நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 10 ஜனவரி, 2009

மக்கள் தொலைக்காட்சியின் மக்கள் விருது 2008 சிறந்த தமிழ் சாதனையாளர்களுக்கு ஒரு மணிமுடி...


மக்கள் தொலைக்காட்சி அழைப்பிதழ்

மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கனார் உள்ளிட்ட தனித்தமிழறிஞர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர்கள் கண்ட கனவு இன்று
நனவாகி வருகின்றமைக்கு மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.ஆம்.தமிழும் தமிழர்களின் பண்பாடும் மீட்கப்படவேண்டும் என்பதைத் தமிழர்களுக்கு அடையாளப்படுத்தி வாழ்ந்து காட்டியவர்கள் அப்பெருமக்கள்.அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் மக்கள் தொலைக்காட்சி என்னும் தகவல் தொழில்நுட்ப ஊடகம் பல்வேறு தமிழ் மீட்பு முயற்சிகளைச் செய்து வருகின்றமையைத் தமிழ் உணர்வாளர்கள் வாயாரப் புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துகின்றனர்.

கடல்கடந்த தமிழர்கள் ஆர்வத்துடன் பேசும் பொருளாக மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதை அயலகத் தமிழறிஞர்களை யான் சந்திக்கும் பொழுதிலும் இணையம் வழி உரையாடும்பொழுதும் அறிகிறேன்.

தமிழகத்தின் வேர்மூலம் தேடி மீட்கும் பண்பாட்டு மீட்சியை ஈழத் தமிழர்களும் சிங்கை, மலையகம் உள்ளிட்ட அயலகத் தமிழர்களும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர். சந்தனக்காடு, ஈழம்,தமிழ்ப்பண்ணை,சொல்விளையாட்டு,மண்மணம்,பட்டாம்பூச்சி உள்ளிட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.செய்திகளும் சார்பற்றுத் தரமுடன் தரப்படுகின்றன.பொங்கல் உள்ளிட்ட தமிழர் திருவிழாக்கள் சிறப்புடன் அடையாளப்படுத்தப்படுகின்றன.

அறியப்படாமல் இருந்த தமிழகத்தை நிகழ்ச்சிகளால் வெளிச்சமிட்டுக் காட்டிய மக்கள் தொலைக்காட்சி அண்மையில் ஓர் அறிவிப்பைச் செய்தது.மக்கள்விருது 2008 என்னும் பெயரில் தமிழகத்தில் தமிழ்ப்பணி செய்த 31 துறை சார்ந்த அறிஞர் பெருமக்களை இனங்கண்டு விருது வழங்கிச் சிறப்பிக்க உள்ளமையே அந்த அறிவிப்புச் செய்தி.

அவ்வகையில் நாளிதழ்,வார இதழ்,சிற்றிதழ்,எழுத்தாளர்,தமிழ்ப்பணி,தமிழரல்லா தமிழ்ப் பணியாளர்,கல்வியாளர்,பள்ளி,கல்லூரி,இசை அறிஞர், நாடகம்,நாடகவியலாளர், திரைப்படம்,குறும்படம்,ஆவணப்படம்,ஓவியர்,சிற்பி,பதிப்பகம்,விவசாயி,அறிவியலாளர்,
இளம் விஞ்ஞானி,வணிகவியலாளர்,மருத்துவர்,சுற்றுச்சூழலியாளர்,சுய உதவிக்குழு, முன்மாதிரி கிராமம்,விளையாட்டு வீரர்,மாற்றுத்திறனாளர்,மழலை மேதை,மக்கள்
பணியாளர்,சிறந்த குடிமகன் என்னும் தலைப்புகளில் விருதுக்குரியவர்களை அடையாளம் கண்டு விருது வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வாழும் காலத்தில் இதுபோல் சாதனையாளர்களைப் பாராட்டவேண்டியது சமூக முன்னேற்றத்தில் அக்கறையுடையவர்களின் கடமையாகும் அச்சமூகக் கடமையைச்
செய்யும் மக்கள் தொலைக்காட்சியைப் பாராட்டி மகிழவேண்டும்.

விருது வழங்கும் நிகழ்ச்சி நிரல்.

நாள் : 12.01.2009,நேரம் மாலை 6 மணி
இடம் : செட்டிநாடு வித்தியாசரமம் பள்ளி அரங்கம்,இராசா அண்ணாமலைபுரம்,சென்னை

மாலை 6 மணி கலைநிகழ்ச்சிகள்

6.30 மணி தமிழ்த்தாய் வாழ்த்து

6.35 வரவேற்பு: திரு.கோமல் அன்பரசன்(முதன்மைச் செய்தி ஆசிரியர்-மக்கள் தொலைக்காட்சி)

6.40.மக்கள் விருது ஏன்? மருத்துவர் அய்யா - படக்காட்சி

6.45 விருது வழங்கிச் சிறப்பித்தல்: மருத்துவர் அன்புமணி இராமதாசு(நடுவண் அமைச்சர்)

இரவு 8.35 சிறப்புரை: மருத்துவர் ச.இராமதாசு(நிறுவுநர்,மக்கள் தொலைக்காட்சி)

8.55.நன்றியுரை: திரு.கார்மல்(மக்கள் தொலைக்காட்சி)

2 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மக்கள் விருது பற்றிய செய்தி மிக அருமை ஐயா. பயனான செய்தியாக அமைந்தது.

எமது மலேசியத்திலும் தமிழ்ப் பற்றாளர் உள்ளங்களில் மக்கள் தொலைக்காட்சி நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது எனலாம்.

தமிழையும் தமிழரையும் தமிழியத்தையும் மீட்டெடுக்கும் மக்கள் தொலைக்காட்சியில் தொலைநோக்குப் பணி நிச்சியமாக நிறைவேறும்.

பலதரப்பட்ட விருத்துகளை வழங்கும் மக்கள் தொலைக்காட்சி, தமிழுக்குப் பணிசெய்துவரும் வெளிநாட்டுத் தமிழர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு ஒரு விருதினை வழங்கினால் சிறப்பாக இருக்குமே!

உலகத் தமிழர்களுக்கு இதுவோர் ஊக்குவிப்பாக அமையும் என்பது அடியேனின் எண்ணம்.

இந்தக் கருத்தினை மக்கள் தொலைக்காட்சிக்குச் சேர்ப்பிக்கவும்.

ers சொன்னது…

நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/