எழுத்தாளர் கி. இராஜநாராயணன்
இன்று(21.07.2014)
எப்படியும் எழுத்தாளர் கி.இரா அவர்களைப் பார்த்து உரையாட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
பேராசிரியர் நாயகர் அவர்களிடம் ஐயாவைச் சந்திக்க உகந்த நேரம் எது என்று அலுவலகத்தில் இருந்தபடியே பகல்பொழுதில்
வினவித் தெரிந்துகொண்டேன். அதனால் அலுவலகம் முடிந்து அரைமணி நேரம் காத்திருந்தேன்.
ஐந்து மணிக்கு அவர் இல்லத்தின் அழைப்பு மணியை மிக எச்சரிக்கையாக அழுத்தினேன். ஐயா அவர்கள்
மெதுவாக எழுந்துவந்து அன்புடன் வரவேற்றார். உள்ளே நுழைந்ததும் “காபி” குடிக்கலாமா?
என்றார். அம்மாவும் வந்து வரவேற்றுவிட்டு, அடுத்த ஐந்து நிமிடங்களில் அம்மா அவர்கள்
காபியுடன் வந்தார். உரையாடிக்கொண்டிருந்தோம். சென்ற கிழமை பேராசிரியர் முருகையன் அவர்களின்
குடும்பநிகழ்வில் சந்தித்தமையை மீண்டும் நினைவூட்டி மகிழ்ந்தார்கள்.
ஒவ்வொரு
நாளும் காலையிலும் மாலையிலும் அவர் இல்லத்தைக் கடந்துதான் நான் அலுவலகம் செல்ல வேண்டும்.
போகும்பொழுதும் வரும்பொழுதும் சந்திக்க நினைத்தாலும் அடுத்து விரட்டிக்கொண்டிருக்கும்
வேலையை நினைத்துச் சந்திப்பை ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தேன். இன்று மற்ற வேலைகளை ஒத்திவித்துவிட்டு
ஐயாவிடம் உரையாடியமை மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய கல்விமுறையை நினைவூட்டி பெர்னார்டுசா
நூல்களைப் பாடத்திட்டத்தில் சேர்த்தவுடன் பெர்னாட்சா சொன்ன செய்திகளை எல்லாம் கி. இரா.
அவருக்கே உரிய முறையில் சிறப்பாக விளக்கினார்.
அக்காலத்தில்
இருந்த குருகுலக் கல்வி முறையில் மாணவர்கள் ஐயம் கேட்டால்தான் ஆசிரியர்கள் நடத்துவார்கள்
என்றார். இன்றைய பனைமட்டையில் மழைபெய்தமை போல் ஒப்புவிக்கும் ஆசிரியர்களைக் கிண்டல்
செய்தார். அரசர்களும் தங்கள் பிள்ளைகளைக் குருவினிடத்து ஒப்படைத்து, குருநாதர் வாழ்க்கையை
உற்றுநோக்கி அவர்கள் அறிவுபெற்றதை மிக இயல்பாகச் சொன்னார். எங்கள் பேச்சு குவைத்து கொ.இளங்கோவன் பற்றியும்,
ஆகாசம்பட்டு சேஷாசலம் பற்றியும் இன்றைய எழுத்தாளர்களைப் பற்றியும் நகர்ந்தது.
அப்பொழுது
தனித்தூதுக்காரர் ஒரு புத்தகப் பொதியைக் கொண்டுவந்து நீட்டினார். ஐயாவுக்கு உதவும்
வகையில் நான் எழுந்துசென்று நூல்பொதியை வாங்கிக்கொண்டுவந்து அவிழ்த்து ஒவ்வொரு நூலாக
எடுத்து அவர்களின் கையில் தந்தேன். ஒவ்வொன்றாக அளித்ததும் மேலோட்டமாகப் புரட்டி மகிழ்ந்தார்.
கோவை விஜயா பதிப்பகம் உரிமையாளர் திரு. வேலாயுதம் ஐயா அனுப்பியுள்ளார்கள் என்றேன்.
அண்மையில் தம்மைச் சந்திக்க வந்ததையும் அவர் மகனைப் புதுச்சேரியில் உயர்படிப்பில்
சேர்க்க வந்துபொழுது சந்தித்ததையும் இப்பொழுது அவர்தம் பேரனை மருத்துவப் படிப்பில்
சேர்க்க வந்ததையும் நினைவூட்டினார்.
பதிப்பாளர்
வேலாயுதம் அவர்கள் அண்மையில் வந்த புத்தகங்களை உடன் அனுப்பி வைப்பதாகக் கூறினார். சொன்னதுபோல்
அனுப்பியுள்ளார் என்று அவரைப் பாராட்டினார். செட்டிநாட்டுக்காரர்கள் வினையாண்மை உடையவர்கள்
என்றும் ஒரு செயல் முடியும்வரை மிகச் சிறப்பாகக் கண்காணித்து அதனை உறுதியுடன் நிறைவேற்றுவார்கள்
என்றும் பெருமை பொங்கக்கூறினார்.
அப்பொழுது
எங்கள் பேச்சு கணினித் தமிழ்த்தட்டச்சுப் பலகை பற்றி நகர்ந்தது. ஒராண்டுக்கு முன்பு
நான் சிங்கப்பூர் சென்றபொழுது ஐயா அவர்களின் விருப்பப்படி அவர்களுக்கு ஒரு தமிழ்த்தட்டச்சுப்
பலகையும், நண்பர் பேராசிரியர் நாயகர் அவர்களுக்கு ஒரு விசைப்பலகையும் என இரண்டு வாங்கிவந்து பேராசிரியர்
நாயகர் இல்லத்தில் வைத்துள்ளேன் என்று சொன்னபொழுது, நான் ஐயாவுக்காக வாங்கி வந்தமையை
நினைத்து மகிழ்ந்தாலும் அவர்களிடம் உரியபொழுதில் சேர்க்காத பிழையை மெதுவாக, நயத்தக்க
நாகரிக முறையில் உணர்த்தினார்கள். ஓராண்டாக நாங்கள் மறந்த அந்தச் செயலும் செய்த தவறும் நினைவுக்கு வந்தன. ஒரு செயலைச் செய்வது மட்டும் போதாது அது உரியவகையில்
முற்றுப்பெற்றதா என்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற மிகச் சிறந்த பாடத்தைக்
கற்றுக்கொண்டு இல்லம் வந்துசேர்ந்தேன்.
1 கருத்து:
பெரியவர் பெரியவர்தான்
கருத்துரையிடுக