நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
பெருஞ்சித்திரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெருஞ்சித்திரனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 நவம்பர், 2016

தனித்தமிழ் இலக்கிய ஆய்வரங்க நினைவுகள்…


முனைவர் வி. முத்து அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றைச் சமற்கிருத வல்லாண்மை, இந்திமொழித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பு, ஊடகப் பெருக்கத்தால் ஏற்பட்டுவரும் மொழிச்சிதைவு என்று பட்டியலிடலாம். இவ்வாறு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தனித்தமிழ் இயக்கத்தாரின் எழுச்சி இவற்றை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதில் துணைசெய்துள்ளது.

மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடம் தனித்தமிழ் என்ற சுடரை ஏற்றி வைத்துள்ளனர். இவர்களின் வழியில் வந்த அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வுகளாலும், உரைகளாலும் தமிழ் மலர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். நூற்றாண்டைக் கடந்து இப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

அயலகத்தில் இருக்கும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து, தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினாலும் நம் நாட்டில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்களில் பணிபுரிவோர்க்குத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு தமிழ் வளர்க்கும் அமைப்பினர் உள்ளனர்.  ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிகழ்வுகள் நடந்து வருகின்றனவே தவிர ஒட்டுமொத்தமான தமிழகத்திலும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த நிகழ்வுகள் நடைபெறாமை எம் போலும் இளையரைக் கவலைகொள்ளவே செய்கின்றது.

தவத்திரு மறைமலையடிகளார் தம் அனைத்துத் துறை ஆராய்ச்சியையும் தமிழ் நலம் நோக்கி அமைத்தமையை இங்குக் கவனத்தில்கொள்ள வேண்டும். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல்துறை ஆய்வுகளை – பணிகளைச் செய்தமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் படைப்பிலக்கியங்கள் வழியாக, குறிப்பாகப் பாட்டு இலக்கியங்கள் வழியாக ஒரு மிகப்பெரும் தமிழ் எழுச்சியைத் தமிழகத்தில் உண்டாக்கியமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழுக்கு இவர்களால் மிகப்பெரும் அடித்தளம் அமைக்கப்பட்டாலும் தனித்தமிழ் என்னும் காலத்தேவைக்குரிய மொழிக்காப்புப் பணிக்கு மக்கள் முன்வராமைக்குரிய காரணத்தைக் கண்டுணரவேண்டும். அரசு இந்த முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுசார் நிறுவனங்கள் பன்மடங்கு முன்வந்து பணியாற்ற வேண்டும். தமிழமைப்புகள் ஒன்றுதிரண்டு தனித்தமிழின் தேவை குறித்துப் பொதுமக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஊடகத்தில் இதுகுறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று கூறத் தோன்றுகின்றது.

பண்பாடு காக்கும் நம் திருவிழாக்களைக் கல்வி நிறுவனங்கள் கொண்டாட முன்வருதல் போல மொழிக்காப்பு முயற்சியையும் ஆர்வமுடன் கொண்டாட முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கும். இந்த நினைவுகளுடன் புதுவையில் தனித்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனித்தமிழ் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இந்த நிகழ்ச்சிக்குத் திரளாக வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமையேற்க, ஆணையர் திரு. த. தியாகராசன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். பாவலர் மு. பாலசுப்பிரமணியன் முன்னிலையுரையாற்றவும், பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் வாழ்த்துரை வழங்கினார். பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவன் உரையாற்றினார். பெருஞ்சித்திரனாரின் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து என்ற மூன்று நூல்களையும் அறிமுகம் செய்வதாக இவர் உரை அமைந்தது.

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்களின் உரை பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பில் அமைந்து, கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா என்னும் இருநூல்களை அறிமுகம் செய்வதாக இருந்தது.

மேற்குறித்த பாவியங்கள் குறித்த வினாக்களுக்கு விடைபகரும் நிகழ்வும் இடம்பெற்றது.


முனைவர் க. தமிழமல்லன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது

முனைவர் க. தமிழமல்லன் உரை

மு.இளங்கோவன் உரை

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி உரை

புதுவைத் தமிழறிஞர்கள்

பார்வையாளர்கள்

திங்கள், 21 நவம்பர், 2016

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்!



தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவையொட்டிப் புதுச்சேரியில் தனித்தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆய்வரங்கில் அறிஞர்கள் ஆய்வுரை வழங்குகின்றனர். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அதன் தலைவர் வி. முத்து அவர்களின் தலைமையில் நடைபெறும் ஆய்வரங்கில் புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் திரு. வி. பி. சிவக்கொழுந்து அவர்களும் பொறியாளர் மு. பாலசுப்பிரமணியன் அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர். ஆணையர் திரு. த. தியாகராசன் அவர்கள் வரவேற்புரையாற்ற உள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும், முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்கள் பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்க உள்ளனர்.

முனைவர் க. தமிழமல்லன் நன்றியுரை வழங்க உள்ளார்.

நாள்: 22.11.2016 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி
இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வேங்கட நகர், புதுச்சேரி-605 011

ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்!


தொடர்புக்கு: 0091 97916 29979

புதன், 26 அக்டோபர், 2016

தமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை!...


பாவலரேறு பெருஞ்சித்திரனார் மு.இளங்கோவனுக்குத் தங்கப்பதக்கம் சூட்டியும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தும் பொழுது(15.10.1989), 
இடம்: செயங்கொண்டம்(அரியலூர் மாவட்டம்)

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது (1989), அருகில் உள்ள ஊரான செயங்கொண்டத்தில் அமைந்திருந்த தமிழோசை நற்பணி மன்றத்தின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்பவர்களுள் முதல்பரிசுக்குரிய கட்டுரை வரைவோருக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பெறும் எனவும் ஓர் அறிவிப்பு ஓலை எங்கள் கல்லூரி அறிக்கைப் பலகையில் ஒட்டியிருந்தது. பேராசிரியர்கள் அந்த அறிவிப்பினைச் சுட்டிக்காட்டிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார்கள். தாய்மொழிவழிக் கல்வி என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வரைய வேண்டும் எனவும் அறுபது பக்கங்கள் கட்டுரை இருக்க வேண்டும் எனவும் போட்டி நெறிமுறைகளை வகுத்திருந்தனர்.

ஆர்வமுடன் பல நூல்களைப் படித்தும், பேராசிரியர்களுடன் உரையாடியும் கட்டுரையை ஒருவாறு உருவம்கொடுத்து உருவாக்கி அனுப்பியிருந்தேன். பாவாணர் நூல்களையும், பெருஞ்சித்திரனார் நூல்களையும் நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுதே என் மாமனார் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்த கரணியத்தால் ஒரு தமிழாசிரியருக்கு உரிய தமிழ்த்தெளிவும், எழுத்துப் பயிற்சியும், தனித்தமிழ் நடையும் கைவரப் பெற்றிருந்தேன். கட்டுரை அனுப்பிய சிலநாள் கழித்துப், போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை அறிஞர்கள் மதிப்பிட்டு, என் கட்டுரை முதல்பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 15. 10. 1989 அன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.

செயங்கொண்டத்தில் தமிழுணர்வுடன் இயங்கிய திரு. மருத மு. நாவளவன், திரு. குமணன் உள்ளிட்ட தோழர்களின் முயற்சியால் விழா மிகச் சிறப்பாக நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு மூத்த தமிழறிஞரும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் தலைமாணாக்கரும், தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஏடுகளின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் வந்திருந்தார். ‘ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி…” எனத் தொடங்கும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடலை நினைவுகூர்ந்து, தமிழின் சிறப்பினை எடுத்துரைத்து ஐயா அவர்கள் அரியதோர் உரை நிகழ்த்தினார்கள். சின்னஞ்சிறு மாணவர்களான எங்களுக்கு அந்த உரை உள்ளத்தில் மொழி, இன, நாட்டு உணர்வினை ஊட்டியது.

தமிழோசை நற்பணி மன்றத்து நிகழ்ச்சியின் நிறைவில் முதல்பரிசு பெற்ற எனக்குத் தமிழின் தலைமகனான பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் திருக் கையால் தங்கப் பதக்கம் சூட்டப்பெற்றது. என் தமிழார்வம் தழைத்து வளர இந்த நிகழ்வு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கடந்த இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பெற்ற அந்தப் படம் இன்று என் பேழைகளை ஒழுங்குசெய்தபொழுது கிடைத்தது. என் பணிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வூட்டும் நல் உள்ளங்களின் பார்வைக்கு இந்தப் படத்தை வைப்பதில் மகிழ்கின்றேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமுன்னர் தலைவணங்கித் தங்கப் பதக்கம் சூடிக்கொள்வதை விடவும் வாழ்வில் வேறு என்ன உயர்வு இருக்கமுடியும்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒப்பம் தாங்கிய சான்றிதழ்