நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பாரதிதாசன் பரம்பரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் பரம்பரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 மார்ச், 2012

பாரதிதாசன் பரம்பரை


பாரதிதாசன் பரம்பரை

  திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 முதல் 1996 வரை “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம் வரலாறு, மதிப்பீடு” என்னும் தலைப்பில் நிகழ்த்தப்பெற்ற முனைவர் பட்ட ஆய்வு பல்கலைக்கழகத்தின் இசைவுடன் 2001 இல் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் நூல்வடிவம் பெற்றது. இந்த ஆய்வுக்குப் பேராசிரியர் முனைவர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்) அவர்கள் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தினார்.

  பாரதிதாசன் பரம்பரை என்ற இந்த நூல் முனைவர் பொற்கோ, முனைவர் இரா.இளவரசு, தமிழண்ணல் ஆகியோரின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது.

  1.இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதைகள், 2. பாரதிதாசன் பரம்பரை தோற்றமும் வரலாறும், 3. பாரதிதாசன் பரம்பரையினர் அறிமுகம், 4.பாரதிதாசன் படைப்புகளுக்கும் பரம்பரையினர் படைப்புகளுக்கும் உள்ள ஒற்றுமைகளும் தனித்தன்மைகளும், 5. இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிடம் பாரதிதாசனின் தாக்கம் என்னும் தலைப்புகளில் இயல்கள் பகுக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களின் படைப்புகள், பணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியல் ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டு மரபுக்கவிதைகள் குறித்து அறிய விரும்புபவருக்கும் ஆராய விரும்புபவருக்கும் அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இந்த நூல் விளங்குகின்றது.

வெளியீடு:

முகிலரசி வெளியீடு
31, கொல்லப்பாளையம்,
ஆர்க்காடு - 632 503, வேலூர் மாவட்டம்

பக்கம்: 248
விலை: 100 உருவா

செவ்வாய், 27 மார்ச், 2012

பொன்னி பாரதிதாசன் பரம்பரை


பொன்னி பாரதிதாசன் பரம்பரை

 பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் பொன்னி இலக்கிய இதழ் ஒரு தொடரை 1947 பிப்ரவரி முதல் 1949 அக்டோர் 25 வரை வெளியிட்டது. அந்தத் தொடரில் இடம்பெற்ற பாவலர்களை என் முனைவர் பட்ட ஆய்வில் அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை ஆய்வுசெய்து வெளியிட்டேன். அத்தொடரில் இடம்பெற்ற பாவலர்களின் பட்டியல் இதோ:

1.அண்ணாமலை. மு 1947, பிப்ரவரி
2.நாச்சியப்பன். நாரா, 1947,மார்ச்சு
3.சுரதா 1947,ஏப்ரல்
4.புத்தனேரி ரா.சுப்பிரமணியன் 1947, மே
5.முத்தையா, இராம.நாக, 1947,சூன்
6.முடியரசன் 1947, சூலை
7.சேதுராமன், இராம.வே1947,ஆகத்து
8.வாணிதாசன் 1947,செப்டம்பர்
9.இராமசாமி, சி. 1947, அக்டோபர்
10.பழனியப்பன், சாமி. 1947, நவம்பர்
11.இராமநாதன், அண 1947,டிசம்பர்
12.கோவை இளஞ்சேரன் 1947,சனவரி
13.தமிழரசன்(மாணிக்கம்,சி) 1948, பிப்ரவரி
14.தேவர் கே.டி 1948,மார்ச்சு
15.நமச்சிவாயம், நா.கி 1948,மே
16.குழூத்தலைவன்(இரா.கணபதி),1948, மே
17.திரவியம்,கு (ரவி), 1948,சூன்
18.வழித்துணைராமன்,சு. 1948, சூலை
19.ரங்கதுரைவேலன், 1948,சூலை
20.குலோத்துங்கன்,வா.செ. 1948,ஆகத்து,1
21.கிருஷ்ணசாமி,டிகே. 1948,ஆகத்து 15
22.குருசாமி,வெ 1948,செப்டம்பர் 1
23.சண்முகம்.வே.1948, செப்டம்பர் 15
24.நாகப்பன்,பெ. 1948, அக்டோபர்,10
25.சுந்தரராசன்.தண. 1948, அக்டோபர்,30
26.சிவனடியான்.பெரி 1948,நவம்பர் 10,
27.சிவப்பிரகாசம்,எஸ், 1948,நவம்பர் 25
28.சீனிவாசன் சி.அ. 1948,டிசம்பர் 10
29.ரெங்கநாதன் மு. 1948,டிசம்பர் 25
30.பொன்னையா,ஜே.எஸ். 1949, சனவரி 25
31.சுந்தரம்,கதி. 1949,பிப்ரவரி10
32.மணி.எம்.எஸ். 1949,பிப்ரவரி 25
33.கணேசன், நா 1949,மார்ச்சு 10
34.அரசமணி. தி 1949,மார்ச்சு 25
35.சண்முகசுந்தரம், ப. 1949,ஏப்ரல் 10
36.பரமசிவன், க. 1949,ஏப்ரல் 25
37.மாவண்ணா தேவராசன் 1949,மே,10
38.அண்ணாமலை, வே. 1949மே,25
39.குமாரசாமி, மா 1948,சூன்10
40.முத்துசாமி, ப. 1949,சூன் 25
41.ஷரிப் 1949,சூலை 10
42.சுப்பு ஆறுமுகம் 1949,சூலை 25
43.திருநாவுக்கரசு, சி. 1949,ஆகத்து 10
44.சீத்தாராமன்,ச.(சீராளன்) 1949,ஆகத்து 25
45.ஜெயராமன் தெ. 1949, செப்டம்பர் 10
46.மாணிக்கவாசகன், ஞா 1949,செப்டம்பர் 25
47.மனோகரன், கி. 1949, அக்டோபர் 10
48.இராமநாதன், எஸ்.எம். 1949,அக்டோபர் 25

நூல்: பொன்னி பாரதிதாசன் பரம்பரை
ஆசிரியர்: முனைவர் மு.இளங்கோவன்

பதிப்பகம் முகவரி:
வயல்வெளிப் பதிப்பகம்,
இடைக்கட்டு,உள்கோட்டை(அஞ்சல்)
கங்கை கொண்டசோழபுரம் (வழி),
உடையார்பாளையம் (வட்டம்),
அரியலூர் மாவட்டம் - 612 901
+ 9442029053

விலை: 50 உருவா
பக்கம்: 160

புதன், 16 ஜூன், 2010

இருபதாம் நூற்றாண்டு: பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை




தமிழ்க்கவிதைகள் காலந்தோறும் உருவம்,உள்ளடக்கம், உத்திமுறைகளில் பல்வேறு வேறுபாடுகளைக் கண்டு வந்துள்ளன.இதற்கு அவ்வக் காலங்களில் வாழ்ந்த திறமையான புலவர்களும் சமூக அமைப்பும் காரணமாக அமைந்தனர்.இருபதாம் நூற்றாண்டைப் பொறுத்தவரை தமிழ்க்கவிதைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகள் கண்ட படிநிலை வளர்ச்சியைக் காட்டிலும் இருபதாம் நூற்றாண்டில் கண்ட வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சியாகத் தெரிகின்றது.

பாரதியார், பாரதிதாசன் என்ற இரு பெரும் சுடர் மணிகள் தோன்றித் தமிழ்க்கவிதையின் பன்முக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டனர்.'சொல் புதிது சுவை புதிது சோதி மிக்க நவகவிதை' என்று பாரதியார் தம் கவிதையை நமக்கு அடையாளப்படுத்தினார்."புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான் பாரதிதாசன்; உன் பாடல்கள் எதுகைகளின் பட்டியல்கள் அல்ல;பொங்கும் எரிமலையின் முகவரிகள்"என்று பாரதிதாசனைப் புலவர் புலமைப்பித்தன் அறிமுகப்படுத்துவார்.அந்த அளவு நெருப்புக் கவிதைகளை எழுதித் தமிழர்களுக்கு இனமான உணர்வூட்டிவர் பாவேந்தர் ஆவார்.

பாவேந்தரின் பாடல்கள் தொடக்கத்தில் பக்திப் பாடல்களாகவும்,தேசியப் பாடல்களாகவும், திராவிட இயக்க உணர்வுப்பாடல்களாகவும் விளங்கிப் பின்னர்த் தனித்தமிழ் உணர்வூட்டும் பாடல்களாக மலர்ந்தன.பாரதியோ பக்தியிலும் தேசியத்திலும் ஊறியப் பாடல்களைத் தந்து அழியாப் புகழ்பெற்றான்.பாரதியின் பாடல்களைப் படித்து அவர்க்கு ஒரே வாரிசாகப் பாரதிதாசன் மட்டும் தோன்றினார்.ஆனால் பாரதிதாசனின் கவிதைகளில் தோய்ந்து ஒரு பாட்டுப்படையே தோற்றம் பெற்றுள்ளது.அந்தப் படையினரைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிஞர் உலகம் அழைக்கும்.

பாரதியார் இளமையில் மறைந்தமை தமிழ்க் கவிதைத்துறைக்குப் பேரிழப்பாகும்.உயிருடன் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்னும் பல காப்பியங்களையும் உயிரோட்டமான பாடல்களையும் தந்திருக்க வாய்ப்புண்டு.அதற்குரிய தமிழ்மொழியாளுமையும், யாப்பிலக்கணத் தேர்ச்சியும் பாரதியாரிடம் இருந்துள்ளதை அவர் படைப்புகள் வழியாக அறியலாம்.

மக்கள் பயன்படுத்தும் இசை வடிவங்களை உள்வாங்கிக்கொண்டு மக்களுக்குப் பாட்டு வடிப்பவர்களையே மக்கள் நினைக்கிறார்கள். பாரதியாரிடம் சிற்றூர் மக்களின் இசையும், செவ்வியல் இசையும் கையிருப்பாக இருந்ததால் அவர் பாடிய பாடல்கள் யாவும் இசை நயம் கொண்டு மக்களுக்கு விருப்பமான இசைப்பாடல்களாக மிளிர்ந்தன.

பாரதியாருக்குப் பிறகு தமிழ்க்கவிதையுலகினை வழிநடத்திய பெருமை பாவேந்தருக்கு உண்டு.பாரதியாரின் தொடர்பு பாவேந்தரின் பாட்டுக்குப் புதுமுறை,புதுநடை காட்டியது.தந்தை பெரியாரின் தொடர்பு பாவேந்தரை 'நானொரு நிரந்தர நாத்திகன்' என்று மாற்றியது.1936 இல் பாவேந்தரின் 'பாரதிதாசன் கவிதைகள்' முதல்தொகுதி வெளியானது.பாவேந்தரை இக்கவிதைத் தொகுதி நன்கு அறிமுகம் செய்தது.கடவுள் மறுப்பு,சமய எதிர்ப்பு,சமுதாய நிலை, பொதுவுடைமை,தொழிலாளர் நலன் முதலியன இந்நூலின் பாடு பொருளாகும். இக்கருத்துகளின் ஈர்ப்பினால் பல இளங்கவிஞர்கள் தோன்றினர்.

பாரதிதாசன் பாடல்கள் சமுதாயத்தில் நிலவிய கொடுமைகளை எதிர்த்தவையாகும். இந்திமொழித் திணிப்பு,பெண்ணுரிமை வேண்டல், பகுத்தறிவுப் பாடல்களைப் பாவேந்தர் எழுதினார்.இதனைக் கற்ற இளைஞர்கள் பலர் பாவேந்தரின் பாடல்களைப் பரப்பவும் அதன் வழியில் எழுதவும் தோன்றினர்.அவர்களுள் முருகு.சுப்பிரமணியன்,அரு.பெரியண்ணன் என்னும் இரண்டு செட்டிநாட்டு இளைஞர்கள் பாவேந்தர் புகழ் பரப்புவதற்கு என்று பொன்னி என்ற பெயரில் இலக்கிய இதழொன்றைத் தொடங்கினர்(1947).புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த அந்த இதழ் பின்னாளில் சென்னையிலிருந்து வெளிவந்து நின்றது.அந்த ஏட்டில் (1947 பிப்ரவரி தொடங்கி 1949-அக்டோபர் வரை) 48 கவிஞர்களைப் "பாரதிதாசன் பரம்பரை" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.அப்பட்டியலில் இடம்பெறும் சுரதா, முடியரசன், வாணிதாசன், புதுவைச்சிவம், வா.செ.குலோத்துங்கன், மு.அண்ணாமலை, பெரி.சிவனடியான், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற பாவலர்களாக வலம் வந்தனர்.

இப்பட்டியலில் இடம்பெறாமல் பாவேந்தர் கவிதைகளைக் கற்று அவர் வழியில் தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அன்றும், இன்றும் பாடல்புனையும் பாவலர்கள் உண்டு.இவ்வகையில் பெருஞ்சித்திரனார்,கோவேந்தன்,தங்கப்பா,சாலை இளந்திரையன், எழில்முதல்வன்,காசி ஆனந்தன்,புலவர் புலமைப்பித்தன்,கடவூர் மணிமாறன், பாளை எழிலேந்தி,மகிபை பாவிசைக்கோ, தரங்கை. பன்னீர்ச்செல்வன், தமிழியக்கன், பொன்னடியான் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.பாவேந்தரின் கொள்கைகளில் ஆழமான பற்றுக்கொண்டு அவர் வழியில் பாடல் புனைந்து பின்னாளில் புதுப்பாக்களில் தமிழ் உணர்வூட்டும் படைப்புகளை நல்கும் ஈரோடு தமிழன்பன்,மரபுப் பாடலில் செழுமையான தொகுதிகளை உருவாக்கிய வேழவேந்தன் உள்ளிட்ட பாவலர்களை நாம் சுட்டியாக வேண்டும்.

கவியரசு கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கம்பதாசன் ஆகியோரின் பாடல்களில் பாவேந்தரின் சாயலைப் பல இடங்களில் காணமுடியும்.

பாரதிதாசன் பரம்பரையினர் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே இணைப்புத்தொடராக விளங்கினர். இவர்கள் சங்க இலக்கியங்களுக்குப் பிறகு இலக்கிய உலகில் இழந்துவிட்ட தமிழ் மரபுகளை மீண்டும் வளரச் செய்த பெருமைக்கு உரியவர்கள்.சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட கருப்பொருளான இயற்கைப் பொருள்களைத் தனித்தனியாக விரிவாகப் பாடியுள்ளனர்(காடு,நிலா,புறா முதலான தலைப்புகளில்).

சங்க இலக்கியங்களில் தூய தமிழ்ப்பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இடைக்கால நூல்களில் சமற்கிருதச் சொல்லாட்சிகளைக் காணமுடிகிறது. பாரதிதாசன் பரம்பரையினரின் படைப்புகள் மீண்டும் தனித்தமிழ்ப் பெயர்கள் தாங்கி வெளிவந்துள்ளன.சங்க இலக்கியங்களில் சமயச் செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தன.பிற்கால நூல்களில் மதக்கருத்துகளும் மூட நம்பிக்கைக்குத் தூபமிடும் சாத்திரக் கூறுகளும் மண்டிக்கிடந்தன.பாரதிதாசன் பரம்பரையினரின் எழுச்சி தமிழிலக்கியங்களில் சமயம் சாரா இலக்கியங்கள் வகுக்க வழிகோலின. சங்க இலக்கியங்கள் வீர உணர்ச்சியையும்,தமிழர் பண்பாட்டையும் ஊட்டியதுபோலப் பரம்பரையினர் படைப்புகள் தமிழ்,வீர உணர்ச்சியை ஊட்டின.எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக அறுபட்டுக் கிடந்த தமிழ் மரபுகளை இணைத்துச்சேர்த்த பெருமை பாரதிதாசன் பரம்பரையினர்க்கு உண்டு.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் குறிப்பிடப்படும் சுரதா அவர்கள் பாவேந்தருடன் நெருங்கிப் பழகியவர். பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இயற்கையைப் பாடவும்,சொற்செறிவைக் கவிதையில் அமைக்கவும்,வரலாற்றுச் செய்திகளைப் பாட்டில் வடிக்கவும் பாவேந்தரிடம் கற்றவர் சுரதா.அதுபோல் பாவேந்தரின் காப்பியம் புனையும் போக்கினையும், மொழியாளுமையையும், தமிழ்ப்பற்றையும், தமிழிசை ஈடுபாட்டையும் முடியரசன் கவிதைகளில் காணமுடிகின்றது.முடியரசனின் பூங்கொடி காவியம் தமிழ்க்காப்பிய உலகில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.தமிழகத்தில் நடந்த மொழிப்போராட்ட வரலாறு இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிதாசனின் நேரடி மாணவராக விளங்கி,அவர்தம் வழியில் இயற்கை குறித்த கவிதைகளைப் பாடியவர்களுள் வாணிதாசன் குறிப்பிடத்தகுந்தவர். இவ்வகையில் வாணிதாசனின் எழிலோவியம்,எழில் விருத்தம் நூல்கள் குறிப்பிடத்தகுந்தன.பாவேந்தர் வழியில் வாணிதாசன் மொழியுணர்வு, இன உணர்வு சார்ந்த பல பாடல்களை வழங்கியுள்ளார். இந்தி எதிர்ப்புப் பாடல்களை வாணிதாசன் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார். வாணிதாசனிடம் திராவிட இயக்க உணர்வு,பொதுவுடைமைச் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதை அவர்தம் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.வாணிதாசன் பாவேந்தர் வழியில் பல சிறுகாப்பியங்களையும்,கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

புதுவைச்சிவம் பாவேந்தரின் மாணவராகவும் நண்பராகவும் விளங்கியவர்.பாவேந்தர் அரசுப்பணியில் இருந்த காரணத்தால் புதுவைச்சிவம் பெயரில் இதழ் நடத்தியும்,பதிப்பகம் நடத்தியும் இயக்கப்பணிகளில் ஈடபட வேண்டியிருந்தது.தம் மாணவர் சிவத்தைக் கவிதை எழுதும்படித் தூண்டிக் கவிதை நூலுக்குத் தாமே வாழ்த்துப் பாவும் பாவேந்தர் வழங்கியுள்ளார். சிவம் பாவேந்தரின் வழியில் நின்று கைம்மை வெறுத்த காரிகை என்ற பெயரில் கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்தும் பாட்டுத்தொகுதியை வெளியிட்டுள்ளார். மேலும் பெரியார் வாழ்வியலைப் பாட்டாக வடித்த பெருமை சிவத்துக்கு உண்டு(1944).

பாவேந்தரின் கவிதைகளை ஆழமாகப் படித்ததுடன் பாவேந்தரின் உதவியாளராகச் சிலகாலம் இருந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார்.பட்டுக்கோட்டை அழகிரியிடம் பரிந்துரைக்கடிதம் பெற்றுப் பொதுவுடைமைத் தலைவர் வ.சுப்பையா வழியாகப் பாவேந்தரின் தொடர்பைப் பெற்றவர் நம் பட்டுக்கோட்டையார்.

1952 இல் இச்சந்திப்பு நடந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எதனை எழுதத் தொடங்கினாலும் "வாழ்க பாரதிதாசன்" என்று எழுதித் தொடங்கும் அளவிற்குப் பாரதிதாசன் மேல் பற்றுக்கொண்டவர். பாவேந்தரிடம் இலக்கண இலக்கிய நுட்பம் அறிந்தவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவியில் இடம்பெறும் "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை" என்னும் பகுதி "ஆடைகட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ" என்று கல்யாணசுந்தரம் வழியாக மறுவடிவம் கண்டுள்ளது.

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்" என்று பாவேந்தர் பாடியதை

"இலங்கை மாநகரத்திலே இன்பவல்லி நீ இருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்"

என்று பட்டுக்கோட்டையார் பாடியுள்ளார்.

இதுபோன்ற எண்ணற்ற கவிஞர்களின் வரிகளைச் சான்றுகளாகக் கண்ட பாவேந்தர் பாரதிதாசன் பின்னொரு நாளில் பின்வருமாறு எழுதினார்.

"என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர்
நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்மர்
என்நடை தம் நடை; என்யாப்புத் தம்யாப்பென்(று)
இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை
எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்
தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்
திரைப்படப் பாட்டும் பேச்சும் செய்பவ(ர்)

இருப்பிடம் என்றன் இருப்பிடம்"(பாரதிதாசன் படைப்புத்திறன்,பக்கம்,12).

அந்த அளவு பாவேந்தரின் கவிதைத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளில் பரவி நிற்கின்றது.







கட்டுரையைத்
த சண்டே இந்தியன் இதழில் நேரடியாகப் படிக்க இங்கே

நனி நன்றி:
இக்கட்டுரையைச் செம்மொழிச் சிறப்பிதழில் வெளியிட்ட
த சண்டே இந்தியன்(27,சூன்,2010) இதழுக்கு!

புதன், 8 அக்டோபர், 2008

'திராவிடநாட்டின் வானம்பாடி' கவியரசு முடியரசனார்


கவியரசு முடியரசனார் (07.10.1920 - 03.12.1998) 

  "வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்
   தீத்திறக் காலை தெளிமருந்தே -மூத்த
   முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
   முடியரசன் செய்யுள் முறை"

  என மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவியரசு முடியரசன் அவர்கள். தமிழ்ப்பற்றும் பகுத்தறிவுக்கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாய்க் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன் ஆவார்..படிக்கும் காலத்திலும் பணிபுரியும் காலத்திலும் பல்வேறு இன்னகள் இடையூறுகள் வந்தபொழுதெல்லாம் தன்மானம் மிக்க தமிழ் அரிமாவாகச் செயல்பட்டவர் முடியரசன் ஆவார்.

 அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க் கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். வகுப்பறையைத் தமிழ் உணர்வூட்டும் பாசறையாக மாற்றியமைத்தவர். தமிழர்களின் வாழ்க்கை வளம்பெற தமிழகத்தில் மண்டிக்கிடந்த சமூக முன்னேற்றத்திற்குத் தடையான கருத்துகளை தம் அனல்கக்கும் பாடல்களால் எதிர்த்து எழுதியவர்.தாம் எழுதியதற்கு எதிராக எந்தச் சூழலிலும் செயல்படாத கொள்கை மறவராக விளங்கியவர்.சொல் செயல் இரண்டும் ஒன்றாக வாழ்ந்தவர். வீட்டிற்கு வருபவர்களிடம்கூட அழகு தமிழில் உரையாடும் தமிழ்நெஞ்சர்.

  திராவிட இயக்க உணர்வுடன் செயல்பட்ட முடியரசன் கடைசிக் காலம் வரை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை உயர்வாகப் போற்றியவர். தமிழாசிரியர் பணியாலும் கவியரங்கப் பணிகளாலும், எழுத்துப் பணிகளாலும் என்றும் தமிழக வரலாற்றில் இடம்பெறும் பெருமைக்கு உரியவர் முடியரசனார்.

  முடியரசனார் மதுரை மாவட்டம் பெரியகுளத்தில் 07.10.1920 இல் பிறந்தவர். பெற்றோர் திண்டுக்கல் சுப்புராயலு, சீதாலெட்சுமி ஆகும். இவர்களுக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவர். இயற்பெயர் கா.சு.துரைராசு. தம் தாய்மாமன் துரைசாமி அவர்களின் இல்லத்தில் இளமையில் வளர்ந்தார். பின்னர் பெற்றோர் காரைக்குடி அருகில் உள்ள வேந்தன்பட்டிக்குக் குடி பெயர்ந்த பொழுது வேந்தன்பட்டி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். வேங்கடராம ஐயரிடம் பயின்றார். அவரிடம் கீழ்வாயிலக்கம்.நிகண்டு நூல்கள் அக்கால முறைப்படி அவரிடம் கற்றார்.

  திண்ணைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் ஐந்து,ஆறாம் வகுப்புகளை மேலைச்சிவபுரியில் இருந்த சன்மார்க்க சபையில் பயின்றார். தமிழில் ஆர்வமுடன் படித்த காரணத்தால் ஆசிரியர்கள் இவரைத் தமிழ் பயிலும் படி வேண்டினர்.பிரவேச பண்டிதம் என்னும் புலவர் நுழைவு வகுப்பில் பயின்றார்.தேர்வு எழுதி புலவரானார். அங்குப் பயின்றபொழுது பண்டிதமணியார், இரா.இராகவையங்கார், விபுலாநந்த அடிகள்,தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

  கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் சேர்ந்து வித்துவான் வகுப்பில் சேர்ந்து பயின்றார். முத்து சாமிப் புலவர் என்னும் புலவர் பெருமானில் அறிவுரைப்படி வளர்ந்து தமிழின் மிகச்சிறந்த புலமையைப் பெற்றார். கல்லூரியில் இவர் பேச்சாற்றல்கொண்டு விளங்கியதால் வீரப்புலவர் எனப் பட்டம் வழங்கி அந்நாளைய கல்லூரி முதல்வர் அழைத்தார். நாடகத்தில் நடிக்கும் ஆற்றல் உடையவர்.

  திருப்புத்தூரில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றியபொழுது அவர்தம் பேச்சைக் கேட்ட முடியரசன் அதுவரை துரைராசு என்று அழைக்கப்பட்ட தம் பெயரை முடியரசன் என மாற்றிக் கொண்டார். அப்புனைபெயரே அவருக்கு நிலைத்த பெயராக நின்றது.

 பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் பழம் புலவர்களைக் கடிந்து பேசிய பேச்சைக்கேட்டுத் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்வுடன் பாடல் இசைக்கும் முறைக்குச் சென்றார். மேலைச் சிவபுரியில் மருத்துவர் ஒருவரின் இல்லத்திற்கு வந்த குடியரசு, விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட இதழ்களைப் படித்து தமிழ் உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றார்.

  முடியரசன் தம் 21 ஆம் அகவையில் 'சாதி என்பது நமக்கு ஏனோ' என்ற கவிதையை எழுதி திராவிடநாடு இதழுக்கு அனுப்பினார். பெரியகுளம் துரைராசு என்னும் பெயரில் வெளியாயிற்று.பொழுதெல்லாம் இதழ்கள் படிப்பது, திரைப்படம் பார்ப்பது எனப் பொழுது கழிந்ததால் முடியரசன் வித்துவான் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் தஞ்சையில் தேர்வெழுதி வெற்றிபெற்றார்.

 1947 இல் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணியேற்றார். வகுப்பறைக்குள் நுழைந்ததும் தம் இருக்கை அருகே நிற்பார். மாணவர்கள் அனைவரும் 'வெல்க தமிழ்' என ஓங்கி ஒலித்த பிறகே வகுப்பில் அமர்வார்கள். சென்னையில் பணிபுரிந்தபொழுது பொன்னி உள்ளிட்ட இதழ்களில் எழுதவும் திரு.வி.க, வாணிதாசன் உள்ளிட்டவர்களுடன் பழகவும் வாய்ப்பு அமைந்தது.

  முடியரசன் தம் 29 ஆம் அகவையில் கலைச்செல்வி என்னும் அம்மையாரை மணந்து கொண்டார். சாதிமறுப்புத் திருமணமாக நடந்தது. மயிலை சிவமுத்து அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது. பூவாளூர் பொன்னம்பலனார், காஞ்சி மணிமொழியார், டி.கே.சீனிவாசன், கவிஞர் வாணிதாசன், அழகுவேலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

  பின்னர் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 28ஆண்டுகள் அப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து தம் 58 ஆம் அகவையில் ஓய்வுபெற்றார். பள்ளியில் பணிபுரிந்த பொழுது அவரின் தமிழ்ப்பற்று அவருக்குப் பல்வேறு இன்னல்களைப் பெற்றுத் தந்தது.அனைத்திலும் வெற்றிபெற்றார்.

  முடியரசனுக்குக் கலைத்துறையில் நல்ல ஈடுபாடு இருந்தது. நவாபு இராசமாணிக்கம் குழுவில் இணைந்து பாடல் எழுதச் சென்றார். அங்கு நிலவிய சூழல் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பிவிட்டார். கண்ணாடி மாளிகை என்னும் திரைப்படத்திற்கு உரையாடலும் பாடலும் எழுதியுள்ளார். திரைத்ததுறையில் நிலவிய சூழல்கள் தமக்கு ஒத்துவராததால் தமிழாசிரியர் பணியில் நிலைத்து நின்றார்.

  பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் ஓராண்டுக்காலம்(1985-86) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின் வாழ்க்கையைக் காப்பியமாக்கினார். அந்நூல் இன்னும் வெளிவரவில்லை.

 தமிழ்ப்பற்றும் கொள்கை வாழ்வும் வாழ்ந்த முடியரசனார் பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல் என்னும் காவியங்களையும் முடியரசன் கவிதைகள், காவியப்பாவை உள்ளிட்ட மிகச்சிறந்த பாட்டுப் பனுவல்களையும் வழங்கியவர். தமிழிசைக்குப் பயன்படும் வகையில் தமிழிசைப் பாடல்களை எழுதியவர். இவர்தம் கவிதைப் பணியைப் பாராட்டி இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன. 1950 இல் இவர் எழுதிய அழகின் சிரிப்பு என்ற கவிதை முதற்பரிசுக்கு உரியதாகப் பாவேந்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர் தம் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசில்கள் கிடைத்துள்ளன.

  அறிஞர் அண்ணா 'திராவிடநாட்டின் வானம்பாடி' என்ற பட்டத்தை 1957 இல் வழங்கினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1966 இல் கவியரசு என்ற பட்டத்தை பாரி விழாவில் வழங்கினார். கலைஞர் விருது(1988), பாவேந்தர்விருது(1987), கலைமாமணி விருது (1998) அரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு (1993) முதலிய உயரிய பரிசில்களைப் பெற்றவர். இவர்தம் கவிதைகள் தமிழின முன்னற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிக் கவிஞரைப் பெருமை செய்தது. முதுமை காரணமாகத் தம் 79 ஆம் அகவையில் காரைக்குடியில் முடியரசனாரின் தமிழுயிர் 03.12.1998 இல் பிரிந்தது. கவிஞரின் மறைந்த மறுநாளில் தினமணி நாளேடு "பாடிப் பறந்த பறவை" எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதி மதிப்பளித்தது.

  பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம் என்னும் தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை முடியரசனார் எழுதி வைத்துள்ளார். வெளிவரவேண்டிய அரிய படைப்பு. காரைக்குடியில் முடியரசனாருக்கு ஒரு மணிமண்டபம் கட்டி அவர்தம் தமிழ் உணர்வைப் போற்றுவது அரசின் கடமையாகும்.

முடியரசனுக்கு வாய்த்த மக்கட்செல்வங்கள்

01.குமுதம்
02.பாரி
03.அன்னம்
04.குமணன்
05.செல்வம்
06.அல்லி

இவர்கள் அனைவருக்கும் சாதிமறுப்புத் திருமணம் நடந்தமை குறிப்பிடத் தகுந்ததாகும்.


கவியரசு முடியரசனார் தமிழுக்கு வழங்கிய நூல்கொடை;

01.கவியரங்கில் முடியரசன்,1960
02.பூங்கொடி, 1964
03.அன்புள்ள பாண்டியனுக்கு,1968
04.வீரகாவியம்,1970
05.முடியரசன் கவிதைகள்
06.ஊன்றுகோல்,1983
07.பாடுங்குயில்,1986
08.நெஞ்சுபொறுக்கவில்லையே,1985
09.மனிதனைத் தேடுகிறேன்,1986
10.தமிழ்முழக்கம்,1999,
11.நெஞ்சிற் பூத்தவை,1999
12.ஞாயிறும் திங்களும்,1999
13.வள்ளுவர் கோட்டம்,1999
14.புதியதொருவிதி செய்வோம்,1999
15.தாய்மொழி காப்போம்,2001
16.மனிதரைக் கண்டுகொண்டேன்,2005
17.எக்கோவின் காதல்
18.எப்படி வளரும் தமிழ்,2001
19.சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்(தொ.ஆ),1990

கவிஞர் முடியரசனார் மகன் திரு.பாரி அவர்களின் முகவரி:

திரு.மு.பாரி அவர்கள்,
முடியரசன் குடில்
17,பூங்கொடி வீதி,
569, சூடாமணிபுரம்,
காரைக்குடி-630 003

பேசி :99657 06699

நனி நன்றி : தமிழ் ஓசை,சென்னை,தமிழ்நாடு. 08.10.2008

புதன், 1 அக்டோபர், 2008

உவமைக்கவிஞர் சுரதா (23.11.1921 -20.06.2006)


உவமைக்கவிஞர் சுரதா

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இளைஞர்களிடத்துத் தமிழ் உணர்வையும்,பகுத்தறிவுப் பார்வையையும் வழங்கின.பாவேந்தரின் கவிதைகளில் ஈர்ப்புண்டு பாவேந்தரின் இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்பைதை நினைவூட்டும் வகையில் சுப்புரத்தினதாசன் எனத் தன்பெயரை அமைத்துப் பின்னாளில் அதன் சுருக்கமான சுரதா எனும் பெயரில் அறிமுகமானவர் உவமைக்கவிஞர் சுரதா ஆவார்.

சுரதா பழகுவதற்கு இனியவர். சிறியவர் பெரியவர் எனப் பாராமல் அனைவரிடமும் அன்பொழுகப் பழகுபவர். நினைவாற்றல் கொண்டவர். பொருத்தமான உவமைகளை - புதிய உவமைகளைக் கையாள்வதில் வல்லவர். இவரைச் சுற்றி கவிஞர்கள் பட்டாளம் எந்த நேரமும் குவிந்திருக்கும். இளைஞர்களை ஊக்கப்படுத்திக் கவிதை எழுதப் பழக்குவார். யாரேனும் புதியவரைக் கண்டால் உனக்குக் கவிதை எழுதத் தெரியுமா? என வினவி அவரைக் கவிதைப்பக்கம் திருப்புவார்.தமிழகத்தின் பல பள்ளிகள், கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இலக்கிய அமைப்புகளிலும் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.

தமிழ்ப் பற்றும்,பகுத்தறிவும் அழகியல் பார்வையும் கொண்ட சுரதா தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர்(23.11.1921). இயற்பெயர் இராசகோபால் என்பதாகும். இவர்தம் பெற்றோர் திருவேங்கடம், சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றவர்.

1941 சனவரி 14 இல் பாவேந்தரை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவர்தம் கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல்,அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது. பாவேந்தரின் பாடல்களில் நல்ல பயிற்சியுடைய சுரதா பாவேந்தர் போல் மிகச் சிறந்த பல
பாடல்களைத் தந்துள்ளார்.

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்த்தது.

சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும்,கல்லாடன் என்ற ஒரே மகனும் உள்ளனர். இவரின் மருமகள் பெயர் இராசேசுவரி கல்லாடன்.பெயரர்கள் இளங்கோவன்,இளஞ்செழியன் என இருவர்.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார்,கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந் நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தவர்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியவர். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதியவர்.கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன.திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

சுரதாவின் திரைத்துறைப் பங்களிப்பு

தமிழ் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்காற்றியுள்ள சுரதா திரைத்துறைக்கும் மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார். சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச. கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். இதன்வழி திரைப்படத்திற்குக் குறைந்த அகவையில் உரையாடல் எழுதியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

சுரதாவின் எழுத்துப்பணி

உவமைக்கவிஞரின் முதல் நூல் சாவின் முத்தம் .இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார்.1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.எழுச்சியும் வேகமும் நிறைந்த அக் கவிதைகளைப் படித்தவர்கள் சுரதா பரம்பரை என்ற வகையில் கவிதையுலகில் எழுதத் தொடங்கினர்.

1955 இல் காவியம் என்ற கிழமை இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம்(1963), விண்மீன்(1964), சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது(1974). இவ்வாறு தமிழ்க் கவிதைத்துறையை வளர்த்த சுரதா பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா அவர்கள் பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார்.உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

சுரதா பெற்ற சிறப்புகள்

சுரதாவின் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டியும் கலைப்பணியைப் பாராட்டியும் பல சிறப்புகள் அவர்க்குக் கிடைத்தன.1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.1978 இல் ம.கோ.இரா.தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).

1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் அறுபதாயிரம் உருவா பரிசாகத் தரப்பெற்றது.1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.அப்பொழுது மலேசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழ் பரப்பி மீண்டார்.

மலேசியாவில் தங்கியிருந்தபொழுது அங்கு வாழ்ந்த திராவிட இயக்க இதழாளர் முருகுசுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் இருந்த பொன்னி இதழ்கைளைப் பார்வையிட்டு பாரதிதாசன் பரம்பரை என்ற நூல் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.(அந்நூல் என் முனைவர் பட்ட ஆய்வாக விரிந்தது)மேலும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை என்னும் அமைப்பை அப்பொழுது உருவாக்கினார்.

மு.இளங்கோவனின் நூலுடன் சுரதா,மு.இளங்கோவன்,வசந்தா(பாவேந்தரின் மகள்)

1989 இல் அரபு நாடுகளுள் ஒன்றான சார்ச்சாவுக்குச் சென்று பல தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.பலகவியரங்குகளுக்குத் தலைமையேற்று நடத்திய சிறப்பிற்கு உரியவர்.

கவிஞர் சுரதாவின் உவமைச் சிறப்பினை உணர்ந்த எழுத்தாளர் செகசிற்பியன் அவர்கள் தாம் நடத்திய சிரஞ்சீவி இதழில் 'உவமைக் கவிஞர்' என எழுதினார் (1945). சுரதாவின் கவிதைகள் பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1989 ஆம் ஆண்டு இந்தியத் தொலைக்காட்சிகளில் தேசிய ஒலிபரப்பில் 'தமிழ்மொழியின் சிறந்த கவிஞர்' என்ற தலைப்பில் 40 நிமிடம் ஒலிபரப்பானது.

சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஒரு இலட்சம் உரூவா இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட நூல்களையும் 100 மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் வழங்கிய உவமைக்கவிஞர் சுரதா 20.06.2002 இல் இயற்கை எய்தினார். 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா' எனப் பாடிய பாவலர்,'அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு' என எழுதிய பாவரசர் என்றும் தமிழ் இலக்கிய உலகில் நினைவுகூரப்படுவார்.

29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

பகுத்தறிவும் தமிழ் உணர்வும் ததும்பும் படைப்புகள் சுரதாவின் படைப்புகள். தமிழ் இலக்கியச் செய்திகளை நினைவுகூர்ந்தும், நடப்பியில் செய்திகளை நினைவுகூர்ந்தும் சுரதா எழுதியுள்ள பாடல்கள் மிகச் சிறந்தனவாகும். கற்பனையும் உவமைகளும் சுரதாவின் படைப்புகளில் மிகுந்து கிடக்கும்.

மயில் பற்றி சுரதா பின்வருமாறு பாடியுள்ளார்.

உன்விழி நீலம்; உன்தோகை நீளம்;
உன்னுடல் மரகதம்; உச்சிக் கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்!
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!

என்று மயிலின் உருவத்தை நுண்மையாகக் குறிப்பிடும் கவிஞர் மயில் முகிலினைக் கண்டு ஆடுவதை,

ஈர முகிலினை ஏன் விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்று நீர் சுடுமென்றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?

என்று கேட்பது இவர்தம் கற்பனையாற்றலுக்குச் சான்றாகும்.

சுரதாவின் நூல்களுள் சில...

01.சுவரும் சுண்ணாம்பும்,1974
02.துறைமுகம்,1976
03.அமுதும் தேனும்,1983
04.தேன்மழை,1986
05.பாரதிதாசன் பரம்பரை(தொ.ஆ),1991
06.வினாக்களும் சுரதாவின் விடைகளும்

சுரதாவின் சுவரும் சுண்ணாம்பும்

வினாக்களுக்கு விடையாகச் சுரதாவின் நூல்...

பொன்னியில் வெளிவந்த கவிஞர்களை உலகிற்குக் காட்டிய நூல்...

உவமைக்கவிஞர் சுரதா இல்ல முகவரி:
56.அ,டாக்டர் இலட்சுமணசாமி சாலை,
கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை-600 078.