நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

புலம்பெயர்ந்த கவிஞர் நளாயினியுடன் ஒரு சந்திப்பு...


கவிஞர் நளாயினி

இணையம் வழியாக அமைந்த நட்பில் சுவிசர்லாந்தில் வாழும் நளாயினி தாமரைச்செல்வன் அவர்களின் நட்பு தனிவகையானது.இணையத்தில் உலா வரும்பொழுது தற்செயலாக நளாயினியின் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.அழகிய கவிதைகள்,ஓவியங்கள்,ஒளிப்படங்கள் கண்டேன். அவர் பக்கம் ஒரு கலையுள்ளம் கொண்ட சிற்பியின் கைத்திறனைக் காட்டியது.அடிக்கடி மின்னஞ்சலில் உரையாடிய நட்பு வளர்பிறைபோல் வளர்ந்தது.

அவர்கள் வாழும் சுவிசர்லாந்திலிருந்து இந்த ஆண்டு கோடைவிடுமுறையில் உலக நாடுகளைச் சுற்றிப் பார்க்க நினைத்தபொழுது இந்தியாவிற்குக் குறிப்பாகத் தமிழகம்,புதுச்சேரி வரும்படி அழைப்பு விடுத்தேன்.அவர்களின் குழந்தைகளுக்கு நுழைவுச்சீட்டுக் காரணங்களால் அவர்கள் இந்தியாவிற்கு நேரே வராமல் தங்கள் தாய்நாடான இலங்கை சென்று, அங்கிருந்து உரிய ஆவணங்களைப் பெற்றுத் தமிழகத்திற்கு வந்தார்கள்.

ஒருநாள் இரவு பத்து மணியிருக்கும் "சிதம்பரத்திலிருந்து நளாயினி பேசுகிறேன்" என்று தொலைபேசியில் குரல் கேட்டது.தில்லை நடராசப் பெருமானை வழிபட்ட அவர்கள் அங்கிருந்து அழைத்தனர்.பல நாட்களாக மின்னஞ்சலில் தொலைபேசியில் உரையாடிய இணைய நண்பர் ஒருவர் நம் இல்லத்திற்கு வர ஆர்வப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.உடனே சிதம்பரத்திலிருந்து புறப்பட்டால் இரவு 12 மணிக்குப் புதுச்சேரி வீடு வந்து சேரலாம் என்றேன்.

அதன்பிறகு நள்ளிரவில் பெண்கள் ஆண்துணையின்றிப் பயணம் செய்வது நல்லதல்ல என நம்நாட்டு நிலை நோக்கிச் சொன்னேன்.அவர்கள் கோபப்பட்டார்கள்.நீங்கள் ஏன் பெண்களைப்போல் அஞ்சுகின்றீர்கள்?நாங்கள் அனைவரும் தற்காப்புக் கலை பயின்றவர்கள்.அஞ்சாதீர்கள் என எனக்கு ஊக்கம்கொடுத்துச் சொன்னார்கள்.என் விருப்பப்படியே அவர்கள் பேருந்தேறி,எங்கள் இல்லம் வரும்பொழுது நள்ளிரவு பன்னிரண்டு மணி.

நளாயினியுடன் அவர்களின் மகள் சிந்து(எட்டாம் வகுப்புப்படிப்பவள்)யாதவன் (ஆறாம் வகுப்புப் படிப்பவன்) வந்திருந்தனர்.இருவரும் நம் வீட்டில் பல்லி,கரப்பான் பூச்சி இருக்குமென அஞ்சி நடுங்கினர்.இதற்கு நம் வீடு புதுச்சேரியின் நடுவிடத்தில் ஓரளவு தூய்மையான வீடுதான்.தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் அழுக்கு, குப்பை, சாய்க்கடை, இரைச்சல்,போக்குவரவு நெருக்கடி எனச் சலித்துக்கொண்டனர். அவர்கள் வாழும் சுவிசர்லாந்து நாட்டின் சிறப்பையும் நம் நாட்டில் பல நிலைகளில் உள்ள குறைகளையும் எடுத்துரைத்தனர். அவர்களிடம் உரையாடிப் பெற்றதிலிருந்து...

நளாயினி இலங்கையிலுள்ள சிறுப்பிட்டியில் பிறந்து தொடக்கக் கல்வியைப் புத்தூர் சிறீ சோமசு கந்தாவிலும்,உயர் கல்வியை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றார். போராட்டச் சூழலால் கல்வியைத் தொடரமுடியாமல் இந்தியா வந்து திருச்சிராப்பள்ளி புனித சிலுவையர் மகளிர் கல்லூரியில் ஓர் ஆண்டு கல்வி பயின்றார்.பின்னர் நாட்டில் அமைதி திரும்பும் என நினைத்து தாயகம் திரும்பினார்.மீண்டும் சண்டை தொடரவே 1991 இல் சுவிசர்லாந்து நாட்டிற்குப் புலம் பெயர்ந்தார்.இந்தியஅமைதிப்படை அமைதிப்பெயரில் பெண்களை,ஈழத்தமிழர்களின் உடைமைகளைச் சூறையாடிய காலம் அது.

பதினாறு ஆண்டுகளாகச் சுவிசில் வாழ்ந்து வரும் இவர் நங்கூரம்,உயிர்த்தீ என்னும் இரு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.பூக்கள் பேசினால்,உயிர்கொண்டு திளைத்தல் என்னும் இருநூல்கள் விரைவில் வெளியிட எண்ணியுள்ளார்.இவரின் தந்தாயார் பொன். இளையதம்பி அவர்கள் இசையறிஞர்.ஒவ்வொரு ஆண்டும் இவர் வாழ்ந்துவரும் தென்மார்க்கிலிருந்து தமிழகம் வந்து இசைவிழாக்களைக் கண்டு களிக்கும் அளவுக்கு இசையுள்ளம் கொண்டவர். தாயார் இ.அங்கயற்கண்ணி அவர்கள் ஆசிரியையாக இருந்து இளைப்பாறியவர்.

நளாயினி பதினேழு,பதினெட்டு அகவையில் கவிதை எழுதத் தொடங்கி,இன்று இணைய இதழ்களிலும் அச்சு இதழ்களிலும் எழுதும் ஆற்றல் பெற்றவராக விளங்குகிறார். பெற்றோரின் ஊக்குவிப்பாலும் கணவர் தாமரைச்செல்வன் ஊக்குவிப்பாலும் இன்று பல இதழ்களில் எழுதும் வாய்ப்புப்பெற்றவர்.புலம்பெயர் வாழ்க்கையைப் பதிவு செய்யும் பாவலராக விளங்குகிறர். அயல்நாட்டில் வாழ்ந்த தனிமை வாழ்க்கையும்,புலம்பெயரக் காரணமான தாய்நாட்டுச் சூழலும் இவரின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன.காதலை நளினமாகப் பாடும் வல்லமை வாய்ந்தவர்.

புலம்பெயர் தமிழர்கள் வானொலி நடத்திய சூழலில் வானொலிக்காக இவர் மிகுதியாகக் கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் யாழ்,வார்ப்பு, அப்பால்,சூரியன், பதிவுகள்,ஊடறு, நிலாமுற்றம்,திண்ணை,திசைகள்,தமிழமுதம்,தமிழ் மன்றம் உள்ளிட்ட இணையத்தளங்களில் இவரின் படைப்புகள் வந்துள்ளன.அச்சு இதழ்களில் சக்தி,ஈழநாடு,வடலி,ஊடறு,பெண்கள் சந்திப்பு மலர்,அவள் விகடன்,பூவரசு முதலியவற்றில் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன.தமிழகத்திலும் அயல்நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்கள்,கவிஞர்கள் நளாயினினுக்கு அணுக்கமான நண்பர்களாக இருந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும்,புலம்பெயர் வாழ்க்கையில் உள்ள இன்னல்களும்,பண்பாட்டு நிலைப்படுத்தத்தில் தடுமாற வேண்டிய அயல்தேச வாழ்க்கையும் பற்றி பல செய்திகளை உரையாடினோம்.

சுவிசர்லாந்தில் கல்வி முறை பற்றி...

சுவிசர்லாந்து நாட்டில் கல்விமுறைக்கும் நம் கல்விமுறைக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு.இங்கு மழலை வகுப்பு,தொடக்கக் கல்வி,மேல்நிலைக்கல்வி,பல்கலைக்கழகக் கல்வி,தொழில்கல்வி என கல்வித்தரம் அமைகின்றன.மேல்நிலைக்கல்வி கற்றவர்கள் பயிற்சி பெற்று பணிக்குச் செல்லலாம்.அல்லது பல்கலைக்கழகப் படிப்பைத் தொடரலாம்.இங்கு ஒன்பது பல்கலைக்கழகங்கள் உள்ளன.தொழில்நுட்பப் பல்கலைகழகம் ஒன்று உள்ளது.கல்வி பெரும்பாலும் அரசு கல்விதான்.தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்பதால் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனர்.

தொடக்க வகுப்பு மாணவர்கள் ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் படித்தால் போதும்.எட்டாம் வகுப்பு படிப்பவர் ஒன்றரை மணிநேரம் ஒரு நாளைக்குப் படித்தால் போதும்.ஒன்று முதல் ஆறு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் காலையில் 8.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். 11.30 வரை நடக்கும். பிறகு 1.30 முதல் 4.30 வரை வகுப்புகள் நடக்கும்.அதுபோல் மழலை வகுப்புகள் காலை 9 மணிக்குத் தொடங்கிப் பதினொரு மணிக்கு முடியும்.11-2 மணிவரை இடைவேளை.2-3 படிப்பு. பிறகு வெளியேற்றிவிடுவார்கள்.

சுவிசர்லாந்தில் பிரெஞ்சு மொழியும்,டாயிட்ச் (duetcsch) என்னும் செருமன் மொழியும் பயன்பாட்டில் உள்ளன. டாயிட்ச் (duetcsch) என்னும் செருமன் மொழி பேசுவோரும், பிரெஞ்சு மொழி பேசுவோரும் அதிகமாக உள்ளனர். வகுப்பறைகளில், வெளியிடங்களில் தூய்மை பேணுவதைக் கற்பிக்கின்றனர். குழந்தைப் பருவத்திலேயே கீழே விழும் குப்பைகளைப் பொறுக்க பயிற்சியளிக்கின்றனர்.மகிழ்ச்சியாக கற்பிப்பதே அங்கு நடைமுறையில் உள்ளது.ஒருவருடன் ஒருவர் இணக்கமாக வாழ்வதே அங்கு வழக்கமாக உள்ளது.உலகின் பல நிறுவனங்கள் அங்கு உள்ளன.ஐ.நா.சபை,வணிக அவை உள்ளிட்டவை இதில் அடங்கும். நகரம். சிற்றூர், வயல்வெளி என எங்கும் தூய்மையைக் காணமுடியும்.

தாய் கருவுற்ற நாள்முதல் குழந்தை வளர்ப்பு,பராமரிப்பு பற்றிய கலந்தாய்வு தொடங்கிவிடுகிறது.குழந்தைகளை அடிப்பது என்பது அங்கு இல்லை. குழந்தைகளைக் கவனிக்காமல் விளையாட்டாக விட்டுவிட்டால் இரண்டுமுறை இத்தவறு செய்தவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்தெடுத்து அரசு பொறுப்பில் அக்குழந்தைகள் வளரும்.குழந்தைகள் மேல் கவனம் இல்லாத பெற்றோர்கள் இக்குழந்தைகளை எவ்வாறு பொறுப்புள்ள குடிமக்களாக வளர்க்கப் போகிறார்கள் என்பது அரசின் கருத்தாகுமாம்.

மருத்துவ வசதி...

சுவிசர்லாந்தைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது கட்டாயமாகுமாம்.அம்மக்கள் மட்டுமன்றி,அந்நாட்டுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகள் உட்பட அனைவரும் மருத்துவக் காப்பீடு செய்துகொள்ள வேண்டுமாம்.அவ்வாறு செய்து கொள்வது நோயின் காரணமாக ஏற்படும் செலவிலிருந்து விடுபட முடியுமாம்.மருத்துவக்காப்பீடு ஒருவருக்கு மாதம் 860 பிராங்கு கட்ட வேண்டுமாம்.
மருத்துவக் காப்பீடு செய்துகொண்டவர்கள் தொலை தூரத்தில் விபத்துக்கு உள்ளானால் உலங்கு ஊர்தி,வானூர்தி பயணம் கூட அனுமதிக்கபடுமாம்.வானூர்தியில் சென்று விபத்துக்கு உள்ளானவர்களை அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதிப்பார்களாம்.நம் செல்வந்தர்கள் கள்ளப்பணத்தைப் பதுக்கும் இடமாகத்தான் நமக்கு சுவிசர்லாந்தை அறிமுகம் செய்துள்ளனர்.ஆனால் நளாயினியின் உரையாடலில் உலகத் தரத்தில் வாழ விரும்புபவர்களுக்கு உரிய இடம் என்பது புலனாகின்றது.

அரசு எந்தச் சலுகைகளையும் மக்களுக்கு வழங்குவதில்லையாம்.இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.அனைத்திற்கும் காசுகள்தான்.குப்பையை அள்ள,சாய்க்கடையைப் பயன்படுத்த என அனைத்திற்கும் காசு கட்டவேண்டுமாம்.கோழிக்கறி அறுக்க,ஆட்டுக்கறி வெட்ட என எதற்கானாலும் மூன்றுமாதம் சான்றிதழ் படிப்பு முடித்தால்தான் அங்கு பணிபுரியமுடியும்.தூய்மை பேணவும்,நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கவும் இவ்வழி என்கின்றனர்.தலைக்குப் பத்து இலட்சம் அளவில் நம்மூர் பணத்தில் ஊதியம் பெற்றாலும் அதற்குத் தகச் செலவும் அதிகம் என்கிறார் நளாயினி.

அனைவரும் கட்டாயம் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் நாற்பது வயதுக்குப்பிறகு அவர்களுக்கு முதுகுவலி வருவது உண்டாம்.அவ்வாறு பாதிக்கப்படவர்கள் மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகு நோய் உறுதிப்பட்டால் 80 விழுக்காடு சம்பளம் கிடைக்குமாம்.
அங்குள்ள எழுத்தாளர்களுள் கல்லார் சதீசு,இரவி குறிப்பிடத்தக்கவர்கள்.வாசகப்பரப்பு குறைவு என்பதால் அவர்கள் இணையம் வழியாகத் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்த தயங்கவில்லை.மேலும் அச்சுவடிவிலும் படைப்புகள் வெளியாகின்றன.

ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் சுவிசர்லாந்தும் ஒன்றாகும்.அங்கு பிறந்து வளர்ந்த சிறுவர்கள் தங்கள் தாய்மொழி,பண்பாடு இவற்றைக் கைக்கொள்ள தொல்லைப்படுகின்றனர்.பன்மொழிச் சூழலில் வாழவும்,பல பண்பாட்டுச் சூழலிலும் வாழவும் நேர்வதால் தங்கள் வேர்களை நினைவு கூரமுடியாமல் தவிக்கின்றனர்.

திருமணம்,குடும்ப உறவுகளில் சிக்கல்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன.அடுத்த தலைமுறை மக்கள் தமிழீழத்திற்கு திரும்பி வருவார்களா?அல்லது பன்னாட்டுச் சூழலில் கலந்து மொரீசியசு தமிழ்கள்,தென்னாப்பிரிக்காத் தமிழர்கள்,பிஜித்தீவுத் தமிழர்கள் போலத் தாய்நாட்டு,தமிழ்நாட்டு ஏக்கம் கொண்ட புதிய மரபினராகத் தமிழர் அடையாளத்துடன் விளங்குவார்களா?காலம்தான் விடைசொல்லவேண்டும்.

நனி நன்றி : தமிழ் ஓசை-களஞ்சியம்,தமிழ் நாளிதழ்,சென்னை,தமிழ்நாடு.(31.08.2008)

6 கருத்துகள்:

ரவிசங்கர் சொன்னது…

நல்ல அறிமுகம்.

//சுவிசர்லாந்தில் பிரெஞ்சு மொழியும், டச்சுமொழியும் பயன்பாட்டில் உள்ளன. டச்சு மொழி பேசுவோரும்,பிரெஞ்சு மொழி பேசுவோரும் அதிகமாக உள்ளனர்.//

அது டச்சு (dutch) இல்லை டாயிட்ச் (duetcsch) என்னும் செருமன் மொழி. மூன்றாவதாக இத்தாலிய மொழி பேசும் நிலப்பகுதிகளும் உண்டு.

டச்சு மொழி நெதர்லாந்து, பெல்சியம் நாடுகளில் பேசப்படுகிறது.

ச.இலங்கேஸ்வரன் சொன்னது…

எம் தமிழ் உறவுகளின் சுவிஸ் நாட்டு் வாழ்க்கையும் அவரின் தமிழ் ஆர்வத்தையும் வெளியிட்டதற்கு மிக்க நன்றிகள். உங்களின் தமிழ் தொண்டுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

திரு.இரவிசங்கர் அவர்களுக்கு
தாங்கள் குறிப்பிட்ட திருத்தத்தை என் பதிவில் இட்டு, சரிசெய்துவிட்டேன்.
தங்கள் அன்பிற்கு நன்றி.
மு.இ

சுப.நற்குணன் - மலேசியா சொன்னது…

நளாயினி அவர்களைப் பற்றிய அறிமுகச் செய்தி அருமை ஐயா! அவ்வினிய அம்மாவின் வலைமனை முகவரியைக் கொடுத்திருக்கலாமே!

HK Arun சொன்னது…

//காலம்தான் விடைசொல்லவேண்டும்.//

சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாய், உலகெங்கும் புலம்பெயர் தமிழர்க்களாய் வாழ நிர்பந்தித்த இனவெறி இலங்கை அரசு பதில் சொல்லவேண்டும். அதற்கு முண்டு கொடுக்கும் பிராந்திய நாடுகள் பதில் சொல்ல வேண்டும்.

தமிழன்... சொன்னது…

\
பூக்கள் பேசினால்,உயிர்கொண்டு திளைத்தல் என்னும் இருநூல்கள் விரைவில் வெளியிட எண்ணியுள்ளார்.
\

எதிர்பர்த்துக்கொண்டிருக்கிறேன்...