நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 ஜூலை, 2014

குவாதலூப்பு சாகுசு சிதம்பரம் ( Mr, Jacques Sidambarom) புதுச்சேரி வருகை


குவாதலூப்பு,சாகுசு சிதம்பரம்(Mr, Jacques Sidambarom) 

கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு குவாதலூப்பு . இந்த நாட்டுக்குப் பிரெஞ்சியர் ஆட்சிக்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) புதுச்சேரி, காரைக்கால், கும்பகோணம் சார்ந்த பகுதிகளிலிருந்து ஒப்பந்தக்கூலிகளாக மக்களை அழைத்துச் சென்றனர். அவ்வாறு சென்ற தமிழர்கள் கப்பல் பயணத்தின்பொழுதும், நோய்வாய்ப்பட்டும், எரிமலையில் சிக்கியும் பல்லாயிரம் மக்கள் அழிந்தனர். எஞ்சிய மக்கள் குவாதலூப்பு    தீவிலும், மர்த்தினிக் தீவிலும் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களிடம் தமிழ்நாட்டைச் சார்ந்த பண்பாட்டுக்கூறுகள் இன்றும் உள்ளன. மாரியம்மன் வழிபாடு, பொங்கல் விழா, தெருக்கூத்து, பறையிசை உள்ளிட்ட தமிழக அடையாளங்கள் உள்ள இந்த மக்களிடம் தமிழ்தான் இல்லை.

இவர்கள் இப்பொழுது தமிழகத்தின் தொடர்புக்கு ஏங்குகின்றனர். இதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த ஊரைப் பார்க்கவும். அவர்களின் மொழியைக் கேட்கவும்  குவாதலூப்பு   தமிழர்கள் ஆர்வம்கொண்டு தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு கூறாக குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்கள் தம் குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். பிரெஞ்சுமொழி மட்டும் அறிந்து, தமிழ் தெரியாமல் இருக்கும் அவர் தம் முன்னோர் வாழ்ந்த ஊரான கும்பகோணத்திற்குச் சென்று அங்குள்ள தெருக்களில் காலார நடந்து ஆனந்தக்கண்ணீர் விட்டு வந்த கதையைச் சொன்னபொழுது அரங்கில் இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் ஓடை பெருக்கெடுத்தது.

தமக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவைச் சொல்லிய வண்ணம் அரங்கில் பேசமுடியாமல் கண்ணீர் விட்டு ஒரு நிமையம் அமைதியாக இருந்ததை நினைத்து அவர்தம் உணர்வின் வலியைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாறு நம்மைப் பிரித்தாலும் உணர்வால் இணைந்திருக்கின்றோம் என்று கூறித் தமிழகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்புவதைச் சொன்னார்.

குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களின் தாத்தா கென்றி சிதம்பரம் அவர்கள் அந்த நாட்டில் வாழ்ந்த தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். அவருக்குப் பிரெஞ்சு அரசு அஞ்சல் தலை வெளியிட்டுப் போற்றியுள்ளது. புதுச்சேரியில்  கென்றி சிதம்பரம் அவர்களுக்குச் சிலை வைத்து அவர் நினைவைப் போற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். புதுச்சேரி வருகை தந்துள்ள குவாதலூப்பு   சாகுசு சிதம்பரம் அவர்களைத் தூரம் பிரித்துப் பார்க்கலாம். உணர்வால் அவர் நம் தமிழ் உறவினரே!

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திரு சாம் விசய், திரு. நா. நந்திவர்மன் ஆகியோர் அனைவரின் நன்றிக்கும் உரியவர்கள்.

பேராசிரியர் சிங்காரவேலு

திரு.க. இலட்சுமி நாராயணன் ச.ம.உ. வாழ்த்துரை

குவாதலூப்பு விருந்தினர்கள்

3 கருத்துகள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

ஐயா!
இங்கு வாழ்வதால் இவர்களில் பலரை அறிவேன். தம் முன்னோர்கள் தமிழர் என்பர் ஆனால் தமிழ் அறிய வாய்ப்பின்றிப் போய்விட்டவர்கள். இப்போது தமிழ்ப் பண்டிகைகளைக் கொண்டாடுவார்கள்.இப்போது இங்கு ஈழத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு பெருமளவில்
வருவார்கள்.
அவர்கள் திருமணங்களில் அவர்கள் நாட்டுக் பூசாரி -பூனூல் போடாதவர்களே நடத்துவார்கள். அவர்கள் சடங்கின் போது உச்சரிப்பது, நம்பினால் நம்புங்கள்...தேவாரம், சிவபுராணம். ஆனால் சொல்பவர்க்கோ, கேட்பவர்க்கோ அது தமிழ் எனத் தெரியவோ புரியவோ இல்லை.
நம் பூசகர்கள் நாம் புரியா சமஸ்கிருதத்தில் கிரிகை செய்வது போல் அவர்கள்...அவர்களுக்குப் புரியாத் தமிழ்.
எங்கு போனாலும் தமிழனுக்குப் வழிபாடு புரியாமொழியிலென ஆண்டவன் தீர்த்துவிட்டான்.
மேலும் இந்த பெயரை Jacques-ஜக் என உச்சரிக்க வேண்டும்.
முன்னாள் அதிபர் - Jacques Chirac - ஜக் சிராக் எனவே உச்சரிப்பார்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழ் இல்லை என்பதை அறிந்து வருத்தம்தான் மேலிடுகிறது ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

திரு குவாதலூப்பு சிதம்பரம் அவர்களின் மன உணர்வுகளைத் தாங்கள் பகிர்ந்துகொண்டவிதம் நன்றாக இருந்தது. தாய் மண்ணின் மீதான அவருடைய ஏக்கத்தை தங்களது எழுத்துக்கள் நன்கு உணர்த்தின. தாங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் பெற்றவராக இருக்கின்றார்கள். நன்றி.