நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 1 அக்டோபர், 2008

உவமைக்கவிஞர் சுரதா (23.11.1921 -20.06.2006)


உவமைக்கவிஞர் சுரதா

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இளைஞர்களிடத்துத் தமிழ் உணர்வையும்,பகுத்தறிவுப் பார்வையையும் வழங்கின.பாவேந்தரின் கவிதைகளில் ஈர்ப்புண்டு பாவேந்தரின் இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்பைதை நினைவூட்டும் வகையில் சுப்புரத்தினதாசன் எனத் தன்பெயரை அமைத்துப் பின்னாளில் அதன் சுருக்கமான சுரதா எனும் பெயரில் அறிமுகமானவர் உவமைக்கவிஞர் சுரதா ஆவார்.

சுரதா பழகுவதற்கு இனியவர்.சிறியவர் பெரியவர் எனப் பாராமல் அனைவரிடமும் அன்பொழுகப் பழகுபவர்.நினைவாற்றல் கொண்டவர்.பொருத்தமான உவமைகளை-புதிய உவமைகளைக் கையாள்வதில் வல்லவர். இவரைச் சுற்றி கவிஞர்கள் பட்டாளம் எந்த நேரமும் குவிந்திருக்கும். இளைஞர்களை ஊக்கப்படுத்திக் கவிதை எழுதப் பழக்குவார். யாரேனும் புதியவரைக் கண்டால் உனக்குக் கவிதை எழுதத் தெரியுமா? என வினவி அவரைக் கவிதைப்பக்கம் திருப்புவார்.தமிழகத்தின் பல பள்ளிகள்,கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பற்றும்,பகுத்தறிவும் அழகியல் பார்வையும் கொண்ட சுரதா தஞ்சை மாவட்டம் பழையனூர்(சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர்(23.11.1921).இயற்பெயர் இராசகோபால் என்பதாகும். இவர்தம் பெற்றோர் திருவேங்கடம்,சண்பகம் அம்மையார் ஆவர்.பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றவர்.

1941 சனவரி 14 இல் பாவேந்தரை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவர்தம் கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார்.பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல்,அச்சுப் பணிகளைக் கவனித்தல்,பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது. பாவேந்தரின் பாடல்களில் நல்ல பயிற்சியுடைய சுரதா பாவேந்தர் போல் மிகச் சிறந்த பல
பாடல்களைத் தந்துள்ளார்.

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்த்தது.

சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும்,கல்லாடன் என்ற ஒரே மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன்.பெயரர்கள் இளங்கோவன்,இளஞ்செழியன் என இருவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார்,கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந் நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தவர்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியவர்.அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதியவர்.கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

சுரதாவின் திரைத்துறைப் பங்களிப்பு

தமிழ் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்காற்றியுள்ள சுரதா திரைத்துறைக்கும் மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார்.சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.இதன்வழி திரைப்படத்திற்குக் குறைந்த அகவையில் உரையாடல் எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

சுரதாவின் எழுத்துப்பணி

உவமைக்கவிஞரின் முதல் நூல் சாவின் முத்தம் .இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார்.1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.எழுச்சியும் வேகமும் நிறைந்த அக் கவிதைகளைப் படித்தவர்கள் சுரதா பரம்பரை என்ற வகையில் கவிதையுலகில் எழுதத் தொடங்கினர்.

1955 இல் காவியம் என்ற கிழமை இதழைத் தொடங்கினார்.இவ்விதழைத்தொடர்ந்து இலக்கியம்(1958),ஊர்வலம்(1963),விண்மீன்(1964),சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது(1974). இவ்வாறு தமிழ்க் கவிதைத்துறையை வளர்த்த சுரதா பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா அவர்கள் பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன்,கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார்.உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

சுரதா பெற்ற சிறப்புகள்

சுரதாவின் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டியும் கலைப்பணியைப் பாராட்டியும் பல சிறப்புகள் அவர்க்குக் கிடைத்தன.1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.1978 இல் ம.கோ.இரா.தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).

1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் அறுபதாயிரம் உருவா பரிசாகத் தரப்பெற்றது.1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.அப்பொழுது மலேசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் பரப்பி மீண்டார்.

மலேசியாவில் தங்கியிருந்தபொழுது அங்கு வாழ்ந்த திராவிட இயக்க இதழாளர் முருகுசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் இருந்த பொன்னி இதழ்கைளைப் பார்வையிட்டு பாரதிதாசன் பரம்பரை என்ற நூல் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.(அந்நூல் என் முனைவர் பட்ட ஆய்வாக விரிந்தது)மேலும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை என்னும் அமைப்பை அப்பொழுது உருவாக்கினார்.


மு.இளங்கோவனின் நூலுடன் சுரதா,மு.இளங்கோவன்,வசந்தா(பாவேந்தரின் மகள்)

1989 இல் அரபு நாடுகளுள் ஒன்றான சார்ச்சாவுக்குச் சென்று பல தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.பலகவியரங்குகளுக்குத் தலைமையேற்று நடத்திய சிறப்பிற்கு உரியவர்.

கவிஞர் சுரதாவின் உவமைச் சிறப்பினை உணர்ந்த எழுத்தாளர் செகசிற்பியன் அவர்கள் தாம் நடத்திய சிரஞ்சீவி இதழில் 'உவமைக்கவிஞர்' என எழுதினார்(1945).சுரதாவின் கவிதைகள் பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.1989 ஆம் ஆண்டு இந்தியத் தொலைக்காட்சிகளில் தேசிய ஒலிபரப்பில் 'தமிழ்மொழியின் சிறந்த கவிஞர்' என்ற தலைப்பில் 40 நிமிடம் ஒலிபரப்பானது.

சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஒரு இலட்சம் உரூவா இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.இருபதிற்கும் மேற்பட்ட நூல்களையும் 100 மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் வழங்கிய உவமைக்கவிஞர் சுரதா 20.06.2002 இல் இயற்கை எய்தினார்.'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா' எனப் பாடிய பாவலர்,'அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு' என எழுதிய பாவரசர் என்றும் தமிழ் இலக்கிய உலகில் நினைவுகூரப்படுவார்.

29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

பகுத்தறிவும் தமிழ் உணர்வும் ததும்பும் படைப்புகள் சுரதாவின் படைப்புகள்.தமிழ் இலக்கியச் செய்திகளை நினைவுகூர்ந்தும்,நடப்பியில் செய்திகளை நினைவுகூர்ந்தும் சுரதா எழுதியுள்ள பாடல்கள் மிகச் சிறந்தனவாகும்.கற்பனையும் உவமைகளும் சுரதாவின் படைப்புகளில் மிகுந்து கிடக்கும்.

மயில் பற்றி சுரதா பின்வருமாறு பாடியுள்ளார்.

உன்விழி நீலம்; உன்தோகை நீளம்;
உன்னுடல் மரகதம்; உச்சிக் கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்!
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!

என்று மயிலின் உருவத்தை நுண்மையாகக் குறிப்பிடும் கவிஞர் மயில் முகிலினைக் கண்டு ஆடுவதை,

ஈர முகிலினை ஏன் விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்று நீர் சுடுமென்றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?

என்று கேட்பது இவர்தம் கற்பனையாற்றலுக்குச் சான்றாகும்.

சுரதாவின் நூல்களுள் சில...

01.சுவரும் சுண்ணாம்பும்,1974
02.துறைமுகம்,1976
03.அமுதும் தேனும்,1983
04.தேன்மழை,1986
05.பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ),1991
06.வினாக்களும் சுரதாவின் விடைகளும்


சுரதாவின் சுவரும் சுண்ணாம்பும்


வினாக்களுக்கு விடையாகச் சுரதாவின் நூல்...


பொன்னியில் வெளிவந்த கவிஞர்களை உலகிற்குக் காட்டிய நூல்...

உவமைக்கவிஞர் சுரதா இல்ல முகவரி:
56.அ,டாக்டர் இலட்சுமணசாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை-600 078.

5 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

உவமைக் கவிஞரின்
உண்மையைக் காட்டி
உலகம் போற்றிடும்
வரிகளைக் காட்டி
புரட்சிக் கவிஞரின்
வாரிசைக் காட்டி
புலவர் பலரின்
பெருமை காட்டி
பொங்கும் தமிழரின்
நன்றிகள் பெற்றீர் !
முனைவர் இளங்கோ
வாழ்ந்திட நன்றே!

மோகன் காந்தி சொன்னது…

தகவலுக்கு நன்றி முனைவர் மு.இளங்கோவன்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

Divya Balaji சொன்னது…

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

Divya Balaji சொன்னது…

தகவலுக்கு நன்றி முனைவர் மு.இளங்கோவன்