நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 ஜனவரி, 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்...


முகப்பு

சென்னை அடையாற்றில் 12.01.2009 அன்று பகலுணவு முடித்துப் பச்சையப்பன் கல்லூரி எதிரில் இருந்த புத்தகக் கண்காட்சியை அடையும்பொழுது பிற்பகல் 2.30 மணியிருக்கும்.

புத்தகக் கண்காட்சியில் அரங்குகள் சிறப்பாக அமைக்கப்படிருந்தன.முந்தைய காட்சிகளில் இருந்து இது மேம்பட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளது.தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக் கொண்ட கவிப்பேரரசர்கள் கவிவேந்தர்கள் வித்தகக்கவிஞர்கள் உருவம்தாங்கிய விளம்பரப்பலகைகள் நம் கண்ணில் முதலில் தெரிந்தன. பல்வேறு நிறுவனம் சார்ந்த தோரணவாயில்கள் நம்மை வரவேற்றன.

நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம்.உடன் வந்தவர்களிடமிருந்து என் விடுதலையை வாங்கிக்கொண்டு தேவைக்கேற்பத் தொலைபேசியில் அழ்த்துக்கொள்ளலாம் என்ற பின்குறிப்புடன் அவரவர் சுவைக்கேற்பப் புத்தக அரங்குகளில் நுழைந்து வெளியேறத் தொடங்கினோம்.

முதலில் ஓவியர் புகழேந்தி நூல்களைக் கொண்டிருக்கும் தோழமை அரங்கில் நுழைந்து புதிய நூல்களைப் பார்வையிட்டேன்.பின்னர் என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் தமிழ்க்கோட்டம் அரங்கிற்குச் சென்றேன்.

புதுவைப் பேராசிரியர் முனைவர் மதியழகன் அவர்களைக் கண்டேன்.பின்னர் பேராசிரியர் தாமசு இலேமான்(செர்மனி)அவர்கள் பல அரங்குகளில் நுழைந்து களைப்புடன் காணப்பட்டார். அவரையும் கண்டு வணங்கினேன்.உரையாடினேன்.அருகில் இருந்த பேராசிரியர் கல்பனா அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.மீண்டும் எனக்கு விருப்பமான அரங்குகளுக்கு நுழைந்து மீண்டு வந்தேன்.

கிழக்குப் பதிப்பக அரங்கு, காலச்சுவடு அரங்கு,உயிர்மை அரங்கு,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவன அரங்கு உள்ளிட்டவை சிறப்பாக இருந்தன.உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் திரு. வீரபாகு அவர்களின் அமுத நிலையத்தில் நண்பர் பெரியநாடார்
இருந்தார்.நண்பர் கண்ணன் அவர்களும் இருந்தார்.எல்லோரும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன் உ.த.நியில் பணிபுரிந்தவர்கள்.உரையாடி மகிழ்ந்தேன்.புதுநூல்கள் விவரம் அறிந்தேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களைக் கண்டு அவர்களின் தந்தையார் பாவலரேறு.ச.பாலசுந்தரனார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.

மணிவாசகர் பதிப்பகம் சென்று பார்வையிட்டேன்.மெய்யப்பனார் படமாக இருந்தார்.அவர் நினைவுகள் வந்து உள்ளத்தை உருக்கின.தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணி செய்த அப்பெருமகனார் நினைவுடன் அரங்கிலிருந்து வெளியே வந்தேன்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அரங்கு எளிமையாகக் காட்சியளித்தது.மூன்றாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்திற்கு நூல்வெளியிட முன்விலைத்திட்டத்தில் பதிவு செய்திருந்தேன். இன்னும் நூல்கள் வந்தபாடில்லை என்ற புலம்பல்களைக் கூறியும் பல மடல்கள் இட்டும் விடையில்லை என்றும் நூல்களை உடன் அனுப்பிவைக்கும்படியும் வேண்டினேன்.

பின்னர்த் தமிழ்ஓசை இதழின் அரங்கு,பெண்ணே நீ அரங்கு உள்ளிட்டவற்றையும் கண்டு பேசினேன்.

தமிழ்மையம் அரங்கில் திரு.தளபதி என்னும் தோழரைக் கண்டு அறிமுகம் ஆனேன். அருட்தந்தையார் கசுபார் அவர்களைப் பற்றி உரையாடும்பொழுது ஒத்த கருத்துடையவர்களாக அவர்கள் தெரிந்ததால் மகிழ்ச்சியுடன் உரையாடினோம்.அதனை விடுத்து அடுத்து நகர்ந்ததும் தோழர் வைகறை அவர்களின் பொன்னி நூல் வெளியீட்டக அரங்கு தெரிந்தது.தோழர் வைகறை அவர்களுடன் அண்ணன் பழ.அதியமான்(வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர்),பேராசிரியர் த.கனகசபை உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர்.அவர்களிடம் உரையாடி மகிழ்ந்தேன். நூல் விவரம் குறித்து அறிந்தேன்.என் தமிழ் இணையப்பணி பற்றி உரையாடினோம்.

அடுத்து நகர்ந்ததும் நண்பர் திரு.ப.திருநாவுக்கரசு அவர்கள்(தாரமைச்செல்விப் பதிப்பகம்) எதிர்ப்பட்டார்.அவருடன் நீண்டநாள் நட்பு.நெடுநாழிகை உரையாடினேன்.என் அயலகத் தமிழறிஞர்கள் தமிழ்ஓசைத் தொடரைத் தொடர்ந்து படிப்பதாக உரைத்து அந்தத் தொடரில் இடம்பெறவேண்டிய பிற அறிஞர்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.ப.சுந்தரேசனார் பாடல் தொகுப்பு முயற்சி,தமிழ் இணையப்பணிகள்,நூல் அச்சிடல் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு நீண்டது.அவரின் ஆவணப்படம்,குறும்படம் பயிற்சிப்பட்டறைப் பணிகளைப் பாராட்டி விடைபெற்றேன்.

மீண்டும் உலகத் தமிழிராய்ச்சி நிறவன அரங்கிற்கு வந்து நண்பர் திரு.இராசா அவர்களைக் கண்டு உரையாடி அறிஞர் ச.வே.சு அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி மீண்டேன். மீண்டும் தொலைபேசியில் பேசி நாங்கள் ஒன்று கூடித் திரும்பத் திட்டமிட்டோம்.இரவு 8.30 மணியளவில் அரங்கிலிருந்து வெளியே வந்தோம்.

பேராசிரியர் கல்பனா அவர்கள் கண்காட்சியிலுருந்த பாதி நூல்களை வாங்கி வந்துவிட்டார்கள். அவர்களுக்கு உதவிக்கு இரு இளைஞர்கள் வந்திருந்தனர்.பேராசிரியர் அம்மா அவர்கள் வாங்கும் நூல்கள் உடனுக்குடன் மகிழ்வுந்துக்கு வந்தன.மகிழ்வுந்து அருகே வந்து பார்த்த பொழுது உட்கார இடம் இல்லாதபடி நூல்கள் இருந்தன. இருக்கும் இடங்களில் நூல்களைத் திணித்துப் புறப்பட்டோம்.

அப்பொழுது பேராசிரியர் அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு உண்டு புறப்படத் திட்டமிட்டார்கள்.பகலுணவுக்கே வரவில்லை என்று அவர்களின் உறவினர்கள் வருந்தி, அன்பால் சண்டையிட்டனர்.இரவு ஒன்பது மணிக்கு அரும்பாக்கத்தில் இருந்த அவர்களின் உறவினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் கல்பனா அம்மா அவர்களுக்கு உதவியாக அரங்கிற்கு வந்து உதவிய அந்த இளைஞரின் வீடுதான் அவர்களின் உறவினர் வீடு எனப் பின்பு தெரிந்துகொண்டேன்.உறவினர் என்றதும் எந்த வகையில் உறவினர் அவர்கள் என வினவினேன்.பிறகுதான் தெரிந்தது.

தஞ்சாவூர் அருகில் பேராசிரியரின் தந்தையார் ஊர் என்பதும் அந்த ஊருக்கு தொழில் நிமித்தம் வந்தவர்கள்தான் உறவினர்களாக இன்று பழகுகின்றனர் என்பதும் புரிந்துகொண்டேன்.இரு குடும்பமும் சாதியால் வேறுபட்டன என்பதும் மதுரைக்கு அருகிலிருந்து பிழைக்க வந்த இடத்தில் பழகி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு பிரிக் கமுடியாதபடி அன்பால் கட்டுண்டு
கிடக்கின்றனர் என்பதும் அறிந்து வியந்துபோனேன்.

ஏனெனில் எங்ளுக்கு உறவாக வாய்த்த பலரின் கசாப்பான உறவுப் பட்டறிவுகள் என்னை இந்த மகிழ்ச்சிக்கு ஆற்றுப்படுத்தின.ஆசையோடு உழுது பயிர்செய்ய நினைத்திருப்பேன்.அவர்கள் ஏர்பூட்டி விதைத்து அறுவடைசெய்துகொள்வார்கள்.வாரம்கொடுக்கமாட்டார்கள் "உறவுக்
கிலுகிலுப்பைக்"காட்டி ஏமாற்றுவார்கள்.இருக்கும் நிலத்தை விலைக்குக் கேட்டுத் தராததால் சினம்கொண்டு 'சாவு வாழ்வு இல்லை' என்பார்கள்.பணத்துக்காக எங்கள் நிலத்துப் பக்கத்து நிலங்களைப் பிறருக்கு விற்று எங்களுக்கு எதிரானவர்களைக் கொண்டுவைத்து அடிக்கடி இடையூறு கொடுக்கும் அவர்களைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள்.இப்படியான எங்கள் உறவுகளுக்கு நடுவே இந்த உறவு எட்டாவது வியப்பாக எனக்கு இருந்தது.

அரும்பாக்கம் வீட்டுக்குச் சென்றதும் அகவை முதிர்ந்த அம்மா எங்களை அன்புடம் வரவேற்றோர்.உணவு ஆயத்தம்செய்து தந்தார்கள்.அனைவரும் உண்டு மகிழ்ந்தோம.

மதுரைத் தமிழில் எங்களை அன்பால் நனைத்தார்கள்.அந்த அம்மாவின் கடைசி மகன்தான் எங்களைப் புத்தக் கண்காட்சிக்கு வந்து அழைத்துவந்த இளைஞர் என்பதும் புரிந்தது. அந்த இளைஞர் பெயர் சுதாகரன்.நிதி நிறுவனம் நடத்தி நல்ல வசதியாகவே உள்ளார்.அவரும் பத்தாயிரம் உருவா அளவுக்குப் புத்தகம் வாங்கினார்.அம்மா ஏசுவார்கள் எனப் புத்தகத்தைத் தெரியாமல் கொண்டுபோய் வீட்டில் சேர்த்தார்.கவிஞர் பழனிபாரதியின் கவிதைகளை மெச்சிப் பேசினார்.பா.விசய் அவர்கள் அரசியலில் ஈடுப்பட்டடுக் கவிதைத்துறையில் கீழிறங்கி வருவதாக அந்த அன்பர் குறிப்பிட்டார்.

அவர் நிதி நிறுவனம் நடத்துவதால் கரடுமுரடாக இருப்பார் என நினைத்து ஏமாந்தேன். அவருக்குள் ஒரு கலையுணர்வு உண்டு.அறிவுத் தாகம் உண்டு.நல்லொழுக்கம் உண்டு. புதியதாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டு.இறை நம்பிக்கை அவர் உள்ளத்தில் இழை ஓடுவதை உணர்ந்தேன்.பிறருக்கு உதவும் இயல்பும் உண்டு.அவர் பல ஆண்டுகளாகப் படித்த இதழ்களின் முதன்மைப் பகுதிகளை வெட்டி ஒழுங்குசெய்து நூற்கட்டு செய்து வைத்திருந்தார். அதனைக் கண்டதும் அவரைப் பற்றிய என் பார்வை உயர்வாக இருந்தது.இவர் படித்திருந்தால் மிகச் சிறந்த நிலைக்கு வந்திருக்கமுடியுமே என நினைத்தேன்.

பணத்தொழிலில் இருப்பதால் குழப்பமான சூழலில் படிப்பதால் மனமாற்றம் பெறுவதாக உரைத்தார். அவர் காட்டிய அன்பும் அவரின் எண்ணமும் எனக்குப் புதிய பாடங்களைத் தந்தன. புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்காமல் திரும்பிய நான் சுதாகரன் என்ற புத்தகத்தைப் படித்துப் புதிய புதிய அறிவைப் பெற்றேன்.இப்பொழுது நினைத்தேன். முதலிலேயே சுதாகரன் வீட்டிற்கு வந்திருக்கலாம் எனத் தோன்றியது.

அவர்கள் அம்மா கையசைத்து அன்பொழுக வழியனுப்பியபொழுது இரவு பத்துமணியிருக்கும். புதுச்சேரி நோக்கி எங்கள் மகிழ்வுந்து விரைவாக முன்னேறியது.எனக்குச் சுதாகரனின் முகம் புதுப்புதுப் புத்தகங்களாக விரிந்து அறிவு தந்தது...


மக்கள் தொலைக்காட்சியின் வரவேற்பு வளைவு


தென்திசை அரங்கு


மலேசியத் தமிழ் நூல்கள் இடம்பெற்ற அரங்கு


குமரன் புத்தக அரங்கு(இலங்கை நூல்கள்)


அமுத நிலைய அரங்கு


தமிழ் ஓசை அரங்கு


தென்திசையில் தோழர் தளபதி


பொன்னி அரங்கில் தோழர் வைகறை உள்ளிட்டவர்கள்

2 கருத்துகள்:

ச.இலங்கேஸ்வரன் சொன்னது…

ஆகா பழைய நினைவுகளை திரும்பிப்பார்க்கச் சொல்கின்றது உங்கள் பதிவுகள்.

குப்பன்_யாஹூ சொன்னது…

புத்தக கண்காட்சி குறித்த பெரும்பாலான பதிவுகள் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் இடம் இருந்து மட்டும் வருகின்றன.

பார்வையாளர்கள் கூட பெரும்பாலும் புத்தகத் துறை சார்ந்தே உள்ளனர்.

என் கவலை பதிவு உலகமும் எழுத்தாளர்கள் பதிப்பளார்கள் பள்ளி கல்லூரி கைகளில் சிக்கி சிறப்பு அடையாமல் முடக்கி போகுமோ என்ற கவலை. (எப்படி இவர்களால் வாசிப்பு முடக்கி போனதோ அதே போல)

குப்பன்_யாஹூ