புறப்பொருள் வெண்பாமாலை என்று ஓர் இலக்கண நூல் தமிழில் உண்டு.தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் இந்த நூலைப் பட்டப் பேற்றிற்குக் கற்பது வழக்கம்.புறப்பொருள் இலக்கணத்தை எளிய நடையில் கூறும் நூல்.இதனை மாணவனாக இருக்கும்பொழுது ஆர்வமுடன் கற்றுள்ளேன்(1987-88).என் பேராசிரியர்கள் இந்த நூலைச் சிறப்பாகக் கற்பித்தனர்.இதில் இடம்பெறும் எடுத்துக்காட்டு வெண்பாக்கள் அவ்வளவு எளிதில் மனத்துள் நிற்காது.மறந்துவிடுவோம்.எனவே இந்த வெண்பாக்களை மின்னல் வெண்பாக்கள் என்று அறிஞர் உலகம் போற்றும்.
புதுச்சேரியில் பணியில் இணைந்தபொழுது தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்கள் அப்பொழுது வள்ளலார் மடத்தில் கிழமைதோறும் சமய இலக்கிய வகுப்பு நடத்துவார்(வியாழக்கிழமைகளில்).ஒரு மணி நேரம் நடக்கும் வகுப்பு எனக்குப் பெரு விருந்தாக இருக்கும்.புலால் உணவகத்தில் நுழைந்த பேருண்டியன் வயிறு புடைக்க உண்டு மீள்வதுபோல் அடியேன் தமிழ்நூற்கடலில் நீந்தி வருவேன்.இடையிடையே சில வினாக்களை எழுப்புவேன். ஐயாவுக்கு ஊக்கம் பிறக்கும்.விளக்கம் அள்ளி வீசுவார்கள்.வகுப்பு நிறைவுற்றதும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து சில பாடல்களுக்கு விளக்கம் கேட்பேன்.மின்னல் வெண்பாக்கள் அந்த இடிதாங்கியிடம் பணிந்து புறப்படும். இலக்கிய இன்பம் நுகர்ந்து காட்டுவார்.யான் அப்பொழுது மாணவர்களுக்குப் புறப்பொருள் வெண்பாக்கள் கற்பிக்கும் பணியில் இருந்தேன்.ஐயாவிடம் கேட்டு மகிழ்ந்த கூடுதல் விளக்கங்களை என் மாணவர்களுக்கு எடுத்துரைப்பேன்.எல்லோரும் சேர்ந்து வகுப்பில் மனப்பாடம் செய்வோம். மனப்பாடம் செய்து மறுநாள் ஒப்புவிப்பவர்களுக்கு என் வகுப்பில் என்றும் பாராட்டும்,சிறப்பும் உண்டு.
வகுப்புகளில் அடிக்கடி நான் நினைவுகூரும் பெயர் தி.வே.கோபாலையர் என்பதாகும். அவரிடம் கற்ற மாணவர்களை விடவும் ஐயா மேல் எனக்குப் பெரிய மதிப்பு உண்டு.அவரைக் காண்பதையும் அவர் உரை கேட்பதையும் எந்தச் சூழலிலும் கைவிட்டதே இல்லை.அவர் உரை கேட்டு மீண்டால் புதுத்தெம்பு எனக்கு உண்டாகும்.எனக்கு ஏற்ற ஆசிரியராக அவர் இருந்தார்.வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்திருந்தால் மிகப்பெரிய அறிவு பெற்றிருக்கலாம்.ஐயா அவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படித்துச் சுவைக்க வேண்டும் என்பார்கள்.நாம் படிப்பது கற்பதற்குதான்.அவர் படித்ததோ சுவைப்பதற்கு.அடிக்கடி தமிழ் மொழியின் அமைப்பு,இலக்கிய இலக்கணங்களின் சிறப்புகளை எண்ணி எண்ணி மகிழ்வார்.நம்மையும் அந்த இன்பம் பெற பாதை காட்டுவார்.சிலர் ஐயம் போக்கிக்கொள்ளும் கடைசிப் புகலிடமாக ஐயாவை நினைப்பார்கள்.நான் அவரின் ஒவ்வொரு அசைவையும் கண்டு பூரித்துப்போவேன்.அவருடன் சற்றொப்ப பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் எனக்கு உண்டு.செந்தாமரையின் மதுவுண்ணும் கானத்து வண்டு யான்.
புறப்பொருள் வெண்பாமாலையின் புரியாத பல இடங்களை ஐயாவிடம் கேட்டு மயக்கம் போக்கிக்கொண்டேன்.புறப்பொருள் வெண்பா மாலைக்குத் தமிழ் நூற்கடலை ஓர் உரை வரையவும் வேண்டினேன்.என் எண்ணம் இதில் நிறைவேறாமல் போனது.ஐயா இன்னும் சில காலம் இருந்திருந்தால் எண்ணம் கனிந்திருக்க வாய்ப்பு உண்டு.
பெருமழைப்புலவரின் உரையிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.பெருமழைப்புலவரின் உரையினைக் கழகத்தின் முதற்பதிப்பில் கண்டு மகிழ வேண்டும்.பின்னாளில் வந்த பதிப்புகளில் உரைகள் சுருக்கப்பட்டுவிட்டன.நம் அரைகுறை தொழில்முறைப் பேராசிரியர்கள் சரியாகப் பாடம் நடத்தாததாலும்,சுருக்கமாக எதிர்பார்த்ததாலும்,பக்க வரையறை,விலைக் குறைப்பு போன்ற வணிக நோக்காலும் கழகம் பொருமழைப்புலவரின் உரையைச் சுருக்கி வெளியிட வேண்டியதாயிற்று.மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுப.இராமநாதன் அவர்களின் பதிப்பும் மிகச்சிறந்த பதிப்பே.ஆய்வுப்பதிப்பு அஃது.
புறப்பொருள் வெண்பாமாலை ஐயனாரிதனார் என்னும் புலவர் பெருமானால் இயற்றப்பட்ட நூலாகும்.இவர் சேர மரபினர் என்பர்.தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்துள்ள புறப்பொருள் குறித்த குறிப்பிடத்தகுந்த நூல் இதுவாகும்.இந் நூல் பகுதிகள் இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் உள்ளிட்டவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளதால் இவர்களின் காலத்திற்கு முந்தியவர் ஐயனாரிதனார் ஆவார்.இவர் காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்களின் துணிபாகும்.இந்த நூலுக்குச் சாமுண்டி தேவநாயகர் என்பவர் உரை வரைந்துள்ளார்.
அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர் என்பதும் அப்பன்னிருவரும் யாத்த நூல் பன்னிரு படலம் என்பதும் இந்தப் பன்னிரு படலத்தின் வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் அறிஞர் உலகம் குறிப்பிடும் செய்தியாகும்.தொல்காப்பியத்தின் புறத்திணையியலை ஒட்டிப் புறப்பொருள் வெண்பாமாலை செய்திகள் இருப்பினும் இரண்டு நூல்களுக்கும் இடையே வேறுபாடுகள் பல உண்டு.குறிப்பாகத் தொல்காப்பியம் உணர்த்தும் காஞ்சித்திணையும்,புறப்பொருள் வெண்பாமாலை உணர்த்தும் காஞ்சித்திணையும் பெயர் அளவில் ஒன்றாக இருப்பினும் பொருள் அளவில் வேறுபாடு உடையனவாகும்.
தொல்காப்பியர் புறத்திணையியலில் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,காஞ்சி,பாடாண் என்று ஏழு புறத்திணைகளையும்,அகத்திணையயியலில் முல்லை,குறிஞ்சி, பாலை,மருதம், நெய்தல்,கைக்கிளை,பெருந்திணை என்று ஏழு அகத்திணைகளையும் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் அகத்திணையாகக் குறிப்பிடும் கைக்கிளை,பெருந்திணை என்பதைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் புறத்திணையாகக் குறிப்பிடுகிறார்.
மேலும்தொல்காப்பியர் குறிப்பிடும் வெட்சி,வஞ்சி,உழிஞை,தும்பை,வாகை,பாடாண் என்ற ஆறு திணைகளுடன் கரந்தை,காஞ்சி,நொச்சி, என்று மூன்று திணைகளைக் கூட்டிப் புறத்திணைகள் மொத்தம் பதினொன்று என்றும் ஐயனாரிதனார் குறிப்பிட்டுள்ளார்.
படித்து நாம் விளங்கிக்கொள்ளவும், புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அமைத்துள்ள முறையிலும் புறத்திணைகளைப் பின்வருமாறு வரிசையிட்டுக்கொள்ளலாம்.
1.வெட்சித் திணை( ஆநிரைகளைக் கவர்தல்)
2.கரந்தைத் திணை(வெட்சி மறவர்கள் கவர்ந்த தம் ஆநிரைகளை மீட்டல்)
3.வஞ்சித்திணை(பகைப்புலத்தின் மேல் படையெடுப்பது)
4.காஞ்சித்திணை(தம் நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சி வேந்தனைப் படைதிரட்டித் தடுத்து நிறுத்திப் போர் புரிவது.இதன் அடையாளமாக காஞ்சிப்பூ சூடுவர்)
5.நொச்சித்திணை(பகையரசனிடம் இருந்து மதிலைக் காப்பது)
6.உழிஞைத்திணை(பகையரசனின் காவற்காடு,அகழி கடந்து கோட்டைக்குள் நுழைவது)
7.தும்பைத்திணை(பகையரசர்கள் இருவரும் போர் புரிவது)
8.வாகைத்திணை(போரிட்ட இருவருள் ஒருவர் வெற்றி வாகை சூடுவர்)
9.பாடாண்திணை(ஓர் ஆண்மையாளனின் உயர் ஒழுகாலாறுகளைப் புகழ்வது)
10.கைக்கிளை(ஒரு தலையாக விரும்புவது )
11.பெருந்திணை(பொருந்தாத காதல்)
புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூலாயினும் அதில் உள்ள வெண்பாக்கள் முத்தொள்ளாயிரம் போலவும்,நளவெண்பா போலவும் கற்று இன்புறத்தக்க இனிய வெண்பாக்களைக் கொண்டுள்ளது.சிறந்த வெண்பாக்களை எடுத்து விளக்குவேன்.இதனைப் படித்து மகிழும் பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,பதிவர்கள் உரிய குறிப்புகளுடன் வெளியிடுவது வரவேற்கத்தக்க ஒன்றேயாகும்.வெட்டி ஒட்டித் தங்கள் பெயரில் வெளியிட்டு மகிழும் வீண் விருப்பம் தவிர்க்க வேண்டுகிறேன்.இத்தகையோரின் செயல்களால் பல நூறு பக்க அரிய செய்திகள் தட்டச்சிட்டும் வெளியிடப்பெறாமல் உள்ளன.
மீண்டும் வருவேன்...