நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

"தமிழ்த்துளிப்பா" சீனு. தமிழ்மணியுடன் ஒரு சந்திப்பு...


சீனு.தமிழ்மணி

புதுச்சேரிக்கும் பாட்டுத்துறைக்கும் நெருங்கியதொடர்புஉண்டு. பாரதியார், பாவேந்தர், தமிழ்ஒளி, வாணிதாசன் வாழ்ந்த இம்மண்ணில் இன்றும் தமிழ் மரபு செழிக்கும் வண்ணம் பல பாட்டு வல்ல அறிஞர்கள் உயிர்ப்புடன் பாடல் புனைந்து வருகின்றனர். புதுப்பாவலர்களும் பல்கிப் பெருகியுள்ளனர். சப்பானியப் பாட்டு வடிவமான துளிப்பா என்னும் ஐக்கூ வடிவை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திப் பாட்டு வரையும் பல பாவலர்களையும் புதுச்சேரி மண் தந்துள்ளது.

ஐக்கூ என்னும் சப்பானிய வடிவம் புத்தமதக் கருத்துகளையும் அழகியல் செய்திகளையும் பேசக்கூடிய வடிவம். எனவே தமிழில் ஐக்கூ எழுதுபவர்கள் சென் புத்தமதக் கருத்துகளையும், அழகியலையும் பாட வேண்டும் என மேல்தட்டு அறிவாளிகள் தமிழகத்தில் இலக்கண வரையறை சொல்லிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய, பெண்ணியச் செய்திகளை உள்ளடக்கி ஐக்கூ பாவினை எழுதிய பெருமை புதுச்சேரியில் வாழும் பாவலரான சீனு. தமிழ்மணி அவர்களுக்கு உண்டு.

சீனு.தமிழ்மணி அடிப்படையில் புதுச்சேரி அரசு அச்சகத்தில் நூற்கட்டுப்பணி செய்யும் அரசு ஊழியர். தனித்தமிழ் ஆர்வம் கொண்ட இவர் பேராசிரியர் ப.அருளி அவர்களுடன் இணைந்து தமிழினத்தொண்டியக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழமைப்புகளுடன் இணைந்து பணி செய்பவர்.பல துளிப்பாக்களை எழுதி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ள இவர் துளிப்பா வரலாற்றில் என்றும் நினைவுகூரத் தக்க பல பணிகளைச் செய்துள்ளார்.அவற்றுள் ஒன்று "கரந்தடி" என்னும் பெயரில் துளிப்பா இதழினை 15.01.1988-இல் வெளிக்கொண்டு வந்தவர்.தமிழில் துளிப்பாவுக்கென வெளிவந்த முதல் இதழ் இதுவாகும்.இன்றும் பொருள் தட்டுப்பாடுகளுக்கு இடையில் விட்டுவிட்டு வெளிவரும் இதழாக இந்த இதழ் உள்ளது.

இவர்தம் பணிகளுக்கு இவரின் உடன்பிறப்பான பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களும் துணையாக உள்ளார். இருவரும் இணைந்து படைப்பு நூல்கள், தொகுப்பு நூல்கள் சிலவற்றையும் தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளனர். படைப்பாளியாக மட்டும் இல்லாமல் செயல் மறவராகவும் விளங்கும் சீனு.தமிழ்மணி அவர்கள் தீவின் தாகம் (புதுவைத்தமிழ்நெஞ்சனுடன் இணைந்து) (இரு பதிப்புகள், 1991,1998), கரந்தடி(2007) என்னும் இரு துளிப்பா நூல்களை வழங்கியவர்.

தீவின் தாகம் நூலட்டை


கரந்தடி நூலட்டை

2003 - இல் "இருபதாம் நூற்றாண்டுப் புதுச்சேரித் துளிப்பாக்கள்" என்னும் நூலினைக் காவ்யா வெளியிட்டபொழுது அதன் தொகுப்பாசிரியராக இருந்தார். இந் நூல் புதுச்சேரியில் 2003 வரை வெளிவந்த ஒன்பது துளிப்பா நூல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பாக விளங்குகிறது.


இருபதாம் நூற்றாண்டு
புதுச்சேரித் துளிப்பாக்கள்

இந்நூல் புதுச்சேரித் துளிப்பா தொடர்பான ஆவணமாக விளங்குகிறது.தமிழில் இதுவரை நடைபெற்ற புதுச்சேரித் துளிப்பா முயற்சிகளைத் தொகுத்துக்காட்டும் நிலையில் மிகச்சிறந்த முன்னுரை ஒன்றைக் கொண்டுள்ளது.இதில் இதுவரை புதுச்சேரியில் வெளிவந்த துளிப்பா  நூல்கள்,ஆய்வுகள்,கட்டுரைகள்,கருத்தரங்குகள்.இதழ்கள்,நூலாசிரியர்கள்,பல்கலைக்கழக,கல்லூரி ஆய்வுகள் பற்றிய பல செய்திகளைக் கொண்டுள்ளது.

துளிப்பாவில் மட்டும் கவனம் செலுத்தாமல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மக்கள் உரிமை, தொழிற் சங்க ஈடுபாடு, பகுத்தறிவு, தமிழ் மேம்பாட்டுப்பணிகளில் ஆர்வம்கொண்டு சீனு.தமிழ்மணி செயல்படுகிறார். பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பில் பொறுப்பாளராகவும் உள்ளார். தமிழ்த் துளிப்பாக்கள் பற்றிய விரிவான செய்திகளை "நா" நுனியில் வைத்திருக்கும் இவருடன் உரையாடியதிலிருந்து...


உங்கள் இளமைப் பருவம் பற்றி...

புதுச்சேரியில் உள்ள சண்முகாபுரம் என்ற பகுதியில் பிறந்தேன்.என் தந்தையார் இரா.சீனுவாசன் அவர்கள் பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராளி. தோழர் வ.சுப்பையாவுடன் இணைந்து ஆசிய அளவில் எட்டுமணி நேர வேலைப்போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிக்கு உழைத்தவர்.இவர் வழியாக மார்க்சியச் சிந்தனை, சுற்றுச்சூழல் ஆர்வம், புத்தக ஆர்வம், இயற்கை வேளாண்மை தொடர்பான எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டது.

தமிழ்மணி என்று என் தந்தையார் பெயரிட்டதால் தமிழ் சார்ந்த ஈடுபாடு எனக்கு இயல்பிலேயே ஏற்பட்டது. பள்ளியிறுதி வகுப்பு வரை படித்த பிறகு அச்சுத்தொழிலில் ஆர்வம் கொண்டு அப்பணிகளைக் கற்றுக் கொண்டேன். அதன் காரணமாக அரசு அச்சகத்தில் பணியில் சேர்ந்தேன்.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

துளிப்பாவில் உங்களுக்கு நாட்டம் வந்தது எப்படி? அதற்கான தங்களின் பங்களிப்பு என்ன?

மரபுப்பாடல்களைப் படிப்பதில் விருப்பம் கொண்டிருந்த நான் ஒரளவு மரபுப்படி பாடல் எழுதும் இயல்பைக் கொண்டிருந்தேன்.புதுப்பாவைப் படிப்பதிலும் ஆர்வம் இருந்தது.பல பாட்டரங்குகளில் புதுப்பா படித்த பட்டறிவும் உண்டு.தலைமை ஏற்று நடத்திய பட்டறிவும் உண்டு.துளிப்பாவில் ஆர்வம் ஏற்பட்டதற்குக் காரணம் அதன் குறுகிய வடிவமும்,அதிரடித் தாக்குதலும்,ஆற்றல் வாய்ந்த ஈற்றடியும் என்னை அப்பாடல்களின் பக்கம் இழுத்தன.அதன் பிறகு துளிப்பாவைப் பற்றிக்கொண்டேன்.

எந்தப் பாடுபொருளைப் பாடினாலும் துளிப்பா வடிவில் எழுதத் தொடங்கினேன். ஈரோடு தமிழன்பன் அவர்களின் சூரியப்பிறைகள் நூல் எனக்கு மிகச்சிறந்த பாதிப்பினை ஏற்படுத்தியது.அதுபோல் அப்துல்ரகுமான், அறிவுமதி உள்ளிட்டவர்களின் நூல்களும் இத்துறையில் எனக்கு ஈடுபாடு வரத் துணை நின்றன. பேராசிரியர் ப.அருளி அவர்களும் எங்கள் முயற்சிக்குப் பக்கத் துணையாக இருந்தார்.

எனவே, தமிழில் பிறமொழி கலவாத தனித்தமிழ்த் துளிப்பாக்களை எழுதினேன். அதனால் பல படைப்புகள் தனிப் பாடல்களாகவும், நூல்களாகவும்வெளிவந்தன.பாட்டரங்கச் சூழலிலும் பாடல் பிறந்தன.இதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு கரந்தடி இதழை வெளிக்கொண்டு வந்தேன்.அந்த இதழ் தமிழகம் முழுவதும் துளிப்பா பற்றிய பற்றார்வத்தை ஏற்படுத்தியது. அதனால் பலர் துளிப்பா எழுத வந்தனர்.துளிப்பாவை மக்கள் வடிவமாக்கினர்.கல்வியாளர்கள்அதனை ஆய்வு செய்யும் சூழல்கள் உருவாகின.தனியாக துளிப்பா பற்றி கருத்தரங்குகள் நடத்தும் அளிவிற்குக் கல்வித்துறையில் சில மாற்றங்கள் நடந்ததையும் இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

என் படைப்புகள் பாடநூல்களிலும் (பன்னிரண்டாம் வகுப்பு, சிறப்புத் தமிழ் நூலில் இடம்பெற்றன). பல கல்லூரி,பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் என் படைப்புகளை எடுத்தாண்டு அறிஞர்கள் மதிப்பளித்தனர். சிலர் இளம்முனைவர் பட்ட, முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக என் படைப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து பலர் எழுதுவதற்கு உரிய சூழலை, பேசுவதற்கு உரிய சூழலை உருவாக்கியுள்ளேன்.

துளிப்பாவின்அடுத்தவளர்ச்சியானநகைத்துளிப்பாவான"சென்றியு",உரைத்துளிப்பாவான "ஐபுன்கள்", இயைபுத் துளிப்பாவான "லிமரைக்கூ" எனப் பல வளர்ச்சி நிலைகளையும் தமிழில் எழுதியுள்ளேன்.

நட்புக்குயில்கள் என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமையில் அறிஞர்களைச் சந்திக்கும் இலக்கிய அமைப்பு தொடங்கினோம். அதில் இலக்கியத் தலைப்புகளில் செய்திகள் பேசப்பட்டன. துளிப்பா தொடர்பிலும் அறிஞர்கள்,படைப்பாளிகள் சந்திக்க அதில் ஒரு சூழலை உருவாக்கினேன்.மீண்டும் அந்த அமைப்பு துளிப்பாவுக்கெனச் செயல்பட உள்ளது.

"கரந்தடி" எனப் பெயர்வைக்கக் காரணம் என்ன?

துளிப்பா என்பது இரண்டு அடிகளில் ஒரு செய்தியையும் மூன்றாம் அடியில் திடீரெனத் தாக்கும் செய்தியையும் கொண்டிருக்கும். எனவே மறைந்திருந்து தாக்கும் போர்முறையான கெரில்லா போர்முறையை நினைவூட்டும் வகையில் கரந்தடி என்னும் பெயர் அமைத்தேன்.கரவு என்றால் மறைவு என்றும் பொருள் உண்டு.மறைந்திருந்துதிடீரெனத் தாக்குதல் தொடுக்கும் போராளியைப் போல் இப்பாடல் வரிகளும் எதிர்பாராத தாக்குதலைப் படிப்பவர் உள்ளத்தில் ஏற்படுத்தும்.எனவே துளிப்பா வடிவங்களில் வெளிவரும் பாட்டு இதழுக்குக் கரந்தடி என்னும் பெயர் பொருத்தமாக அமைந்தது.


கரந்தடி இதழ்

அண்மைக் காலப் பணிகளில்...

நட்புக்குயில்கள் அமைப்பின் மூலம் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த நூல்களை அறிமுகம் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். புதுச்சேரிக்கு வருகை தரும் தமிழ், கலை- இலக்கிய, சுற்றுச்சூழல், மக்கள்(மனித) உரிமைஆர்வலர்கள், குறும்பட இயக்குநர்கள், புலம்பெயர்ந்த தமிழர்களை வரவேற்று அவர்களை இலக்கிய ஆர்வம் உடையவர்களுடன் உரையாடுவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றேன்.

அனைத்துத் துறைகளிலும் குறிப்பாகத் தமிழ்வழிக்கல்வி,ஆட்சிமொழியாகத் தமிழ் இடம் பெறவும், சுற்றுச்சூழல் காக்கப்படவும்,மக்கள் உரிமைப் பேணப்படவும் பல பணிகளைச் செய்து வருகின்றேன்.

இவரின் துளிப்பாக்களில்,

நண்டுகள், நத்தைகள்
பார்க்கமுடியவில்லை!
பசுமைப்புரட்சியின் வன்முறை

எனச் சுற்றுச்சூழல் சீர்கேட்டை மூன்றே வரிகளில் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.

கோடை
மின்துறையைத் திட்டியபடி
ஓய்வுபெற்ற மின் ஊழியர்

என இன்றைய மின்வெட்டைக் கண்டிக்கும்படியான சமகாலப் பதிவுகளையும் சீனு.தமிழ்மணி எழுதியுள்ளார்.

விற்ற மனையே
விற்கப்படுகிறது.
"ரியல்" எஸ்டேட்

என நாட்டு நடப்புகளின் பதிவாகவும் இவரின் துளிப்பாக்கள் உள்ளன.

ஆங்கிலம் பேசும்
தமிழ்க்குழந்தை
தமிழ்பேசும் ஆங்கிலப்படம்!

 என இன்றைய மக்களின் ஆங்கில விருப்பத்தையும் ஆங்கிலத் திரைப்படங்கள் தமிழ் விளக்கங்களுடன் வருவதையும் சீனு.தமிழ்மணி நமக்கு நினைவூட்டுகிறார். இவ்வாறு தமிழ் மக்களைப் பாதிக்கும் உலகமயச் சூழலை நயம்படக் கண்டிக்கும் தமிழ்மணி அதன் மாற்றத்திற்கான முயற்சிகளிலும் முன்னிற்கிறார்.

சீனு. தமிழ்மணி வாழ்க்கைக்குறிப்பு:

பிறப்பு : 30.07.1956
பெற்றோர் : இரா.சீனுவாசன்-தனலட்சுமி
உடன் பிறந்தோர்:   சீனு. திருமுகம், சீனு. திருஞானம், சீனு. சம்பந்தன், சீனு. தமிழ்நெஞ்சன், த. செயச்செல்வி.

பணி: அரசு அச்சகத்தில் நூற்கட்டுநர்

நூல் வெளியீடு : தீவின் தாகம்(1991,1998),கரந்தடி(2007)
இதழ் : கரந்தடி

முகவரி :
சீனு.தமிழ்மணி,
50,நிலையத்தெரு,சண்முகாபுரம்,புதுச்சேரி-605 009
செல்பேசி : 9443622366
இல்லம் : 0413 - 2278973

நனி நன்றி : தமிழ் ஓசை,களஞ்சியம்,சென்னை,தமிழ்நாடு(07.09.2008)

கருத்துகள் இல்லை: