[மு.
ஞானமூர்த்தி அரியலூர் மாவட்டம், கோட்டைக்காட்டில் 19. 11. 1961 இல்
பிறந்தவர். திருக்குறள் கூட்டமைப்பின் தலைவராக விளங்குபவர்.
திருக்குறள் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுபவர். பல்வேறு மக்கள் போராட்டங்களில்
கலந்துகொண்டு சிறை வாழ்வு வாழ்ந்தவர். அரிமா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பொறுப்பு
வகிப்பவர். மாணவர்களுக்குத் திருக்குறள் மனப்பாடப் போட்டிகள் நடத்திப் பரிசு நல்குபவர்.
கம்போடியா, பிரான்சு, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தவர்]
விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டுக்குச் சென்றபொழுது (02. 08. 2026) திருக்குறள் அறிஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. திருக்குறள் தூதர் பா. வளன் அரசு ஐயா, மணற்பாறைப் புலவர் நாவை. சிவம் ஐயா, வை. மு. கும்பலிங்கனார், ஆ. நெடுஞ்சேரலாதன், முனைவர் க. பசும்பொன், சு. குமணராசன் (மும்பை), நல்லாமூர் முனைவர் கோ. பெரியண்ணன் உள்ளிட்ட மூத்த அறிஞர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தமை எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தது.
எங்களூரின் திருக்குறள் தொண்டர் சி. பன்னீர்செல்வம் ஐயாவின் வீறுநிறைந்த உரையையும் அந்தத் திருக்குறள் மாநாட்டில் செவிமடுத்து மகிழ்ந்தேன். திருக்குறளைப் பரப்பவும் பயிலவும் இவர்கள் மேற்கொண்டுவரும் பெரும் முயற்சிகளும் திட்டங்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்தின. அகவை முதிர்ந்த நிலையிலும் பலரும் திருக்குறளைப் பயின்று, நன்னோக்கில் உலகுக்கு முன்மொழியும் செயலைத் தொடர்ந்து செய்து வருவதை அறிந்து, இப்பெருமக்களை அற்றைநாளில் நெஞ்சாரப் போற்றி மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
திருக்குறள் சார்ந்து புதுவை மாநிலத்தில் நடைபெற்றுவரும் செயல்பாடுகளைச் சிறிது நேரம் அறிஞர்களுடன் மேடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. அப்பொழுது மேடையில் வீற்றிருந்து, திருக்குறள் மறுமலர்ச்சி மாநாட்டை வழிநடத்திக்கொண்டிருந்த திருக்குறள் தொண்டர் மு. ஞானமூர்த்தி அவர்களின் வினைப்பாடுகளை உற்றுநோக்கியவாறு இருந்தேன். அனைவரையும் மேடையில் அறிமுகப்படுத்தி உரையாற்றும் அவர்தம் பாங்கும், விரல்நுனியில் தாம் சார்ந்துள்ள அமைப்பின் விவரங்களையும், தம்முடன் இணைந்து பணியாற்றும் பெருமக்களின் தகுதிப்பாடுகளையும் அறிந்துவைத்துள்ளள பெருந்திறமையும் கண்டு மலைப்புற்றேன்.
மு. ஞானமூர்த்தியாரிடம் உரையாடியபொழுது அவர்களின் திருக்குறள் ஈடுபாடு புலப்பட்டது. திருக்குறளுக்காகத் தாம் நண்பர்களுடன் இணைந்து செய்துவரும் திருகுறள் கூட்டமைப்புப் பணிகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். திருவாளர் மு. ஞானமூர்த்தி போலும் உலகம் முழுவதும் திருக்குறளுக்கு உழைக்கும் தொண்டர்கள் பலர் இருப்பினும் இவர்கள் ஆற்றிவரும் பெரும்பணிகள் பெருந்திரள் மக்களுக்குத் தெரியாமல் உள்ளமை வருத்தமளிக்கும் செய்தியாகும். இவர்களைப் போலும் உண்மைத் தமிழ்த்தொண்டர்களைக் காணும்பொழுது அவர்களை ஊக்கப்படுத்திப் போற்றுவது, இத் தமிழ்ச்சமூகத்துக்கு ஆக்கமாக அமையும். எனவே, கவிஞானி மு. ஞானமூர்த்தி அவர்களின் தமிழ் வாழ்வையும் அரும்பணிகளையும், திருக்குறள் ஈடுபாட்டினையும் உலகத் தமிழர்களுக்கு நினைவூட்டுவதில் மகிழ்கின்றேன்.
மு. ஞானமூர்த்தி அவர்கள் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் வாலசௌந்திரசோழபுரம் என்னும் கோட்டைக்காட்டில் 19. 11. 1961 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் இர. முருகேசன் – மு. ஞானாம்பாள் ஆவர். மு. ஞானமூர்த்தி அவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆலத்தியூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முதுகுளம் ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றவர். ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பெண்ணாகடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று பட்டம்பெற்றவர். தம் இளமைக்காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து, மக்கள் பணியாற்றியவர். தம் பகுதியில் வாழும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டபொழுது நெய்வேலி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், விருத்தாசலம் முதலிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திப் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தவர். தமிழகத்தின் புகழ்பெற்ற சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக்கியவர்.
மு. ஞானமூர்த்தி அவர்கள் 21. 06. 1987 இல் திருமணம் செய்துகொண்டவர். இவரின் வாழ்க்கைத் துணைவியார் பெயர் ஞா. பொற்கொடி என்பதாகும் இவர்களுக்கு மூன்று பெண்கள் மக்கள் செல்வங்களாக வாய்த்துள்ளனர். அனைவரும் நன்கு கற்று உயர்நிலையில் உள்ளனர்.
. ஞானமூர்த்தி அவர்கள் போக்குவரத்துத் தொழிலில் (Transport) ஈடுபட்டு, பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்துவருபவர்.
மு. ஞானமூர்த்தி இலக்கியம், கவிதை, கட்டுரை, நாவல், ஆய்வு, மேடைப் பேச்சு, கருத்தரங்கம், கருத்துக்களம் (YouTube) நிகழ்வுகள், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருபவர்.
தொடர்புடைய தமிழ் அமைப்புகள்
• உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
• பகுத்தறிவு இயக்கம்
• உலகத் தமிழ் இலக்கியச்
சிறகம் — அமெரிக்கா
• அந்தமான் தமிழர் சங்கம் — அந்தமான்
• ஈப்போ முத்தமிழ்ப் பாவலர்
மன்றம் — மலேசியா
• கம்போடியா தமிழ்ச் சங்கம் — கம்போடியா
• இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்
முதலான அமைப்புகளுடன் இணைந்து, தமிழ்ப்பணியாற்றி வருபவர்.
மு. ஞானமூர்த்தி அவர்கள் 2015 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பரப்புகைப் பணியில் ஆர்வமுடன் உழைத்து வருபவர். தம் தந்தையார் நினைவாக ஆண்டுதோறும் தம் பகுதியில் உள்ள மாணவர்கள் நூறு திருக்குறளை மனப்பாடமாகச் சொன்னால் அவர்களுக்கு ஆயிரம் உருவா பரிசு தருவதை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் நாளில் செய்வருகின்றார். ஆண்டுதோறும் பல மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்துப் பரிசுபெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை மூன்று மாவட்டங்களை ஒன்றாக இணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குப் பரிசு நல்கி ஊக்குவிப்பதையும் அதுபோல் 100 விழுக்காடு தேர்ச்சி பெற உழைத்த ஆசிரியர்களுக்குப் பரிசும் சிறப்பும் நல்குவதையும் நோக்கமாக கொண்டு தம் தோழர்களுடன் செயல்பட்டு வருபவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திருக்குறள் கூட்டமைப்பில் இணைந்து, அதன் தலைவராகத் தற்பொழுது இருந்து திருக்குறள் பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார். அரிமா சங்க அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு, பொதுத்தொண்டில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர்.
மு. ஞானமூர்த்தி அவர்கள் தம் இலக்கியப் பங்களிப்பைப் பிரான்சு, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், சீனா முதலிய அயல்நாடுகளிலும் வழங்கியவர். அந்தமானில் இவர் ஆற்றிய உரை அந்தமான் தமிழர்களால் விரும்பிக் கேட்கப்பட்டது.
1. தமிழ் மொழி மற்றும் திருக்குறள் தொடர்பான கோரிக்கைகள்
“தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்; திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 30-08-2024 அன்று புது தில்லியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர்.
12-12-2024 அன்று, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கப் பேரணிகள் நடத்தப்பட்டன.
08-02-2025 அன்று, சென்னை வள்ளுவர்
கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
தலைமையேற்று உரையாற்றியவர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பில் பணி:
“மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்குத் தொண்டு செய்” என்ற தத்துவத்தின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு, சனவரி முதல் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்து வருபவர்.
திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது, மாணவர்களிடையே திருக்குறள் ஆர்வத்தை வளர்ப்பது, பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது, தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
சமூகப்பணி
மு. ஞானமூர்த்தி பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவராக இருந்தபோது, 6,500 பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை நடத்தி, பார்வைக் குறைபாடு கொண்ட 150 மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கியவர்.
திருக்குறள் வகுப்புகள்
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், திட்டக்குடி, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களிலும், சென்னை வில்லிவாக்கம், கோவை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் இலவசத் திருக்குறள் வகுப்புகளை நடத்தி வருபவர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மார்ச்சு மாதம் 8 ஆம் நாள் மகளிர் நாளினை முன்னிட்டு மகளிர் பட்டிமன்றம், மகளிர் கவியரங்கம் ஆகியவற்றை நடத்திச், சிறப்பாகப் பங்கேற்பவர்களுக்குக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருபவர்.
மு. ஞானமூர்த்தி அவர்கள் 10 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார்.
1. தலைவர் — உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
2. தலைவர்
— பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள்
சங்கக்
கூட்டமைப்பு
3. மாவட்டத் தலைவர் — பன்னாட்டு அரிமா சங்கம், 3241G மாவட்டம்
4. தலைவர் — பெண்ணாகடம் SPD இறகுப்பந்து விளையாட்டுக் கழகம்
மு. ஞானமூர்த்தி அவர்கள் தொடர்ந்து திருக்குறள் தொண்டாற்றித் தமிழுலகத்தின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்.
பார்க்க:
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் இணையத் தளம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக