இடைக்கழிநாடு பெயர்ப்பலகை
12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது.கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது.நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம்.கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது.இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு என்ற பெயரில் ஊர் உள்ளது.சிறுபாணாற்றுப்படையைப் பாடிய புலவர் பெருமகனார் நத்தத்தனார் பிறந்த நல்லூர், இங்குதான் உள்ளது.
புதுச்சேரி - சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள கடப்பாக்கத்திலிருந்து பிரிந்து கிழக்கே நான்கு கல் தொலைவில் கடற்கரையை ஒட்டியமைந்துள்ள ஆலம்பரைக் கோட்டையை அடையும்பொழுது முற்பகல் 11.30 மணியிருக்கும்.
ஆர்க்காடு நவாப்பு ஆட்சியில்(கிபி.பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த இடம் புகழ்பெற்ற இடமாக விளங்கியுள்ளது.கடற்கரை வணிகத்தளமாக இப்பகுதி அமைந்திருந்தது.கி.பி.1735 இல் நவாப் தோசுது அலிகான் என்பவன் இக்கோட்டைய ஆண்டுள்ளான்.கி.பி.1750 இல் ஆங்கிலேயப்படைகளை எதிர்க்க உதவிய பிரஞ்சு தளபதி துய்ப்ளக்சு சுபேதார் முசார் பர்சங்குக்கு இக்கோட்டையைப் பரிசாக அளித்தான்.கி.பி.1760 இல் பிரஞ்சுப்படையை வெற்றிகொண்ட ஆங்கிலேயப்படை இக்கோட்டையைச் சிறிது சிதைத்தது.இச்சிதைவுகளுடன் இக்கோட்டை பராமரிப்பின்றி இன்று சிதைந்து காணப்படுகிறது.அண்மையில் திரைப்படம் எடுக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்தியதால் மக்கள் பார்வைக்கு இக்கோட்டை நன்கு அறிமுகம் ஆயிற்று.
பண்டைய நாளில் கப்பலில் இருந்து பொருள்கள் படகுகளில் இறக்கப்பட்டுக் கோட்டைக்கு அருகில் இருந்த படகுத்துறையின் வழியாகக் கோட்டையில் பொருள்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.அதற்குரிய அமைப்புகள் கோட்டையின் சிதைவுகள் சொல்கின்றன.மிகப்பெரிய சுற்றுச்சுவர்கள்,அழகிய வேலைப்பாடுடைய முகப்பு.படிகள் அரண்கள்,கட்டடங்கள்,கோயில்கள் எனப் பல பகுதிகள் நம்மைப் பழங்கால வரலாற்றைச் சொல்லிச் சிந்திக்க வைக்கின்றன.
கடற்காற்று இதமாக இருந்தது.காலையில் அல்லது மாலையில் சென்றிருந்தால் இயற்கை அழகை முழுமையாகக் கண்டு மகிழ்ந்திருக்கலாம்.கடற்கரையில் மீன்பிடித்தொழில் சிறப்பாக நடக்கிறது.அருகில் மீனவர்களின் வாழ்விடங்கள் உள்ளன.ஆழிப்போரலையின் தாக்கத்தில் இந்தப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.தொண்டு நிறுவனங்கள் கட்டிக் கொடுத்துள்ள புதிய குடியிருப்புகள் அந்த மக்களுக்கு இன்று உதவியாக உள்ளன.குழுவாகச்
செல்வது நல்லது.பாதுகாப்பானது.
ஆலம்பரைக்கோட்டை பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.நவாபுகளின் ஆட்சியில் கடற்கறைத் துறைமுகமாக விளங்கியது.சரிகைத் துணி,உப்பு,நெய் ஏற்றுமதிக்கு இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.இங்கு இருந்த நாணயச்சாலையில் ஆலம்பரைக்காசு,ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இங்குப் பணிபுரிந்த பொட்டிப்பத்தன் என்பவன் காசி இராமேசுவரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சிவன்கோயில் பெரியகுளம்,சத்திரம் கட்டியதாக அறியமுடிகிறது.,வடநாட்டைத் தமிழகத்துடன் இணைக்கும் பெருவழி கோட்டையின் மேற்கே இரண்டுகல் தொலைவில் இருந்துள்ளது.
ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்லும் ஆலம்பரக்கோட்டையைக் கண்டுகளிக்க மீண்டும் ஒருமுறை செல்ல உள்ளேன்.என் பயணத்தில் பேராசிரியர் முனைவர் கல்பனா (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்)அவர்களும் உடன் வந்திருந்தார்கள்.அவருக்கு நன்றி.
கோட்டை பற்றிய குறிப்புப்பலகை
கோட்டை முகப்பு
கடற்கரை ஒட்டிய கடல்பகுதி
சிதைந்த முகப்புப் பகுதி
கடலொட்டிய கோட்டைச்சுவர்கள்
கடலில் கரையும் கோட்டையின் இடிபாடுகள்
கோட்டையின் உள்பகுதியில் உள்ள கட்டடம்
முகப்பு
கோட்டைச் சிதைவுகள்
கோட்டைச் சிதைவுகள்
5 கருத்துகள்:
நல்ல பதிவு.
பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் இதைப்பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடலூரின் அழிந்த கோட்டைகள் பற்றி என் நண்பன் ஆராய்ச்சி செய்து வருகின்றான்.
//அண்மையில் திரைப்படம் எடுக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்தியதால் மக்கள் பார்வைக்கு இக்கோட்டை நன்கு அறிமுகம் ஆயிற்று//
என்ன படம்?
அருமையான பதிவு ,
நன்றி
விஜய்
ஆலம்பரைக்கோட்டை பதிவு நன்று வாழ்த்துகள்
"வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை..."
உண்மைதான் தலைப்பிற்கேற்ற பதிவு தான். நன்றாக உள்ளது
கருத்துரையிடுக