நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
ஊத்தங்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊத்தங்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஊத்தங்கரையில் தமிழ் இணையப் பயிலரங்கம்

கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை(21.08.2011) காலை 10 மணியளவில் வித்யா மந்திர் கல்லூரியில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெறுகின்றது. திரு. பழ.பிரபு அவர்களின் முயற்சியால் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. கல்லூரி,பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வதுடன் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு தமிழ் இணையப் பயன்பாட்டை அறிய உள்ளனர்.

சென்னையிலிருந்து பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களும், புதுவையிலிருந்து மு.இளங்கோவனும்,ஊத்தங்கரையிலிருந்து கவி செங்குட்டுவனும் கலந்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். கல்லூரி முதல்வர் பேராசிரியர் அருள்,கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருவோரை அன்புடன் வரவேற்க உள்ளனர். அனுமதி இலவசம். கணினி, இணைய ஆர்வலர்களை ஊத்தங்கரையில் சந்திக்க ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்ளலாம்.

ஆர்வலர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் : திரு.பழ.பிரபு + 91 9942166695

சனி, 19 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாம் பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் பன்னாட்டுக்கருத்தரங்கம் கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்தியாமந்திர் கலை அறிவியல் கல்லூரியில் திசம்பர் 19,20 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா இன்று வித்தியாமந்திர் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சிங்கப்பூர், மலேசியா நாட்டுப்பேராளர்கள் வந்திருந்தனர்.

தொடக்க விழாவில் கலந்துகொண்டவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள் வரவேற்றார்.

முனைவர் சிலம்பு நா.செல்வராசு கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார்.ஆர் அமைப்பின் ஓராண்டு செயல்பாட்டில் பல இழப்புகளும் ஆக்கங்களும் கிடைத்துள்ளன.தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவது தமிழாக்கமாக அமைகிறது.வ.ஐ.சுப்பிரமணியன்,கமில் சுவலபில் ஆகியோர் இயற்கை எய்தியமை தமிழுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.166 பேராளர்கள் கட்டுரை வழங்கியுள்ளனர்.துளிர்,இதழ்,மலர் என்னும் மூன்று கருத்தரங்க ஆய்வுக்கோவைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன.

கல்லூரிச் செயலாளர் கே. செல்வராசு,கு.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார்.

பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.பெரியசாமி அவர்கள் வாழ்த்துரையாற்றியதுடன் கருத்தரங்க ஆய்வுக்கோவைகள் சிறப்பை எடுத்துரைத்தார்.உதகமண்டலம் அரசு கல்லூரிப் பேராசிரியர் முனைவர் க.பாசுகரன் அவர்கள் இன்றைய ஆய்வுப்போக்குகளை எடுத்துரைத்தார்.

இந்திய அரசின் செம்மொழி நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முனைவர் இரா.அறவேந்தன், முனைவர் கேசவ.பழனிவேல், முனைவர் இரா.கலைவாணி,முனைவர் மு,இளங்கோவன், முனைவர் அ.செல்வராசு ஆகியோருக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களைச் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சு.பழனியாண்டி அவர்கள் அறிமுகம் செய்து நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் பெரு.மதியழகன் அவர்கள் ஆய்வுக்கோவைகளைப் பற்றிய மதிப்பீட்டு உரை வழங்கினார்.

ஆய்வுக்கோவைகளை வெளியிட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்ந்நினார்.

சிங்கப்பூர் பேராசிரியர் முனைவர் இரத்தின.வேங்கடேசன்,கவிஞர் இறை.மதியழகன்,கவிஞர் வேள்.பாரி ஆகியோர் முதற்படிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி இணையப்பயிற்சி வகுப்பு நிறைவு...

இன்று(18.12.2009 ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையப்பயிலரங்கம் பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது.பள்ளித்தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.திரு.செங்குட்டுவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
உதவித்தலைமையாசிரியர்கள் திருவாளர்கள் எம்.சி.செயபால்,ஆர்.தருமலிங்கம்,கே.வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கணிப்பொறித்துறை சார்ந்த தமிழ் மாணவர்கள் 100 பேர் தமிழ் இணைய அறிமுகம் பெற்றனர்.தமிழ்த்தட்டச்சு,கூகுள் நிறுவனப்பயன்பாடு,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி அறிமுகம் பெற்றனர்.மின்னிதழ்கள் உள்ளிட்ட பல செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கணிப்பொறி ஆசிரியர் கே.பி.உமாமகேசுவரி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நான் காட்சி விளக்கத்துடன் உரையாறினேன்.

ஊத்தங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகப்பயிற்சி...

கிருட்டினகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இன்று(18.12.2009)பிற்பகல் இரண்டு மணிமுதல் நான்கு மணிவரை தமிழ் இணையம் அறிமுகமும் இணையப் பயிற்சியும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அருகில் உள்ள பதிவர்கள்,தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.அண்மையில் தமிழ்நாட்டு அரசு இந்தப் பள்ளியில் கணிப்பொறித் துறைக்கான மிகச்சிறந்த ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.இந்த நிகழ்வு அதில் நடைபெறும் முதல் நிகழ்வாகும்.புதுச்சேரியிலிருந்து நான் கலந்துகொள்கிறேன். மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குகிறேன்.அரங்கிலிருந்து சந்திப்போம்.

சனி, 12 டிசம்பர், 2009

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகத்தின் ஐந்தாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் ஊத்தங்கரை வித்தியாமந்திர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 2009, திசம்பர் 19,20 நாள்களில் நடைபெற உள்ளது.

19.12.2009 முற்பகல் 10 மணிக்குத் தொடக்க விழா நடைபெறுகிறது.வித்தியா மந்திர் கல்லூரியின் நிறுவுநர் வே.சந்திரசேகரன்,பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பெ.தங்கராசு,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியின் தாளாளர் திரு.சு.பழனியாண்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன்,பேராசிரியர் மா.பா.குருசாமி, சிங்கப்பூரைச் சேர்ந்த முனைவர் இரத்தின. வேங்கடேசன், கவிஞர் இறை.மதியழகன்,முனைவர் தியாகராசன்,தமிழாசிரியர் உஷா, பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பெ.மாதையன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

துளிர்,மலர்,இதழ் என்னும்ஆய்வரங்கக் கோவைகள் வெளியிடப்பெற உள்ளன.

அழைப்பிதழ்