நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 17 செப்டம்பர், 2008

தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்



முனைவர் கடவூர் மணிமாறன்

தனித்தமிழில் பாடல் புனையும் ஆற்றலும், தமிழ்மொழியில் மிகச்சிறந்த புலமையும் கொண்டவர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள். இவர் தம் இயற்பெயர் ப.முத்துசாமி என்பதாகும். இயற்பெயர் மறைந்து, புனை பெயர் நிலைபெறும்படி தொடர்ந்து இயங்கிவருபவர். பேச்சும் வாழ்க்கையும் இரண்டாக இல்லாமல் ஒன்றென வாழும் இயல்பினர்.

கருவூர் அருகில் உள்ள கடவூரை அடுத்த அய்யம்பாளையத்தில் 21.01.1947 இல் பிறந்தவர். பெற்றோர் திரு.கு.பழனியப்பனார் - திருவாட்டி கன்னியம்மாள் ஆவர்.  இவர் புலவர்., முதுகலை., பி.ஒ.எல்., கல்.மு.,முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 35 ஆண்டுகள் தமிழாசிரியர் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வர் பணியும் செய்த பெருமைக்கு உரியவர்.

கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, கரந்தைப்புலவர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்களில் கல்வி கற்ற பெருமைக்கு உரியவர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடல், கட்டுரை என எழுதிவரும் மணிமாறன் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றும் இயல்புடையவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வழியில் தனித்தமிழில் எழுதவும் பேசவுமான ஆற்றல் பெற்றவர். பல்வேறு இதழ்களில் எழுதி வருபவர்.அவற்றுள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, முரசொலி, கண்ணியம், கவிக்கொண்டல்,கவிதை உறவு, எழுகதிர், முகம், தமிழ் ஓசை உள்ளிட்ட இதழ்கள் குறிப்பிடத் தகுந்தன.

மணிமாறன் அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஒப்பாய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

பல்வேறு கருத்தரங்குகளில் கட்டுரை படித்தும், பாட்டரங்குகளில் பாடல் வழங்கியும் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.ஆறாம் உலகத்தமிழ் மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றபொழுது(1987) மலேசியா. சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று வந்தவர். அந்தமானில் நடைபெற்ற உலகத் தமிழ்ச்சங்க மாநாட்டிலும் கலந்துகொண்ட பெருமைக்கு உரியவர். தமிழ்நாட்டுப் பாடநூற் குழுவில் இடம்பெற்று ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்கள் உருவாக்கியவர்.

மணிமாறனின் அழகோவியம், சிறகை விரித்த சிந்தனைகள், பொன்னி, தமிழ்க்களம், ஆகிய நூல்கள் பரிசுபெற்ற நூல்களாகும்.மணக்கும் மலேசியா நூல் கல்லூரிகளில் பாட நூலாக இருந்தது.இவர்தம் பாடல்கள் தமிழ் நாட்டரசின் பாடநூல்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன. இவர் பல் நூல்களை வெளியிட்டுள்ளதுடன் பலரின் நூல்கள் வெளிவரத் துணை நின்றுள்ளார். இவரின் வழியாகப் பலர் பாவலர்களாக, ஆசிரியர்களாக மலர்ந்துள்ளனர்.

இவர் தம் ஆசிரியர் பணிக்காகத் தமிழ்நாட்டரசு வழங்கிய இராதாகிருட்டிணன் விருது, உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை வழங்கிய கவிமாமணி விருது, கனிமொழி இலக்கிய அமைப்பு வழங்கிய இலக்கியச் சுடர் விருது, திருக்குறள் நெறித்தோன்றல் விருது உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தன.

கருவூர்த் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், குளித்தலை தமிழ்க் கா.சு. இலக்கியக்குழுவின் தலைமைப் பேராளரகவும், கிருட்டிணராயபுரம் திருக்குறள் கழகச் செயலாராகவும் பணிபுரிபவர்.

கடவூர் மணிமாறனின் தமிழ்க்கொடைகள்



முனைவர் பட்ட ஆய்வேடு நூல்வடிவில்

மரபுப்பாடல் தொகுதி

பேராசிரியர் பார்வையில் பெருஞ்சித்திரனார் நூல்
கடவூர் மணிமாறன் கவிதைகள் ஓர் ஆய்வு நூல்

01.நான் பாடுகிறேன், 1979
02.இயற்கை வடிவங்கள், 1980
03.மயக்கமா?உறக்கமா?, 1981
04.நீதிகேட்ட நெடிய பயணம், 1982
05.எதிர் நீச்சல், 1983
06.விடியல் விதைகள், 1985
07.சிவப்புமலர்கள், 1986
08.மணக்கும் மலேசியா, 1988
09.சங்கே முழங்கு, 1989
10.அறிவுரைக் கதைகள், 1990
11.புரட்சிக்கவிஞர் கவிதைக்கோட்பாடுகள், 1990
12.கடவூர் மணிமாறன் பாடல்கள், 1991
13.மாணாக்கர் ஆற்றுப்படை, 1992
14.புரட்சிப் பாவலர்கள், 1992
15.அழகோவியம், 1993
16.அழகிய அந்தமான், 1994
17.சிறகை விரித்த சிந்தனைகள், 1995
18.பாரதிதாசன் பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஒப்பாய்வு, 1997
19.அன்றும் இன்றும் சில ஆய்வுகள், 1997
20.பேராசிரியர் பார்வையில் பெருஞ்சித்திரனார், 1997
21.பாவலர் நெஞ்சில் பேராசிரியர், 1997
22.அரங்கில் பூத்த அருந்தமிழ், 1997
23.கருப்பண்ண பிள்ளை கலியுகச்சிந்து, 1998
24.காவிரி முதல் கங்கை வரை, 1998
25.பொன்னி, 1999
26.அகமும் முகமும், 2000
27.கொஞ்சும் தமிழ், 2000
28.பாவாணரும் பைந்தமிழும், 2001
29.தமிழர் பண்பாடும் வாழ்வியலும், 2002
30.நல்லாசிரியர் வெள்ளமுத்து புகழ்மணிமாலை, 2003
31.வாழ்க்கைச் சுவடுகள், 2003
32.கற்றல் கற்பித்தலில் புதிய நோக்குகள், 2003
33.ஆய்வுச் சோலை, 2004
34.தமிழ்க்களம், 2005
35.உன்னை அறிவாய்! உலகை வெல்வாய்!, 2005
36.திருக்குறள் இனிய தெளிவுரை, 2005
37.முனைவர் கடவூர் மணிமாறன் கவிதைகள் ஓர் ஆய்வு, 2006
38.திறனாய்வுப் பூக்கள், 2007
39.முழக்கம், 2007

முகவரி:
முனைவர் கடவூர் மணிமாறன்
1 / 53 பெரியார் நகர், குளித்தலை -639 104
கரூர் மாவட்டம்
செல்பேசி : 94431 44372

4 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

என்னே தங்கள் தமிழ்ப்பணி. நீங்கள் வாழ நீடூழி!

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

பல ஆண்டுகளுக்கு முன், பழைய - புதுச்சேரிக் கம்பன் கழக நுழைவாயிலில் க.த.ம. அவர்களுடன் வந்த தனித்தமிழியக்க ஆய்வாளர் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இவ்விடுகையில் நண்பரைப் பற்றிய கருத்துகள் மகிழ்வூட்டின.
-தேவமைந்தன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

பல ஆண்டுகளுக்கு முன், பழைய - புதுச்சேரிக் கம்பன் கழக நுழைவாயிலில் க.த.ம. அவர்களுடன் வந்த தனித்தமிழியக்க ஆய்வாளர் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இவ்விடுகையில் நண்பரைப் பற்றிய கருத்துகள் மகிழ்வூட்டின.
-தேவமைந்தன்

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

பல ஆண்டுகளுக்கு முன், பழைய - புதுச்சேரிக் கம்பன் கழக நுழைவாயிலில் க.த.ம. அவர்களுடன் வந்த தனித்தமிழியக்க ஆய்வாளர் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இவ்விடுகையில் நண்பரைப் பற்றிய கருத்துகள் மகிழ்வூட்டின.
-தேவமைந்தன்