நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 7 அக்டோபர், 2008

நான் மண்தளத்திலிருந்து விண்தளத்திற்கு வந்த கதை...

நான் கல்லூரிப்படிப்பில் ஆர்வமுடன் படித்துக் கொண்டிருந்த பொழுது(1990 அளவில்) எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஏரிக்கரைகளிலும்,மர நிழ்களிலும்,சுடுகாட்டுக்கு அருகிலும், பொன்னேரியிலும் நடந்தும்,கிடந்தும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.இரவு நேரங்களில் சாமியார் வீட்டுக் கொட்டகையிலும்,சிண்டுத் தாத்தா கொல்லையிலுமாகப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

மண்ணெண்ணெய் விளக்கொளியில் படிப்பதை நிலவு வெளிச்சத்தில் மனப்பாடம் செய்வது வழக்கம்.வாய்விட்டுப் படிப்பது என் இயல்பு.படிக்கும்பொழுது சோர்வு ஏற்பட்டால் சிண்டுத் தாத்தாவிடம் பேச்சுக் கொடுப்பேன். சிண்டுத் தாத்தா என்ற பெயருக்குக் காரணம் அவர் இளமைக்காலத்தில் பெண்களுக்கு இணையாக நீண்ட தலைமுடியுடன் இருந்தவர்.பின்னாளில் அவர் நம்மைப் போல் முடிவெட்டிக் கொண்டாலும் சிண்டுத் தாத்தா என்ற பெயர் மறையவில்லை.65 வயதுவரை அவருக்குப் பிள்ளை இல்லை. அதன்பிறகு தாத்தாவுக்கு ஆண்குழந்தை பிறந்தான்.அவன் எங்களைவிட வயது குறைந்து இருந்தாலும் நாங்கள் அவரைச் சித்தப்பா என்றே அழைப்போம்.அவருக்கு அண்மையில்தான் திருமணம் நடந்தது.

சிண்டுத் தாத்தாவின் நிலம் ஒரு காணி அளவு இருக்கும்.அதில் உலகில் உள்ள அனைத்துச் செடி கொடிகள்,காய் கனிகளும் இருக்கும்.அவர் தோட்டத்திற்குச் சென்றால் எந்த நாளிலும் ஏதேனும் ஒரு பொருள் திண்பதற்கு உரியதாக இருக்கும்.ஒரு மண் கிணறு உண்டு. அருகில் பொன்னேரி இருந்ததால் தண்ணீர் அம் மண்கேணியில் இருக்கும். வெங்காயம், வெள்ளரி, வெண்டைக் காய்,கொய்யா,மாதுளை,மாம்பழம்,வாழை, பலா,எலுமிச்சை, சர்க்கரைவல்லிக் கிழங்கு உள்ளிட்ட கறிகாய்களும்,பழங்களும் இருப்பதுடன் தேக்கு,பனை, பூவரசு,முருங்கை, முந்திரி,வேம்பு உள்ளிட்ட மர வகைகளும் இருக்கும்.பனங்கொட்டகையில் நல்ல காசறக்காய் நார் கயிறு கட்டில் இருக்கும்.

தாத்தா கடும் உழைப்பாளி.85 வயதிருக்கும் இந்த நாளிலும் உழைக்கக் கூடியவர்.அவர் நிலத்திற்கு அவர்தான் இன்றும் உழைப்பாளியாக உள்ளார்.ஆள்வைத்துக் கொண்டு அவர் வேலை செய்ததை இன்றுவரை நான் பார்த்தது இல்லை.ஏற்றம் ஒடுவதிலிருந்து அனைத்து வேலைகளும் அவருக்கு அத்துப்படி.அவரின் நிலத்தைத் தவிர அவருக்கு வேறு உலகம் இருப்பது தெரியாது.காலையில் எழுந்து எதையாவது வெட்டுவதும் கொத்துவதும், விதைப்பதும் அறுப்பதுமாக இருப்பார்.காலையிலும் இரவிலும் வீட்டிற்குச் சென்று சில நாளில் உணவு முடித்துத் திரும்புவார்.சில நாள் உள்கோட்டைக்குச் சென்று வெற்றிலைச் சீவல் வாங்கவும், மாம்பழங்களை,பலாச்சுளைகளை விற்கவும் செல்வார்.யாருக்கும் ஒரு பொருளை வழங்க மனம் ஒப்பாதவர்.எனவே அவர்மேல் அனைவருக்கும் வெறுப்பே ஊரில் இருந்தது.

பல இளவட்டடங்களுக்கு அவரின் தோட்டப்பொருள்களில் ஒரு கண் இருந்தது.அவரின் அரசாங்க எல்லையில் யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இதில் கடுப்புற்ற சிலர் அவரின் மாங்காயை அறுத்துச்செல்வர்.பலாக்காயின் கொத்துப் பிஞ்சுகளைப் பலர் அறுத்துச் சென்றுவிடுவர்.பலாக்காயை,பழத்தை அறுத்துச் செல்வதிலும் சிலர் குறியாக இருப்பர். சிலர் பனங்காய் வெட்டுவர்.சிலர் தாத்தாவின் தேக்குமரத்தைத் துண்டாடிக்கொண்டும் செல்வர். எல்லா வகையான அழிம்புகளுக்கு இடையிலும் தாத்தாவின் நிலம் அமுதசுரபியாக வேண்டிய அளவு கொடுத்துக்கொண்டே இருந்தது.

தாத்தாவுக்கு நான் அவர் தோட்டத்திற்குப் படிக்கச் சென்றதில் தொடக்கத்தில் விருப்பம் இருந்ததாகச் சொல்லிவிட முடியாது.ஒருவாறு தாத்தாவின் பொருளுக்குக் காவலாக இருக்கமேட்டேன் என்று நினைத்தாலும் தாத்தா அவர் பொருளை யான் கவரமாட்டேன் என நம்பப் பல மாதங்கள் ஆயின.

இப்பொழுதெல்லாம் தாத்தா என் வருகையை ஆர்வமாக எதிர்பார்க்கத் தொடங்கினார். சனி, ஞாயிறு கிழமைகளில் யான் தாத்தாவின் தோப்பிலேயே இருந்தேன். இராவணகாவியம் என்னும் நூல் பாடப்பகுதியாக எனக்கு இருந்தது. அதனைப் படித்தேன். அந்தப் புத்தகத்தைத் தடவிப் பார்த்தார் தாத்தா. பின்பொருநாள் கம்பராமாயணம் படித்தேன்.அந்தப் புத்தகத்தையும் தடவிப் பார்த்தார்.இது என்ன புத்தகம்? என்றார். கம்பராமாயணம் என்றேன்.

திடீரென அவர் மயில் இராவணன்கதை கிடைக்குமா? என்றார்.அதுவரை நான் அறியாத நூல் அது.நூலகத்தில் தேடிப் பார்க்கிறேன்.கிடைத்தால் எடுத்து வருகிறேன்.என்றேன்.தாத்தாவுக்காக மயில்இராவணன் கதை தேடலானேன்.கிடைத்தபாடில்லை.

விவேக சிந்தாமணியிலிருந்து பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்லி அதற்கு விரிவுரையும் தாத்தா சொன்னார்.மிகச் சிறந்த கற்பனைகளைக் கண்டு வியந்து, விவேகசிந்தாமணியும் என் தேடல் நூலானது. தாத்தாவிடம் கேட்டு விவேக சிந்தாமணியின் பல பாடல்கள் மனப்பாடமாயின.

அப்பொழுது தாத்தா கொடுக்கூர் ஆறுமுகம் சிந்து என்னும் நூல் பற்றியும் அதன் பாடல்களில் சில பாடல் அடிகளையும் பாடிக் காட்டுவார்.அவற்றைக் கேட்டு மகிழ்வேன்.அப்பொழுது கும்பகோணம் குருசாமிதாசு பற்றி பல செய்திகளைச் சொன்னார்.அந்நாளில் சிந்துப்பாடல்கள் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கைத் தாத்தா வழியாக அறிந்த செய்திகள் உணர்த்தின.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிந்துப் பாடல்கள் வழியாக அக்கால கொலை,கொள்ளை, தீப்பற்றி எறிந்த நிகழ்வுகள்,இரயில் விபத்து, வெள்ளச் சம்பவங்கள், வறுமை நிகழ்வுகள் மக்கள் விரும்பும் செய்தியாகக் கொண்டு சேர்க்கப்பட்டன.

கும்பகோணம் குருசாமிதாசு உள்ளிட்டவர்கள் எழுதிய சில சிந்து நூல்களின் கிழிந்த ஏடுகள் சில கிடைத்தன. அவற்றையெல்லாம் உற்று நோக்கி இந்த ஏடுகள் இன்ன நூல் எனத் தாத்தாவிடம் படித்துக்காட்டுவேன்.பின்புதான் தாத்தாவுக்குப் படிக்கவே தெரியாது என அறிந்துகொண்டேன்.எழுதப் படிக்கத் தெரியாமலேயே அவர் கற்ற நூல்கள் அவருக்கு நல்ல அறிவைத் தந்தது.குடத்துள் இட்ட விளக்காக இருந்த தாத்தாவின் சிறப்பு எனக்குத் தெரிய அவரை மிக உயர்வாக நினைக்கத் தொடங்கினேன்.இன்றுவரை என் ஊர் மக்களுக்கு அவர் அருமை தெரியாது.

(ஏன்? என் பண்பே என் ஊர் மக்களுக்குத் தெரியாது.என் அப்பா இறந்த பிறகு ஊரில் உள்ள அம்மாவையும் நில புலங்களையும் பார்க்க ஆர்வமாகச் செல்வேன்.எங்கள் மரத்தைச் சிலர் வெட்டிச் சென்றிருப்பார்கள்.வயல் வரப்புகளைச் சிலர் வெட்டிப் புது வரப்பு அமைத்திருப் பார்கள்.புஞ்சை நிலங்களில் பொழி புரட்டி ஓட்டியிருப்பார்கள்.அவர்களின் கீழறிவு நினைத்து வெட்குவதைத் தவிர வேறு வழியில்லை.

அன்றுமுதல் வயதானவர்களைப் பார்த்தால் கும்பகோணம் குருசாமிதாசு அவர்களைப் பற்றி வினவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.கோடைவிடுமுறைக்கு எங்கள் தாய் மாமா இல்லத்திற்குச்(பெரியநற்குணம்,புவனகிரி வட்டம்,கடலூர் மாவட்டம்)சென்றிருந்தேன்.

அப்பொழுது அங்கு உள்ளவர்களிடம் கொலைச் சிந்து பற்றி வினவியபொழுது அருகில் உள்ள எறும்பூரில் வாழ்ந்த சன்னாசிதாசு என்பவர் கொலைச் சிந்து கட்டிப்பாடுவதில் வல்லவர் எனவும் அவர் இப்பொழுது மறைந்துவிட்டார் எனவும் அறிந்தேன்.அவருடன் இணைந்து பின்பாட்டுப் பாடிய சோமு என்பவர் குளக்குடி என்னும் ஊரில் வாழ்வதாகவும் கேள்விப் பட்டேன். பெரியநற்குணத்தில் இருக்கும் சிலரும் பாடல்கள் பாடுவதில் வல்லவர்கள் என்பதை அறிந்தேன்.அவர்களைப் பற்றிய நினைவுகள் உந்த என் தேடல்பணி தொடங்கியது.

நான் மாமா இல்லத்திற்குச் சென்றுள்ளது கோடைவிடுமுறை விருந்துக்கு.வெளியே அனுப்ப எங்கள் அத்தைக்கு விருப்பம் இல்லை.அந்த ஊருக்குச் சென்ற நான் நல்ல முறையில் ஊர் திரும்புவது அதுநாள் வரை இல்லை.காலை ஒடித்துக்கொள்வது,மிதிவண்டியில் காலைவிட்டு இடதுகால் தையல்போட்டு இரு குடும்பங்களுக்கு இடையில் பல ஆண்டு குடும்பச் சண்டை ஏற்பட்டது,வலது கையின் சுட்டு விரலை தண்ணீர் அடிக்கும் குழாயில் இட்டுப் பாதிவிரல் குழாயில் போனது என அந்த ஊருக்கும் எனக்கும் நல்லுறவு இல்லாமல் போனது.அதனால் எங்கள் அத்தைக்குத் தெரியாமல் என் ஆய்வு முயற்சிகள் கனியத் தொடங்கின.

பெரியநற்குணத்தில் இருந்த பஞ்சாட்சரம் என்னும் தாழ்த்தப்பட வகுப்பு அன்பரை இரவுடன் இரவாக எங்கள் மாமாவின் மோட்டார் கொட்டகைக்கு அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் நாடாப் பதிவுப்பெட்டியில்(அது பழைய பெட்டி.எனக்கு பதிவு பற்றிய எந்த அறிவும் இல்லாத நிலையில்) பாடலைப்பதிவு செய்ய நினைத்தோம் பஞ்சாட்சரம் யாராவது டேப்பு அடித்தால்தான் பாட முடியும் என்றார். என்ன செய்வது?.டேப்புக்கு எங்கே போவது?(டேப்பு என்பது ஒருமுகப்பறை என்னும் இசைக்கருவி)

வயல்களுக்கு மருந்து இரைக்க வைத்திருந்த தகரப்பெட்டியைக் கவிழ்த்துப்போட்டுப் பஞ்சாட்சரமே அதனைத் தட்டிக்கொண்டு பாடத் தொடங்கினார்.நள்ளிரவில் வயல்வெளியில் பதிவு செய்யப்பெற்ற அந்நாடாவை இன்று கேட்டாலும் தவளையின் இரைச்சல் கேட்கும். கட்டைக்குரலில் பஞ்சாட்சரம் பாடினார்.திரு சந்திரகாசன்(65), திரு.சக்கரவர்த்தி(22) எனக்கு உதவினர்.பஞ்சாட்சரம் பாடிய பாடல்களை அவர் கைப்பட எழுதி வாங்கிக் கொண்டேன். பின்னாளில் பல அச்சிட்ட நூல்களில் அவர் பாடிய அப்பாடலடிகள் கண்டேன். சிந்து நூல்கள் என்றால் என்ன? எவ்வாறு பாடப்பட்டுள்ளது என்ற அறிமுகம் எனக்குப் பஞ்சாட்சரத்தின் பாடல்பதிவு உணர்த்தியது.

மறுநாள் நண்பர் திரு.சக்கரவர்த்தி அவர்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு எறும்பூரில் இருந்த சன்னாசிதாசு அவர்களின் வீட்டை ஊர்ப் பெரியவர்களிடம் வினவி அறிந்து சென்றோம். சன்னாசிதாசு காலமாகிப் பல ஆண்டுகள் ஆனதை அவர் மகன் சொன்னார். சன்னாசிதாசு பாடிய பாடல் நூல்கள் இருப்பின் தந்து உதவுமாறு வேண்டினோம்.ஒரு நூல்கூட இல்லை என்றும் அவர் குழுவினருடன் எடுத்த ஒரு படம் கண்ணாடி இட்டு மாட்டப்பட்டிருப் பதையும் அவர் மகன் காட்டினார்.அப் படத்தைப் படி எடுக்கும் ஒளியச்சு வசதி அந்நாளில் அங்கு இல்லை.

குளக்குடி சோமு அவர்கள் சன்னாசிதாசுடன் இணைந்து பாடியவர் எனவும் அவரைக் கண்டால் சில தகவல்கள் கிடைக்கும் எனவும் சன்னாசிதாசு மகன் கூறினார்.வெறுங்கையுடன் எங்கள் அத்தை வீட்டுக்கு மீண்டும் சென்று எதுவும் நடைபெறாததுபோல் இருந்தோம்.இரவு எனக்குத் தூக்கம் இல்லை.நண்பர் சக்கரவர்த்தி அவர்களின் துணையுடன் மறுநாள் குளக்குடி செல்வது என்றும் சோமுவைக் காண்பது என்றும் முடிவுசெய்தோம்.

சின்ன நற்குணம்,எறும்பூர்,சேத்தியாத்தோப்பு குறுக்குச்சாலை,பின்னலூர், கரைமேடு,மருதூர் நுழைவுவாயில் வழியாக எங்கள் மிதிவண்டி குளக்குடி நோக்கிச் சென்றது.கடும் கோடை வெயில்.அக்கினி நட்சத்திரம்.கண்ணைப் பூக்கச் செய்யும்படியான வெயில்.வெயிற்காலம் என்றால் எனக்கு ஏற்படும் வேனற்கட்டி இந்த முறை உட்காரமுடியாதபடி செய்திருந்தது.அந்த நிலையில் மிதிவண்டியில் அமர்ந்திருந்தேன்.நண்பர் சக்கரவர்த்தி பெருஞ்சுமையாக நினைத்து என்னை மிதிக்கும்படியாகச் சாலை அமைப்பு இருந்தது.

ஒருவழியாகப் பன்னிரண்டு மணியிருக்கும்.குளக்குடி சோமு வீட்டில் எங்கள் மிதிவண்டி நின்றது.அப்பொழுதுதான் சோமு ஆட்டுக்குட்டிகளுக்குப் புல் அறுத்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார்.அவரை அடையாளம் கண்டுகொண்டு அவர்க்கு வந்த விவரம் சொன்னோம். பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்.சில வாரங்களுக்கு முன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து ஒருவர் வந்து தகவல் பெற்றுச் சென்றதாகச் சொன்னார். ஆய்வாளர்கள் அவரைத்தேடி வருவதால் அவருக்கு ஊரில் இப்பொழுது செல்வாக்கு மிக ஆரம்பித்தது.அவர் துணி வெளுத்து குடி,படைகளுக்குக் கொடுத்து வந்ததால் அவர் ஓய்வுநேரங்களில் ஆடு மாடுகளைக் கவனித்து வந்தார்.

எங்களுக்கு நீராகாரம் மட்டும் அவரால் கொடுக்கமுடிந்தது.அதனை அமிழ்தாக உண்டோம். நாங்கள் வந்த விவரம் சொன்னோம். கோவையிலிருந்து வந்த அன்பர் சில நூல்களை எடுத்துச் சென்றதாக அறிந்தோம்.குளக்குடி சோமுவைப் பாடச்செய்யவும் ஒரு படம் எடுக்க விரும்புவதையும் சொல்லி அவரை எங்கள் விருப்பத்திற்கு இசைய வைத்தோம்.

திரு.சோமு அவர்கள் முன்பு எங்கள் மாமா ஊரில் துணி வெளுக்கும் பணியில் இருந்ததால் எங்கள் மாமா ஊரில் அனைவருக்கும் அவர் செல்லப் பிள்ளையாக இருந்தார்.எங்கள் மாமா ஊருக்கு வரும்படியாகவும்,போகும் வழியில் சேத்தியாத்தோப்பில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறினோம்.சோமு ஆடு மாடுகளைத் தன் மனைவி மக்களைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லி எங்களுடன் புறப்பட்டார்.இரண்டு மிதிவண்டிகள் எதிர்க்காற்றில் அசைந்தாடி சென்றன.பகல் இரண்டு மணியளவில் குளக்குடியில்(அருட்பிரகாச வள்ளலார் பிறந்த மருதூருக்கு அருகில் உள்ளது) புறப்பட்டு சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டோம்.

சேத்தியாத்தோப்பில் ஒரு புகைப்படக் கடையில் படம் எடுத்துக்கொண்டு மாலை பெரியநற்குணம் வந்து சேர்ந்தோம்.தேநீர் மட்டும் குடித்த நினைவு.எனக்குத் தேநீர் குடிப்பது பழக்கமில்லை.எனவே கண்ணிரண்டும் சுழலப் பசி மயக்கத்துடன் பெரியநற்குணம் திரும்பினோம்.

சோமுவின் வருகை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குப் பணி செய்த பணியாளன் ஒருவனைக் கண்டதும் அம்மக்கள் பாசத்தால் நெகிழ்ந்தனர்.இதுவரை வராத சோமுவை நம் அசோதை (என் அன்னையார் பெயர்)மகன் அழைத்து வந்துவிட்டான் என ஊரே பெருமையாகப் பேசியது.

என் ஆய்வு முயற்சிக்குத் தேவையான நாடாப்பெட்டியோ,புகைப்படக் கருவியோ,முறையான வழிகாட்டலோ இல்லாததால் பலவற்றை முறையாகத் தொகுக்க முடியாமல் போனது.ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமா?.

இப்பொழுது பாடல்களை எங்கு அமர்ந்து பதிவு செய்வது?யாருடைய நாடாப்பெட்டியில் பதிவது?யார் பின்பாட்டு பாடுவது?யார் டேப் அடிப்பது?யார் முதன்மைப் பாடல் பாடுவது?என்ற வினா எழுந்தது.

காரணம் சோமுவின் பாட்டைக் கேட்க ஊரே திரண்டிருந்தது.மட்ட ரகமான ஒரு பதிவுப்பெட்டியில் பதியும்படிதான் எங்களுக்குப் பதிவுப்பெட்டி கிடைத்தது.பெரியநற்குணம் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் அமர்ந்து சாமி அழைத்து சோமு பாடியதும் கூட்டத்தினர் சிறிதுநேரம் கட்டுண்டனர்.இயற்கையாகவே பாட நம் சோமு விரும்பியதால் கோயிலில் எங்கள் பதிவு நடந்தது.கூட்டம் எங்களுக்கு இடையூறாக இருந்தது.பின்னர் வேறு இடத்திற்கு மாறினோம்.

இப்பொழுது பின்பாட்டுக்குச் சந்திரகாசன் அமைந்தார்.வேறு அன்பரும் பின்பாட்டுக்குத் தோதாக அமைந்தனர்.குளக்குடி சோமு அவர்கள் டேப்பு அடித்துக்கொண்டு பாடத் தொடங்கினார். பாடத் தொடங்கியவருக்கு நீண்டநாள் இடைவெளியில் பாடுவதால் தொண்டை கட்டியது.குரல் வர மறுக்கிறது.அருகிலிருந்தவர்கள் சாராயம் குடித்தால் நிலை சரியாகும் என்றனர்.

அருகில் இருந்த கந்தசாமி மாமாவிடம் பணம் கொடுத்து சாரயாம் வாங்கிவரச் சொன்னேன்.நீண்ட நேரம் ஆகியும் அவர் வந்தபாடில்லை.பின்பு தெரிந்தது.அவர் வாங்கி வருவதற்குப் பதிலாக வாங்கி ஊற்றிக்கொண்டு அங்கேயே கிடந்துவிட்டார்.வேறொருவர் வழியாக பிறகு வாங்கிவந்து சோமுவிற்கு வழங்கினோம்.

உள்ளே சாராயம் சென்றதும் பாடல் தானே வர ஆரம்பித்தது. மிகச்சிறப்பாகப் பாடினார்

"மேல மலையாளம் போனவளே" என்று சோமு பாடியதும்

பின்பாட்டுகாரர் எதிர்பாட்டுமுறையில்,

"தாயே"

என அழைத்தார்.நான் உட்பட அனைவரும் பயந்து நடுங்கினோம்.

சோமு உள்ளே சென்ற ஊக்க மருந்தால் ஆர்வம் மேலிட்டு பெருங் குரலெடுத்துப் பாடினார். நடு இரவுவரை பாடல் பதிவுசெய்யப்பெற்றது.விடியற்காலம் அங்குமிங்குமாக உறங்கியபடி கிடந்தோம்.சோமுவுக்குப் போதை தெளிந்து காலை 11 மணியளவில் எழுந்தார்.அவரின் டேப்பை நான் வாசித்துப்பழக விரும்பினேன்.சோமு சிலநாள் இரவலாக எனக்கு அதனைத் தந்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டார்.

அத்தை வீட்டில் அந்த டேப்பை வைத்துவிட்டு நானும் ஊருக்குப் புறப்பட்டேன்.எங்கள் ஊருக்கு எடுத்துச் சென்றால் எங்கள் அப்பா என்னை வீட்டில் சேர்க்கவே மாட்டார். அத்தை வீட்டுப் பீரோவில் பலநாள் இருந்தது அந்த டேப்பு.மாட்டுத் தோலால் ஆனதால் சிலநாளில் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.எங்கள் அத்தை என் செயலுக்கு மிக வருந்தினார்கள். சோமுவுக்கு ஆள் அனுப்பி வந்து எடுத்துப் போகச் சொல்லிவிட்டார்கள்.

அவர்களுக்கு நாற்றமாகப் போன அந்த இசைக்கருவி எனக்குப் பதினெட்டு ஆண்டுகளாகக் காதுக்குள் தேன் ஊற்றிக்கொண்டே உள்ளது.சோமுவை மீண்டும் சந்திக்க முடியாமல் போனாலும் அவர் இசை என்னுடன் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை: