நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 நவம்பர், 2009

எங்கள் வீடு எழுந்து நின்றது!



எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீடு கட்டப்பட்டது.என் தந்தையாரின் பாட்டனார் திரு.கோவிந்தனார் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட வீடு. என் தந்தையார் காலம் வரை சிறப்பாக இருந்தது.மிகப்பெரிய மக்கள் கூட்டம் வாழ்ந்த அந்த வீடு எனக்கு நினைவு தெரிந்த நாளில் இடியத் தொடங்கியது.கோவிந்தனார் அவர்களுக்கு இரு மனைவியர்.முதல் தாரத்துப் பிள்ளைகள் என் பாட்டனார் திரு.சிங்காரவேல் அவர்களும் திரு,பூராசாமி அவர்களும் ஆவர்.இரண்டாம் தாரத்தில் தோன்றியவர்கள் திரு.கந்தசாமி திரு.தருமலிங்கம் அவர்களும் ஆவர்.ஒவ்வொருவருக்கும் இரண்டு தாரங்கள் என்று பின்னாளிலும் மனைவிமார்கள் மிகுதி.எனவே மக்கட் செல்வத்திற்குக் குறைவில்லை.எங்கள் பாட்டி ஒருவர் பன்னிரண்டு பிள்ளைகள் பெற்றுள்ளார்.இப்படி மிகப்பெரிய குடும்பம் பின்னாளில் அனைத்து நிலைகளிலும் நலிந்தது.

எங்கள் வீடு இடிந்து விழுந்தது.பங்கு பிரியாமல் இருந்ததால் யாராலும் அதனைப் புதுப்பிக்க முடியாமல் போனது.என் தந்தையார் இறந்த சூழலில் ஊரில் உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சூழல் அமைந்தது.அப்பொழுது வீடு புதுப்பித்தல் தொடர்பாகப் பேச்சு எழுந்தது. ஏறத்தாழ 35 ஆண்டுகளாக இந்தப் பேச்சு அலை அடிக்கடி எழும்பி இல்லாமல் போகும்.அப்படியே அந்தச் சுற்றுப் பேச்சும் நல்ல முடிவு எட்டாமல் முறிந்தது.

மீண்டும் ஒரு சூழலில் பேசி முடிப்பது என முடிவு செய்து ஒன்று கூடினோம்.ஆசாரியார் ஒருவர் வந்து விலை மதிப்பீடு செய்தார்.நியாயமான விலையாக அது இருந்தது.என்றாலும் அனைவரும் விலையை உயர்த்தியே பேசினோம்.எங்களுக்குள் ஒரு முடிவு செய்ய ஊர்ப்பெரியோர்கள் நினைத்தனர்.அதாவது இந்த வீடு பல பாகங்களாக இருப்பதால் யாராலும் சீர் செய்யமுடியவில்லை.எனவே பொதுவாக விலை பேசி ஒருவர் மட்டும் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தனர்.அதாவது ஒருவரிடம் வீடு,மனையைக் கொடுத்துப்பணம் பெற்றுகொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறி வேறு வீடுகள் கட்டிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி என்னை இந்த வீட்டை வாங்கிக்கொள்ள ஊரினர் வேண்டினர்.நானும் இசைந்தேன்.இங்குதான் கவனிக்க வேண்டும்.நான் பணியில் இருப்பதால் உறவினர் அனைவரும் கூடுதல் விலைக்கு என்னிடம் விற்க முனைந்தனர்.ஒரு வழியாக விலை பேசி என் பெயருக்கு வீடு,மனை யாவும் பதிவு செய்யப்பெற்றது.

வீடு வாங்கிய உடன் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது.அதன்படி பொறியாளர் நண்பர்கள் சிலரை அழைத்துச் சென்று காட்டினேன்.யாரும் அதனைப் புதுப்பிக்க ஒப்பவில்லை.இடித்துத்தள்ளிவிட்டு புதிய வீடு கட்டுவதற்கு அறிவுரை கூறினர்.அந்த அளவு பழையவீடு. சுவர் இடிந்து பாம்புகள்,பிற நச்சுயிரிகளின் கூடாரமாக இருந்தது.முதலில் இடிந்த பகுதிகளை 23.07.2009 முதல் இடித்து வெளியேற்றினோம்.

தருமபுரி பொறியாளர் நண்பர் திரு.நரசிம்மன் ஒருமுறை வந்து பார்த்து சில அறிவுரைகளை வழங்கினார்.உள்ளூர் நண்பர்களின் அறிவுரைப்படி 27.07.2009 இல் கால்கோள் நடந்தது.16.08.2009 முதல் கம்பி வேலை நடந்தது.இடிப்பதும் கட்டுவதும் எனப் பணி விரைவாக இருந்தாலும் மிகப்பெரிய வீட்டை இடித்து பழைமை மாறாமல் மீண்டும் கட்டுவது என்பது மிகப்பெரிய வேலையாகிவிட்டது.இதில் பலநாள் கட்டடம் கட்டும் கொத்தனார்,ஆசாரியார்,ஓடு மாத்துபவர்களின் ஒத்துழைப்பின்மை,மழை,என் பணிச்சூழல் எனக் காலம் நீண்டு ஒரளவு நிறைவு பெற்ற பொழுது என் தந்தையார் அவர்களின் நினைவு நாள் நெருங்கியது நினைவுக்கு வந்தது.

எனவே என் தந்தையாரின் நினைவு நாளில் அவரின் காலத்தில் கட்டி முடிக்கப்பெறாத வீட்டை எங்கள் உறவினர்கள்,நண்பர்களின் உதவியால் மீண்டும் நிலை நிறுத்தும் முயற்சிக்கு வெற்றி கிடைக்க உள்ளது.ஆம்.நாளை மறுநாள் 18.11.2009 எங்கள் இல்லம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.முனைவர் பொற்கோ அவர்களின் திருக்கையால் திறக்கப்பட உள்ள எங்கள் இல்லத் திறப்பு நிகழ்ச்சியை இருந்த இடத்திலிருந்து வாழ்த்துங்கள்.இது பற்றி முன்பும் எழுதினேன். விரிவாகப் பின்பும் எழுதுவேன்.


இடிபாடுகளில் எங்கள் வீடு


பேணுதலின்றி ஆடுகள் அடைந்துகிடக்கும் திண்ணை


இடித்துக்கிடக்கும் காட்சி


புதிய சுவர்கள் உயர்தல்


புதிய பொலிவுக்கு முந்திய காட்சி

4 கருத்துகள்:

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

அய்யா!

நான் காலிபயல் ராஜெசு! ஆதிபராசக்தி முன்னாள் மாணவர்கள் மற்றும் தங்களின் கீழ் பயின்ற ஜெய் மோகன் மற்றும் பிரேமின் தோழர்!..புது மனை புகு விழாவிற்கு வாழ்த்துக்கள்.. 'விருந்து' உண்டா?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

புதுமனை காணும் முனைவர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

புதுமனை எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.. இன்பத்தமிழ் இல்லமெங்கும் இனிக்கட்டும்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

மகிழ்ச்சியாக இருக்கிறது வீட்டைப் பார்க்கும்போதே...

மனமார்ந்த வாழ்த்துக்கள்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நம் முன்னோர் வாழ்ந்த வீடு கிடைத்தற்கரிய பொக்கிசம், புதுப்பித்து
எல்லோருக்கும் பயன் கிடைக்கச் செய்யும் உங்கள் உள்ளத்தைப் பாராட்டுகிறேன்.
அந்த ஓடுகளை எந்த நிலையிலும்
மாற்ற வேண்டாம்.
அது ஒரு காலத்தின் அடையாளம்.