நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

முனைவர் நா.கண்ணன்(கொரியா)


முனைவர் நா.கண்ணன்

இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும்.தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும்.இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத்தளம் உள்ளது.இத்தளத்தில் அரிய தமிழ்நூல்கள்,ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், படங்கள், ஒலிவடிவங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.உலகு தழுவிய அமைப்பாக இவ்வமைப்பு செயல்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இத்தளத்திற்குச் செய்திகளை மின்வடிவப்படுத்தி வழங்கினாலும் இதன் மூளையாக இருந்து செயல்படுபவர் முனைவர் நா.கண்ணன் அவர்கள் ஆவார்.

கொரியாவில் இருந்தபடி தமிழ்ப்பணியைத் தொடர்ந்து செய்யும் நா.கண்ணன் அவர்களின் பிறந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பூவணம் என்னும் ஊராகும்.இவ்வூர் சைவசமய நாயன்மார்களால் பாடல்பெற்ற ஊராக விளங்குவது.இச்சிற்றூரில் வாழ்ந்த நாராயணன், கோகிலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர்.தம் இளமைக் கல்வியைத் தமிழ்வழியில் பயின்றவர். மானாமதுரையில் ஒக்கூர் வெள்ளையன்செட்டியார் பள்ளியில் பயின்றவர்.பின்னர் திருப்பூவணத்தில் படித்துப் பள்ளியிறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர்.கண்ணனுக்குத் தமிழ் மொழியில் இயல்பிலேயே ஈடுபாடு இருந்தது.

கல்லூரிக் கல்வியை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர்.உயிர்அறிவியல் பாடத்தைப் பட்டப் படிப்பிற்கும் முது அறிவியல் பட்டத்திற்கும் படித்தவர். அமொரிக்கன் கல்லூரியின் சூழல் கண்ணனைத் தமிழ்க்கவிதைகளின் பக்கம் இழுத்தது.சாலமன் பாப்பையா நடத்தும் திருவாசகப் பாடத்திலும் பேராசிரியர் நெடுமாறன் அவர்களின் திராவிட இயக்கப் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவர்.கோவையை மையமிட்டு வளர்ந்த வானம்பாடிக் கவிதை இயக்கம் வழி கவிஞர் மீராவின் கவிதைகளில் கண்ணன் ஈடுபாடு கொண்டிருந்தார்.பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது புத்திலக்கியப் படைப்பாளிகளின், திறனாய்வா ளர்களின் தொடர்பு அமைந்தது.சிறுகதைகள் எழுதும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.இதனால் பின்னாளில் கி.இரா,தி.சா.ரா,இந்திரா பார்த்தசாரதி,தீபம் பார்த்தசாரதி,ஆதவன் உள்ளிட்டவர் களின் தொடர்பு கிடத்துப் படைப்புகள் அறிமுகமாயின.

கண்ணன் சப்பான் நாட்டிற்கு உயர்கல்விக்குச் சென்றார். சப்பான் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையில் நான்காண்டுகள் ஆய்வுசெய்தார்.இவ்வாய்வின் பயனாகத் தொழில் துறைகளில் பயன்படுத்தும் வேதிப்பொருள் சிக்கலுக்கு உரியது எனவும் இதனால் சூழலியல் சீர்கேடு உருவாகிறது எனவும் கண்டுபிடித்தார். இவ்வாய்வை உற்றுநோக்கிய செர்மனி நாட்டினர் அழைக்க,விருந்துப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். KIEL UNIVERSITY யில் பணி. நீண்டநாள் பேராசிரியராகப் பணிபுரிந்து அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றார்.

சிறப்பு அழைப்பின் பெயரில் கொரியாவுக்கு அழைக்கப்பெற்று இப்பொழுது கொரியாவில் ஆசிய பசிபிக் நாடுகளின் கடலாய்வுப் பயிற்சி மையத்தை(ABEC) மேலாண்மைசெய்து வருகிறார்.
சூழலியல் சார்ந்த பயிற்சி பெற இவரிடம் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள், சூழலியல் வல்லுநர்கள் வருகின்றனர்.ஆண்டிற்கு இரண்டுமுறை 3 வாரப் பயிற்சி தருகிறார். இவ்வகையில் இவரிடம் கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, பெரு,மலேசியா, பர்மா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் வந்து பயிற்சி பெறுகின்றனர். இச்சூழலியல் பேரறிவால் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

உலகப் பயணங்களில் தமிழுக்கு ஆக்கமான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.கல்வெட்டு , ஓலைச்சுவடிகள், தமிழின் அரியநூல்கள், பண்பாட்டுகூறுகளை அறிந்து தமிழகத்திற்கு வழங்கியவர். சப்பான் நாட்டில் ஆய்வு செய்தபொழுது சப்பானியமொழி பேசும் ஆற்றல் கிடைத்தது.இதனால் சப்பானின் கவிதை வடிவமான ஐகூ பற்றி நிறைய அறிந்தார்.இவர் கவிஞர் விச்வநாதன் அவர்களின் நூலுக்கென வரைந்த ஐகூ குறித்த முன்னுரையைக் கவிஞர் மீரா ஓம்சக்தி இதழில் வெளியிட்டார்.

இம் முன்னுரைக் கட்டுரை சப்பானிய ஐகூ வடிவை விளக்கும் அரிய கட்டுரையாகும் இதனை http://www.angelfire.com/ak/nkannan/haiku.html.என்னும் தளத்தில் காணலாம்.
கண்ணன் தமக்குக் கிடைக்கும் ஓய்வுநேரங்களில் தமிழ்ப்படைப்புகளை உருவாக்கினார்.அவை குங்குமம்,கணையாழி,இந்தியா டுடே,சுபமங்களா,புதியபார்வை உள்ளிட்ட தமிழக ஏடுகளில் வெளிவந்துள்ளன.வாசந்தி,மாலன்,பாவை சந்திரன்,கோமல் சாமிநாதன் உள்ளிட்டவர்களின் தொடர்பும் தமிழ்ப்படைப்புகள் வெளிவரக் காரணமாயின.

இங்கிலாந்து,செர்மனி,பிரான்சு நாடுகளிலிருந்து வெளிவந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்தன.விலைபோகும் நினைவுகள்,உதிர் இலைக்காலம்,நிழல்வெளி மாந்தர் உள்ளிட்ட சிறுகதை,நெடுங்கதைத் தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

விலைபோகும் நினைவுகள்


நிழல்வெளி மாந்தர்

புகலிட வாழ்வைத் தமிழ்ச்சூழலில் புரிந்துகொள்ளும் வண்ணம் நிழல்வெளி மாந்தர்களை மையமிட்டனவாக இவரின் படைப்புகள் இருக்கும்.கண்ணனின் கவிதைகள் இணையத்தில் வெளிவந்தவண்ணம் உள்ளன.தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களுடன் நன்கு அறிமுக மாகியுள்ள கண்ணன் சிங்கப்பூர்,மலேசியா எழுத்தாளர்களுடனும் நன்கு அறிமுகமானவர். அதேபோல் தமிழர்கள் பரவியுள்ள உலகநாடுகள் பலவற்றிலும் இணையத்துறையில், எழுத்துத்துறையில் நன்கு அறிமுகமான பெயர் கண்ணன் என்பதாகும்.

1995 அளவில் அமெரிக்காவில் வாழும் சார்ச்சு கார்ட்டு அவர்கள் முதன்முறையாக ஒருங்கு குறி பற்றி பேச அழைத்த - தமிழ் எழுத்துப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.பிறகு சிங்கப்பூர்,சென்னை, மலேசியாவில் நடைபெற்ற இணைய மாநாடுகளில் கலந்துகொண்டு கட்டுரை படித்தவர்.

அவ்வகையில் இவர் செர்மனியில் பணிபுரிந்தபொழுது அந்நாட்டில் ஓலைச்சுவடிகள் பாதாள அறைகளில் மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து அதுபோல் நம் தமிழ் ஓலைச்சுவடிகளையும் பாதுகாக்கும் திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்த நினைத்தார்.அச் செர்மனி பாதுகாப்பகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் நூற்றுக்கும் மேல் இருப்பதைக் கண்டு உணர்ந்து சிங்கப்பூரிலும்,மலேசியாவிலும் இதுகுறித்துப் பேசினார்.

2001இல் மலேசியாவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்று வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத்தைத் தமிழுக்கு ஆக்கமாகப் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது பற்றிய களப்பணி ஆய்வுகளை எடுத்துரைத்தார்.மலேசியாவில் பேசிய கண்ணன் அவர்களின் பேச்சு அங்கிருந்தவர்களைக் கவர அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் பத்தாயிரம் அமெரிக்க டாலர் பணத்தை வழங்கித் தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு தமிழ்மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டது.இதில் தமிழ் ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், கோயில்கள்,அரிய நூல்கள் பற்றிய தமிழர் மரபுச்செல்வங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகளை முனைவர் அப்துல்கலாம், சார்ச் கார்ட்டு (அமெரிக்கா) உள்ளிட்ட அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்.இந்திய மின்னூலகம் [Digital Library of India] தமிழ் மரபு அறக்கட்டளையின் நூல்களைப் பகிர்தல் முறையில் வைத்துள்ளது.இந்தியாவை அடிமைப்படுத்திய நாட்டு அரசு நூலகங்களில் உள்ள தமிழ் நூல்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற ஆவலில் தமிழ் மரபு அறக்கட்டளையினர் பிரித்தானிய நூலகத்துடன் இணைந்து முதன் முறையாகச் சில நூல்களை மின்னாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மரபு அறக்கட்டளை இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பதிவு பெற்ற அரசு சாரா, நடுநிலை நிறுவனமாகும் [NGO]. தமிழின் முதல் மடலாடற்குழுவான தமிழ்
வலையில் ஆழ்வார்களின் பாசுரங்கள் பற்றி எழுத நினைத்த கண்ணன் தொடர்ந்து எழுதினார். பின்னர் ஆழ்வார்க்கடியான் என்னும் பெயரில் ஆழ்வார்களின் பாசுரப் பெருமை, ஆழ்வார்களின் பெருமை பற்றி எழுதத் தனி வலைப்பூவை உருவாக்கி எழுதி வருகிறார். இதனால் இவரைப் 'பாசுரமடல் கண்ணன்' என அழைப்பவர்களும் உண்டு.

ஆழ்வார் படைப்புகளிலும் வைணவ இலக்கியங்கிளிலும் நல்ல ஆர்வம் இவருக்கு உண்டு.தமிழ் இணைய வளர்ச்சியில் கண்ணனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.இவர் தமிழ் இலக்கியம் குறித்தும் இணையம் பற்றியும் தொடக்க காலத்தில் எழுதிய படைப்புகள் பல தகவல்களைத் தாங்கி நிற்கின்றன.

தமிழ்மரபு அறக்கட்டளை முதுசொம் என்னும் வகையில் மரபுவழிப்பட்ட பண்பாட்டுச்
சின்னங்கள், ஓலைச்சுவடிகள்,அரியநூல்கள்,கோயில்கள் பற்றிய செய்திகள்,இசைத்தட்டுகள் உள்ளிட்ட இவற்றை மின்வடிவில் பாதுகாத்துவருகின்றது(காண்க:http://www.tamilheritage. org).

தமிழ்மரபு அறக்கட்டனைக்கு மின்தமிழ் என்னும் மின்குழு உள்ளது(காண்க: (http://groups. google.com/group/minTamil).இதில் உறுப்பினராவதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளைக்கு யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யமுடியும். மின்தமிழ் குழுவில் இதுவரை 547 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.இவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.

காலச்சுவடு நடத்திய தமிழினி 2000 என்னும் மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகளை அறிந்துள்ளன.பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.இப்பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் மரபு மையம் குறித்த ஆய்வுத்துறையில் இரண்டு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய உள்ளன.

கண்ணன் தமிழகச் சிற்றூர்ப்புறம் ஒன்றில் பிறந்து சப்பான்,செர்மனி,கொரியா எனப் பல நாடுகளில் வாழ நேர்ந்தாலும் தம் தாய்மண்ணை,தாய்மொழியை நேசிப்பதில் முதன்மை பெற்று நிற்கிறார்.தமிழ்மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள உறவுகளை ஆராய்ந்து வருகிறார்.இது பற்றிய முதல் ஆய்வுக்கட்டுரை சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வழி வெளிவர உள்ளது.

கொரிய தொலைக்காட்சி நிறுவனம்(kbc) ஒன்று கண்ணனுடன் இணைந்து இந்திய-கொரிய உறவு பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் முயற்சியில் உள்ளனர்.இவர் கொரிய-தமிழ் மொழிக்கு உரிய உறவுகள் பற்றி ஆராய்து மொழி அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படை யிலும் ஒன்றுபட்டு இருப்பதை வெளிப்படுத்திவருகிறார்.அவ்வகையில் நாம் பயன்படுத்தும் அம்மா,அப்பா சொற்கள் கொரியாவிலும் வழங்குகின்றன என்கிறார்.

நாம் அண்ணி என்பதை ஒண்ணி என்கின்றனர்.கூழ் என்பதை மூழ்(தண்ணீர்) என்கின்றனர்.
நம்முடைய பண்பாட்டுக்கூறுகள் கொரியர்களிடம் பல உள்ளன.கற்புப்பழக்கம், நாணப் படுதல்,ஆண்களிடம் பேசும்பொழுது வாய்பொத்திப் பேசுதல்,ஏப்பம் விடுவது பெருமை, உறிஞ்சிக்குடித்தல் சிறப்பு எனச் சிற்றூர்ப்புறப் பழக்கம் பல கொரியாவில் உள்ளது என்கிறார்.

தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் நடைபெறும் தமிழ்,இணையம் சார்ந்த மாநாடுகள்,கருத்தரங்குகளில் கலந்துகொள்வதில் ஆர்வம்காட்டுபவர். விடுமுறைகளில் தமிழகம் வந்துசெல்லும் கண்ணன் தமிழ் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதும்,வைணவத் திருத்தலங்களை வழிபட்டுச் செல்வதும் வழக்கம்.

நா.கண்ணன் தமிழ் எழுத்துரு, மடலாடற்குழுமம், வலைப்பக்கங்கள், வலைப்பதிவுகள் என்று வளர்ந்துவரும் தமிழ்க்கணினித் துறையுடன் இணைந்தே வளர்ந்து வருகிறார். உத்தமம் எனும் உலகலாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயற்குழுவில் இருக்கிறார். அவர்கள் வெளியிடும் மின்மஞ்சரி எனும் இதழை நிர்வகித்து வருகிறார். தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் உள்ளார். இவரது சிந்தனைகளை, ஆக்கங்களைத் தாங்கிப் பல்வேறு வலைப்பதிவுகள் உள்ளன.

இவரது வலைத்தள முகவரி http://www.e-mozi.com என்பதாகும். இவரைப் பற்றிய அறிமுகத்தளமாக http:// people. freenet.de/bliss/bio_index.html உள்ளது. இத்தளங்கள் மூலமாக இவரது வலைப்பதிவு முகவரிகள், நேர்காணல்கள், வானொலிப் பேச்சுக்கள், புத்தகங்கள், ஊடக வெளியீடுகள் இவைகளை அறிந்து கொள்ளலாம்.

தாம் பணிபுரிவது வேற்றுத்துறையாக இருந்தாலும் தமிழர்களின் மரபுச்செல்வங்களைப்
பாதுகாப்பது,ஆய்வது,கட்டுரை,சிறுகதை,கவிதை எழுதுவது எனத் தமிழ் நினைவில் வாழும் கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி என்றும் நினைவுகூரப்படும்.

நனி நன்றி: தமிழ் ஓசை(நாளிதழ்),களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 4,
(19.10.2008),சென்னை,தமிழ்நாடு

6 கருத்துகள்:

ஏ.சுகுமாரன் சொன்னது…

மிக அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள் .
சிறப்பான முயற்சி ! வாழ்த்துக்கள்
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

Vassan சொன்னது…

அவசியமான பதிவு. 1996 லிருந்து இணையத்தில் உலாவும் தமிழர்களில், முதன்மையானவர்களிலொருவர் நா.கண்ணன்.

உங்கள் பதிவில்,

ஜோர்ஜ் ஹார்ட் ஐ 'சார்ச் கார்ட்டு' என விளித்திருப்பது. மொழி நாட்ஸி (nazi) இயலுக்கு முழுமையான எடுத்துக்காட்டு.
அரை நிமிடமானது சார்ச் கார்ட்டு என்பதை புரிந்து கொள்ள :(

தமிழ் மொழியை ஓரளவு கற்றுக் கொள்ள விரும்புவர்கள் தலை தெறித்து ஓடுவார்கள், இது போன்ற மொழி வெறி
எழுத்துக்களைக் கண்டு.

நிற்க.

உங்கள் தமிழார்வம் போற்றதக்கது. நிரந்தரமாய் புலம் பெயர்ந்தோர்க்கு, எம் போன்றோருக்கு - தமிழார்வத்தை
நிலைக்க வைப்பது, தன்மையான, செம்மையான எழுத்தாக்கங்கள். ஆயினும் கண்மூடித்தனமான வட பாடை ஒதுக்கல் மற்றும்
ஆங்கிலம் தவிர்த்தல் என்ற பெயரில் பெயர்சொற்களை குதறுவது கொடுமையானது.

நிற்க # 2.

தூய தமிழ் என வரும் போது, உங்கள் புதுவையில் (உள்ள/இருந்த) கண்ணம்மை அச்சகம் உரிமையாளர் நினைவுக்கு
வருகிறார். (பெயர் மறந்துவிட்டது-எனது உறவினரின் நெருங்கிய நண்பர்)

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம்
தங்கள் பதிவுக்கு நன்றி.
கண்ணம்மை அச்சக உரிமையாளர் பெயர் திரு.முதுகண்ணனார் அவர்கள்.
அவர்களை அறிந்துள்ளமைக்கு மகிழ்கிறேன்.நிற்க.
தங்களின் மொழிவெறி என்ற சொல்லாளுகைக்கு முன்பே அறிஞர்கள் பல விளக்கம் தந்துள்ளனர்.அறிஞர் ஜார்ச்சு ஹார்ட்டு என எழுதவில்லை எனக் குறித்திருந்தீர்கள்.அடைப்பில் அவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கலாம்.தமிழ்ப் பேராசிரியனான யான் தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதியுள்ளமைக்குத் தாங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும்.மாறாக மொழிவெறி எனக் குறித்துள்ளீர்கள். பலரும் இவ்வாறு குறிப்பிடுவது வழக்கம்தான்.நீங்கள் ஏன் ஒன்றை மறந்துவிட்டீர்கள். அயல்நாடுகளில்(?) வாழும் நீங்கள் ஆங்கில அகரமுதலிகளில்,செய்தி ஏடுகளில் tamil,tamils என எழுதும்போது
thamizh எனப் பயன்படுத்தும்படி சுட்டிக் காட்டலாமே! புதுச்சேரியை puducherry எனப் பாராளுமன்றமே சொல்கிறதே ஏன்?
கம்பன் ஜானகி என எழுதாமல் சானகி என எழுதியுள்ளாரே ஏன்?
இவை யாவும் மொழிமரபுதான்.
எனவே தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களை ஆளும்பொழுது தமிழமரபுக்கு உட்பட்டு எழுதுவது மொழிப்பற்று என்க.
பிற மொழிச்சொற்களை அப்படியே எழுதுவேன் என்பதை மொழிவெறி என்க.
மு.இளங்கோவன்,
புதுச்சேரி

Chithan Prasad சொன்னது…

very detailed & timely one. Na.Kannan has started a regular column in YUGAMAYINI too. See his views on ADIMAI KIRUTHTHUVAM in October issue please- Chithan

Vassan சொன்னது…

எதிர்பார்த்த விடையைத்தான் சொல்லியுள்ளீர்கள். உங்கள் விருப்பம். ஆயினும், பண்ணித்தமிழ் பேசுவோர், சரியாக ஆங்கிலமும் தெரியாமல் - தமிழும் தெரியாதவர்கள் மற்றும் ஆங்கிலம் பேசுவதுதான் சிறப்பு என எண்ணுபவர்களுக்குள் தமிழார்வம் வளர வேண்டுமென்றால், தமிழ் மொழி பயமுறுத்தலை தருவதாக-களைப்பு ஊட்டுதலாக இருக்க கூடாது.

உங்கள் கருத்துரை படிவத்தை தமிழில் முடிந்தவரை மாற்றியுள்ளீர்கள். 'html' என இருப்பதை 'மீயுரை' குறிசொற்களைச் சேர்க்கலாம் என மாற்றலாம்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

இந்த இடுகை/கட்டுரை சிறப்பாகவும் கருத்துகள் பலவற்றை முன்வைப்பதாகவும் வாசிப்போர் அறிவுப் பயன் எய்தும் வாய்ப்பைத் தருவதாகவும் உள்ளது. மனமுவந்த பாராட்டுகள்.
- தேவமைந்தன்