நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 அக்டோபர், 2008

அறிஞர் சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்)


இலண்டன் சிவகுருநாதப்பிள்ளை மனைவி ஞானபூபதி அம்மா அவர்களுடன்...

தமிழும் சைவமும் இரு கண்களெனக் கொண்ட குடும்பத்தில் தோன்றியவர் சிவகுருநாதப் பிள்ளை.சிவா பிள்ளை என அறிஞர் உலகால் அழைக்கப்படும் இவர் வாழ்வது என்னவோ இலண்டன் மாநகராக இருந்தாலும்,பணிபுரிவது கோல்டுசுமித் பல்கலைக்கழகமாக இருந்தாலும் நினைவுகள் என்னவோ சிற்றூர் வாழ்க்கையைச் சிந்தித்துக் கொண்டுள்ளது.பிள்ளை என்பது நாம் நினைப்பது போல் சாதிப்பட்டமாக நினைக்க வேண்டாம்.அவர்களின் குடும்பப் பெயராக நிலைத்துவிட்டது.

கணிப்பொறித்துறையில் தொடக்க காலம் முதல் கவனம் செலுத்தி வருபவர். கணிப்பொறி யைக் கற்று காசு பார்க்கும் சராசரி இளைஞர்களைப் போல் அல்லாமல் தம் மொழிக்கும், இனத்திற்கும் கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டும் என நினைத்தவர். அதனால்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியைக் கற்று அதன் வழியாகத் தமிழ் மொழியை அதில் புகுத்தித் தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தியவர்.அயலகச்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை.காய்ந்த மரத்தில் கட்டாரி வீசுவதற்குச் சமம்.

மொழியாலும் பழக்கவழக்கங்களாலும் அயல்நாடுகளில் பிரிந்து கிடக்கும் மழலைச் செல்வங்களுக்கு அவர்களின் முன்னோர்களின் மொழியை அறிமுகம் செய்வதும் அவர்களின் பண்பாட்டை நினைவூட்டுவதுமான பணியில் சிவப்பிள்ளை அவர்கள் ஈடுபட்டுள்ளார். இவர்தம் வாழ்க்கையை அறிவதன் வழியாகத் தமிழ்மொழி, தமிழ்க்கல்வி வரலாற்றின் சில பகுதிகள் வெளிச்சம்பெறும்.

அறிஞர் சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் 1942 மே 9 இல் பிறந்தவர்.பெற்றோர் சிவ.கணபதி பிள்ளை,நாகம்மா.இந்துக்கல்லூரியில் 19 அகவை வரை கல்வி பயின்றவர்.பிறகு நம்மூரில் உள்ள ஆசிரியர் பயிற்சி போல் இலங்கையில் உள்ள மாணவ ஆசிரியர் பயிற்சியை(teacher training) கோப்பாய்க் கிறித்தவக்கல்லூரியில் பயின்றவர். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றவர்.இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூற்றின் காரணமாகவும் செல்வச்செழிப்பின் காரணமாகவும் இலண்டனுக்கு 1967 இல் படிக்கச் சென்றார்.Diplomo in Mecanical Enginering பயின்றார். பட்டறிவு இல்லை என்பதால் அங்கும் சரியான பணி கிடைக்கவில்லை.தொழில்நுட்ப உதவியாளராகப் பகுதிநேரப் பணியில் ஈடுபட்டார்.

பகுதிநேரமாக ஆர்வம் காரணமாக கணிப்பொறி,தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார்.நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இவர் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராக(1977-1980) பணி புரிந்தார்.

1980 இல் கோல்டுசுமித் பல்கலைக்கழகத்தில் பணியேற்றார்.அந்நாளில் கணிப்பொறி என்பது இன்று நாம் பயன்படுத்தும் மடிக்கணினி போலவோ,மிசைக்கணினி போலவோ சிறிய அமைப்பில் இருக்காது.அது பெரிய அளவில் 'மெசின்'போல் இருக்கும். சில நிறுவனங்களின் கணிப்பொறி என்பது ஒரு கட்டடத்தில் இருக்கும் பல பொறிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.அதன்பிறகே பல வடிவ வளர்ச்சியைக் கணிப்பொறி கண்டுள்ளது.1947 இல் கணிப்பொறி சில குழுமங்களில்தான் இருந்துள்ளது.

1980 இல் கணிப்பொறி இவர் பணிபுரிந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகம் ஆனது.இவர் கணிப்பொறி பயிற்றுவிக்கும் பணியில் இருந்தார்.1985 இல் ஆசிரியர்களுக்குக் கணிப்பொறி யைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

1984 முதல் இலண்டனில் தாய்மொழியைக் கற்பிக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. எட்டு மொழிக்கு இவ்வாய்ப்பு அமைந்தது.தமிழ் கற்பதற்குப் பலரும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தொடக்கப்பள்ளிகளில் தமிழைக்கணிப்பொறி வழியாகக் கற்பிக்கும் விழிப்புணர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது.1995 இல் இம்முயற்சி தொடங்கப்பட்டது.

1997-98 இந்தியாவில் உத்தமம் என்ற அமைப்பு தமிழைப் பயிற்றுவிக்கும் வழிமுறைகளை உரைத்தது.

இலண்டனில் 2003 இல் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.பல இனத்தவர்களும் தங்களின் சமூக மொழிக்கு முதன்மை வேண்டும் என வாதிட்டனர். இங்கிலாந்தில் 310 மொழிகள் பேசப் படுகின்றன.25 மொழிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். இம்மொழி களுள் 12 மொழிகள் தேர்ந்தெடுக்கப்பெற்று, மொழியை அதன் கட்டமைப்பு அடிப்படையில் இவ்வாறுதான் கற்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கற்பிக்க முயன்றனர்.

தமிழ்மொழியை யாரும் விரும்பாததால் தமிழ் கற்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. சிவப்பிள்ளை அவர்களின் நண்பர் நிறுவனம் ஒன்றில் 25 மாணவர்கள் தமிழ் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு தமிழ் கற்பதற்கு உரிய வாய்ப்பு இங்கிலாந்தில் இவரால் பெறப்பட்டது.இன்று 75 மாணவர்கள் தமிழ் கற்கின்றனர்.

தமிழ் மாணவர்கள் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்கப் பல ஆய்வுகளைச் செய்து குறுவட்டுகளை,நூல்களைச் சிவகுருநாதப் பிள்ளை அவர்கள் உருவாக்கியுள்ளார்.காண்பொளி(வீடியோ) வழியாகத் தமிழ் கற்பிப்பது என்ற அடிப்படையில் இவர் பல ஆய்வுளைச் செய்து வருகின்றார். இவர்தம் தமிழ்க் கல்விப் பணியைப் பாராட்டி இங்கிலாந்தில் இவருக்கு EAL என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. மின் வெண்பலகை வழி கற்பிக்கும் INDIRECTIVE WHITE BOARD முறையைக் கண்டுபிடித்துள்ளார்.


அயலகத்துத் தமிழ்க்குழந்தைகளுக்கான அரியநூல்

சிவகுருநாதப்பிள்ளை அவர்கள் 1975 இல் ஞானபூபதி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்.மூன்று பெண்மக்கள் இவர்களுக்கு இலண்டனில் உள்ளனர்.இவர்தம் துணைவியார் இலண்டனில் கணக்காளராகப் பணிபுரிகின்றார்.

இளம் வயதில் குறும்புக்காரச் சிறுவனாக இருந்த சிவப்பிள்ளை சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் இலங்கைக்கு வந்ததும் அவரிடம் யோகா முதலிய கலைகளைக் கற்றுக்கொண்டார். இச் சச்சிதானந்தர் நடிகர் இரசினிகாந்து அவர்களின் குரு என்பதும் பாபா படம் முதல்நாள் திரையிட்டபொழுது முதற்காட்சி காண வந்து இறந்தவர் என்பதும் நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும்.1953 இல் சச்சிதானந்தர் மேல் ஏற்பட்ட ஈடுபாடு இன்றுவரை குறையாமல் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவப்பிள்ளையின் குடும்பம் இலங்கையில் மிகச்சிறந்த செல்வச்செழிப்பிலான குடும்பம். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். எனவே இலண்டன் சென்று படிக்கும் வாய்ப்பு அமைந்தது.இவர்தம் பெரியப்பா குடும்ப மரபுகளை மீறாதவர்.இவர்தம் முன்னோர்கள் கட்டைத்திராய் என்ற ஊரில் கட்டிய முத்துமாரியம்மன் கோயில் புகழ்பெற்றது.தங்கைகள் இக்கோயிலையும் நில புலங்களையும் பார்த்துக்கொள்கின்றனர்.

சிவப்பிள்ளை இனச்சிக்கல் காரணமாக இலங்கைக்ககுச் செல்ல முடியாத நிலை.இவரின் அம்மா இறந்த ஒரு மணி நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டார் இவர்களை அடக்கம் செய்யச் செல்லமுடியத நிலை சிவப்பிள்ளைக்கு ஏற்பட்டது.எனவே இவரின் உடன் பிறந்த தங்கைகள் இவரின் பெற்றோரை அடக்கம் செய்தனர்.

சிவப்பிள்ளை அவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம்,சிங்களம்,சமற்கிருதம் உள்ளிட்ட மொழிகள் தெரியும்.1990 இல் பெரும் பொருள் வளத்துடன் இருந்த சிவப்பிள்ளை அவர்கள் நண்பர்களுக்கு உதவச்சென்று மிகப்பெரும் பொருள் இழப்பிற்கு ஆளானார். இலண்டனில் இருந்த பல வீடுகளை விற்றார்.விடுமுறை நாட்களில் மகிழ்வுந்து ஓட்டியும்,பிற பணிகளைச் செய்தும் இழந்த செல்வத்தை மீட்டார்.மரக்கறி உணவுகளை விரும்பி உண்ணும் சிவப்பிள்ளை அவர்கள் சிவ மதத்தில் மிகுந்த நம்பிக்கைகொண்டவர்.

பல நாடுகளுக்குச் சென்று தமிழ்க்கல்வி பயிற்றுவிப்பது தொடர்பில் பல கட்டுரைகளைக் கருத்தரங்குகளுக்கு வழங்கியவர்.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வந்துசெல்லும் சிவப்பிள்ளைக் குத் தமிழகக் கோயில்களைக் கண்டு வழிபடுவது பிடித்தமான செயலாகும்.சிவப்பிள்ளை இலண்டன் மாநகரில் இருந்தாலும் தம் தாய்நாடான இலங்கைக்குச் சென்று தம் வயல் வரப்புகளில் காலார நடந்து, சேற்றிலும் ஆற்றிலும் புரளவேண்டும் என்பதையே விரும்புகிறார். தமிழ்க்கல்வி வரலாற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளதால் என்றும் நினைவுகூரப்படுவார்.

சிவாப்பிள்ளை அவர்களின் மின்னஞ்சல் முகவரி:
siva@gold.ac.uk


நனி நன்றி : தமிழ் ஓசை,களஞ்சியம் 05.10.2008,சென்னை,தமிழ்நாடு

1 கருத்து:

S.Lankeswaran சொன்னது…

நல்ல பதிவு. எனக்கும் திரு.சிவகுருநாதப்பிள்ளை அவர்களை வன்னியில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு அரசாங்க அதிகாரிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த போது அவர் தமிழ் மூலம் இனையத்தளம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார் எமது நிலையத்திற்கு. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றிகள்.