நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 17 ஜூலை, 2011

மேரிலாந்து பல்கலையில் இரண்டாம் நாள்…


பல நூற்றாண்டுப் பழைமையான அங்காடி

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் இன்னொரு பகுதியைப் பார்க்கும் முன்பாக அருகிலிருந்த பால்டிமோர் கல்லறைத்தோட்டம் ஒன்றுக்குச் சென்றோம். அது எட்கர் ஆலன்போ என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் கல்லறைத்தோட்டம் ஆகும். அறிஞர்களின் நூல்களில் படித்திருந்த அந்தப் பெருமகனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் அவரின் மனைவி, மாமியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் பார்த்தோம்.

எட்கர் ஆலன் போ 19-01- 1809 இல் அமெரிக்காவின் பாஸ்டனில் பிறந்தவர். நாற்பது வயதில் 07-10.1849 இல் மறைந்தவர். எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர். எழுத்தின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்த முயன்றவர். இதனால் அவர் வறுமையில் வாட நேர்ந்தது.

பாஸ்டன் நகரில் பிறந்த போ, இளம் வயதிலேயே தந்தையையும் தாயையும் இழந்தார் பின்னர் ரிச்மண்ட் நகரின் ஆலன் தம்பதியினர் போவை வளர்த்தனர். வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்தார். 1835இல் வர்சீனியா கிளெம் என்னும் பெண்ணை மணந்தார். 1845இல் ஆலன்போவின் புகழ்பெற்ற படைப்பான தி ரேவன் என்ற கவிதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. போ வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. ஆலன்போ பற்றிய குறிப்புடன் அவர் கல்லறை உள்ளது. அதுபோல் பால்டிமோர் என்ற புகழ்பெற்ற நகரை அயல்நாட்டுப் படைகளிடமிருந்து பாதுகாத்த பல தளபதிகளின் கல்லறைகளும், பிற எழுத்தாளர்களின் கல்லறைகளும் பால்டிமோரில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றை அமைதியாகப் பார்த்தோம்.


எட்கர் ஆலன்போ கல்லறை அருகில் மு.இளங்கோவன்


ஆலன்போ மனைவி,மாமியார் கல்லறை


எட்கர் ஆலன்போ வாழ்க்கைக்குறிப்பு

பழைமையான கடைத்தெரு ஒன்றைப் பார்த்தோம். 1782 இல் உருவான அந்தக் கடை பலநாட்டு மக்களாலும் வியப்புடன் பார்க்கப்படும் இடமாகும்.


அடுத்து மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவம், பல்மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைப் பார்வையிடச் சென்றோம்.

மேரிலாந்து பல்கலைக்கழகம் பல நூறு துறைகளாகவும், பள்ளிகளாகவும், ஆய்வு மையங்களாகவும், கல்லூரிகளாகவும் பரந்துபட்டுக் கிடக்கின்றது. ஒவ்வொரு துறைக்கும் நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மெச்சும்படியாக உள்ளன. எங்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அனைத்து வசதிகளும் குறைவின்றி உள்ளன. உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரி என்னும் பலகையுடன் ஒரு கல்லூரி இருந்தது. புகழ்பெற்ற மருத்துவர்களும் அவர்களிடம் பயின்ற மாணவர்களும் உலவிய வளாகத்தை மதிப்புடன் நடந்துபார்த்தேன்.


உலகின் முதல் பல் மருத்துவக் கல்லூரி(பலகை)

அங்குள்ள மகிழ்வுந்துகள் நிறுத்துமிடத்தில் ஒரு தென்னாப்பிரிக்கப் பெண் எங்களைப் பார்த்து வணக்கம் என்றார். வியந்துபார்த்தேன். பேராசிரியர் செல்லையா அவர்களைப் பார்த்து இந்தியமுறையில் முன்பு நமஸ்காரம் என்பாராம். பேராசிரியர் அவர்கள்தான் தமிழில் வணக்கம் என்று சொல்லும்படி அறிவுறுத்தினாராம். அதுமுதல் தமிழ்ச்சாயல், இந்தியச் சாயல் கொண்டவரைப் பார்த்தால் வணக்கம் என்பாராம். அந்தப் பெண்ணுக்கு நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளதைக் குறிப்பிட்டதும் கைகுலுக்கி என்னை வரவேற்றார்.

அங்குள்ள ஆய்வுக்கூடங்கள், வகுப்பறைகளையும் பார்த்து மகிழ்ந்தேன். மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் நலம் வினவிக்கொள்கின்றனர். பேராசிரியர் செல்லையா அவர்களின் துணைவியார் முனைவர் மீனா அம்மா அவர்கள் பணிபுரியும் துறைக்குச் சென்றோம். எலும்புத் திசுக்கள் அழிவதைத் தடுத்து அதனை வளர்த்து மாந்தரை உயிர் பிழைக்கச் செய்யும் அல்லது வாழ்நாளைக் கூட்டும் ஒரு ஆய்வில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிட்டார்கள். அவர்களின் ஆய்வுக்கூடம் பல நுண்ணுயிரி சார்ந்த ஆய்வுக்காக வளிக்கட்டுப்பாட்டில் எப்பொழுதும் இருக்குமாம். தாழ்ந்த அளவு குளிர் அங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார்களாம். பலகோடி மதிப்புள்ள வேதிப்பொருட்கள் அவர் அறையில் நீக்கமற நிறைந்திருந்தன.


முனைவர் மீனா செல்லையா அவர்கள்

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நடத்தும் பாடங்கள் யாவும் உடனுக்குடன் இணையத்தில் ஏற்றப்படுமாம். வகுப்பிற்கு வர இயலாத மாணவர்கள் இணையத்தில் அந்தப் பாடங்களைப் படித்து விடலாம்.ஐயம் என்றால் பேராசிரியருக்கு மின்னஞ்சலில் ஐயத்தைக் குறிப்பிட்டு விளக்கம் பெறலாம்.

பல்கலைக்கழகம் முழுவதையும் கணிகாணிப்புக் கருவி வழியாகக் கண்காணிக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை உள்ளது. அதன் பொறுப்பாளர் அன்புடன் என்னை வரவேற்றார். பேராசிரியர் செல்லையா அவர்கள் நான் இந்தியாவிலிருந்து வந்ததைக்குறிப்பிட்டதும் மிகவும் மகிழ்ந்தார். அங்கு நடைபெறும் ஒருங்கிணைப்பை எனக்கு விளக்கினார். ஒவ்வொரு அறையிலும் மாணவர்களின் நடமாட்டம் வகுப்பறை நிகழ்வுகளை இருந்த இடத்திலிருந்தபடியே கண்டு மகிழ்ந்தேன். மாணவர்கள் தனியிடத்திலும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு படிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர். குறிப்பெடுப்பதும் படிப்பதும் எழுதுவதுமாக இருப்பதைக் காணொளி வழியாகக் கண்டு மகிழ்ந்தேன்.அவர்களின் முன்னேற்ற வாழ்க்கை நம் நாட்டிலும் வந்து, நம் மாணவர்கள் நல்லறிவு பெறுவது என்று? என்ற நினைவுடன் அவரிடமிருந்து விடைபெற்றோம்.

பகலுணவுக்காக நாங்கள் புறப்பட்டு ஓர் இந்திய உணவகம் நாடி வந்தோம். இந்தியவகையாகச் சோறு, கோழிக்கறி, மரவள்ளிக்கிழங்குமாவில் செய்த அடை, என்று சுருக்கமாகச் சாப்பிட்டேன். கோழிக்கறியின் காலைக் கொண்டு வந்து வைத்த உடன் உணவுவிரும்பிகள் அள்ளிச்சென்று உண்டனர். இது நிற்க.

மெதுவாக நாங்கள் பொது நூலகம்,பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றோம். பொது நூலகம் மிகச்சிறப்பாக இயங்குகின்றது. இலக்கியக் கூட்டம் நடத்த அரங்குகளை இலவசமாகத் தருவார்களாம். இலக்கியக் கூட்டங்கள், தமிழ்சார்ந்த பல கூட்டங்களை நம் அன்பர்கள் இங்குதான் நடத்துவார்களாம்.வளிக்கட்டுப்பாட்டு அறைகள், அழகிய இருக்கைகள், திரையிடும் வசதிகள் கொண்ட அந்த அரங்கை நம்மூரில் பத்தாயிரத்திற்கும் குறைவாகக் குடிக்கூலிக்குத் தரமாட்டார்கள்.

எதற்குப் பணம், எதற்கு இலவசம் என்பதை அமெரிக்கர்கள் தெரிந்துவைத்துள்ளனர். நாம் நேர்மாறாக இருக்கின்றோம். திருவண்ணாமலையில் உள்ள பேருந்துநிலையக் கழிப்பபறை போல் உலகில் தூய்மையற்ற கழிப்பறையைப் பார்க்க இயலாது. அதற்கும் காசு வாங்கிக்கொண்டு மக்களை உள்ளே விரட்டி அனுப்பி, வெளியே ஓடிவரச்செய்யும் நடைமுறையை நினைத்துக்கொண்டேன். ஒவ்வொரு வெள்ளுவா மலைச்சுற்றுக்கும் பல கோடி வருவாய் ஈட்டும் அந்த ஊரில் மக்களின் நலவழிக்குச் செலவு செய்யாமல் உள்ளனரே என்ற வருத்தம்தான் மேலிட்டது. இதுவம் நிற்க.

அழகிய நீர்நிலையைச் சில செல்வர்கள் தங்கள் விருப்பத்துக்கு உருவாக்கி மக்கள் மனம் மகிழும் வகையில் செய்துள்ளனர். அமெரிக்கச்செல்வந்தர்களின் பொது இயல்பு என்னவெனில் கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவார்கள். பின்னர் அதனை மக்கள் நலனுக்கே திருப்புவார்கள். நம்மூரில் பிறங்கடை உய்யும்வகையில் அடித்துச் சுருட்டுவார்கள் ஆனால் அதனை மக்களிடத்துச்சேர்ப்பிக்க நினைக்கமாட்டார்கள். அறக்கட்டளை என்றபெயரில் மீண்டும் அந்தப் பொருட்கொடையைப் பன்மடங்காக உயர்த்த நினைப்பார்கள்.

மக்கள் மனம் மகிழும்வகையில் உருவாக்கிய ஒரு குளக்கரையில் இருந்த மரப்பாலம் கடந்து நீர்நிலைகளைப் பார்த்தேன். சிறுவர்களும் பெரியவர்களும் தூண்டில்கொண்டு மீன்பிடித்தனர். யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாமா? என்று பேராசிரியர் அரசு செல்லையா அவர்களைக் கேட்டேன். அதற்கு உரிமம் பெற வேண்டுமாம். சிலவகை மீன்களைப் பிடித்தாலும் திருப்பித் தண்ணீரில் விட்டுவிடவேண்டுமாம். நம்மூர்த் தூண்டில்போல் இல்லாமல் அனைத்தும் ஞெகிழி,நரம்பு கொண்டு இயற்றப்பட்டிருந்தது.சக்கரம் போன்று சுற்றி நரம்புகளை உள்ளடக்குகின்றனர். அதற்குரிய கருவிப்பொருள்களுடன் சிறுவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அந்த நீர்நிலையில் அமைதியாக நீந்தி மகிழ்ந்த வாத்துகளைப் பார்த்ததும் எனக்கு நளவெண்பாவில் வந்துபோகும் அன்னப்பறவைதான் நினைவுக்கு வந்தது. தங்களுக்கான உணவுகளைத் தேடி அமெரிக்கர்களைப் போல ஓர் ஒழுங்குமுறையில் நீர்நிலையை அந்த வாத்துகள் வலம்வந்தன.


பொழுதுபோக்குப் பொழில் உருவாக்கியவர்கள் (சிலைவடிவில்)

2 கருத்துகள்:

naanjil சொன்னது…

முனைவர் இளங்கோவிற்கு
வணக்கம்.
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். நல்ல பல தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.
எங்கள் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து பணியாற்றினமைக்கு மிகவும் நன்றி.
அன்புட‌ன்
நாஞ்சில் இ. பீற்ற‌ர்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஐயா

இன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி.