நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 நவம்பர், 2009

நினைவில்லம் திறப்பு சில படங்கள்...

 என் தந்தையார் கோ.சி.முருகேசன் அவர்களின் பெயரில் நினைவில்லம் திறக்கும் எண்ணம் பல மாதங்களுக்கு முன்பாகத் தோன்றி இன்று முழுமைபெற்றது.

 ஆம். எங்களின் முன்னோர்களால் சற்றொப்ப எண்பதாண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊரின் தென்மேற்கில் இரண்டு கல் தொலைவில், இடைக்கட்டு என்ற ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்று கட்டப்பட்டது.அதற்கு முன்பு இடைக்கட்டு என்ற எங்கள் ஊரில் காளியம்மன்கோயில் அருகில் ஒரு பழைய வீடு இருந்தது.எம் முன்னோர்களுக்கு நில புலங்கள் மிகுதி. பொன்னேரி என்று இன்று அழைக்கப்படும் சோழகங்கம் முன்பு காடாக இருந்து, திருத்தப்பட்டு,நிலமாக இருந்தது. அதனை நிலமாகத் திருத்திப் பலவாண்டுகளாக எம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.

 இந்தியத் தன்னுரிமைக் காலத்தில் ஆங்கிலேயர்கள் நிலத்தை ஏரியாக்கும் பொழுது பல நூறு ஏக்கர் இருந்த எங்கள் நிலம் அரசுக்குக் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது. எம் முன்னோர்கள் ஆங்கிலேய அதிகாரிகளிடம் நேர் நின்று பேசும் ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் துரைத்தனத்துக்கு முன்பாக உழவுத்தொழில் மேற்கொண்ட இவர்களால் வாதிட்டு நிலங்களைத் தங்களுக்கு உரிமையானதாக ஆக்க முடியவில்லை.மிகவும் குறைந்த விலைக்கு நிலத்தை விற்றனர்.அவ்வாறு விற்ற தொகையும் சிலருக்குப் பாகம் பிரிக்காததால் ஆங்கிலேய அதிகாரிகள் வங்கியில் அப்பணத்தை முதலீடு செய்தனர். பங்கு பிரிந்த பிறகு பணத்தை எடுத்துக்கொள்ள வசதி செய்து தந்திருந்தனர். ஆனால் கடைசி வரை பாகம் பிரியாமல் இருந்தது. அந்தப் பணம் என்ன ஆனது? எந்த வங்கியில் முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் யாவும் தெரியவில்லை.

 கோட்டை கட்டி நெல் குவித்த எம் முன்னோர்கள் வாழ்ந்த வீடு "கோட்டையான் வீடு" என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த வீடு கட்டுவதற்குப் பல ஊர்களிலிருந்து மரம் வந்துள்ளது. 64 உத்திரம் அமைந்த வீடு. தேக்கு மரத்தால் அமைந்த சரங்கள் உள்ளன. ஓடு கவிழ்க்கும் சட்டம் தேக்குமரத்தில் இழைக்கப்படிருக்கும். பாலை மரத்தால் அமைந்த ஒத்த அளவுள்ள தூண்கள் எம் வீட்டில் இன்றும் காணப்படும். இந்த மரங்கள் 5 கல் அருகில் உள்ள பெரியவளையம் என்ற ஊரிலிருந்து வந்துள்ளன. அந்த மரம் இருந்த கொல்லைகள் இன்றும் பாலைமரத்துக் கொல்லை எனப்படுகிறது.

  மரம் விற்ற அந்த நில உரிமையாளரை அவர் வழி வந்தவர்கள் இன்றும் ஏசித் தீர்ப்பது உண்டு. "கோட்டையான் வீட்டுக்கு மரத்தை வெட்டி வித்துப்புட்டு எங்களுக்கு ஒரு வீடு கட்டவில்லையே" என்று ஏசுவார்களாம்.

 பாலை மரத்தில் சிறு கைத்தடிகள் செய்து வைத்திருந்தனராம். அந்தக் கைத்தடிகள் இன்றும் இருப்பில் இருப்பதாக அறிந்தேன். சில கைத்தடிகளைக் காவலர்கள் தங்கள் பாதுகாப்புக்கு எடுத்துச்சென்றதாகவும் அறிந்தேன். அந்த மரம் விளைந்த இடங்களை அடையளம் காட்டும் ஆட்கள் உண்டு என்று அறிந்தேன். அந்த அளவு அந்த வீடு கட்டப்பட்ட பல ஆவணங்களையும் தொகுக்கும் முயற்சியில் இருந்த நான் பலருக்கும் பங்குடைய அந்த வீட்டை விலைக்கு வாங்கிப் புதுப்பித்துப் பழைமை மாறாமல் காக்கும் பிடிவாதத்துடன் செயல்பட்டேன்.

 ஓராண்டாகத் தீவிரம் கொண்ட என் முயற்சி நிறைவுபெற்றது. ஆம். அந்த வீட்டைப் புதுப்பித்து இன்று என் தந்தையாரின் நினைவு நாளில் நினைவில்லமாகத் திறந்தோம். இந்த நிகழ்ச்சிக்கு முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் ஐயாவால் இன்று வரமுடியா நிலை சொல்லிப் பின்னொரு நாள் வந்து அந்த இல்லில் ஒருநாள் தங்கி வருவதாக உறுதியுரைத்தார்கள். அந்த வீட்டின் மேல் துணைவேந்தர் பொற்கோ ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய ஈடுபாடு உண்டு.என் விருப்பம் அறிந்து என் முயற்சியை ஐயா அவர்கள் ஊக்கப்படுத்திய வண்ணம் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியுடையேன்.

 மிகப்பெரிய இடிபாடுகளுக்கு இடையில் இருந்த வீட்டைப் புதுப்பித்து மீட்டுள்ளோம்.இனியும் அழகுப்படுத்தும் சில பணிகள் உள்ளன.வண்ணம் பூசவேண்டும். சில கூரை அமைப்புகள் அமைக்க வேண்டும்.யாவும் முடிந்த பிறகு எம் ஊரில் நடைபெறும் நல்ல நிகழ்வுகள், இலக்கியச் சந்திப்புகள், அயல்நாட்டிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா வரும் அன்பர்கள் தங்கிச்செல்லும் வகையில் இதனை இன்னும் சில மாதங்களில் பல ஏந்துகளுடன் வடிவமைப்போம்.

இது நிற்க.

 இன்று(18.11.2009) காலை 10.30 மணியளவில் நினைவில்லம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள் ஊர்ப்பெரியவர்கள், நண்பர்கள் என நூற்றைம்பதுபேர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு என் சிறிய தந்தையாரும் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். என் தமிழாசிரியர் திரு.கணேசமூர்த்தி ஐயா அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்கள். சனதா பல்பொருள் அங்காடி உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். குருவாலப்பர் கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கி. முல்லைநாதன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார்கள்.

 என் பாட்டனார் திரு.காசிநாதன் அவர்களும் (அகவை 90) என் பெரிய தந்தையார் திரு.சி.சாமிதுரை (அகவை 89) அவர்களும் நினைவில்லக் கல்வெட்டைத் திறந்துவைத்தனர். திரு.சோ.குலோத்துங்கன் (வாழ்நாள் காப்பீட்டு அதிகாரி), திரு.சிறீகாந்து (தமிழாசிரியர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கட்டடப்பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆடைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. வந்திருந்த அனைவருக்கும் இன்னடிசில் வழங்கப்பட்டது. தந்தையாரின் நினைவுகளை ஏந்தியபடி புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


புதுப்பிக்கப்பட்ட இல்ல முகப்பு


திரு.காசிநாதன் அவர்கள் கல்வெட்டு திறத்தல்


கல்வெட்டு திறக்கும் உறவினர்கள்


நினைவில்லத் திறப்புக்கு வந்திருந்த உறவினர்கள்,நண்பர்கள்


செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவரும் என் சிறிய தந்தையருமான திரு.காசி.அன்பழகன் அவர்கள் தலைமையுரையாற்றுதல்


ஊ.ம.தலைவர் திரு.முல்லைநாதன் அவர்களுக்குச் சிறப்பு செய்தல்


அழகுபடுத்தும் கைகளுக்குக் காத்திருக்கும் கலைநயம்மிக்க சுவர்


எங்களின் வீடு (பழைய படம்)

1 கருத்து:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

மன்னிக்க வேண்டும் இளங்கோ மழை, தேர்வு, மனைவிக்கு உடல் நலமின்மை என வர இயலாமைக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும் மனதுக்குள் போக முடியாமல் போனதற்கு வருத்தம் எழத்தான் செய்கிறது.வலையில் பார்த்து என் ஏக்கம் தீர்ந்தது.