நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 31 அக்டோபர், 2009

நூல் வெளியீட்டு விழா-படங்கள்


முனைவர் அரங்க.பாரி,முனைவர் அ.அழகிரிசாமி,முனைவர் முத்து,சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டின்,தி.ப.சாந்தசீலன்,முனைவர் அ.அறிவுநம்பி,மு.இளங்கோவன்.

புதுச்சேரியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க அரங்கில் என் அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இன்று நடந்தது. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் தலைமையில் 30.10.2009 மாலையில் நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது.பேராசிரியர் இரா.அகிலா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாட,முனைவர் இரா.வாசுகி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

புதுவைச் சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு இரா.இராதாகிருட்டினன் அவர்கள் இரண்டு நூல்களையும் வெளியிட அயலகத்தமிழறிஞர்கள் நூலின் படிகளை முனைவர் தி.ப.சாந்தசீலன்(பொ.தி.ப.அறக்கட்டளை),முனைவர் மு.முத்து அவர்கள்(பல்லவன் கல்வி நிறுவனங்கள் தாளாளர்) பெற்றுக்கொண்டனர்.

முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும்,முனைவர் பொன்னுத்தாய் அவர்களும் இணையம் கற்போம் நூலின் படிகளை முதற்கண் பெற்றுக்கொண்டனர்.

பேராசிரியர் அ.அழகிரிசாமி,முனைவர் அரங்க.பாரி(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), முனைவர் து.சாந்தி,அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அனந்தராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினர்.பாவலர் சீனு.தமிழ்மணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

புதுவை,தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் பேராசிரியர்கள்,நண்பர்கள்,இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் வந்திருந்தனர். திருமுதுகுன்றத்திலிருந்து புகைப்படக்கலைஞர் திரு.சான்போசுகோ நண்பர் புகழேந்தியுடன் வந்திருந்து படங்களை மிகச்சிறப்பாக எடுத்தார்(பின்பு அந்தப் படங்களை இணைப்பேன்)சென்னையிலிருந்து உதயகுமார்,காஞ்சிபுரத்திலிருந்து திரு.மோகனவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கூத்தப்பாக்கம் குப்பு அவர்களின் நாட்டுப்புற இசைநிகழ்ச்சி நடந்தது.அவர்களைத் தொடர்ந்து புதுவை செயமூர்த்தி அவர்களும் பேராசிரியர் அகிலா அவர்களும் தமிழிசைப்பாடல்கள் பலவற்றைப் பாடி அவையினரை மகிழ்வூட்டினர்.


சட்டப்பேரவைத்தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்கள் உரையாற்றுதல்


முனைவர் இரா.பொன்னுத்தாய் நூல் பெறுதல்


முனைவர் து.சாந்தி அவர்களுக்குச் சிறப்பு செய்யப்படுதல்

1 கருத்து:

முனைவர். ஆ. ரா. சிவகுமாரன், சிங்கப்பூர் சொன்னது…

தாய்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் அயலகத்தமிழர்களுக்கும் சிறப்பு சேர்க்கின்றவிதத்தில் தங்கள் நூல் அமைந்துள்ளது பெருமைக்குரிய ஒன்று. தாங்கள் இதுபோல் இன்னும் பல நூல்களை வெளியிட்டு தமிழ்த்தாய்க்கு மேலும் பல அணிகளைச் சேர்த்திட வேண்டும்.
அன்புடன்
டாக்டர் A Ra சிவகுமாரன். சிங்கப்பூர்