தகடூர் கோபி அவர்கள்
கணிப்பொறித்துறையில் உழைப்பவர்களை இருவகைப்படுத்திப் பார்க்கலாம். தங்கள் குடும்பம், வயிற்றுப்பாட்டுடன் பெங்களூர் அல்லது சென்னை முடிந்தால் அயல்நாடுகளில் தங்கித் தொழில் செய்யும் ஒரு வகையினர். இவர்களால் நம் மொழிக்கோ, இனத்துக்கோ சிறு பயனும் இல்லை.இன்னொரு வகையினர் தொழில் நிமித்தம் வேறு இடங்களில் வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் மறவாமல் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மொழியைக் கணிப்பொறி, இணையத்தில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மென்பொருள்களை உருவாக்கி இலவசமாக வழங்கும் கொடையுள்ளம் கொண்டவர்கள். இவர்களால்தான் தமிழ் இணையத்துறை இன்று உயிர்மூச்சுவிட்டுக் கொண்டுள்ளது.
இத்தகு கொடையுள்ளம் உள்ளவர்களுள் இளைஞர் கோபி குறிப்பிடத்தகுந்தவர். ஐதராபாத்தில் முன்னணிக் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவரை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. மென்பொருளறிஞர் பட்டத்தைப் பெற்றுள்ள இவரின் கண்டுபிடிப்புகள் தமிழுலகிற்குத் தேவையான ஒன்றாகும். உமர் பன்மொழி மாற்றி, அதியமான் எழுத்துரு மாற்றி, அதியன் பயர்பாக்சு நீட்சி உள்ளிட்ட மென்பொருள்களைத் தந்துள்ளார்.
தமிழில் பேசுவதை அப்படியே தட்டச்சிடும் மென்பொருளையும், தமிழில் உரையாக உள்ளதைப் பேச்சொலியாக மாற்றித் தரும் மென்பொருளையும் உருவாக்கிக் கண்பார்வை அற்றவர்களையும், வாழ்வின் பெரும்பகுதி வெளியூர்ச் செலவுகளில் இருப்பவரையும் இலக்கியம் படிப்பவர்களாக (மன்னிக்க! கேட்பவர்களாக) மாற்றும் இக் கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளராக விளங்கப் போகும் இவரிடம் சில வினாக்களை முன்வைத்தேன்.
தங்களின் இளமைப்பருவம் பற்றி...
என் தாய் திருமதி. தோகையர்க்கரசி பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். தந்தை திரு. தணிகாசலம், திருவள்ளுவர் அறிவகம் மற்றும் அண்ணா அறிவகம் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1976 ஆம் ஆண்டு சூன் முதல் நாள் பிறந்தேன். தருமபுரியிலேயே என் இளமைப் பருவம் முழுவதும் கழிந்தது. தொடக்கக் கல்வியைத் தந்தை பணியாற்றிய பள்ளியிலேயே படித்து முடித்தேன். பின்னர் அதியமான் அரசு மேனிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வியும் மேல்நிலைக் கல்வியும் முடித்தேன். ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இளநிலை மின்பொறியியல் பட்டம் பெற்றேன். பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுநிலைத் தகவல் தொழில்நுட்பப் பட்டயம் முடித்தேன்.
நீங்கள் முதலில் பணிபுரிந்த இடம் பற்றிய விவரம்?
முதலில் சப்தகிரி பொறியியல் கல்லூரியில் மின்னியல் விரிவுரையாளர் பணி. அதன் பின் ஓராண்டுக் காலம் தமிழ்நாடு மின்வாரியத்தில் மின் பொறியாளர் பயிற்சி பெற்றேன். அடுத்ததாகச் சென்னையில் இரண்டரை ஆண்டுக் காலம் சில தொடக்க நிலை சிறு மென்பொருள் நிறுவனங்களில் பணி புரிந்தேன். அதன் பின் நியூயார்க் நகரில் சுமார் ஆறுமாத காலம் ஒரு நிதிநிலை மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, கடைசியாகக் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐதராபாத்தில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.
தமிழ்க் கணிப்பொறியில் ஈடுபாடு எப்பொழுது ஏற்பட்டது? யாரால்?
2004 ஆம் ஆண்டு, தமிழில் வலைப்பதிவு தொடங்கக் காரணமாய் இருந்தவர் என் நண்பர் திரு.சீனு. வலைப்பதிடுவதற்குத் தமிழில் தட்டச்சிட திரு.சுரதா அவர்களின் புதுவைத் தமிழ் மாற்றியைப் பயன்படுத்திய போது அதனை மேம்படுத்திப் புதிதாய் வெளியிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காகச் சுரதா அவர்களைத் தொடர்புகொண்டேன். அதற்காக அவர் ஒப்புதல் அளித்துத் தகடூர் தமிழ் மாற்றியின் உருவாக்கத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஆலோசனை வழங்கினார். இப்படியாக என் இனையத் தமிழ் ஈடுபாடு தொடங்கியது.
தமிழுக்குத் தாங்கள் தந்துள்ள மென்பொருள்கள்?அதன் பயன்பாடு?சிறப்பு?
தகடூர் தமிழ் மாற்றி என்னும் மென்பொருள் உருவாக்கியுள்ளேன். இது தமிழில் தட்டச்சிட உதவும் ஒரு கருவி. இதைக் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
உமர் பன்மொழி மாற்றி:
தகடூர் தமிழ் மாற்றியைப் போலவே இந்தியாவின் பிற மொழிகளுள் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஒரியா,பெங்காலி, பஞ்சாபி, குசராத்தி மற்றும் இந்தி ஆகியவற்றுக்கான தட்டச்சுக் கருவி. தேனீ எழுத்துரு அளித்த அமரர் திரு. உமர் அவர்களின் நினைவாக இந்தப் பன்மொழி மாற்றிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
அதியமான் எழுத்துரு மாற்றி:
தமிழ் இணையப் பக்கங்களில் காணப்படும் பல்வேறு எழுத்துருக்கள்/குறியேற்றங்களால் ஆன பக்கங்களை ஒருங்குகுறிக்கு மாற்றிப் படிக்க உதவும் ஒரு கருவி. இதையும் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதைப் பயன்படுத்த ஓர் உலாவி மட்டுமே போதுமானது.தற்சமயம் TAB,TAM,TSCII குறியேற்றங்களால் ஆன வலைப் பக்கங்களையும் தினமணி, தினத்தந்தி ஆகிய எழுத்துருவில் அமைந்த வலைப் பக்கங்களையும் ஒருங்குகுறிக்கு மாற்றிப் படிக்க இயலும்.
அதியன் ஃபயர்ஃபாக்சு நீட்சி:
அதியமான் எழுத்துரு மாற்றியின் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி வடிவம். இதன் மூலம் உள்நுழைவு/கடவுச்சொல் தேவைப்படும் வலைப்பக்கங்களையும் ஒருங்கு குறிக்கு மாற்றிப் படிக்க இயலும்.
TABUni/TAMUni/Unicode எழுத்துருக்கள்:
பனாசியா நிறுவனம் வெளியிட்ட சில அழகிய எழுத்துருக்களை ஒருங்குகுறிக்கு மாற்றி அளித்துள்ளேன். இதற்கான செயல் விளக்கத்தை எனது வலைப்பதிவில் காணலாம்.
தமிழ் விசை ஃபயர்ஃபாக்சு நீட்சி:
ஃபயர்ஃபாக்சு இணைய உலாவிக்குள் எந்த வலைப்பக்கத்தில் உலாவினாலும் (உதாரணமாக ஜி-மெயில், யாகூமெயில்) அதற்குள் தமிழில் தட்டச்சிட உதவும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி இது. தமிழா! முகுந்த் அவர்களால் உருவாக்கப்பட்டு, வாய்ஸ் ஆன் விங்க்சால் மேம்படுத்தப்பட்ட இந்த நீட்சியைத் தற்போது நான் மேம்படுத்திப் பராமரித்து வருகிறேன்.
தாங்கள் தமிழுக்கு அடுத்துத் தர உள்ள மென்பொருள்?அதன் பயன் என்ன?
ஔவை உரைபேசிச் செயலி, மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி என்னும் மென்பொருள்கள். இதன் மூலம் ஒருங்குகுறி தமிழ் உரை மற்றும் வலைப்பக்கங்களை ஒலி வடிவில் மாற்றிக் கேட்கலாம். கண் பார்வை குறைபாடுள்ள பயனர்களுக்கும், படிப்பதை விட கேட்பதற்கு ஆர்வம் அதிகம் உள்ள பயனர்களுக்கும் இது மிகுந்த பயனளிக்கும்.
தமிழ் இணையம் இப்பொழுது மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளதா?செல்வாக்குப்பெற என்ன வழிகள் உள்ளன?
தமிழ் இணையத்தின் பயன்பாடு குறித்த விழிப்பு, இன்னும் இணையம் சார் மக்களிடமே அதிக அளவில் இல்லை (என்னிடம் கணினியில் தமிழில் தட்டச்சிட முடியுமா என்று கேட்ட நண்பர்களுள் சிலர் அன்றாடம் இணையத்தில் உலாவுபவர்கள்) இப்படி இருக்கும் போது, இணையம் குறித்தே அதிகம் அறிந்திடாத பொதுமக்களிடம் தமிழ் இணையத்தின் பயன்பாடு குறித்த செய்தியை எடுத்துச் செல்வது மிகப் பெரிய செயல். தமிழ் இணையத்தில் பங்களித்து வரும் நண்பர்கள், தத்தமது பகுதிகளில் பயிலரங்கு, கருத்தரங்குகள், கூட்டங்கள் மூலம் தமிழ் இணையம் குறித்த விழிப்பை ஏற்படுத்துவதே அதன் செல்வாக்கை அதிகரிக்க சரியான வழி.
உலக அளவில் தமிழ் இணையத்துறைக்கு இன்று யார் யார் உழைத்து வருகின்றனர்?
நான் அறிந்த வரையில் தமிழ் இணையத் துறைக்கு அரசு சார் நிறுவனங்களின் பணியை விடத் தனிப்பட்ட குழுக்களின் பங்களிப்பே அதிகம். தமிழ் இணைய இலக்கியத்தில் அவ்வளவாக அறிமுகம் இல்லாததால் தமிழ் இணையத் தொழில்நுட்பப் பங்களித்து வரும் சில குழுக்களை மட்டும் கீழே பட்டியலிட்டுள்ளேன்.
தமிழா!
கட்டற்ற தமிழ்க் கணிமை
தமிழ் லினக்ஸ்
தமிழ் இணையத்திற்குத் தங்களின் எதிர்காலத்திட்டம்?
தமிழ் இணைய நுட்பத்தில் இன்றைக்கு வெற்றிடமாய் இருக்கும் உரைபேசி (Text to Speech), பேச்சிலிருந்து உரை(Speech to Text) மற்றும் ஒளியியல் குறிமுறை உணர் செயலி (Optical Code Recognition) போன்ற சில மென்பொருள் தேவைகளுக்காக உழைப்பது எனது எதிர்காலத் திட்டம்.
நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம்,11.01.2009
காசி ஆறுமுகம்
தருமபுரித் தமிழ்ச்சங்கம்
முகுந்து
மருத்துவர் கூத்தரசன்
தகடூர் நரசிம்மன்
5 கருத்துகள்:
நல்ல பல விபரங்கள்- நன்றி
தமிழ் விசை ஃபயர்ஃபாக்சு நீட்சி:
இதைத்தான் இன்றும் உபயோகப்படுத்தி வருகிறேன்.இதில் மேம்பாடா! காத்திருக்கேன்.
நல்ல பதிவு. எங்களுக்கு மிக்க பயனுள்ள தகவல். நன்றிகள் பல.
மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்..............
இன்று இந்தப் பதிவு பலரையும் சென்று சேர்ந்திருக்கிறது. தங்களைப் போன்றவர்களின் உழைப்பே இணையத்தில் தமிழை பாவிக்க வைக்கிறது
திரு கோபி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது
கருத்துரையிடுக