'உரைவேந்தர்' எனத் தமிழறிஞர்களால் போற்றப்படும் ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள ஔவையார்குப்பம் என்ற ஊரில் பிறந்தவர் (05.09.1902). இவர்தம் பெற்றோர் சுந்தரம் பிள்ளை-சந்திரமதி அம்மையார். உள்ளூரில் தொடக்கக் கல்வியைக் கற்ற துரைசாமியார், திண்டிவனத்தில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு உயர்நிலைப் பள்ளியில் (பின்னர் வால்டர்சு கடர் உயர்நிலைப்பள்ளி என அழைக்கப் பெற்றது) பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பின்னர் வேலூர் ஊரிசு கல்லூரியில் இடை நிலை (இண்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை.
ஊதியத்தின் பொருட்டுப் பணிக்குச் செல்ல நினைத்தார். உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitary Inspector) பணியில் அமர்ந்தார். அப்பணியில் நீடிக்காமல் தமிழ்ப் பணிக்கு ஆயத்தமானார்.
உரைவேந்தரின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடையக் குடும்பம். தந்தையார் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர். எனவே உரை வேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. அ.ஆ. உயர்நிலைப் பள்ளியில் பயின்றகாலை தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் தமிழறிவு ஊட்டியவர். அவர்களிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியை வாங்கி உரைவேந்தர் ஆராயும் திறன்பெற்றிருந்தார்.
தமிழ் ஆர்வம் கொண்ட உரைவேந்தர் அவர்கள் முறையாகத் தமிழ் கற்று தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிய மனம் விரும்பினார். அதனால் தாம் புரிந்த அலுவலை விடுத்துத் தம் 22 ஆம் அகவையில் தஞ்சையை அடுத்த கரந்தைப் புலவர் கல்லூரி அடைந்தார். கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நம் உரை வேந்தரின் ஆற்றலறிந்து தமிழ்ச்சங்கப் பள்ளியில் தமிழாசிரியர் பணி தந்தார். பள்ளிப் பணி புரிந்த வண்ணம் தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.
கரந்தைக் கல்லூரியில் பணிபுரிந்த கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, நா.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் தமிழ்ப்புலமையறிந்த உரைவேந்தர் அவர்கள் வழியாகத் தமிழறவு பெற நினைத்தார். 1925 முதல் 1928 வரை கரந்தையில் உரைவேந்தர் தங்கியிருந்தார். அறிஞர் பெருமக்களுடன் உரையாடித் தமிழறிவு பெற்றார். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் தேர்வு எழுதி வெற்றிபெற்றார். பிற்காலத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிபுரிவதற்கும், பல்வேறு நூல்களுக்கு உரை வரைவதற்கும் அடிப்படையாக அமைந்தது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் தொடர்பு எனில் மிகையன்று.
உரைவேந்தர் அவர்களுக்கு இல்லறத் துணையாக வாய்த்தவர் கோட்டுப்பாக்கம் (காவேரிப் பாக்கம்) பிறந்த உலோகாம்பாள் ஆவார். இல்லறம் நல்லறமாக அமைய இவர்களுக்குப் பதினொரு மக்கட் செல்வங்கள் வாய்த்தனர். இருவர் பிறந்த சில நாட்களில் மறைந்தனர். எஞ்சிய ஒன்பது மக்கட் செல்வங்களுள் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் நாடறிந்த அறிஞராக விளங்குபவர். மருத்துவர் மெய்கண்டான் அவர்கள் புகழ்பெற்ற மருத்துவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
துரைசாமியார் அவர்கள் தமிழ்மொழியில் நல்ல புலமை அமையப் பெற்றதுடன் ஆங்கிலத் திலும் நல்ல புலமையுடையவர். வடமொழியும் அறிந்தவர். உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல நிலைகளில் பணிபுரிந்து பல நூறு மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்கியவர். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியவர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகளை ஆராய்ந்து தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு,சைவசித்தாந்தம் உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியவர்.
கரந்தையைவிட்டு வெளியேறிய உரைவேந்தர் அவர்கள் 1929 முதல் 1941 வரை வடார்க்காடு மாவட்டத்தில் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தார். காவிரிப்பாக்கம்-காரை, திருவத்திபுரம் (செய்யாறு), போளூர், செங்கம் உள்ளிட்ட ஊர்களில் பணிபுரிந்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கியதால் அக்கால ஆட்சியாளர்களால் அடிக்கடி உரைவேந்தர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.
இவரிடம் தமிழ் கற்றவர்களுள் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் (செய்யாறு) குறிப்பிடத் தக்கவர். இவர் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் வல்லவர். இராபர்ட்டு கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் உள்ளிட்ட ஆங்கில நூல்களைத் தமிழிற்குப் பெயர்த்து வழங்கியவர். மேலும் தமிழக அரசின் சட்டப்பேரவைத் தலைவராகவும் இவர் பணியாற்றியவர்.
உரைவேந்தர் பள்ளியில் பணியாற்றினாலும் தமிழ்ப்பொழில் இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார். செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட இதழ்களிலும் பின்னாளில் எழுதியவர். 1939 இல் உரைவேந்தர் போளூரில் பணிபுரிந்தபொழுது மாவட்டக் கல்வியதிகாரி ச.சச்சிதானந்தம் பிள்ளையின் வழியாக உரைவேந்தரின் பெருமையைக் கழக ஆட்சியாளர் வ.சுப்பையாப் பிள்ளை அறிந்து அவருடன் தொடர்புகொண்டார். அதன் பிறகு சீவக சிந்தாமணிச் சுருக்கம் உள்ளிட்ட நூல்கள் கழகம் வழியாக வெளிவரத் தொடங்கின.
உரைவேந்தர் அவர்கள் தமக்கு உரிய ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற பணி வாய்ப்பு அமையாதா என ஏங்கிய நிலையில் 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. அங்குப் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்களின் தொடர்பால் மகிழ்ந்தார். அம் மொழி இலக்கியங்கள், வரலாறு அறிமுகம் ஆயின.
நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் மணிமேகலை நூலுக்கு உரைவரைந்தபொழுது இறுதிப் பகுதிகளுக்கு உரைவரைந்து முடிக்கும் முன் இயற்கை எய்தினார். இறுதி நான்கு காதைகளுக்கு உரைவேந்தர் அவர்கள் உரை வரைந்தார். அவ்வாறு உரை எழுதத் திருப்பதியில் பணிபுரிந்த வடமொழி, பாலிமொழி அறிஞர்கள் வழியாகப் புத்தமதக் கருத்துகள் அடங்கிய பகுதிக்கு விரிவாக உரை வரைந்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கற்று வல்ல அறிஞர்களைப் பணியிலமர்த்திய 1942 ஆம் ஆண்டளவில் உரைவேந்தர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியில் அமர்ந்தார். சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் முதலான அரிய நூல்கள் இவர் வழியாக வெளிவந்தன. எட்டாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தார். அதுபொழுது பணிபுரிந்த தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், க.வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களுடன் பழகி மகிழ்ந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது புறநானூறு உள்ளிட்ட நூல்களுக்கு உரைவரையும் பேறு பெற்றார்.
மதுரை தியாகராசர் கல்லூரியின் உரிமையாளர் கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி உரைவேந்தர் அவர்கள் மதுரை தியாகராசர் கல்லூரியில் 1951, சூலைத் திங்களில் பணியில் இணைந்தார். உரைவேந்தர் அவர்களின் தமிழறிவையும் சைவ சித்தாந்த ஈடுபாட்டையும் அறிந்த தியாகராசர் தம் துணைவியார் இராதா தியாகராசனார் அவர்களுக்கு இவரை ஆசிரியராக அமர்த்தித் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஈடுபாடு வரும்படி பயிற்றுவிக்கச் சொய்தார்.
உரைவேந்தர் அவர்கள் மதுரையில் பணிபுரிந்தபொழுது இவரிடம் பயின்ற மாணவர்கள் புகழ்பெற்ற பேராசிரியர்களாகவும், கவிஞர்களாகவும் பின்னாளில் விளங்கினர்.
உரைவேந்தர் அவர்கள் பேராசிரியர் பணிபுரிந்ததுடன் பல்வேறு இலக்கிய மேடைகளில் தம் கருத்துகளை நயம்பட எடுத்துரைக்கும் ஆற்றல்பெற்றவர். பேசுவதுடன் அமையாமல் உரையாகவும் நூலாகவும் தம் அறிவை நிலைப்படுத்தி வைத்துள்ளார்.
உரைவேந்தர் அவர்களுக்குக் கல்வெட்டில் நல்ல பயற்சியும் புலமையும் இருந்ததால் தாம் வரைந்த உரைகளுக்குச் சான்றாகக் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக்காட்டி விளக்குவதில் வல்லமை பெற்றிருந்தார். மேலும் உ.வே.சாமிநாதர் பதிப்பித்த பிறகு உரைவேந்தரின் உரை வெளிப்பட்டதால் உ.வே.சா அவர்களுக்குக்கிடைக்காத சில படிகளையும் பார்வையிட்டுச் செப்பம் செய்துள்ளார்.
புறநானூற்றுக்கு உரைவரையும்பொழுது உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத படி ஒன்று பள்ளியூர்த் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் அவர்களால் படி எடுக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்ணுற்றுத் தம் பதிப்பைச் செப்பம் செய்தார்.உ.வே.சாவின் பதிப்பில் உள்ள பின்னுள்ள 200 பாடல்களுக்குப் பல்வேறு திருத்தங்களை உரைவேந்தரின் இப்பதிப்பு வழங்கியுள்ளது.
உரைவேந்தர் நற்றிணை நூலுக்கு வழங்கிய உரையும் பல சிறப்புகளைக் கொண்டது. பின்னத்தூரார் முதன்முதல் நற்றிணைக்கு உரைவரைந்த பெருமைக்கு உரியவர். அதன் பிறகு வையாபுரிப்பிள்ளை வழங்கியது உள்ளிட்ட நான்கு படிகளைப் பின்னத்தூராரின் படிகளுடன் ஒப்புநோக்கி உரைவரைந்த பொழுது பின்னத்தூரார் நூலைவிட 1500 மேற்பட்ட பாட வேறுபாடுகள் உரைவேந்தரின் பதிப்பால் தெளிவுபெற்று நற்றிணை விளக்கம்பெற்றது.
உரைவேந்தரின் தமிழ்ப்பணிகளை நினைத்துக் கலைத்தந்தை கருமுத்து. தியாகராசனாரும் பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கமும் இவர்தம் குடும்பத்தைப் பேணினர். பண்டித மணியார், வ.சுப.மாணிக்கம், பாவேந்தர் உள்ளிட்ட அறிஞர்கள் உரைவேந்தரை உயர்வாகப் போற்றியுள்ளனர்.
பாவேந்தர் உரைவேந்தரைப் பற்றி,
"பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை - வெள்ளத்தேன்
பாயாத ஊருண்டோ! உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்"
என்று பாராட்டி மகிழ்வார்.
உரைவேந்தரின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டும் முகமாக மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் உரைவேந்தருக்கு மிகப்பெரும் பாராட்டுவிழா அன்னாரின் மணிவிழாவாண்டில் நிகழ்த்தப் பெற்றது (16.01.1964). குதிரை பூட்டப்பெற்ற சாரட்டு வண்டியில் பேராசிரியரை அமர்த்தி மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலிருந்து நான்கு சித்திரை வழியாக இன்னிசை முழங்க அழைத்துவரப் பெற்றார். கலையன்னை இராதா தியாகராசனார் அவர்கள் தம் ஆசிரியரின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்து "உரைவேந்தர்" என்னும் பட்டம் பொறிக்கப் பெற்ற தங்கப்பதக்கம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அங்குக் குழுமியிருந்த சான்றோர் உள்ளிட்ட மக்கள் உரைவேந்தர் வாழ்க! என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூதறிஞர் செம்மல் உரைவேந்தர் வ.சுப.மாணிக்கனார் பணிபுரிந்தபொழுது "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்னும் பட்டம் ஆளுநர் பிரபுதாசு பட்டுவாரி அவர்கள் வழியாக வழங்கிச் சிறப்பித்தார்கள் (1980).
1981 ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது உரைவேந்தருக்கு இந்தியப் பிரதமர் திருவாட்டி இந்திராகாந்தி அவர்கள் வழியாகத் தமிழக முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் பத்தாயிரம் உருவா பணமுடிப்பும் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ்ப்பணி தவிர வேறொரு உலகியல் வாழ்வும் அறியாத நம் உரைவேந்தர் அவர்கள் தமது 79 ஆம் அகவையில் மதுரையில் தமது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
உரைவேந்தரின் திருவருட்பா, ஐங்குறுநூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளிட்ட நூல்களின் பேருரைகள் யாவும் அவரின் தமிழ்ப் புகழை என்றும் பேசுவனவாகும். தமிழரின் அறிவு வரலாற்றை நிலைப்படுத்திய புலவர் பெருமானின் முழுமையான வரலாறு அமையப் பெறாதது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறையேயாகும்.
உரைவேந்தர் அவர்களின் தமிழ்க்கொடை:
01.ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி(அச்சாகவில்லை)
02.ஐங்குறுநூறு உரை
03.ஒளவைத் தமிழ்
04.சிலப்பதிகார ஆராய்ச்சி
05.சிலப்பதிகாரச் சுருக்கம்
06.சிவஞானபோதச் செம்பொருள்
07.சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும்
08.சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
09.சீவக சிந்தாமணிச் சுருக்கம்
10.சூளாமணி
11.சைவ இலக்கிய வரலாறு
12.ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
13.தமிழ்த்தாமரை
14.தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்
15.திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
16.திருவருட்பா மூலமும் உரையும் (ஒன்பது தொகுதிகள்)
17.திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
18.தெய்வப்புலவர் திருவள்ளுவர்
19.நந்தாவிளக்கு
20.நற்றிணை உரை
21.பதிற்றுப்பத்து உரை
22.பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு
23.பரணர்
24.புதுநெறித் தமிழ் இலக்கணம்(2 பகுதிகள்)
25.புறநானூறு மூலமும் உரையும்(2 பகுதிகள்)
26.பெருந்தகைப் பெண்டிர்
27.மணிமேகலை ஆராய்ச்சி
28.மணிமேகலைச் சுருக்கம்
29.மதுரைக்குமரனார்
30.மத்த விலாசம்(மொழிபெயர்ப்பு)
31.மருள்நீக்கியார் நாடகம்(அச்சாகவில்லை)
32.யசோதர காவியம் மூலமும் உரையும்
33.வரலாற்றுக் கட்டுரைகள்(வரலாற்றுக் காட்சிகள்)
34.Introduction to the Study of Thiruvalluvar
அச்சில் வெளிவந்த கட்டுரைகள்:
ஆர்க்காடு,
ஊழ்வினை,
சிவபுராணம்,
ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை,
தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமைப் பேருரை.
உதவிய நூல்:
முனைவர் ச.சாம்பசிவனார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்,சாகித்திய அகாதெமி வெளியீடு)2007.
3 கருத்துகள்:
ஔவை அவர்கள் என் மதிப்புக்குரிய
ஆசான் ஆவார்.முதுகலை முதலாமாண்டு வகுப்பில் இவரிடம்
தொல்காப்பியம் பாடம் கேட்கும் வாய்ப்பும் இரண்டாமாண்டில் சைவசித்தாந்தம் பயிலும் வாய்ப்பும் பெற்றேன்.பெறற்கரும் பேறு என்று இதனைக் கூறவேண்டும்.அழுத்தம் திருத்தமாக இவர் தமிழை ஒலிக்கும் பாங்கு ஏதோ சங்கப் புலவர் ஒருவர் பாடம் நடத்துகிறாரோ என்று எண்ணத்தோன்றும்.எப்போதும் தம் கையிலிருக்கும் வெள்ளிப்பொடிப்பெட்டியிலிருந்து
ஒரு சிட்டிகை பொடியை எடுத்துத் தமது குடைமிளகாய் போன்ற மூக்கில்
இவர் அடைத்துக் கொண்டால் ஒருமணி நேரமாவது மடைதிறந்த வெள்ளம் போல் தமிழமுது நம் செவியை நிறைக்கும் என எதிர்பார்க்கலாம்.
சங்க இலக்கியங்களில் காணப்படும் பாடவேறுபாடுகளில் எதனை ஏற்கலாம் எனக் கருத்துக் கேட்கும் போது மிகச் சிறப்பாக விளக்கம் வழங்குவார்.
ஒருவேளை குருகுலம் என்னும் முறை எங்கள் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்குமானால் கடல் போன்று பரந்தும் ஆழ்ந்தும் தேன் போன்று உயிர்தளிர்க்கச் செய்யும் வகையிலும் விளங்கிய இவரது தமிழறிவை நாங்கள் முழுதும் பயன் கொண்டிருக்கமுடியும்.
எனினும் இவரது உரைநூல்கள் இன்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டுள்ளன.
படிப்பதற்குத் தான் ஆளில்லை.
உரைவேந்தரின் மானணாக்கர்களுள் ஒருவன்,மறைமலை இலக்குவனார்
தங்கள் தமிழ்ப்பணிக்கு என் வாழ்த்துக்கள். தங்களுக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களைப்பற்றியும் கொஞ்சம் எழுதினால் நன்றாக இருக்கும் அல்லவா?
தங்களின் இடுகை மிகவும் சிறப்பாக உள்ளது. செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். மேலும் இதுபோன்ற படைப்புகள் பலவற்றை வெளியிடுங்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!
அன்புடன்
தேவமைந்தன்
கருத்துரையிடுக