குவைத்து நாட்டில் பொங்கு தமிழ் மன்றம் என்னும் அமைப்பை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்துவந்த பொறியாளர் தமிழ்நாடன் அவர்கள் 08. 08. 2026 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் காலம் தாழ்ந்து அறிந்து, நண்பர்களுக்கு இத்துயரச் செய்தியை அறிவிப்பதில் மிகுந்த வருத்தம்கொள்கின்றேன்.
தமிழ்நாடன் அவர்களின் இயற்பெயர் மோகன்ராசு என்பதாகும். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள குணவாசல் என்னும் ஊரில் பிறந்தவர். இவர்தம் தந்தையார் பெயர் திரு. கண்ணுசாமி ஆசிரியர் என்பதாகும். பிறந்த ஊரில் தொடக்கக் கல்வியைப் பயின்ற தமிழ்நாடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பயின்று பொறியாளராக மலர்ந்தவர். பணியின் பொருட்டு, குவைத்து நாட்டுக்குச் சென்ற தமிழ்நாடன் தமிழன்பர்களுடன் இணைந்து பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைக் குவைத்து நாட்டில் நடத்தியவர். தமிழ்நாடு பொறியாளர் குழுமத்துடன் இணைந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகள், பொங்கல் விழாக்கள், கண்காட்சிகளைக் குவைத்து நாட்டில் நடத்தித், அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளும் தமிழர்களும் தங்கள் பழம்பெருமையை அறிவதற்கு வழிசெய்தவர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடன் அவர்களுடன் எனக்கு நெருங்கியத் தொடர்பு எற்பட்டது. என் தமிழாய்வு முயற்சிகளை அறிந்த தமிழ்நாடன் தமிழகம் வரும்பொழுதெல்லாம் புதுச்சேரியில் உள்ள நம் இல்லத்துக்கு வருவதும் உரையாடுவதுமாக இருப்பார். இங்கிருந்து தேவைப்படும் நூல்களை வாங்கிச் சென்று, குவைத்தில் நடைபெறும் விழாக்களில் பரிசாக வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஈழத் தமிழ் மக்கள் பட்ட பெருந்துயரத்தைக் கண்டு கலங்கியவர். நம் தமிழ்நாடன். அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தவர்.
தமிழ்நாடன் அவர்களும் அவர்களின் நண்பர்களும் அழைத்த அழைப்பின்பேரில் குவைத்து நாட்டுக்கு 2012 திசம்பர் 14,15 ஆகிய நாள்களில் நடைபெற்ற தமிழர் பண்பாட்டுக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினனாகச் சென்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளாகும். அப்பொழுது குவைத்து நாட்டில் என்னை உரையாற்றச் செய்து, அங்குள்ள முதன்மையான இடங்களைச் சுற்றிப்பார்க்க வழிவகைசெய்த அன்பு நண்பர் தமிழ்நாடன் அவர்களின் உதவியை என்றும் நன்றியுடன் போற்றுவேன்.
தமிழ்நாடன் அவர்கள் தமிழகத்தின் புகழ்மிக்க ஆளுமைகளான இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார், இரா. இளங்குமரனார், பேராசிரியர் நன்னன், ஒரிசா பாலு, அறிவுமதி, முதலான ஆளுமைகளைக் குவைத்து நாட்டுக்கு அழைத்து, அவர்களின் சொற்பொழிவுகளையும் கலை நிகழ்வுளையும் சிறப்பாக நிகழ்த்திக்காட்டியவர்.
பெருந்தொற்றுக் காலம் முதல் உடல்நலம் சிறிது
பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடன் மருத்துவ உதவிகளைப் பெற்று உடல்நலம் தேறி வந்தவர்.
தமிழ் உணர்வாளர்களையும் குடும்பத்தினரையும் பெருந்துன்பத்தில் ஆழ்த்துமாறு சென்னையில்
08.08.2026 இல் இயற்கை எய்தினார். தமிழ்நாடனின் மறைவு அறிந்த தமிழிய உணர்வாளர்கள் குவைத்து,
காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட ஊர்களில் அவர்தம் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடனின் பணிகளை என்றும் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
தொடர்புடைய பதிவுகள்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக