நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

அயலகத் தமிழறிஞர்கள் வரிசை-1 முனைவர் முரசு நெடுமாறன்(மலேசியா)


முனைவர் முரசு.நெடுமாறன்

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகச் சென்றமுறை பொறுப்பேற்ற பொழுது பாவேந்தர் பாரதிதாசன் விருதை மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களுக்கு அறிவித்தார்.அப்பொழுது உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.ஏனெனில் தமிழக அரசு இதற்குமுன் அறிவித்த பரிசுகள் யாவும் தமிழகத்தைச் சார்ந்த அறிஞர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது.

'வடவேங்கடம் தென்குமரி'க்கு இடையில் தமிழர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் இனமாகத் தமிழ் இனம் உள்ளது என்பதைக் கலைஞர் அவர்கள் புரிந்துகொண்டு பரிசு வழங்கியது பாராட்டுக்கு உரியது.அதுநாள்முதல் தமிழக அரசின் தமிழ் சார்ந்த செயல்பாடுகள்,பரிசுகள்,அறிவிப்புகள் யாவும் உலகத் தமிழர்களை மனத்தில்கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பது வரலாறு.

தமிழகத்தைவிட்டு அயல்நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் தாய்த் தமிழகத்தினைக் கல்வி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் பின்பற்றியே வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்து இலக்கியப் போக்குகளை,தமிழ் அறிஞர்களை அறிந்து தத்தம் நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.ஆனால் அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் படைக்கும் இலக்கியங்களை, அவர்கள் செய்யும் ஆய்வுகளை நாம் அறிய வாய்ப்பில்லாமல் பலகாலம் இருந்தோம். ஆனால் ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வுக்குப் பின்னும், கணிப்பொறி, இணையப் பயன் பாட்டிற்குப் பிறகும் அயல்நாட்டு இலக்கியங்களை அறியும் போக்கு தமிழகத்தில் தொடங்கி விட்டது.

அயல் நாட்டு அறிஞர்கள் தமிழகத்திற்கு வருவதும்,தமிழகத்து அறிஞர்கள் அயல் நாட்டினருடன் தொடர்பு கொள்வதும் இன்று எளிதாகிவிட்டதால் அயலகத்தமிழ் பற்றி இன்று அறியமுடிகிறது.அயலகத்தமிழ் இலக்கியங்கள் தமிழகத்தில் பாடநூல்களாக இடம்பெற்று வருகின்றன.அயல்நாட்டு அறிஞர்கள் தங்கள் நாட்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்துள்ள போக்குகளை நூல்கள்,இதழ்கள்,இணையும் வழியாக நமக்குத் தெரிவித்ததால் அந்நாட்டு இலக்கிய வளர்ச்சியை அறிந்து மகிழமுடிகிறது.அவ்வகையில் மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறன் அவர்களின் வழியாக உருவான மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம் மலேசிய நாட்டின் இலக்கியப்போக்கை நமக்கு எடுத்துரைக்கிறது.மலேசியத் தமிழ்க்கல்வி வரலாற்றிலும், இலக்கிய வளர்ச்சியிலும், மலேசிய இலக்கியங்களை அறிமுகம் செய்வதிலும் முன்னிற்கும் முரசு நெடுமாறன் அவர்களின் வாழ்க்கையை இங்கு அறிமுகம் செய்கிறோம்.

முரசு நெடுமாறன் அவர்கள் மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் உள்ள 'கேரி தீவில்' 14.01.1937 இல் பிறந்தார்.பெற்றோர் (இ)ராசகிள்ளி சுப்புராயன்-முனியம்மை. இவரின் இயற்பெயர் கணேசன் ஆகும்.தமிழார்வம் வரப் பெற்றதும் நெடுமாறன் என மாற்றிக்கொண்டார். ஆவணங்களிலும் இவ்வாறு பதிவானது. முரசு என்பது பெற்றோர்களின் பெயர்ச் சுருக்கம் ஆகும்.மேலும் தம் படைப்புகளைப் போற்றி வெளியிட்ட தமிழ்முரசு இதழின் நினைவாகவும் முரசு இடம் பெறலாயிற்று. இயற்பெயரும் புனைபெயரும் மறைந்து முரசு என்ற பெயரே இன்று உலக அளவில் தெரியலாயிற்று.முரசு அஞ்சல் என்று இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நன்கு தெரியும்.இவர்களின் நிறுவனம் அதுவாகும்.

முரசு நெடுமாறனின் பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தவர்கள்.எனவே முரசு தாம்பிறந்த 'கேரி தீவில்' தொடக்கக் கல்வியைப் பெற்றார்.இவர் பயின்ற இடம் பள்ளிக்கூடம் என்று சொல்லமுடியாதபடி குழந்தைகள் காப்பகமாகவும், கோயிலாகவும் இருந்தது.பின்பு சாதாரண தனிக்கட்டடமாக இருந்தது.பின்னர் கிள்ளானில் உயர்நிலைக்கல்வி பெற்றார்.தனிப்பட்டமுறையில் பயின்று தமிழ் ஏழாம்வகுப்பு தேர்ச்சி பெற்றார்.ஏழாம்வகுப்பு என்பது அக்காலத்தில் ஆசிரியர் பணிபுரிவதற்குரிய ஆயத்தக் கல்வியாகும். தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆவதற்குரிய கல்வி பெற்றிருந்தும் ஆசிரியர் பணி இவருக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர் கற்றிருந்த தையற்கலைத் தொழில் இவருக்குக் கை கொடுத்தது.

தையற்கலைத் தொழிலால் வாழ்க்கை நடத்திய முரசு அவர்களுக்கு 1963 இல் ஒரு பொற் காலத்திற்கான கோட்டைக்கதவு திறக்கப்பட்டது.ஆம்!. தற்காலிக ஆசிரியர் பணிபுரியலனார். 1973-1976 காலகட்டங்களில் விடுமுறைக்கால ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கற்றுத்தகுதி மிக்க ஆசிரியர் ஆனார். அக்காலத்தில் மலாய்,ஆங்கிலக் கல்வியில் ஈடுபட்டுச் சொந்த முயற்சியாலும்,சிறப்புப் பயிற்சியாலும் மூன்றாம் படிவத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ஐந்தாம் படிவத்தில் தேர்வு எழுதிப் பொது நிலை தேர்ச்சி பெற்றார். பின்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழிக்கல்வி வழியாக இலக்கிய இளவல்(பி.லிட்), முதுகலை(எம்.ஏ) பட்டங்களையும் பெற்றார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் முனைவர் பட்டத்தினைப்(1994-2002) பெற்றவர்.

முரசு அவர்கள் தற்காலிக ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி,பின்பு தகுதி பெற்ற ஆசிரியராக விளங்கி 1992 ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுபெற்றார்.பணி ஓய்வுக்குப் பிறகு ஒப்பந்த ஆசிரியராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தார்.

முரசு ஆசிரியர் பணியில் இருந்த காலகட்டத்தில் மலேசியக் கல்வித்துறையில் பல புதிய உத்தி முறைகளைப் பின்பற்றித் தமிழ் கற்றலை எளிமைப்படுத்தினார்.இதனால் மாணவர்களின் உள்ளங் கவர்ந்த ஆசிரியரானார்.1980 இல் புதி பாடத்திட்டம் மலேசியாவில் நடைமுறைக்கு வந்தபொழுது இவரின் கல்வி நடவடிக்கைகள், அணுகுமுறைகள் அதில் இடம்பெற்றன.மலேசியக்கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகம் முதலான பல துறையினரும் இவர்தம் கல்விப் புலமையைப் பயன்படுத்திக்கொண்டனர்.

1996 இல் கல்வி ஒலிபரப்புத்துறையில் பள்ளி ஒலிபரப்புத் தொடங்கியபொழுது இத்துறையில் பகுதிநேரக் கலைஞராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் அவ் ஒலிபரப்பு நிறுத்தப்படும் வரை தொடர்ந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுதியா இசைப்பாடல்கள் எழுதி(ஏறத்தாழ 600) மாணவர்களுக்கு இசைவழியாகக் கல்வியார்வம் ஊட்டியவர்.

முரசு நெடுமாறன் மலேசியாவில் ஆசிரியர் பணி புரிந்ததுடன் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தில் பயிலரங்குகள்,பாடத்திட்டங்கள்,கருத்தரங்குகள்,ஆய்வு அரங்குகள் போன்றவற்றில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு அனைவரும் மதிக்கும் வகையில் பணிபுரிந்தவர்.முரசு நெடுமாறனின் தமிழ் இலக்கியப் பணியை மதிக்கும் வகையில் சென்னையில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் இவரை வருகைதரு பேராசிரியராக(2001-02) அமர்த்திப் பெருமை செய்தது.மலேசியாவில் புத்ரா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.

முரசு நெடுமாறன் அவர்கள் பொதுத்தொண்டு புரிவதில் மிக்க ஈடுபாடு உடையவர்.பல்வேறு அமைப்புகளில் இடம்பெற்றுத் திறம்படப் பணிகள் செய்தவர்.தாம் வாழ்ந்த 'கேரி தீவு' பகுதியில் தம் பதினாறாம் அகவையில் செய்த தொண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். தோட்டங்களில் திருவிழாக்காலங்களில் நடத்தப்படும் நாடகங்களில் முரசு பங்குகொண்டவர். இதனால் இவருக்குச் செல்வாக்கும் மதிப்பும் கூடியது.இவரின் தொழிற்சங்க ஈடுபாட்டால் தோட்டத்தொழில் நிருவாகத்திற்கு இவர்மேல் வெறுப்பு ஏற்பட்டது.

எனவே இவர் தந்தையார் பார்த்த கங்காணி வேலையை இழக்கவேண்டியதானது.இவரும் தோட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்பும் வந்ததுஆனால் நல்ல உள்ளம் படைத்த சிலரால் முரசு அங்கேயே பணியாற்றும் நிலை ஏற்பட்டது.தமக்குப் பாதுகாப்பாகவும் மக்கள் தொண்டு செய்ய வாய்ப்பாகவும் முரசு ம.இ.கா. என்னும் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.இவரின் அரசியல் ஈடுபாட்டை மேனாள் அமைச்சர் மாணிக்கவாசகம் அவர்கள் பல மேடைகளில் புகழ்ந்து பேசியுள்ளார்.

முரசு நெடுமாறன் நல்ல கலை உணர்வு உடையவர். இவரின் தாத்தா திரு.மாரிமுத்து அவர்கள்(பெரிய கங்காணி) அனைவராலும் மதிக்கப்பட தெருக்கூத்துக் கலைஞர்.(முரசுவின் முன்னோர்கள் தெருக்கூத்துக்குப் புகழ் பெற்ற உத்திரமேரூர் பகுதியிலிருந்து சென்றவர்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.)இவருக்குக் கீழ் ஒரு நாடகக் குழு இருந்தது.தாத்தா வழியாக முரசு பாடல் பாடுவது,நடிப்பது போன்ற கலைகளைக் கைவரப்பெற்றார்.நல்ல தங்காள் கதை,ஏணி ஏற்றம் போன்ற இசை நாடகங்களையும் இவர் வழியாக முரசு பெற்றார். முரசு தோட்டப்புறங்களில் பல நாடகங்களை அரங்கேற்றியது போல் -ஆசிரியர் பணியாற்றும் காலங்களிலும் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.

முரசு நெடுமாறன் நல்ல படைப்பாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர்.பல நூல்களை எழுதி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் தந்துள்ளார்.மலேசியநாட்டில் வெளியிடப்பட்ட தமிழ் தொடக்க,இடைநிலைப் பள்ளிப்பாட நூல்களில் இவர் படைப்புகள் பல இடம்பெற்றுள்ளன. சிறுவர் பாடல்கள்,நாடகம்,கதை,கட்டுரை போன்ற துறைகளில் இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் என்னும் பெயரில் இவர் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து உருவாக்கியுள்ள பெருங்களஞ்சியம் இவருக்கு உலக அளவில் நிலைத்த புகழைத் தந்தது.

மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம்

மலேசியா, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் 1887முதல் 1987 வரை எழுதியுள்ள கவிதைகளை 40 ஆண்டுகளாகத் தொகுத்து முரசு நெடுமாறன் வெளியிட்ட நூலே மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ஆகும்.இந்நூல் 1080 பக்கம் கொண்டது.254 கவிஞர்கள் எழுதிய 650 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.ஏறத்தாழ ஒரு இலட்சம் கவிதைகளிலிருந்து 650 கவிதைகள் சிறப்பு நோக்கித் தொகுக்கப்பட்டுள்ளன.14 உட்தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.


மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

இந்நூல் வெறும் களஞ்சியமாக மட்டும் அமையாமல் மலேசியத்தமிழ் இலக்கிய வரலாறு, மலேசிய நாட்டுவரலாறு,தமிழக வரலாறு எனப் பல சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ளது. மலேசியத் தமிழர்களின் அனைத்துத் துறை பற்றிய செய்திகளையும் தாங்கியுள்ளது. மலேசியாவில் வெளிவந்த,வெளியாகும் இதழ்கள், நூல்கள், ஆண்டுமலர்கள், சிறப்பு வெளியீடுகள் எனப் பலவற்றைப் பற்றிய செய்திகள் உள்ளன.ஒரு களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்றால் இந்நூலைப் பார்த்துத் தொகுக்கவேண்டும் என்ற அளவில் இது மாதிரி நூலாக விளங்குகிறது.

முரசு நெடுமாறன் தமிழகத்தில் நடந்த பல்வேறு ஆய்வரங்குகள்,கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்தவர்.தமிழகத்தின் புகழ்பெற்ற ஏடுகள் பல இவரின் சிறப்புச்செவ்வியை வெளியிட்டுள்ளன.தொலைக்காட்சிகளில் தோன்றியும் இலக்கிய அரங்குகளில் கலந்துகொண்டும் மலேசியத்தமிழ் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முரசு நெடுமாறனின் தமிழ்ப்பணியைப் பாராட்டி அரசும்,தமிழ் அமைப்புகளும் பல்வேறு பாராட்டுகளை வழங்கியுள்ளன.பரிசுகளைத் தந்துள்ளன.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1997 இல் இவரின் மலேசியத் தமிழ்க் கவிதைக்களஞ்சியத்தைத் தேர்ந்தெடுத்து வெ.மாணிக்கவாசகம் புத்தகப்பரிசான 5000 மலேசிய வெள்ளியை அளித்தது.தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்தது.சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் இவருக்குத் தமிழவேள் என்ற விருது வழங்கிச் சிறப்பித்தது.

முரசு நெடுமாறன் வளர்ந்துவரும் அறிவியல்,தொழில் நுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒலிப்பேழைகளிலும்,குறுவட்டுகளிலும் தம் படைப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.பாடிப்பழகுவோம் என்னும் தலைப்பில் இவர் உருவாக்கிய குறுவட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

முரசு நெடுமாறன் செயற்கரிய பல செயல்களைச் செய்த பெரியவராக விளங்கும் அதே வேளையில் தம் குடும்பப் பணிகளிலும் செம்மையாக வாழ்ந்துள்ளார். இவரின் துணைவியார் திருவாட்டி சானகி(மதி) அம்மையார்.1960 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முரசு முத்தெழிலன்(முரசு அஞ்சல்),இளவரசு எனும் ஆண்மக்கள்.அமுதா.அல்லிமலர் என்னும் இரு பெண்மக்கள்.

முத்தெழிலன் கணிப்பபொறி வல்லுநராக உலக அளவில் மதிக்கப்படுபவர்.முரசு அஞ்சல் செயலியைக் கண்டுபிடித்தவர். தமிழைக் கணிப்பொறிக்குக் கொண்டு வந்த முன்னோடிகளுள் ஒருவர்.உத்தமம் என்ற தமிழ் இணைய அமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவர்.முரசு நெடுமாறனின் இளைய மகன் இளவரசு.இவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர்.பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

முரசு அவர்களின் இரு பெண்மக்களும் இசையறிவு பெற்றவர்கள்.முரசு எழுதிய பாடலுக்கு அவர் மகன் இசையமைக்க அவர் மகள் பாடுவதால் அவரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் எனல் பொருந்தும்.அவ்வகையில் பாடிப்பழகுவோம் என்ற ஒலிப்பேழை பத்துப் பாடல்களுடன் 1998 இல் உருவானது.இரண்டாம் பகுதியும் அண்மையில் வெளிவந்துள்ளது.

முரசு நெடுமாறன் தேர்வெழுதும் மாணவர்களுக்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசத் தமிழ்வழிகாட்டி வகுப்புகளை நடத்திவருகிறார்.இதனால் எண்ணற்ற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.மேலும் இவர் தமிழ்ப்பண்பாடு மலேசியாவில் செழித்துவளர 1978 முதல் மாணவர் பண்பாட்டு விழாக்களை நடத்திவருகிறார். மாணவர்களைப் படைப்பாற்றல் மிக்க வர்களாக்க இவ்விழா பெரிதும் உதவுகிறது.கல்வியாளர்கள்,சமுதாய அரசியல் தலைவர்களால் பெரிதும் வரவேற்கப்படும் விழாவாக இது மலேசியாவில் விளங்குகிறது.

எளிய தமிழ்க்குடும்பத்தில் பிறந்து,கொள்கையுணர்வுடனும்,தமிழ்ப்பற்றுடனும் விளங்கி, மனைத்தக்க மாண்புடையவரைப் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழும் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் தம் பணிகளுக்கு என்றும் துணைநிற்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தின் அருள்திரு பங்காரு அடிகளாரையும் அவர்களின் துணைவியார் புலவர் இலக்குமி பங்காரு அடிகாளாரையும் உயர்வாகப் போற்றுபவர்.

(தமிழ் ஓசை நாளேட்டில் இணைப்பாக வெளிவரும் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் வரிசை 1 என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை.
நாள் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை)

நனி நன்றி:
தமிழ் ஓசை,சென்னை,தமிழ்நாடு

8 கருத்துகள்:

maraimalai சொன்னது…

மிகச் சிறப்பான கட்டுரை.சிறந்த தமிழறிஞர்:எழுச்சிமிகு பாவலர்.அவரது கவிதைத்திறம் பற்றியும் குழந்தை இலக்கியப்பணி குறித்தும் விரிவாக எழுதியிருக்கலாமே?
அன்புடன்,மறைமலை

சுப.நற்குணன் - மலேசியா சொன்னது…

எங்கள் மலேசிய நாட்டின் தமிழ் அறிஞர், பாப்பா பாவலர் முனைவர் முரசு நெடுமாறன் ஐயா அவர்களைப் பற்றிய கட்டுரையை மிகச் சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள். மெத்த மகிழ்ச்சி.

அயலகத் தமிழ் அறிஞர்களைத் தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் மக்கள் ஓசை நாளேட்டுக்கும், தமிழகம் மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு இணையம்வழி அறிமுகப்படுத்தியிருக்கும் தங்களுக்கும் மலேசியத் தமிழர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

இந்த வரிசையில் இன்னும் பலர் இடம்பெறுவர் என நம்புகிறேன். தாங்கள் விரும்பினால், அடியேன் இங்கிருந்து செய்தி விடுத்துவைக்க அணியமாக இருக்கிறேன்.

Duraiarasan துரையரசன் சொன்னது…

முரசு நெடுமாறன் பற்றிய கட்டுரை தமிழர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவரை சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அப்பணியைத் தாங்கள் செய்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்.

Duraiarasan துரையரசன் சொன்னது…

முரசு நெடுமாறன் பற்றிய கட்டுரை தமிழர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவரை சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அப்பணியைத் தாங்கள் செய்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்.

Duraiarasan துரையரசன் சொன்னது…

முரசு நெடுமாறன் பற்றிய கட்டுரை தமிழர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவரை சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அப்பணியைத் தாங்கள் செய்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்.

Duraiarasan துரையரசன் சொன்னது…

முரசு நெடுமாறன் பற்றிய கட்டுரை தமிழர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. அவரை சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு. அப்பணியைத் தாங்கள் செய்துள்ளீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

பேராசிரியர் க.துரையரசன்
கும்பகோணம்.

தமிழ்த் தோட்டம் சொன்னது…

தமிழிற்கினிய அய்யா அவர்களுக்கு வணக்கம்.
வெளிநாடு வாழ் தமிழ் அறிஞர்களை அவர்தம் தமிழ்ப்பணிதனை தமிழ்நாட்டு மக்களுக்கு,. தமிழ் ஓசை மூலம் பரப்புவது போற்றுதலுக்குரியது.
தொடருக தங்கள் தமிழ்ப் பணி!!

அன்புடன் உங்கள் யுவராசன்.

சதீசு குமார் சொன்னது…

அண்மையில் முனைவர் முரசு நெடுமாறன் ஐயா அவர்களை ஒரு பயிற்சிப் பட்டறையில் சந்திக்க நேர்ந்தது. பழகுவதற்கு மிக இனிமையானவர்.

நூற்றுக்கணக்கான குழந்தைப் பாடல்களை இயற்றியவர், ஒரு குழந்தையாகவே மாறியிருந்தார். அவர் பேசியது அவ்வளவு இனிமையாக இருந்தது.

அவரைப் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றிகள்.