நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 10 ஜனவரி, 2009

தமிழ் தமிழர் இன்றையநிலை...

தமிழில் சற்றொப்ப இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன.75 விழுக்காட்டுப் பிறமொழிச்சொற்களை நாம் அன்றாடம் கலந்து பேசுகிறோம்.

(எ.கா) "இந்த வருஷம் ஜாஸ்தி லீவு" என்று பேசும் நான்கு சொற்களில்
நான்கும் நான்கு மொழிச்சொல்லாக இருப்பதை அறிஞர் அருளி அவர்கள் தம் நூலில்
குறிப்பார்.இந்த-தமிழ்; வருஷம்-சமற்கிருதம்;ஜாஸ்தி -உருது; லீவு-
ஆங்கிலம்.

இப்படி பன்மொழிகளைக் கலந்து பேசக் காரணம் பிறமொழிக்காரர்களுடன் நாம் கலந்து வாழவேண்டிய தமிழகச் சூழல் என்க.பிறமொழியினர் நம்மை ஆண்டு, அடிமைப்படுத்தி இருந்தமையும் இதற்குக் காரணம்.

பிறமொழிக்காரர்களுடன் வாழவேண்டிய சூழலில் பிறமொழி கலப்பது இயல்பே. ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பிறமொழிச்சொற்கள் கலந்தால் அம்மொழிக்கு வளம்தான்.நம் மொழியில் பிறமொழிச்சொற்கள் கலப்பது தமிழுக்கு இழப்பே.


சான்று:
காலதர்(கால் =காற்று;அதர்=வழி) என்ற சொல் வழக்கத்தில் இருந்தது (சிலம்பு). சன்னல் என்ற போர்த்துக்கீசிய சொல் வந்த பிறகு நம் காலதர் மறைந்துது.எனவே பிறமொழிக் கலப்பால் தமிழில் வழங்கும் சொல் இழப்பது நிலையாக உள்ளது.எனவே தமிழ்மொழியில் பிறமொழிச்சொல் கலவாமல் எழுதுவதை,பேசுவதை கற்றவர்கள் முன்னெடுக்கவேண்டும். அதனை விடுத்து அவ்வாறு பேசுபவர்களை,பேசுபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்துபவர்களை இகழ்ந்து தாம் பெரிய அறிவாளிகளாகக் காட்டிக் கொள்ளவதைத் தவிர்க்கவேண்டும்.


இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு தமிழ் பற்றி முழுமையாக அறியாதவர்கள் பலரும்
தமிழ் பற்றி கருத்துரைப்பதும் தமிழ்ப் பரிசளிப்புக்குழுக்களில் அமர்ந்துகொள்வதும் கேடான
முன்காட்டாகும்.இவர்கள் தமிழுக்கான குழுக்களில் அமர்வதும் அமர்த்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது.

மேலும் தமிழ் அரசியல்காரர்களின் மரப்பாச்சிப் பொம்மையாகிவிட்டது.கருத்தரங்க ஏற்பாட்டாளர்களின் காசுக்குரிய தொழிலுக்கும் தமிழ் இன்று நல்ல வணிகப் பொருளாகிவிட்டது. சென்ற ஆண்டு சமய இலக்கியத்தில் மாநாடு கூட்டி ஆராய்ச்சி செய்தவர்கள் இந்த ஆண்டு பகுத்தறிவுக்கொள்கையுடைய அண்ணாவுக்கு நூற்றாண்டு விழா காணும் அவலம்.இவர்கள் பெரியாருக்குக் காசியில் கங்கைக்கரையில் "புண்ணியதானம்" செய்தாலும் செய்வார்கள்.

சங்க இலக்கியம் சென்ற ஆண்டு வரை சீண்டுவார் இல்லாமல் தமிழகக்கல்வி நிறுவனங்களில் தள்ளாடியது.காரைக்குடி அழகப்பா பல்கலையில் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் பணியாற்றிதால் அவர் வளர்த்த மாணவர்கள் சங்க இலக்கியக் குழந்தைக்கு ஆராய்ச்சிப் பாலூட்டி வளர்த்தனர்.இன்று செம்மொழி நிறுவனத்தில் காசு வாங்க பலரும் சங்க இலக்கியப் புலிகளாகிவிட்டனர்.படம் எடுக்கிறார்கள்.ஆவணமாக்குகிறார்கள்.பதிப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மொழிபெயர்க்கத் துடிக்கின்றனர்.படிக்க மட்டும் மறுக்கிறார்கள்.

புதுச்சேரியில் சங்க இலக்கிய விழிப்புணர்ச்சியூட்ட ஊர்வலம்போனார்கள். மதுக்குடி நாயகர்கள் அடித்த பறையாட்டத்தில் தமிழ்த்தாய் தள்ளாட்டம் போட்டாள்.கரகாட்டம், வானவேடிக்கை நடந்தது.உ.வே.சாமிநாதர் படம் தூக்கி நடந்தார்கள்.உ.வே.சாவைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கிய ஆய்வுகளில் ஈடுபடவில்லையா?பதிப்பிக்கவில்லையா?என்று ஒருவரும் கேட்கவில்லையே.மழவை மகாலிங்க ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமியார், சி.வை. தாமோதரனார் போன்றவர்களை நினைவுகூர ஆள் இல்லையே!

பண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார் ஐயா அவர்கள் தம் மிகப்பெரியஇசைப்புலைமையை இந்தத் தமிழ்ச்சமூகம் பயன்படுத்திக் கொள்ளாததால்அவர்கள் வறுமையுடன் சுற்றிவந்து தமிழகம் முழுவதும் தமிழிசைப்பணியை ஆற்றவேண்டியிருந்து.கோவை மாவட்டத்துக்காரர்கள் பண்ணாராய்ச்சி வித்தகருக்குக் கடைசிக்காலம் வரை அன்புகாட்டியமை தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் சுந்தரேசனாரின் துணைவியார் இறக்கும்வரை அவர்களுக்கு நிதியுதவி நல்கியமை என்றும் போற்றத் தகுந்த செயலாகும்.

பாவாணர் மனைவி பத்து உரூவா பணம் இல்லாததால் உயிர் பிழைக்கச் செய்யமுடியாத நிலையைப் பாவாணர் குறிப்பிடுவார்.திரு.வி.க.அவர்கள் உணவுக்கு இறுதிக்காலத்தில் தொல்லைப்பட்டதாகவும் அறியமுடிகிறது.மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் இறுதிக்காலமும் மகிழ்ச்சியாக அமையவில்லை.பெரும்பாவலர் பாரதியின் வறுமையை இவ்வுலகம் அறியும்.அவர் உயிருடன் இருந்தபொழுது சிறுமைப்படுத்தியவர்கள் இன்று அவரைத் தெய்வாமாக்கி அழகு பார்க்கின்றனர்.மாநாடு கூட்டி மார்தட்டுகின்றனர்.

இன்றைய பட்டிமன்றக்காரர்களும் சமயப்பேச்சாளர்களும் இந்த நாளை இனிய நாளாக்க மணிக்கு நாற்பதாயிரம் கறக்கும் மடமையை என்னென்பது?திரைப்பா ஆசிரியர்கள் பேசுவதுதான் தமிழ் என மூடத்தனமாக நம்பி அவர்களை மதுரைக்கு விமானத்தில் அழைக்க,வளியறையில் தங்கவைக்க,உதவிளருக்கு ஒரு மகிழ்வுந்து தனக்கு ஒரு மகிழ்வுந்து கேட்கும் கவிராசர்களை என்னென்பது?அவர்களுக்கு முதன்மைதரும் கல்வி உலகை என்னென்பது?காலமெல்லாம் வறுமையில் வாடினாலும் தமிழ்ப்பணியில் தளராத, நாளும் பணவிடை கொணரும் அஞ்சல்காரரின் வருகைக்கு ஏங்கிய பெருஞ்சித்திரனார் போன்ற கொள்கையாளர்களின் வறுமையை என்னென்பது?மொழிக்கும் இனத்துக்கும் நாட்டுக்கும் உண்மையாக உழைத்த இவர்களை இன்னும் தமிழகத்தில் அனைவரும்
அறியாமல் இருப்பது நம் கீழ்நிலைகாட்டும் சான்றாகும்.

தமிழ் நம் தாய்மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.தமிழ் தமிழர்களின் பொதுச்சொத்து. புலவர்களின் சிறப்புச் சொத்து.எனவே தமிழ்பற்றி முடிவெடுக்கும் இடங்களில் எல்லாம் தமிழாய்ந்த தமிழர்கள்தான் இருக்கவேண்டும்.பொறியியல்,மருத்துவம் துறைசார்ந்த குழுக்களில் கருத்துரைஞராகத் தமிழ் அறிஞர்கள் இடம்பெறச்செய்தால் அந்தத் துறை
சார்ந்தவர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.நெஞ்சாங்குலை மருத்துவப்பண்டுவம் சார்ந்த அறிஞர்கள் குழுவுக்கு யான் தலைமை தாங்கலாமா?அல்லது நாளும் இடுந்து விழும் கட்டட மாதிரி உருவாக்குபவனை நீண்ட பாலம் கட்ட அனுமதிக்கலாமா?ஆனால் தமிழுக்கு எதிரானவர்கள், தொடர்பற்றவர்கள் பல குழுக்களில் இன்று அமர்ந்துள்ளனர்.அவர்கள் அமரவைக்கப்பட்ட பிறகும் அவர்களைப் பற்றி கருத்து கூறாமல் இருப்பது நம் தன்னலங்காட்டும் செய்கையாகும்.

இது நிற்க.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் மதிப்பிற்குரிய தொல். திருமாவளவன்
அவர்கள் ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்குத் தமிழில் பெயர்மாற்றியது எளிய செயல் அன்று. தமிழ் வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களுக்கு அவர் கொடுத்த முதல் அதிர்ச்சி மருத்துவம்.அவர் செயல் தமிழ்மொழி வரலாற்றை எம்போல்வார் எழுதும்பொழுது அது நன்றியுடன் மதிக்கப்படும். குறிக்கப்பெறும். பாவாணர்,பெருஞ்சித்திரனார்,வ.சுப.மாணிக்கம்,தமி­ழண்ணல்
உள்ளிட்ட அறிஞர்கள் வழியில் தமிழுக்கு வளம் சேர்ப்பவர்கள் பல்லாயிரவர் உள்ளனர் என்பதற்குத் திருமாவளவன் அவர்களின் செயல் ஒரு சான்றாம்.


தமிழீழத்தில் உயிருக்கும் உரிமைக்கும் போராடும் நிலையிலும் அவர்கள் தங்கள் மறவர்களுக்குத் தூயதமிழில் பெயரிட்டுள்ளதும்,அவர்களின் அரசாட்சியில் தமிழீழ வைப்பகம் எனவும் மாவீரர் துயிலும் இடம் எனப் பொறித்துள்ளதும்,வழக்குகள்,கல்வி,கலை,பண்பாடு யாவும் தமிழில் தமிழுக்கு ஆக்கமான வகையில் செய்யப்படுவதாகவும் ஏடுகளில் படிக்கின்றமை நம்பிக்கை தரும் செயல்களாகும்.சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் பெற்ற மொழியாக உள்ளமையும் இங்கு எண்ணிப்பார்க்கத்தகும்.


மொரீசியசு,தென்னாப்பிரிக்கா நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத் தமிழர்களுடன் தொடர்புகொள்ள நினைத்து அதற்குரிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையும், மலேசியா,அத்திரேலியா.கனடா.அமெரிக்கா,இலண்டன்,பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் பண்பாட்டையும்,சமயத்தையும்,மொழியையும் காக்க முனையும் செயல்களையும் அவர்களின் பற்றையும் எண்ணி எண்ணி வியப்படைய வேண்டியுள்ளது.


மலேசியாவில் வாழ்ந்த தமிழர் ஒருவர் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு மன்னர்மன்னன், இளந்தமிழன், அண்ணாதுரை எனப் பெயரிட்டுள்ள பாங்கறிந்து வியந்துபோனேன்.தமிழகத்தில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மகனும் தமிழ்ப்பேராசிரியர்.அவர் தமிழில் கையெழுத்திடு வதில்லை. மகனுக்கே தமிழில் கையெழுத்திடுக எனப்பயிற்றாத அந்த தந்தைப்பேராசிரியரிடம் படித்த பல்லாயிரம் மாணவர்கள் உணர்வற்ற பிண்டங்களாகத்தானே வெளியேறியிருப்பார்கள். இவர்களைப் போன்ற மொழிப்பற்றற்ற தொடைநடுங்கிப் பேர்வழிகளால்தான் தமிழுக்கு இழப்பு ஏற்படுகிறது.

மொழிகாக்கும் நிறுவனங்களில்,அமைப்புகளில் பணிபுரிந்த பலரும் அரசியல் எடுபிடிகளாக
ஒப்பனை முகம் பெற்றார்களே தவிர அறிஞர் வ.அய்.சுப்பிரமணியன்,தமிழண்ணல்
போல தனிமுத்திரை பதித்தார்கள் இல்லை.இத்தகு சான்றோர்கள் தமிழுக்கு அதிகம்
கிடைத்தால் தமிழ் வீறுகொண்டு வளர்ந்திருக்கும்.


கன்னட மொழிக்காரர்கள் யாரும் தங்கள் மொழிக்கு உழைத்தவர்களை அவமதிப்பதில்லை. எதிர் கருத்துச்சொல்வதில்லை.அவர்களை மதிப்பார்கள்.தமிழகத்தில் தமிழுக்கு உழைப்பவர்கள் வாழும் காலத்தில் மதிக்கப்பட்டமை மிகக் குறைவு.


தமிழகத்தை இலக்கியத்தால் மாற்றப் போவதாகப் புறப்பட்ட சில எழுத்தாளர்கள் தங்கள் இதழின் பெயரையே தமிழாக வைக்காமல் தமிழ்வளர்க்கப் புறப்பட்டுள்ளமையை நினைத்து வெட்க வேண்டியுள்ளது.இவர்களைத் தான் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் கரித்துணியால் தூய்மை செய்பவர்கள் என்பார்.


சிற்றூர்ப்புற மக்களும்,தமிழ் உணர்வுடைய நகர மாந்தரும் அயல்நிலத்தாரும் இருக்கும்வரை தமிழுக்கு ஆக்கம் அமையும். தமிழுக்கு இழப்பு வந்தபொழுதெல்லாம் அது தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டுள்ளது.தமிழுக்கு அத்தகு ஆற்றல் உள்ளது.அழிவுநாள் குறித்து வைத்து யாரும் அழவேண்டாம்.

(மின்தமிழ் குழுவில் திருவாளர் முனைவர் நா.கணேசனார் தமிழின் இன்றைய நிலை பற்றிய என் கருத்தறிய விரும்பினார்.அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி)

5 கருத்துகள்:

puducherry சொன்னது…

"இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன் நேரம் 10:56 PM
லேபிள்கள்: தமிழர்கள், தமிழ் நிலை"

இடுகையிட்டது முனைவர் மு.இளங்கோவன்

நேரம் 10:56 PM

நேரம் 10:56 PM??? it is Tamil??

Kallam is Real Tamil

லேபிள்கள்: தமிழர்கள், தமிழ் நிலை

லேபிள்கள்: Lable is Tamill??

Perivu or Vakaii it is Correct Tamil..

Hello Mu.Illangovan Were did you buy முனைவர் Certificate???

and IInd


Google/பிளாகர் ??? what is mean by Bloger?? it is easily wirte in tamil Vallipookkall like use good words..

sir, don't anger me :-)))))

Unknown சொன்னது…

தமிழீழத்தில், தலைப்பெயரை ஆங்கிலத்தில் எழுதமுடியாது, தமிழில்தான் எழுதவேண்டும். வாகனங்களின் எண் பலகையில் அனைத்தும் தமிழே, அங்கே அரசு கோப்புக்கள் அனைத்தும் தமிழிலேயே உள்ளன.

ம்ம்ம்....கனவு தேசத்தில் கால்வைப்பது என்னாளோ?

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தமிழ்நாட்டில் தமிழுக்கு நிகழ்ந்துவரும் சரிவு அயல்நாடுகளில் வாழும் எம்போன்ற தமிழர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது ஐயா!

தமிழை இனத்தின் உறுதிப்பொருளாகக் கொள்ளாமல் வயிற்றை வளர்க்கும் உதிரிப்பொருளாக நினைக்கும் கயமைத்தமிழர் இருந்துகொண்டேதான் இருப்பர்.

வரலாற்றில் அவர்களின் பெயர்கள் தமிழ் உணர்வாளர்களின் பழிப்புக்கு உள்ளாகியே தீரும்.. தமிழுக்குச் செய்த தீங்கிற்காக 'தமிழ்க்கேடர்' என்னும் பட்டத்தை அவர்கள் கண்டிப்பாகத் தலையில் தாங்கியே ஆகவேண்டும்.

தொடக்கம் முதல் மனதுக்கு வலியைத் தரும் வகையில் எழுதிவந்தாலும்,

இறுதியில்,

//சிற்றூர்ப்புற மக்களும்,தமிழ் உணர்வுடைய நகர மாந்தரும் அயல்நிலத்தாரும் இருக்கும்வரை தமிழுக்கு ஆக்கம் அமையும். தமிழுக்கு இழப்பு வந்தபொழுதெல்லாம் அது தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டுள்ளது.தமிழுக்கு அத்தகு ஆற்றல் உள்ளது.அழிவுநாள் குறித்து வைத்து யாரும் அழவேண்டாம்.//

என்று தன்னம்பிக்கை விதையைப் பதியம் போட்டுள்ளீர்கள் ஐயா!

இது உண்மை! தமிழை காக்க எப்போதும் வாழையடி வாழையென ஒரு தமிழ்மரபுக் கூட்டத்தார் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள்.

அதனையும் தாண்டி தன்னைத் தானே காத்துக்கொள்ளும் திறமும் நின்றுநிலைபெறும் தெய்வத்தன்மையும் நமது அன்னைத்தமிழுக்கு இறையருளால் வாய்க்கப்பெற்றுள்ளது.

நீண்ட நெடிய தமிழ் வரலாற்றில் இந்த உண்மையை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மலேசிய மண்ணிலும் தமிழின் தூய்மையையும் தலைமையையும் காத்துநிற்க தூயவர்கள் சிலரை இயற்கையன்னை ஈன்றளித்திருக்கிறாள்.

அவர்களுள் சிலர்:-
1.அமரர் கோ.சாரங்கபாணி
2.அமரர் அ.பு.திருமாலனார்
3.அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார்
4.அமரர் இர.ந.வீரப்பனார்

இன்றும் தமிழ்ப்பணிசெய்வோர்:-
1.ஐயா.தமிழ்க்குயில் கலியபெருமாள்
2.ஐயா.கம்பார் கனிமொழி
3.ஐயா.கவிஞர் சீனி நைனா முகம்மது
4.ஐயா.பா.மு.அன்வர்
5.ஐயா.முரசு நெடுமாறன்
6.ஐயா.ரெ.சு.முத்தையா
7.ஐயா.மு.மணிவெள்ளையன்
8.ஐயா.இர.திருச்செல்வம்
9.ஐயா.இரா.திருமாவளவன்
10.ஐயா.க.முருகையன்

இப்படி இன்னும் சிலர் மலேசியாவில் தமிழுக்குக் காப்பாகவும் அரணாகவும் உரமாகவும் இருந்து வருகின்றனர்.

அகரம் அமுதா சொன்னது…

நேரசை கொண்ட நெடுந்தமிழைப் பள்ளியில்
வேரசை வின்றி விதை -என்ற வ.சுப. மாணிக்கனார் கூற்று என்று உண்மையாகுமோ என்றே தமிழக மக்களால் முழுக்கமுழுக்க தமிழைக் காதலிக்கவும் போற்றவும் காக்கவும் முடியும்.

அறியார் நரியார் அயல்மொழி நாடும்
வெறியார் பலரின் விருப்பு -என்பதுபோலத் தமிழறியாது அயல்மொழியையே அண்டும் சூழ்ச்சி மிக்க அயல்மொழி வெறிபிடித்தவர்களையே மூடமாக்களாகிய தமிழர்கள் நம்புவர்.

Arunkumar சொன்னது…

இந்த இடுகயில் ”சாபக்கேடு” என்று தாங்கள் எழுதியுள்ளது வடமொழியல்லவா?

சாபம் - சமக்கிருதச் சொல் தானே?