ஞாயிறு, 19 டிசம்பர், 2010
சு.ஆடுதுறை இணையப் பயிலரங்கம் நிகழ்ந்தமுறை
கரு.மலர்ச்செல்வன் அறிமுக உரை
18.12.2010 இல் பெரம்பலூர் மாவட்டம் சு. ஆடுதுறையில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று ஆறு திங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டோம். அமெரிக்காவில் வாழும் பொறியாளர் கரு.மலர்ச்செல்வன் அவர்கள் தம் பிறந்த ஊரான சு.ஆடுதுறையில் அறிவகம் என்னும் பெயரில் நூலகம் ஒன்று மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி நடத்தி வருகின்றார். அதன் சார்பில் அந்த ஊரில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும்
வண்ணம் அங்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த ஊரில் இணைய இணைப்புக்கு முயன்றும் நிலையான இணைய இணைப்பு பெறமுடியவில்லை.
நான் இதற்காக என் ஏர்டெல் மொபைல் மோடத்தின் பயன்பாடு சரியில்லை என நினைத்து ரிலையன்சு மொபைல் மோடம் 2300 உருவா கொடுத்துப் புதியதாக வாங்கினேன். அதுவும் அந்த ஊரில் செயல்படவில்லை. வோடாபோன் மொபைல் மோடம் சிறப்பாக இயங்கியது என்று அறிந்து தம் அலுவலக நண்பர்கள் வழியாக ஆய்வுசெய்து வோடாபோன் இணைப்பைக் கரு.மலர்ச்செல்வன் சிறப்பாக இயங்கும்படி முன்பே வாங்கச் செய்தார்.
மொபைல் மோடம் வாங்கும் தோழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வோடாபோன் மொபைல் மோடம் சிற்றூர்ப்புறத்திலும் சிறப்பாக இயங்குவதை நேரடியாக உணர்ந்தேன். எனவே வோடாபோன் மொபைல் மோடத்தை வாங்கலாம் என்று நினைக்கிறேன். இது நிற்க.
18.12.2010 வைகறை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்குப் புதுவைப் பேருந்து நிலையில் பேருந்தேறினேன். கடலூர், வடலூர், வழியாகத் திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) சென்றேன். காலைச்சிற்றுண்டியை அங்குள்ள ஓர் உணவகத்தில் முடித்தேன். பேருந்தில் செல்லும்பொழுது கரூர் வழக்கறிஞர் இராசேந்திரன் அவர்களுக்கும் பிற இணைய அன்பர்களுக்கும் குறுஞ் செய்தியாக இன்றைய நிகழ்ச்சி பற்றி செய்தி அனுப்பினேன்.ஒரிசா பாலு, பேராசிரியர் இரா.சந்திரசேகரன் உள்ளிட்ட சிலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.இதனிடையை என் திருமுதுகுன்ற நண்பர் புகழேந்தி வந்து உணவகத்தில் இணைந்து கொண்டார்.
இருவரும் திருமுதுகுன்றத்தில் பேருந்தேறிப் பெண்ணாடம், திட்டக்குடி வழியாக ஆக்கனூர் செல்லச் சீட்டு வாங்கினோம். திட்டக்குடியைத் தாண்டிப் பேருந்து புறப்பட்டது. ஆக்கனூரில் இறங்கினால் ஆற்றைக் கடக்க முடியாதபடி வெள்ளாற்றில் தண்ணீர் ஓடுகிறது. வர இயலாது. எனவே திட்டக்குடியில் இருக்கும்படியும் உடனே ஒரு மகிழ்வுந்தில் எங்களை அழைத்துக் கொள்வதாகவும் கரு.மலர்ச்செல்வன் பேசினார். நாங்களும் திட்டக்குடி எல்லையிலேயே இறங்கி நின்றோம். கால் மணி நேர இடைவெளியில் ஒரு மகிழ்வுந்து வந்தது. அதில் ஏறி ஆற்றின் தரைப்பாலம் வழியாக அக்கரையை அடைந்து ஆடுதுறை நோக்கிச் சென்றோம். அண்மையில் பெய்த மழை தென்னார்க்காடு மாவட்டத்தையே அடித்துக்கொண்டு போய்விட்டதுபோல் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. அரைமணி நேர ஓட்டத்தில் பத்து மணிக்குச் சு.ஆடுதுறையை அடைந்தோம்.
எங்களின் வருகைக்காகக் கரு.மலர்ச்செல்வன் காத்திருந்தார். அவரின் உறவினரும் பொறியாளருமான திரு.கௌதமன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காகச் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். கரு.மலர்ச்செல்வனின் தமிழ் உள்ளத்தை அந்த அறிவக நூலகம் எனக்குக் காட்டியது. கரு.மலர்ச்செல்வனை இன்றுதான் முதன்முதல் சந்தித்தேன். இவ்வளவு நாளாக ஓர் உண்மைத் தமிழன்பரைக் காணாமல் இருந்தோமே என்று நாணினேன். அறிவகத்தை முதுமுனைவர் இரா.இளங்குமரனார், முனைவர் இரா. திருமுருகனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்னின்று திறந்து வைத்துள்ளனர் என்பதை அங்குள்ள கல்வெட்டு வழி அறிந்து மகிழ்ந்தேன்.
தமிழ் இணையப் பயிலரங்கத்திற்கான ஏற்பாடு சிறப்பாக இருந்தது. மருதூரிலிருந்து பேராசிரியர் செ.ஆனந்தகுமார் அவர் தம் இரு மகன்களையும் அழைத்து வந்திருந்தர். அறிவக நூலகத்தின் மாடியில் இருந்த அரங்கில் பயிலரங்கம் தொடங்கியது. வந்திருந்தவர்கள் மாணவர்களும் பெண்களுமாகப் பலர் இருந்தனர்.அரங்கின் சூழல் உணர்ந்து தமிழ் இணைய வளர்ச்சியைச் சுருக்கமாக நினைவுகூர்ந்தேன். தமிழ்த்தட்டச்சு தெரிந்தால் இணையத்தின் பல்வேறு பயன்களை நம்மால் எளிதாகப் பெறமுடியும் என்று அரங்கினருக்குக் காட்சி வழியாக விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு தமிழ் 99 விசைப்பலகைச் சிறப்பைச் சொன்னேன். அனைவருக்கும் இது உதவியாக இருந்ததைக் குறிப்பால் உணர்ந்தேன். அவர்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்னதால் அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகின்றேன்.
இந்த நேரத்தில் திட்டக்குடித் திரைப்படத்தின் இயக்குநர் சுந்தரன் அவர்களும் கடலூர்த் திரைப்படச்சங்கத்தின் செயலாளர் சாமிக்கச்சிராயரும் வந்து இணைந்துகொண்டனர். சிங்கப்பூரிலிருந்து பொறியாளர் இரவிச்சந்திரன்(வெட்டிக்காடு பதிவர்) அவர்கள் வந்திருந்தார். தமிழ் இணையப் பயிலரங்கத்தின் இடையே ஒரு சிறு இடைப்பிறவரலாக புதிய விருந்தினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடந்தது. நான் எழுதிய இணையம் கற்போம் நூலை அரங்கில் வெளியிட்டோம். கரு.மலர்ச்செல்வன் வெளியிட முதலிரு படிகளைப் பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்களும் திட்டக்குடிப் படத்தின் இயக்குநர் சுந்தரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு அரங்கினருக்கு ஆர்வத்தை உண்டாக்கினர். அவர்களும் பயிலரங்க நிகழ்வுகளை உற்றுநோக்கிய வண்ணம் இருந்தனர். கூகுளில் மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம் பற்றியும், மின்னஞ்சல் பயன்பாடு பற்றியும் காட்சி வழியாக விளக்கினேன்.
ஸ்கைப் வசதியால் பெறத்தக்க பயன்களை எடுத்துரைத்தேன். இலண்டனிலிருந்து சிவா பிள்ளை அவர்கள் ஸ்கைப் இணைப்பில் வந்தார்கள். என்னுடனும் மாணவர்களுடனும் அறிவகப் பொறுப்பாளர் திருவாட்டி வாணி அவர்களுடனும் உரையாடினார். இன்னும் முழுமையான வசதி வாய்ப்புகளைப் பெற முடியாத சு.ஆடுதுறை என்னும் ஊரிலிருந்து அரங்கத்தினர் இலண்டனுக்கு நேரடியாக முகம் பார்த்து உரையாட முடிகின்றதே என்று வியந்தனர். எதிர்காலத்தில் அறிவகத்திலிருந்து அமெரிக்காவில் உள்ள மலர்ச்செல்வனிடம் இதுபோல் நேரடியாக உரையாடலாம் என்ற நம்பிக்கையை விதைத்தேன்.
கணிப்பொறி,இணையத் தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிப்பதைவிட இவற்றின் பயன்பாட்டை மக்களுக்கு எடுத்துச்சொல்வதால் இணையம் நோக்கிப் பலர் வருவார்கள்.
இன்றைய நிகழ்வுச் செய்தியை ஒரு வலைப்பூ பதிவாக அரங்கிலிருந்தபடி அரங்கினருடன் இணைந்து வெளியுலகுக்குத் தெரிவித்தேன். அனைவரும் வியந்தனர். இணையத்தின் பலவகையான பயன்பாடுகளையும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விக்கிப்பீடியாவின் பங்களிப்பை எடுத்துச்சொன்னேன். பயன்பெற்றனர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கம் பகல் 1.30 மணிக்கு நிறைவுக்கு வந்தது.
கரு.மலர்ச்செல்வன் இணையம் கற்போம் நூலை வெளியிடப் பொறியாளர் சிங்கப்பூர் இரவிச்சந்திரன் பெற்றுக்கொள்ளும் காட்சி
கரு.மலர்ச்செல்வன் வெளியிடும் இணையம் கற்போம் நூலைப் பெற்றுக்கொள்ளும் திட்டக்குடித் திரைப்பட இயக்குநர் சுந்தரன்
அரங்கத்தினர் சிவாப்பிள்ளை இலண்டனிலிருந்து உரையாடும் காட்சியைத் திரையில் கண்டு மகிழ்கின்றனர்
அறிவகப் பொறுப்பாளர் திருவாட்டி வாணி இலண்டன் சிவாப் பிள்ளையுடன் காணொளி வழியாக உரையாடும் காட்சி
தமிழ் 99 விசைப்பலகையை விளக்கும் மு.இ
பயிற்சி பெறுபவர்களுடன் மு.இ
அனைவரும் ஒன்றாகத் தரையில் அமர்ந்து உணவு உண்டோம். திரு.இரவிச்சந்திரன் அவர்கள் பல நாட்டு விண்மீன் உணவு விடுதிகளில் உண்டபொழுதுகூட இதுபோன்ற மகிழ்ச்சி இல்லை என்றார். நாங்கள் அனைவரும் உழவுத்தொழிலை உயிர்மூச்சாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். வயல்வெளிகளில் ஏரோட்டிய பொழுதுகளில் காலையுணவுக்கு ஏரை நிறுத்திவிட்டுக் கை கால் கழுவி இருக்கும் உணவை மகிழ்ச்சியாக உண்ட அந்தப் பழைய உணர்வை அனைவரும் பெற்றோம்.
கரு.மலர்ச்செல்வன் காலை நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு எங்களை அழைத்துச்சென்றார். அந்தப் பள்ளிக்குக் கரு மலர்ச்செல்வன் முயற்சியால் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் அன்பளிப்பாகக் கட்டித் தரப்பட்டுள்ள விவரத்தை அங்குச் சென்றபொழுதுதான் அறிந்தோம். அயல்நாடுகளில் பணிபுரியும் பல நல்ல உள்ளங்கள் தாம் பயன்பெற்ற சமூகத்துக்கு மீண்டும் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என்ற அமெரிக்கர்களின் ஆர்வத்தை நடைமுறைப் படுத்தி வருவதறிந்து வியப்புற்றேன்.
அப்பொழுது பொறியாளர் இரவிச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் பணிபுரியும் திருவாளர் கல்யாணராமன் அவர்கள் படிக்கும் காலத்தில் உணவுக்கே தொல்லையுற்றதாகவும் இன்று அமெரிக்காவின் கோடியாளர் பில்கேட்சுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் வகையில் முன்னேறியதையும் எங்களுக்கு எடுத்துரைத்தார். அந்தக் கல்யாணராமன் தம் பிறந்த பகுதிக்குப் பல உதவிகள் செய்துள்ளதையும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொறியாளராகவும் மருத்துவராகவும் தம் சொந்த செலவில் படிக்க வைத்துள்ளதையும் அறிந்து வியந்துபோனேன். வாய்ப்பு வரும்பொழுது கல்யாணராமன் அவர்களைக் கண்டு உரையாடவேண்டும் என்று நினைத்துள்ளேன்.
பள்ளியின் தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் மாணவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தனர். சிறு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
நாங்கள் ஆளுக்கு ஐந்து நிமிடம் உரையாற்றி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாக எங்கள் பேச்சை அமைத்துகொண்டோம்.
என் பள்ளிப்பருவத்து நினைவுகளை எடுத்துரைத்துத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் கலங்க வேண்டாம். முயன்றுபடித்தால் முன்னேறலாம் என்று குறிப்பிட்டேன். இணையம்
கணிப்பொறியின் சிறப்புகளை எடுத்துரைத்தேன். காலையில் பயிலரங்க நிகழ்வுக்குப் பள்ளித் தலைமையாசிரியர் வந்திருந்ததால் இணைய ஆர்வலன் என்று என்னை அறிமுகம் செய்தார்கள் பின்பு நடந்த உரையாடல் தமிழ் இணையம் நோக்கித் திசை திரும்பியதும் சிறப்பாக இருந்தது.
கரு.மலர்ச்செல்வன் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்திலும் உதவியாக இருப்பேன் என்று உரைத்தார். இரவிச்சந்திரன் அவர்கள் தம் படிப்புப் பட்டறிவுகளை எடுத்துரைத்து, தன்னம்பிக்கை மாணவர்களுக்குத் தேவை எனவும் உயர் நோக்கம் குறித்த நினைவில் எப்பொழுதும் இருக்க வேண்டும் எனவும் எதற்கும் அஞ்சக்கூடாது எனவும் தாமும் மாணவர்களின் படிப்புக்கு எந்த நேரமும் இயன்ற வகையில் உதவியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் வாழும் கல்யாணராமன் நமக்கெல்லாம் எடுத்துக்காட்டானவர் என்று அவர் வாழ்க்கையை எடுத்து உரைத்ததும் மாணவர்கள் மகிழ்ந்தனர்.
முனைவர் இரத்தின. புகழேந்தி பள்ளி ஆசிரியர் என்பதால் பள்ளி மாணவர்களின் உள்ளம் அறிந்து சிறப்பாகப் பேசினார். இயக்குநர் சுந்தரன் அவர்கள் தம் பட்டறிவுகளைப் பேசி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார். அவரின் திட்டக்குடிப் படத்தை மாணவர்கள் பார்த்திருந்ததால் அந்தப் படத்தில் வரும் ஆடல் பாடல் காட்சிகள் பற்றித் தனிப்பட்ட முறையில் மாணவர்கள் அவரைப் பின்னர் சூழ்ந்துகொண்டு வினவினர்.
எங்கள் பேச்சை ஒட்டி மாணவர்கள் ஐயம், வினாக்கள் எழுப்பினால் ஒரு பரிசில் தரப்படும் என்று கரு. மலர்ச்செல்வன் அறிவித்தார். அவ்வாறு வினா எழுப்பிய மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இணையம் கற்போம் என்ற என் நூலை அன்பளிப்பாகப் பலருக்கு வழங்கினார். அந்த மாணவகளுள் பலர் இணையம் கணிப்பொறி பற்றி அறிந்திருந்தனர் என்பது வியப்பாக இருந்தது. அவர்களுக்கு இணையம் கற்போம் நூல் மேலும் பல செய்திகளைத் தரும் என்று நம்புகிறேன்.
ஆடுதுறையில் பொதுமக்களுக்கும் அந்த ஊர்ப்பள்ளியில் மாணவர்களுக்கும் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்த மன நிறைவுடன் அனைவரிடமும் மாலை 5.30 மணிக்கு விடைபெற்றோம். திட்டக்குடி வரை எங்களை ஒரு மகிழ்வுந்தில் மலர்ச்செல்வன் அனுப்பினார். அதன் பிறகு பேருந்தேறித் திட்டக்குடி, விருத்தாசலம், கடலூர் வழியாக நான் புதுவை வந்து சேர்ந்தபொழுது இரவு பத்தரை மணியிருக்கும்.
அரசு மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவிகள்
கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள்
கலந்துரைக் களம்
கரு.மலர்ச்செல்வனின் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிக் கட்டடம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
18 கருத்துகள்:
நல்ல பணி. சிறக்க என்றுமே வாழ்த்தும்.....
சொற்களால் வாழ்த்த முடியாத அளவுக்குச் சென்று கொண்டிருக்கிறது உங்கள் பணி!
நன்றி. உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள். ஆனால் தயவுசெய்து உங்கள் பயிலரங்குகளில் யூனிகோடு எழுத்துரு கண்டுபிடித்தவர் முகுந்தராஜ் என்ற தவறாக கருத்தை மட்டும் பரப்பாமல் இருக்கவும்.
முகுந்து வணக்கம்.
யுனிகோடு முறையில் தட்டச்சிட இ.கலப்பை என்ற மென்பொருளை உருவாக்கியவர் என்றே குறிப்பிட்டு வருகின்றேன்.தமிழா.காம் தளத்திற்குச் சென்று இ.கலப்பையைத் தரவிறக்கலாம் என்றும் கூறுவது உண்டு.
நெறிப்படுத்துகின்றமைக்கு நன்றி.
உண்மையானத் தமிழ்த் தொண்டர்கள் கரு.மலர்ச்செல்வன்,ரவிச்சந்திரன் போன்றோர் தங்கள் ஊர்களுக்குச் செய்து வரும் உதவிகள் தமிழகம் வாழும்,வளரும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது.இது போல் இன்னும் பலர் உள்ளனர்.சிலருக்கு அங்கே எடுத்துச் செய்ய ஆட்கள் இல்லாததுதான் பெரிய தடங்கலாக இருக்கின்றது.அந்த மாதிரி நல்லவர்களை அறிமுகப் படுத்தினால் இன்னும் பலர் பயன் பெற வழிவகுத்த சிறப்பு உங்களைச் சேரும்.
தமிழனுக்கு நன்றி.
நல்லவர்களின் பணிகளை எடுத்துரைக்கத் தயங்குவதே இல்லை.
தக்கவர்களை மக்கள் மன்றத்தில் அறிமுகம் செய்வேன்
முரளி,பிரின்சு
கருத்துரைக்கு நன்றி
அரும்பணி ஆற்றும் உங்களுக்கு வாழ்த்துகள்!
சிறப்பான நிகழ்வினை முன்னெடுத்து நடத்திய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ஹூஸ்டன் நண்பர் கரு. மலர்ச்செல்வன் ஏற்பாட்டில் உங்கள் இணைய அறிமுக விழா சிறப்பாக நடந்ததறிய மிக மகிழ்ச்சி. எப்போது அமெரிக்கா திரும்புகிறார் கரு. மலர்?
இணைய வசதி பொதுமக்கள் பயன்படுத்த பஞ்சாயத் அலுவலகம், நூலகம், பள்ளிகளில் அரசாங்கம் ஊர் ஊருக்கு ஏற்படுத்தி அளித்தால் தமிழ் தானாய் வளரும். உலகச் செய்திகள், வாழ்க்கை முன்னேற்றம் பற்றி அறிந்து
சாராயம், சினிமா, டிவி, ... மூழ்கிக் கிடக்காமல் இருக்க வாய்ப்பு. மது, சினிமா போதைகள் முக்கியத்துவம் குறைந்தால், தமிழ்நாட்டின் அரசியல் போக்கு மாறும்.
முதன்முதலாய் ஒரு கறுப்பின ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வர இண்டெர்னெட் முக்கிய காரணி.
வாழ்க வளமுடன்!
நா. கணேசன்
ஐயா! தங்களின் பணி தொடர பிரார்த்தனைகள். எளிய, கிராமப்புற மாணவர்களுக்கும் இணையம் கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி!
நண்பர்கள் மு. இளங்கோவன், கரு. மலர்ச்செல்வன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். சு. ஆடுதுறை உயர்நிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் கனவை விஞ்சியதாக உள்ளது இலண்டன் மாநகருக்கும் இணைய வசதி இல்லாத சு. ஆடுதுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தியது. இணையம் என்ற கருவியை நல்ல முறையில் புழங்கி சு. ஆடுதுறையை ஊர் மக்கள் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நண்பர்கள் மு. இளங்கோவன், கரு. மலர்ச்செல்வன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள். சு. ஆடுதுறை உயர்நிலைப் பள்ளி வகுப்பறைக் கட்டிடத் திறப்புவிழாவில் கலந்து கொண்டது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ”காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் கனவை விஞ்சியதாக உள்ளது இலண்டன் மாநகருக்கும் இணைய வசதி இல்லாத சு. ஆடுதுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தியது. இணையம் என்ற கருவியை நல்ல முறையில் புழங்கி சு. ஆடுதுறையை ஊர் மக்கள் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மணி ஐயாவின் ஊக்கவுரைக்கும், கணேசனார்,சாந்தி அம்மா உள்ளிட்டவர்களின் அன்புமொழிகளுக்கும் நன்றி.
இளைஞர்களுக்கு இணையம். எதிர்காலம் சிறக்கும்.
பொதுவன் அடிகள்
முனைவர் மு.இ,
தமிழ் இணையத்தை நாடெங்கும் உள்ள சிற்றூர்களுக்கும் கொண்டு செல்ல முயலும் உங்கள் சேவையை மனமாற வாழ்த்துகிறேன்.
இணையம், கணினி நுட்பங்கள் எளிதில் எட்டாத சிற்றூர்களில் இணையப் பயிலரங்கு நடத்துவதென்பது மிக கடினமான ஒன்று.
இந்த பயிலரங்கு வெற்றி பெற உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன்.
அன்பின் இளங்கோவன்,
இணையம் வழியாக அறிந்திருந்த தங்களை ஆடுதுறையில் நேரில் சந்த்தித்தது மிக்க மகிழ்ச்சி. கணணித் தமிழ், தமிழ் இணையம் ஆகியவற்றை வளர்க்க ஊர் ஊராகச் சென்று தாங்கள் செய்து
வரும் தமிழ்த்தொண்டிற்கு என் மனமார்ந்த பாராட்டுகள். மிக எளிய முறையில் எல்லோருக்கும் புரியும்படி தாங்கள் சொல்லிக்கொடுத்ததை நேரில் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
தங்களைப் போன்ற தமிழ் அறிஞகர்களின் அயராத உழைப்பால்தான் இன்று கணணியில் தமிழ் சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. தாங்கள் செய்து வரும் களப்பணிக்கு என்னால்
முடிந்த உதவிகளைச் செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
//நாங்கள் அனைவரும் உழவுத்தொழிலை உயிர்மூச்சாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். வயல்வெளிகளில் ஏரோட்டிய பொழுதுகளில் காலையுணவுக்கு ஏரை
நிறுத்திவிட்டுக் கை கால் கழுவி இருக்கும் உணவை மகிழ்ச்சியாக உண்ட அந்தப் பழைய உணர்வை அனைவரும் பெற்றோம்.//
நிதர்சனமான உண்மை!!!
வாழ்க வளமுடன்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
http://blogintamil.blogspot.com/2010/07/3.html
ஏற்கனவே உங்களை வலைச்சரத்தில் மொழி வளர்க்கும் தமிழ்மனங்கள் என்ற பதிவின் மூலம் பெருமைபடுத்தியிருந்தேன்.
இந்த நிகழ்வு குறித்து இன்று தனது சொந்த ஊருக்கு வந்து என்னுடன் உரையாடிய ரவி மூலம் அறிந்து கொண்டேன்.
ஒவ்வொருவரும் நம்மால் என்ன செய்யமுடியும்? என்று சொல்வ்தை விட நம்மால் முடிந்த சில விசயங்களையும் நீங்கள் ரவி மற்றும் இதில் குறிப்பிட்ட பங்கெடுத்த அத்தனை நல் இதயங்களுக்கும் வருங்கால தமிழ்குடி நன்றிகடன் பட்டுள்ளது.
நல்வாழ்த்துகள்.
கருத்துரையிடுக