு இனிமை தந்த யானைக்கன்று வளர்ந்து பின்னாளில் அவர்களின் தினையை மேய்ந்து துன்பம் தரும். அதுபோல் தலைவன் முன்பு இனியவனாக இருந்து மகிழ்ச்சியைத் தந்தான்.இப்பொழுது அவன் நட்பு அமையாததால் துன்பம் தருகின்றான் என்பது பாடலின் பொருள்.

இப்பாடல், வரைவை(திருமணத்தை) இடைவைத்துத் தலைவன் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, தலைவன் முன்பு இனியனாகத் தோன்றி இப்பொது இன்னாமைக்கு ஏதுவானான் என்று தோழி கூறியதாகத் துறை விளக்கம் உள்ளது.

இங்குக் குறியிறை என்பது என்ன? என்று பேராசிரியர் நாயக்கர் அவர்கள் வினா எழுப்பினார்.
நன்று கடாவினீர்கள் என்று நான் உரைத்துக் குறியிறை என்பது என்ன எனப் பெருமழைப் புலவர் உரையைப் பார்த்தேன். குறிய இறை என்பது யகரம் குறைந்து குறியிறை என்று விளக்கம் இருந்தது. உ.வே.சா குறியிறை என்பதற்குக் குறிய கைச்சந்தையுடைய என்று விளக்கம் தருகின்றார்.இறை என்பதற்கு முன்கை என்று ஒருபொருள் உண்டு.அதன் காரணமாக உ.வே.சா.அவர்கள் இவ்வாறு குறித்தனர் போலும்.

பாடலை இயற்றியவர் உவமையால் பெயர் பெற்ற புலவர் ஆதலால் குறியிறையார் எனப்பட்டார்ர். எனவே குறியிறை பற்றி ஆய்வது இங்கு ஆய்வுக்கு ஆழமான காரணமானது. எனவே குறியிறை என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டியுள்ளது என நினைந்து முதுபேரறிஞர் சோ.ந.கந்தசாமி ஐயாவிடம் என் வேட்கையுரைத்தேன்.ஐயா அவர்கள் மிக எளிதில் தீர்த்து வைத்தார்கள்.

குறியிறை என்பது சிறுவீடுகளில் உள்ள தாழ்ந்த பகுதியைக் குறிக்கும் இறவாறம்(பேச்சு வழக்கில் இறவாணம்) என்று குறிப்பிட்டார். மேலும் புறநானூற்றின் 129 ஆம் பாடலில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலில் "குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்" எனவரும் பாடலடியை எடுத்துக்காட்டி அதன் பழைய உரையில் குறியிறை என்பது குறிய இறப்பையுடைய சிறிய மனை என்று இடம்பெறுவதை ஐயா சோ.ந.க அவர்கள் குறிப்பிட்டு உ.வே.சா அவர்கள் இந்தத் தொடரைக் குறுந்தொகையில் உரைவரையும்பொழுது எடுத்துக்காட்டடாமல் போனமைக்குக் காரணம் விளங்கவில்லை என்றார்.

காளமேகப் புலவன் சிவனையும் சிட்டுக்குருவியையும் இருபொருள்படப் பாடும்பொழுது இறப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதையும் அப்பேரறிஞர் இணைத்துக்காட்டினார். மகிழ்ந்தேன்.அதாவது குறுகிய சிறு வீட்டுப்பகுதியில் விளையாடிய குறக்குடிச்சிறார் என்ப்பொருள் காண்டல் சிறக்கும் என நினைக்கின்றேன்.

இவ்வாறு சில ஐயங்களைப் பேராசிரியர் எழுப்பியதும் நுண்பொருள் காணும் நோக்கில் குறுந்தொகையைச் சிந்தித்து வருகின்றேன்.

முன்பு ஒருமுறை வகுப்பில் ஒருமணி நேரம் ஒரு பாடலைப் பாடமாகப் பயிற்றுவித்தேன். குறுந்தொகையின் அந்த நெஞ்சங் கவர்ந்த பாடல் நினைவுக்கு வந்தது.

தலைவன் இரவுப்பொழுதில் தலைவியைச் சந்திக்க வருகின்றான். அவனுக்குத் தோழி கூறியது.

கடும் மழைக்காலம். எங்கும் கருமுகில்கள் திரண்டு மழைத்துளி வீழ்வதால் வானத்தைக் காண முடியவில்லை. நிலம் முழுவதும் நீர்ப்பெருக்கு. எனவே பாதை தெரியவில்லை. கதிரவன் மறைந்த இருட் காலம் ஆதலின் பலரும் உறங்கும் நடு இரவு. வேங்கை மரத்தின் மலர்கள் மணம் வீசும் எங்கள் ஊருக்கு எவ்வாறு வந்தனையோ? உயர்ந்த மலையையுடையத் தலைவனே! என்று தோழி வினவுகின்றாள்.

இந்த வினவுதலில் இரவுப்பொழுதில் வந்தால் உயிருக்கு அச்சம் ஏற்படும் எனவும் எனவே தலைவியை விரைவில் வரைந்துகொள்வாயாக(திருமணம் முடித்துக்கொள்வாயாக) எனவும் குறிப்பை இப்பாடலில் பாவலர் பொதிந்து வைத்துள்ளார்.

மழைக்காலக் காட்சியை இதைவிட ஒரு புலவனால் மிகச்சிறப்பாகப் பாடிவிடமுடியாது அல்லது ஓவியனால் ஒரு படம் வரந்து விளக்கிவிடமுடியாது.அல்லது திரைக்கலைஞனால் காட்சிப்படுத்திவிட முடியாது என்ற எண்ணத்தை இப்பாடல் உணர்த்துகின்றது.

"பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
நீர்பரந்த தொழுகலி னிலங்கா ணலையே
எல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே" (குறுந்தொகை 355)

பாடலின் பொருள்: உயர்ந்த மலைநாட்டுக்கு உரிய தலைவனே! மழை எங்கும் பெய்து பரவி இடத்தை மறைப்பதால் வானத்தைக் காண இயலாது. அந்த மழையின் நீர் எங்கும் நிறைந்து இருப்பதால் நிலத்தையும் காண இயலாது. மேலும் கதிரவன் மறைந்ததால் இருளும் மிகுதியாக உள்ளது; இந்த நிலையில் பலரும் உறங்கும் நள்ளிரவுப்பொழுதில் வேங்கை மலர் மணம் வீசும் எமது சிற்றூரை எங்ஙனம் அறிந்து வந்தனையோ?

இவைபோல் இன்னும் சில பாடல்களை அசைபோடுவோம்!.தமிழ் இலக்கிய இன்பம் நுகர்வோம்.

2 கருத்துகள்:

chockalingam சொன்னது…

ஐயா குறுந்தொகை ஆய்வு சிறப்பாக உள்ளது. இன்னும் ஆய்வு செய்யுங்கள்.
சொக்கலிங்கம்

Thamizhselvan சொன்னது…

Very good attempt by Dr. Mu.E. Translating these tamil literature will bring the fame of Tamil to the new high ends.