மூதறிஞர் வ.சுப.மாணிக்கம்
மூதறிஞர் எனவும் செம்மல் எனவும் அழைக்கப்பெறும் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி என்னும் ஊரில் பிறந்தவர்(17.04.1917). இவர் தம் பெற்றோர் வ.சுப்பிரமணியன் செட்டியார் தெய்வானை ஆச்சி என்பதாகும். அண்ணாமலை என்பது இவர்தம் பிள்ளைப்பருவத்துப் பெயராகும். இவருடன் பிறந்தவர்களுள் ஆடவர் இருவர், மகளிர் இருவர் என உடன் பிறந்தார் நால்வராவர்.
இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்த மாணிக்கனார் தம் தாய்வழிப்பாட்டி, மீனாட்சி ஆச்சியும், தாத்தா அண்ணாமலைச் செட்டியாரும் வளர்க்க, வளர்ந்தார்.
வ.சுப.மாணிக்கம் அவர்கள் குருகுல முறையில் ஏழாம் அகவை வரை தொடக்க கல்வியைத் தம் பிறந்த ஊரில் வாழ்ந்த திரு.நடேச ஐயரிடம் கற்றார். ஐயர் அவர்கள் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடையவர்கள். அவர் வழி ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம் நூல்களை ஐயம் திரிபறக் கற்றார்.
பின்னர் பர்மா சென்று கைபழகுதல் என்னும் வணிகத்தொழில் பழகினார். 11 அகவையில் பர்மா சென்ற மாணிக்கனார் இருமுறை தமிழகம் வந்துள்ளார். பின்னர்க் கடை முதலாளி உரைத்தபடி பொய் சொல்லாத காரணத்தால் வேலையிழந்து தமிழகம் வந்தார். அப்பொழுது மாணிக்கனார்க்கு அகவை பதினெட்டு ஆகும்.
அறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் உறுதுணையால் மாணிக்கனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வித்துவான் வகுப்பினை நிறைவு செய்தார்(1936-40).பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக பி.ஓ.எல் (1945), முதுகலை(1951) ஆகிய பட்டங்களைப் பெற்றார். அடுத்து, தமிழில் வினைச்சொற்கள் என்னும் பொருளில் ஆய்வு செய்து எம்.ஓ.எல் பட்டம் பெற்றார்(1948). தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்(1957).
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கனார் கற்ற பொழுது பண்டிதமணியார், இரா. இராகவ ஐயங்கார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார், இரா. கந்தசாமியார், ஆ.பூவராகன் பிள்ளை, மு.அருணாசலம் பிள்ளை முதலான அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களாக இருந்து தமிழறிவு ஊட்டினர். இவர்களுள் பண்டிதமணியார் அவர்கள் பலவகையிலும் மாணிக்கனாரின் முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்ததால் நன்றியின் அடையாளமாகத் தாம் வாழ்ந்த இல்லத்திற்குக் 'கதிரகம்' எனப்பெயரிட்டனர். தம் மகனுக்குப் பூங்குன்றன் எனப்பெயரிட்டனர்.
ஆசிரியப்பணி
வ.சுப.மாணிக்கனார் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே 1941 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியேற்றார். ஏழாண்டுகள் (1941-48) அப்பணி அங்கு அமைந்தது.1948 இல் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் இணைந்தார்.1964-1970 இல் அக்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரியும் பேறும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மீண்டும் பணியாற்ற அழைப்பு விடுத்தது. அதன் காரணமாக 1970-1977 வரை தமிழ்த்துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணிபுரிந்தார்.
வ.சுப.மாணிக்கம் அவர்கள் தம் கடுமையான உழைப்பாலும்,ஒப்பாரில்லாத தமிழ்ப்புலமையாலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்(17-08-1979-30-06-1982).இவர் துணைவேந்தர் பணிபுரிந்தகாலை மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் சார்பில் அரிய கண்காட்சி அமைத்தமை, பல நூல்கள் வெளியிட்டமை இவரின் பணிகளுள் குறிப்பிடத்தக்கன. பல்வேறு துறைகளை உருவாக்கிப் பல்கலைக்கழகம் புகழ்பெற வழி கண்டார்.
தம் ஆசிரியர் பெயரில் பண்டிதமணி அரங்கு நிறுவியமை,பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்கவேண்டும் என ஆணையிட்டமை, ஆசிரியர்கள், பணியாளர்கள் வீடு கட்டிக்கொள்ள கடனுதவி வழங்கியமை உள்ளிட்டன குறிப்பிடத்தக்கன. தக்க அறிஞர்களைச் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்த்தித் தமிழ் ஆய்வுக்கு வழி வகுத்தார்.
வ.சுப.மாணிக்கம் அவர்கள் துணைவேந்தர் பணியிலிருந்து விடுபட்ட பின்னர் திருவனந்தபுரம் திராவிட மொழியியற் கழகத்தில் 'தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டார்.முதுபேராய்வாளர் என்னும் பதவியில் இப்பணியை ஐயா அவர்கள் செய்தார்கள்.
பின்னர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காபிய ஆய்விற்கென அமைக்கப்பெற்ற ஆய்விருக்கையில் தொல்காப்பியத் தகைஞர் என்னும் பொறுப்பில் இருந்து ஓராண்டு ஆய்வு செய்தா(1985-86).இவ்வாய்வு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என்னும் பெயரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்வழி வெளிவந்துள்ளது. தொடர்ந்து பல நூல்கள் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தையும்,குன்றக்குடி ஆதீனம் முதுபெரும்புலவர் என்னும் பட்டத்தையும்,ஈப்போ பாவாணர் தமிழ்மன்றம் பெருந்தமிழ்க்காவலர் என்னும் பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவின் பொழுது இவருக்கு மூதறிஞர் (டி.லிட்.,1979) என்னும் பட்டத்தையும் வழங்கிச்சி றப்பித்தன. தமிழக அரசு இவருக்குத் திருவள்ளுவர் விருதினை வழங்கிச் சிறப்பித்தது(மறைவிற்குப் பின்).
வ.சுப.மாணிக்கம் அவர்கள் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைக்கு ஆசிரியர் பணியமர்த்தல் நேர்காணல் தேர்வாளராக 24.04.1989 இல் புதுச்சேரி சென்றார். புதுச்சேரி உப்பளம் அரசினர் தங்குமனையில் இரவு பதினொருமணி வரை நன்கு உரையாடியபடி இருந்தார். நள்ளிரவு ஒருமணியளவில் அவருக்கு அடிக்கடி இருமல் ஏற்பட்டது. வாந்தியும் எடுத்தார். உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவ ஊர்தியில் ஏற்றிக்கொண்டு கோரிமேடு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிர் 25.04.1989 ஆம் நாள் வைகறையில் பிரிந்தது.
இல்லறம்
வ.சுப.மாணிக்கம் அவர்கள் 14.11.1945 இல் நெற்குப்பையைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சி அவர்களைத் தம் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டவர். இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி எனும் ஆண்மக்களும், தென்றல், மாதரி, பொற்றொடி என்னும் மூன்று பெண்மக்களும் பிறந்தனர்.
வ.சுப.மாணிக்கம் அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்புலமை உடையவர்கள். தமிழ்ப்பற்று உடையவர்கள்.இருபதாம் நூற்றாண்டில் உரைநடையில் எழுத வல்லாருள் இவருக்குத் தனி இடம் உண்டு. நன்றியுணர்வு உடையவர்கள். சங்க இலக்கியங்களைத் தம் நா நுனியில் வைத்திருந்தவர். இவருக்கெனப் பல கொள்கைகள் இருந்தன. தமிழ்வழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திருக்குறள் செயல் நூல் என்றவர். தம் வாழ்க்கையில் திருக்குறள் கருத்துகளை ஏற்றுக் கடைப்பிடித்தவர்.
தொல்காப்பியத்தையும், பிற சங்கப் பனுவல்களையும் உயர்வாக எண்ணியவர். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஆர்ப்பாட்டம் விரும்பாதவர். கடும் உழைப்பாளி. தாம் பணிபுரிந்த நிறுவனங்கள்மீதும் அதனைத் தோற்றுவித்தவர்கள் மீதும் மிகச்சிறந்த பற்றுடையவர். தாம் பணிபுரிந்த கல்லூரியான அழகப்பர் கல்லூரியின் நிறுவுநர் வள்ளல் அழகப்பரின் சீர்த்திபேசும் கொடைவிளக்கு என்னும் நூல் உயர்ந்த தரத்தன. அந்நூலின் பாடல்கள் கற்பாரைக் கரைந்துருகச் செய்யும் ஆற்றல் உடையன. அதுபோல் தமக்குப் பணி நல்கிய அண்ணாமலை அரசர் மேல் பாடப்பெற்ற பாடல்கள் அப்பல்கலைக்கழகத்தாரால் இன்றும் நினைவுகூரப்படும் தரத்தன.
பல்வேறு புதுக் கலைச்சொற்களை வழங்கித் தமிழுக்குச் சொல்வளம் சேர்த்தவர் வ.சுப.மாணிக்கம் அவர்களாவார். மக்கள் இயக்கம் கட்டித் தில்லையில் தேவாரத் திருமொழிகள் அம்பலம் ஏற வழி வகுத்தவர். ஊர்தோறும் சென்று தமிழ்வழிக் கல்விக்காகக் குரல்கொடுத்தவர்.
வ.சுப.மாணிக்கம் அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை
01. மனைவியின் உரிமை,1947
02. கொடைவிளக்கு,1957
03. இரட்டைக் காப்பியங்கள்,1958
04. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
05. தமிழ்க்காதல்,1962
06. நெல்லிக்கனி,1962
07. தலைவர்களுக்கு,1965
08. உப்பங்கழி, 1972
09. ஒருநொடியில்,1972
10. மாமலர்கள்,1978
11. வள்ளுவம்,1983
12. ஒப்பியல்நோக்கு,1984
13. தொல்காப்பியக் கடல்,1987
14. சங்கநெறி,1987
15. திருக்குறட் சுடர்,1987
16. காப்பியப் பார்வை,1987
17. இலக்கியச்சாறு,1987
18. கம்பர்,1987
19.தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, 1989
20. திருக்குறள் தெளிவுரை,1991
21. நீதிநூல்கள்,1991
22. The Tamil Concept of Love
23. A Study of Tamil Verbs
24. Collected Papers
25. Tamilology
அறிக்கைகள்
26.எழுத்துச் சீர்திருத்தம், எங்கே போய்முடியும்?(01.04.1989)
27. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மொழியறிக்கை(15.05.1989)
28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12.06.1988)
27. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மொழியறிக்கை(15.05.1989)
28. தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம்(12.06.1988)
நன்றி
01.முனைவர் இரா.மோகன், வ.சுப.மாணிக்கம், சாகித்திய அகாதெமி வெளியீடு,
02.முனைவர் இரா.சாரங்கபாணி, மாணிக்கச்செம்மல், மணிவாசகர் பதிப்பகம்
பின்குறிப்பு
(1992இல் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தலைமையில் இயங்கும் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக்கழகம் சார்பில் நடைபெற்ற மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் தமிழ்ப்பணிகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் தமிழக அளவில் யான் எழுதிய கட்டுரை தங்கப் பதக்கத்திற்கு உரியது என அறிஞர்கள் தேர்ந்தெடுத்துத் தங்கப்பதக்கம் வழங்கினர். அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த முனைவர் ச.மெய்யப்பன் அவர்களின் வழியாக அறிஞர் மாணிக்கனாரை அவர்களின் நூல்கள் வழியாக அறியும் வாய்ப்புப்பெற்றேன். அன்றுமுதல் செம்மல் அவர்களை என் கொள்கை முன்னோடியாக நினைத்துப் போற்றுகிறேன்.செம்மலின் தம்பியார் ஐயா வ.சுப.சொக்கலிங்கம். மதுரை இராம.விசுவநாதன், அறிஞர் தமிழண்ணல், பேராசிரியர் மது.ச.விமலானந்தம் ஆகியோரின் தொடர்பும் பின்னாளில் எனக்கு அமைந்தது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக