[முனைவர் த. சித்தார்த்தன் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும், அனைத்து இந்திய வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். இன்று மொழிபெயர்ப்பாளராக அறியப்படுபவர். அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர். சிலகாலம் தினமலர் நாளிதழில் பணியாற்றியவர். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்களுக்காகப் பல நூல்களை மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். சென்னையில் வாழ்ந்து வருகின்றார்]
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் நான் ஈடுபட்டிருந்தபொழுது, அனைத்து இந்திய வானொலி நிலையம் (AIR) உரையாற்றுவதற்கு வழங்கும் வாய்ப்புகள் பேருதவியாக இருந்தன. அவ்வாறு வானொலி நிலையம் சென்றபொழுது (1994 ஆம் ஆண்டளவில்) நிகழ்ச்சித் தயாரிப்பளாராக இருந்த த. சித்தார்த்தன் அவர்களைச் சந்திக்கவும், உரையாடவும் சூழல்கள் கனிந்தன. மாணவப் பருவத்தில் இருந்த என்னை அன்புடன் நடத்திய விதமும், மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய விதமும் என் மனத்துள் நிழலாடுகின்றன. அதனால்தான் அப்பொழுது நான் பதிப்பித்த விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் நூலில் நன்றி என்ற பகுதியில் த. சித்தார்த்தன் அவர்களின் பெயரைப் பதிந்து, என் அன்பை வெளிப்படுத்தியிருப்பேன்(1995).
த. சித்தார்த்தன் அவர்கள் சென்னை வானொலியில் பணியாற்றியபொழுது மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த நினைவும் உள்ளது. தொலைபேசி வாயிலாக அவ்வப்பொழுது உரையாடுவது உண்டு. த. சித்தார்த்தன் அவர்களுடன் அமைந்த அத்தகைய உரையாடல்கள் வழியாக அவர்தம் மொழிபெயர்ப்புப் பணிகளை அறிந்து, அதுகுறித்து எழுதுவதற்கு உரிய காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். அவர்தம் தமிழ் வாழ்க்கை அமைதி நிறைந்தது. அவர்தம் பணிகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன. தமிழிலிருந்து ஆங்கில மொழிக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் அவர் வாரி வழங்கியிருக்கும் தமிழ்க்கொடை போற்றுதலுக்கு உரியன. இவர்போலும் அமைதியாகத் தமிழ்ப் பணியாற்றிவரும் அறிஞர்களைப் போற்றுவதும் பாராட்டுவதும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆக்கமாக அமையும்.
த. சித்தார்த்தன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 06.06.1957 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் ந. தங்கவேலு, பட்டம்மாள் என்பனவாகும். தந்தையார் சாலைமேம்பாட்டுப் பணிக்காகச் சாலைச் சமனி உந்து (Road roller) ஓட்டும் ஓட்டுநராக இருந்தவர். அதனால் பல ஊர்களில் அவர் பணியாற்றும் வாய்ப்பு இருந்தது. அதனால் த.சித்தார்த்தன் அவர்கள் இளம் அகவை முதல் சுவாமிமலையை அடுத்துள்ள திருவலஞ்சுழி என்னும் ஊரில் வளர்ந்தவர். திருவலஞ்சுழியில் தொடக்கக் கல்வியும் சுவாமிமலையில் உயர்நிலைக் கல்வியும் பயின்றவர். தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் இளம் அறிவியல் (விலங்கியல்) பயின்ற பின்னர் கும்பகோணம் அரசு கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவர்தம் பேராசிரியர்களாக மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்), கு.வெ. பாலசுப்பிரமணியன் முதலனாவர்கள் விளங்கினர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிஞர். வ. செயதேவன் மேற்பார்வையில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவுசெய்தவர். ஒன்றரை ஆண்டுகள் தினமலர் நாளிதழில் பணியாற்றிய பட்டறிவும் இவருக்கு உண்டு.
தமிழ்நாடு தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வெழுதித் சென்னைத் தலைமைச் செயலகத்தில் எழுத்தர் பணியில் இணைந்து ஏழாண்டுகளுக்கும் மேலாக எழுத்தராகப் பணியாற்றியவர். பின்னர் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் 1992 இல் பணியில் இணைந்தவர். 1996 ஆம் ஆண்டு வரை அங்குப் பணியாற்றிய பிறகு 1997 முதல் 2003 வரை சென்னை வானொலியில் பணியாற்றியவர். 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கோவை வானொலியில் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. அக்காலகட்டத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தம் முனைவர் பட்ட ஆய்வைப் பகுதிநேரமாக நிறைவுசெய்தவர். ஊட்டி வானொலியில் பணியாற்றிய பிறகு 2014 முதல் 2017 வரை மீண்டும் சென்னை வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது சென்னையில் வாழ்ந்துவரும் த. சித்தார்த்தன் முழுமையாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
சித்தார்த்தன் அவர்களின் வாழ்நாள் பணிகளை அரசுநிலையில் அமைந்த எழுத்தர் பணி, வானொலிப் பணி எனவும், ஆர்வமாக மேற்கொண்டுவரும் மொழிபெயர்ப்புப் பணி என்றும் வகைப்படுத்திக்கொள்ளலாம்.
த. சித்தார்த்தன் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாதெமி, தேசிய புத்தக அறக்கட்டளை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தடாகம் பதிப்பகம், மணற்கேணி, நவ இந்தியா பதிப்பகம், இந்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்கள் இவர்தம் நூல்களை வெளியிட்டுள்ளன. இவற்றுள் புதினம், இலக்கியம், சிறுகதைகள், தொன்மக்கதைகள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தேச வரலாறு, உடற்பயிற்சி, சாகச விளையாட்டு, பணிக் கலாச்சாரம், அறிவியல், நடப்பில் இருந்துவரும் போக்குகள் முதலிய பொருண்மைகள் குறித்து இவர்தம் நூல்கள் உள்ளன.
சவகர்லால் நேருவின் உலக சரித்திரம் என்னும் நூல் ஓ. வி. அளகேசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1948 இல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள வடமொழி, ஆங்கில வழக்குச் சொற்கள் நீக்கப்பட்டு, பொருத்தமான தமிழ்மொழிச் சொற்கள் சேர்த்து, மறுசீரமைக்கப்பட்டு இவரால் இந்நூல் வெளியீடு கண்டுள்ளது. குன்றக்குடி அடிகளாரின் ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
மனத்தின் குரல்
மாண்புமிகு இந்தியத் தலைமை அமைச்சரின் மனத்தின்
குரல் நிகழ்ச்சியைத் தொடக்கம் முதல் கடந்த பத்து ஆண்டுகளாக மொழிபெயர்த்து வழங்கிய பெரும்
பணியையும், சரிபார்க்கும் பணியையும் த.சித்தார்த்தன் செய்துவருகின்றார்.
மத்திய அரசின் திட்டம் மாத இதழின் அதிகாரப்பூர்வமற்ற ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார்.
த. சித்தார்த்தன் எழுதிய - மொழிபெயர்த்த நூல்கள்:
1. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் - ஆனந்த் தெல்தும்ப்டே- (மொ.பெ) த. சித்தார்த்தன்
2.
பெண்
மருத்துவர்கள் சொல்லப்படாத கதைகள்
- கவிதா ராவ் - (மொ.பெ) த. சித்தார்த்தன்
3. தனித்திருக்கும் தீவுக் கூட்டம் - பங்கஜ் ஷெக்சாரியா - தமிழில் த. சித்தார்த்தன்
4.
நவபாரத
சிற்பிகள்- பங்கிம் சந்திர சட்டர்ஜி, எஸ். கே. போஸ், 2026
5.
இந்திய
விடுதலை இயக்க வரலாறு (நான்கு தொகுதிகள்) தாராசந்த், 2026
6. புனிதப்
பசுவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், பிரெடிரிக் ஜே.சிமுன்ஸ்,2025
7. பேச்சு
சுதந்திரம் தேசிய வாதமும் தேசத் துரோகமும், நீதிபதி ஏ.பி.ஷா, மணற்கேணி, 2025
8.
திருக்குறள்
ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு வ.வே.சு ஐயர் முன்னுரை (1916 இல் வெளிவந்த வ.வே.சு.ஐயரின்
ஆங்கில முன்னுரைக்கு முதன்முதல் அமைந்த மொழியாக்கம்.)
9. தந்தையரும் தனயர்களும், குர்கன் கான்ஜியன்,
ஆர்மீனிய நாவலின் தமிழாக்கம், 2025 சனவரி
10. நிலைமாறும் தீவுகள், ஆங்கிலத்தில் பங்கஜ்
ஷெஷாரியா, 2024
11. மனம் நிறைந்த மக்கள் சேவை, ஆங்கிலத்தில்
எம் எம் இராஜேந்திரன்
12. உழைப்பு தரும் ஆனந்தம், ஆங்கிலத்தில் எஸ்.ஏ.
சாப்ரே
13. தண்ணீர் (ஆசிய பசிபிக் நாடுகளில் தண்ணீர்பற்றி
உலவுகின்ற கதைகள்), 2001
14. மரபணு சகாப்தம், ஆங்கிலத்தில் பிமன் பாசு,
2006
15. பூந்தென்றலோ வாழ்க்கை (ஈப்ரு மொழிச் சிறுகதைகள்),
2003
16. டாக்டர் ஜாகிர் உசேன், குருஷித் ஆலம்கான், 1998
வெளிவர இருப்பவை:
1. கே.ஆர்.நாராயணன் வாழ்க்கைச் சித்திரம்
2. உடற்பயிற்சியும் உடல்நலமும்
3. சாகசப் பயணமும்
4. நீலவானப் பேரரசு
5. விவேகானந்தரின் கதை (பதிப்பாசிரியர் ரோமா
சட்டர்ஜி)
6. காவல்துறை விசாரணைகளில் அறிவியல்
7. நீங்கள் கற்பனைகூட செய்திருக்க முடியாது,
ஒப்பனையின் வரலாறு
எழுதியுள்ள நூல்கள்:
1. அன்றாட வாழ்வில் அறிவியல்
2. நம்மைச் சுற்றி, சூழலியல் கட்டுரைகள் அடங்கிய நூல்
3. சூழல்மொழி - சுற்றுச் சூழல் கட்டுரைகள்
– த. சித்தார்த்தன்
4. உயிர்ச்சொல் (மேன்மை வெளியீடு) - த. சித்தார்த்தன்
5. உதயணகுமார காவியம் பகுப்பாய்வு, 2026
6. Probabilistic
Orientation (English) Psychology 2026





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக