நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஜூலை, 2017

திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! அறிஞர்கள் புகழாரம்!



குன்றக்குடி தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நூலினை வெளியிட 
அறிஞர்கள் பெற்றுக்கொள்ளும் காட்சி.

     திருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்து இயற்கை எய்திய திருக்குறள் மாமணி .வே. இராமசாமியார் அவர்களின் வாழ்வியலைக் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி நூலாக எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா 16.07.2017 காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

     புலவர் ஆ.வே.இராவின் திருவுருப்படத்திற்கு மலர் வணக்கமும், நூல் வெளியீடும் முதலில் நடைபெற்றன. நூலினைத் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் வெளியிட, நூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், கொப்பம்பட்டி மு. தமிழ்மாறன், இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்

     முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் திருக்குறள் தொண்டர் ஆ.வே.இராமசாமியின் பணிகளை நினைவுகூர்ந்தனர்.

     முதுமுனைவர் இரா. இளங்குமரனார் தம் நினைவுரையில் ஆ.வே.இராமசாமியின் திருக்குறள் பணிகளையும், திருக்குறள் குறித்து எழுதிய நூல்பணிகளையும் நினைவுகூர்ந்தார். ஆ.வே.இராமசாமியார் தம் மகன்களுக்குத் திருவள்ளுவன், தொல்காப்பியன் எனப் பெயரிட்டமையும், தம் மக்களைத் தம் வழியில் தமிழ்த்தொண்டுக்கு ஆயத்தம் செய்துள்ளமையும் பாராட்டுக்கு உரியன என்றார்.

     முனைவர் மு.இளங்கோவன் ஆ.வே.இராமசாமிக்கும் தமக்குமான கால்நூற்றாண்டுத் தொடர்பை நினைவுகூர்ந்தார். அதுபோல் நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமியின் தமிழ்ப்பற்றை அவர் எழுதியுள்ள நூலின் துணைகொண்டு விளக்கினார். திருக்குறள் மாமணி திரு.ஆ.வே.இரா. என்ற நூல் 232 பக்கங்களில் அமைந்துள்ளது எனவும், 16 தலைப்புகளில் ஆ.வே.இராமசாமியின் வாழ்க்கை வரலாறும், பணிகளும் பேசப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும் ஆ.வே.இராவின் 32 நூல்களை இந்த நூலின் பிற்பகுதி அறிமுகம் செய்துள்ளமையையும் எடுத்துரைத்தார்.

இராம. திருவள்ளுவன் மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் தவத்திரு, பொன்னம்பல அடிகளார், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

     ஆலத்துடையான்பட்டி  வேங்கடாசலம் மகனார் இராமசாமி 11.04.1928 இல் பிறந்தவர் எனவும், இளமையில் படிக்க வசதி இல்லாமல் எட்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர் என்றும் குறிப்பிட்டு, அவர்தம் தமிழ் இலக்கியப்பணிகளையும், தமிழியக்கச் செயல்பாடுகளையும் அவைக்கு எடுத்துரைத்தார். ஆ.வே.இராமசாமியின் மகனார் திருவள்ளுவனைக் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சந்தித்த பழைய நினைவுகளை அவைக்கு எடுத்துரைத்து, அறிஞர்களின் வாழ்வு இதுபோல் ஆவணமாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தம் உரையை நிறைவுசெய்தார்.

     திருக்குறள் மாமணி ஆ.வே.இரா. நூலினை வெளியிட்டும், விழாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு மலரினை வெளியிட்டும் நிறைவுப் பேருரையாற்றிய குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள், தமிழ்த்தொண்டர்கள் அருகிவரும் இந்த வேளையில் ஆ.வே.இரா. போன்ற தமிழ்த்தொண்டர்களின் வரலாற்றை எழுத முன்வந்த முத்துக்குமாரசாமியின் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்தார்; பாராட்டினார். ஆசிரியர் மாணவர் உறவின் பெருமையைப் பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைத்து, தம் தெள்ளிய தமிழ்ப் பேச்சால் அவையோர்க்கு அரியதோர் செவிச்சுவை விருந்துபடைத்தார்.

     நூலாசிரியர் சிவ. முத்துக்குமாரசாமி சிறப்பானதோர் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை இரா. திருவள்ளுவன் வரவேற்றார். கி. நந்தகுமார் நன்றியுரையாற்றினார். பேராசிரியர் கு. திருமாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். செவி விருந்து உண்டோருக்கு, இனிய பகலுணவும் அளிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பல்வேறு தமிழமைப்புகளைச் சார்ந்த பெரியோர்களும், திருக்குறள் பற்றாளர்களும் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள்- புதிய பதிப்பு






திருக்குறள் நூல் அறிஞர்களால் காலந்தோறும் சிறப்பாகப் பதிப்பிக்கப்பெற்று, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கனடாவில் வாழும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் தம் மகள் சி. ஆர்த்திமருமகன் . பிரசாத் ஆகியோரின் திருமணநாளில் (20.08.2016) திருக்குறளுக்குப் புதிய பதிப்பு ஒன்றை வெளியிடுகின்றார். மணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்குக் கையுறைப் பொருளாகத் திருக்குறள் நூல் வழங்கப்பட உள்ளது. 464 பக்கம் கொண்ட இத்திருக்குறள் பதிப்பில் திருக்குறள் மூலம், முனைவர் பா. வளன் அரசு உரை, தவத்திரு போப் அடிகளாரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தவத்திரு டுரூ, இலாசரசு ஆகியோரின் ஆங்கில விளக்கம் ஆகியன அமைந்துள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய இந்த நூல் தமிழறியாத பிறமொழியினரும் பயன்படுத்தும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆங்கில விளக்கத்துடன் பதிப்பிக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திருக்குறள் பதிப்பு விவரம்
திருக்குறள்  - ஆசிரியர்: திருவள்ளுவர்
உரை - முனைவர் பா.வளன் அரசு
ஆங்கில மொழிபெயர்ப்பு: தவத்திரு. போப் அடிகளார்
ஆங்கில விளக்கம்: தவத்திரு. டுரூ, இலாசரசு

பதிப்பாசிரியர்கள்:
சிவம் வேலுப்பிள்ளை
மு.இளங்கோவன்
விலை: உருவா 250
பக்கம்: 464

திங்கள், 14 டிசம்பர், 2015

திருக்குறள் புலவர் நாவை. சிவம் அவர்கள்!


புலவர் நாவை. சிவம் அவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ள செட்டிக்குளம் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும்மாணவர்களும் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மொழிஞாயிறு பாவாணர் அவர்களை நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் தமிழ் உணர்வு தழைத்த ஆசிரியர்கள் அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒரு மாட்டுவண்டியில் மேசையைப் பொருத்தித் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் அவர்களின் திருவுருவப் படத்தை அதில் வைத்தனர். ஊர்வலம் ஆயத்தமானது. படத்தின் அருகில் பாவாணர் அவர்களை அமரச் சொன்னார்கள். மறைமலையடிகளுக்கு இணையாக நானா? என்று பாவாணர் அவர்கள் ஒரு வினா எழுப்பிவிட்டு, வண்டியில் அமர மறுத்தார். பின்னர் வண்டியின் முன்பாகப் பாவாணர் அவர்கள் காலார நடந்து வந்தார். அனைவரும் ஊரை வலமாக வந்து, பள்ளியை அடைந்தனர். இந்த ஊரின் தமிழ் விழா நடைபெற்றபொழுது பத்தாம் வகுப்பில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார் நாவை. சிவம் அவர்கள். பாவாணரின் நூல்களில் அன்று முதல் நாட்டம்கொண்டு, தமிழ் உணர்வாளராக வளர்ந்தவர்.

புலவர் நாவை. சிவம் அவர்கள் மணப்பாறையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்றார். பாவாணர் பற்றாளராகவும், தனித்தமிழ் இயக்க உணர்வாளராகவும் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தமிழ்ப்பணியும் திருக்குறள் பணியும் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்துவைப்போம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாட்டார்மங்கலம் என்ற ஊரில் திரு. துரை. வைத்தியலிங்கம், திருவாட்டி அகிலாண்டம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக நாவை. சிவம் அவர்கள் 08.08.1945 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் சிவராமலிங்கம் ஆகும். செட்டிக்குளத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், முசிறியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார். கல்லக்குறிச்சி அருகில் உள்ள நயினார் பாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் 1965 ஆம் ஆண்டு இணைந்தார். புலவர், முதுகலை, கல்வி இளவல், ஆகிய பட்டங்களைப் பின்னாளில் பெற்றவர்.

புதுக்கோட்டை, விராலிமலை, மணற்பாறை ஆகிய இடங்களில் தலைமையாசிரியர், தொடக்கக் கல்வி அலுவலர் என 38 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மாணவர்களின் கல்வி நலனுக்கும் ஆசிரியர்களின் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். ஆசிரியர் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

சிவ ராமலிங்கம் என்ற தம் பெயரைத் தமிழ்ப்படுத்தும் வகையில் நாவை. சிவா என்று அமைத்து, பாவாணரின் ஒப்புதலுக்குக் காட்டச் சென்றார். “ஆகார இறுதிப் பெயர்ச்சொல் ஆகா” என்று பாவாணர் குறிப்பிட, சிவா சிவம் ஆனார்.

தென்மொழி, முல்லைச்சரம், தமிழ்ப்பணி முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
                      பொன்னாடையில் பொலிபவர் புலவர் நாவை. சிவம் அவர்கள்

நாவை. சிவம் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டித் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்ற விருதைத் தமிழக அரசு வழங்கிப் பாராட்டியுள்ளது. வாழ்வியல் சிந்தனைக் கலந்துரையாடல், திருக்குறள் தொடர்வகுப்புகள், தனித்தமிழ்ச் சொற்பயிற்சி வகுப்புகள், வீடுதோறும் குறள் நூலும் திருவள்ளுவர் படமும் வழங்கி வருதல், முச்சந்திகளில் முப்பால் முழக்கம், தெருவெல்லாம் தமிழ்முழக்கம், பள்ளிகளில் உள்ளும் புறமும் திருக்குறள் எழுதுவித்தல், தமிழ்முறைத் திருமண நிகழ்வுகள் என இவரின் பணிகள் நீளும்.

40 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து நடத்தும் திருவள்ளுவர் விழாவில் பள்ளி மாணவர்களுக்குக் குறள்போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களை அழைத்துப் பாராட்டு விழாக்களை நடத்தியுள்ளார். வெல்லும் திருவள்ளுவம், வெண்பா விளைச்சல், செந்தமிழ்ப் பூக்கள் என்பன இவரின் படைப்பு நூல்கள் ஆகும். மலேசியா, சிங்கப்பூர், மாலைத்தீவு, இலங்கை போன்ற அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் செய்தவர். திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு இவருக்குத் ‘தமிழ்மாமணி’ என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.


புலவர் நாவை. சிவம் அவர்கள் நிறைந்த வாழ்நாள் பெற்று, நற்றமிழுக்குத் தொண்டாற்ற நெஞ்சார வாழ்த்துவோம்!.

புதன், 26 ஆகஸ்ட், 2015

பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேருரை விழா



தமிழ்ப் பேராசிரியரும், திருக்குறள் ஆய்வுகளில் பெரும் பங்களிப்பு வழங்கியவர்களுமான பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் அவர்களின் நினைவு  இலக்கியப் பேருரை விழா 29.08.2015 காரி (சனி)க் கிழமை காலை 10.30 மணிக்குச் சேத்தியாத்தோப்புக்கு அருகில் உள்ள தீப்பாய்ந்த நாச்சியார்கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

மொழியியல் பேரறிஞர் முனைவர் செ.வை.சண்முகம், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் மருதூர் அரங்கராசனார், பேராசிரியர் த.சாமிநாதன், குமுடிமூலை திரு. கி. திருமாறன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் சா. அந்துவன்(இலண்டன்) அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் செய்துள்ளனர். அனைவரும் கலந்துகொண்டு தமிழாய்வில் ஈடுபட்ட தலைமகனின் பெருமைகளை நினைவுகூரலாம்.

புதன், 10 டிசம்பர், 2014

திருக்குறள் தேசியத்தகுதி நூல் மட்டுமன்று! உலகப் பொதுமறை!

  தமிழ் நூல்கள் குறித்து நான் வகுப்பறைகளில் பாடம் நடத்தும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளைச் சொல்லி ஊக்கமூட்டுவேன். தமிழில் எண்ணற்ற நூல்கள் உள்ளன. எண்ணற்ற நூல்கள் இறந்துபட்டன. இருக்கும் நூல்களுள்ளும் மூன்று நூல்களை மட்டும் வைத்துக்கொண்டு நம் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிவிடமுடியும் என்று குறிப்பிடுவேன்.

அந்த நூல்களாவன:

1. தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும் நிலைநாட்ட உதவும் தமிழை வரம்பிட்டுக் காத்த ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம்.

2.தமிழர்களின் நெறிப்பட்ட வாழ்க்கையையும், அறிவார்ந்த மெய்யுணர்வுகளையும் தாங்கிநிற்கும் திருக்குறள்.

3. தமிழர்களின் கலை, பண்பாட்டு அறிவுக்கருவூலமான சிலப்பதிகாரம்.

  இந்த மூன்று நூல்களையும் தமிழர்கள் அறிய வேண்டும். படிக்க வேண்டும், போற்ற வேண்டும், ஆராய வேண்டும் என்று தமிழறிஞர்கள் பலரும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்பத் தொடர்ந்து குரல்கொடுத்துள்ளனர். இந்த நூல்களுள் நடுவணதாக நிற்கும் திருக்குறள் அயலகத்து அறிஞர்களை வியக்க வைத்த பெருமைக்குரியது. அதனால்தான் திருக்குறளை வீரமாமுனிவர் போன்ற வெளிநாட்டுத் துறவிகள் தம் மொழியில் பெயர்த்துப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகப் பார்வைக்கு வைத்தனர். அனைத்து ஆசைகளையும் துறந்த துறவிகளிடத்தும், ஆசையை உண்டாக்கி மொழி பெயர்க்க வைத்த பெருமை திருக்குறளுக்கு அமைந்தது எனில் மிகையன்று.

  திருக்குறள் எழுதப்பட்ட காலம்முதல் தமிழகத்திலும் தமிழ் சார்ந்த பிற புலங்களிலும் மதிக்கப்பட்டுள்ளதை இலக்கியங்கள் வழியாகவும் பிற சான்றுகள் வழியாகவும் அறிய முடிகின்றது. திருக்குறளை மேற்கோளாக ஆண்டு பல நூல்கள் வந்துள்ளன. திருக்குறளைப் பல புலவர்கள் தனித்துச் சிறப்பித்துப் பாடியுள்ளனர்(திருவள்ளுவமாலை). திருக்குறளுக்கு நுட்பமான பல உரைகள் பரிமேலழகர் போன்ற சான்றோரால் இயற்றப்பட்டன.

  திருக்குறள் குறித்தும் திருவள்ளுவர் குறித்தும் பல நினைவுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டன. திருவள்ளுவர் கோயில், திருவள்ளுவருக்குக் கோட்டம், திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் படம், திருவள்ளுவர் உருவம் பொறித்த காசுகள், திருவள்ளுவர் பெயரில் நகர், பூங்கா, சாலை, பேருந்து, மன்றங்கள், தவச்சாலைகள், விருதுகள் என்று தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் அயலகத்திலும் உள்ளமையை நினைக்கும்பொழுது நமக்குப் பெருமை ஏற்படுகின்றது.

 திருக்குறள்தான் தம்மை இந்த நிலைக்கு உயர்த்தியது என இந்தியாவின் மேனாள் குடியரசுத்தலைவர் மேதகு அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பேசியும் எழுதியும் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறளின் சிறப்பைச் சொல்லி வருகின்றமை எம்மனோர்க்குப் பேருவகை அளிக்கும் செயலாகும்.

  மேனாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இந்திய நாடாளும் மன்றத்தில் இந்திய நாட்டுக்கான பெருமைக்குரிய நிதி நிலை அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கும் முன்பாகத் திருக்குறளின் பொன்வரிகளை முன்மொழிவாக வழங்கியமை இந்திய வரலாற்றில் பதிந்துகிடக்கும் செய்தியாகும்.

  சமூகச் சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் அவர்கள் திருக்குறள் சிறப்பை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் திருக்குறள் மாநாடுகள் நடத்தியுள்ளமை இங்கு எண்ணிப்பார்க்கத்தக்க செய்திகளாகும். 1948, 1949 இல் என இரண்டுமுறை தந்தை பெரியார் அவர்களின் முயற்சியில் திருக்குறள் மாநாடு தமிழகத்தில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். இந்த மாநாட்டில் தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பெரும்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் கலந்துகொண்டமை பெருமைக்குரிய நிகழ்வுகளாகும்.

 தமிழகத்துத் தவமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் உலகத் திருக்குறள் பேரவை கண்டு பல மாநாடுகள் நடத்தியமையும் மொழிப்போர் மறவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் குறள்நெறி தந்தமைமையும் ஈரோடு அரசமாணிக்கனார் குறளியம் கண்டமையும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் திருவள்ளுவர் தவச்சாலை கண்டு தவவாழ்வு வாழ்ந்தமையும் நினைவிற்கொள்ளத் தக்க செய்திகளாகும்.

  கேரள மண்ணில் துறவி சச்சிதானந்தம் அவர்கள் திருவள்ளுவரைக் கடவுளாகப் போற்றும் வாழ்க்கையை மேற்கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. திருக்குறள் முறைப்படி வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் செய்து வாழ்வதையும் திருக்குறளன்பர்கள் கூறுவர்.

  திருக்குறள் கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்து நன்னெறி புகட்டுவதால் உலக அளவில் மதிக்கப்படும் நூலாக உள்ளது. “பிறப்பு ஒக்கும்” என்று மாந்தர்களிடையே ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது. “மனத்துக்கண் மாசிலனாக” வாழ்க என மாந்தர்களை நன்னெறிப்படுத்துகின்றது. “அறத்தால் வருவதே இன்பம்” என்கின்றது. “இனிய உளவாக” எனச்சொல்லி நன்மொழி நவிலத் தூண்டுகின்றது.

தனிமாந்த வாழ்க்கையை நெறிப்படுத்தி, உலகச் சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் திருக்குறள் இந்தியாவுக்கு மட்டுமன்று உலகத்திற்கே ஒளியேற்றும் உயரிய நூல். இதனை இந்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அறிஞர்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் உத்தரகண்டு மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் திரு. தருண்விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசின் மனிதவளத்துறை திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் சிறப்புச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளத்தை நினைக்கும்பொழுது விரைந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவு நிறைவேறும் என்று தோன்றுகின்றது.

  உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பட்டியலைப் பார்த்தால் இன்றையை தேவை நமக்குப் புலனாகும்.

Thirukural Translation List

LANGUAGES  TRANSLATIONS
Assamese        1
Bengali            3
Burmese          1
Chinese        2
Czech              1
Dutch               1
English           25
Fijian                 2
Finnish              1
French               7
German         7
Gujarati              1
Hindi                  7
Japanese           1
Kannada            4
Latin                  2
Malay                 3
Malayalam          7
Oriya                  1
Punjabi               1
Polish                 1
Rajasthani          1
Russian               2
Sanskrit          2
Saurashtra           1
Sinhala                2
Swedish               1
Telugu                  2
Urdu                     2

(பட்டியலில் விடுபட்ட மொழிபெயர்ப்புகள் குறித்த விவரம் அறிந்தோர் தெரிவிக்க நன்றியுடன் ஏற்பேன்)

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை



திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: "சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் புலவர் திருவள்ளுவரால், திருக்குறள் நூல் இயற்றப்பட்டது. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மூன்று பகுதிகள், 133 அதிகாரங்கள் 1,330 குறட்பாக்கள் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. 1730-ஆம் ஆண்டில் லத்தீன் மொழியிலும், 1886-இல் ஆங்கிலத்திலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

அதன்பிறகு பல்வேறு நாடுகளிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது, இதன் தனிச் சிறப்பை உணர்த்துகிறது. இதேபோல் இந்தியாவில் பெரும்பாலான மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பலதரப்பட்ட கருத்துகள், மதசார்பின்மை நிலையுடன் மொழி, மத, பிராந்திய எல்லைகளைக் கடந்து திருக்குறள் விளங்குகிறது. இந்தியாவில் உள்ள தற்போதைய தலைமுறையினர் மட்டுமன்றி எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்றவாறும் இந்நூலின் கருத்துகள் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டில் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய கல்விசார் பெருமைகளையும் நம் நாடு கொண்டுள்ளது.

இந்நிலையில், தேசிய அளவில் நம்மை பிரதிபலிக்கும் நூலாக திருக்குறள் இருந்தால் அதுவே உண்மையாக நம் நாட்டு மக்களுக்கு பயன்தரக் கூடியதாக இருக்கும். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் திருச்சி சிவா.


நன்றி: தினமணி 10.12.2014

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு



திருக்குறள் திலீபன் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்துவளர்ந்து, தமிழர்களிடம் இருந்த கவனகக் கலையைக் கற்று அதனை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் பெரு விருப்பம்கொண்ட தம்பி. அவரைப் பற்றி முன்பே என் பக்கத்தில் அறிமுகப்படுத்தி எழுதியுள்ளேன். தம்பியின் கவனகக் கலையின் நூறாம் நிகழ்வு சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றத்தாரால் 08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் திருக்குறள் திலீபனை ஏற்றுப் போற்றுவது தமிழுக்குச் செய்யும் உண்மைத்தொண்டாக இருக்கும். திரைப்படத்துறையினர், சின்னத்திரைக் கலைஞர்களை அழைத்து மகிழும் அயலகத் தமிழர்கள் அறிவார்வம்கொண்ட, திருக்குறள் திலீபன் போன்ற தமிழ்ப்பற்றாளர்களை அழைத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கவனகக் கலையின் மேன்மையை அறிமுகம் செய்யலாம். தங்கள் குழந்தைகளையும் இக்கலையைப் பயில வாய்ப்பு உருவாக்கலாம்.

தொடர்புக்கு:

திருக்குறள் த. திலீபன்

அலைப்பேசி : 0091 75022 72075,     0091 94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com

வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in

திங்கள், 26 மார்ச், 2012

இதழகல் வெண்பா

மலேசியாவுக்கு அண்மையில் சென்றிருந்தபொழுது தமிழகத்திலிருந்து பல அன்பர்கள் என்னுடன் பயணம் செய்தனர். ஒருவருக்கொருவர் சென்னை வானூர்தி நிலையத்தில் அறிமுகம் ஆனோம். பாதுகாப்பு ஆய்வுகளை முடித்துக்கொண்டு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். அப்பொழுது வானூர்தியில் ஓர் அகவை முதிர்ந்த பெரியவர் கையில் நாட்குறிப்பேட்டைப் பார்ப்பதும் மனப்பாடம் செய்வதுமாக வந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற சாயல் அவரிடம் தெரிந்தது. படிப்பவர்கள், பணியில் இருப்பவர்களே புத்தகத்தைப் புரட்ட அலுத்துக்கொள்ளும் சூழலில் அந்த அகவை முதிர்ந்த பெரியவர் பொறுப்புணர்வுடன் மனப்பாடத்தில் மூழ்கியிருந்தார். தேர்வு எழுதும் மாணவரைப் போல் கண்ணை மூடியும் குறிப்பேட்டைப் பார்த்தும் நினைவைச் சரிசெய்துகொள்வதுமாக இருந்தார். தயங்கியபடியே அவரைப் பற்றி வினவி அறிந்துகொண்டேன்.

செங்கற்பட்டு ஊரைச் சார்ந்த திருக்குறள் கவனகர் சுந்தர. எல்லப்பனார் அவர் பெயர் என அறிந்தேன். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் (இதே பெயரில் வேறொரு எல்லப்பனார் இருப்பதாகவும் அவர் இவரைவிட மிகச்சிறந்த கவனக ஆற்றல் பெற்றிருப்பதாகவும் அவர் வழியாகவே அறிந்தேன்). திருவாளர் சுந்தர. எல்லப்பனாரின் நினைவாற்றலும் ஊக்கமும் அறிந்து அவர்மேல் எனக்கு அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. அவரிடம் திருக்குறள் சார்ந்த பல வினாக்களைக் கேட்டு அவரின் நினைவாற்றலை ஆய்ந்தேன். அப்பொழுது என் நினைவுக்குத் திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறள்வெண்பாவைக் குறித்த வினா எழுந்தது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறட்பாக்கள் எத்தனை என்று வினவினேன். முன்பு மூன்று இருப்பதாக நான் அறிந்திருந்திருந்தேன். ஐயாவிடம் கேட்டபொழுது 28 குறள்வெண்பாக்கள் இதழகல் குறள் வெண்பாக்கள் என்றார்கள். அவற்றைச் சொன்னார்கள். இவை பயன்படும் என்று குறித்துகொகண்டேன். அந்த குறட்பாக்களைப் பதிகின்றேன். ஆர்வலர்கள் படித்து மகிழலாம். விரைவில் இரண்டு எல்லப்பனாரையும் அறிமுகம் செய்வேன்.

இதழகல் வெண்பாவைக் குறித்தக் கட்டுரை இணையத்தில் இருக்குமா? என்று தேடினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்புகள் மட்டும் இருந்தனவே தவிர, முழுமையான கட்டுரை எதுவும் என் கண்ணிற்குக் கிடைக்கவில்லை. என் பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களிடம் இதழகல் வெண்பா குறித்து விளக்கம் சொல்லும்படி கேட்டேன். அவர்களுடன் உரையாடும்பொழுது இந்தத் தலைப்பை ஒட்டி மிகுதியாகச் சிந்திக்க இடம் உள்ளதை அறிந்தேன்.

இதழகல் என்று நாம் இன்று குறிப்பதைப் பண்டு நிரோட்டகம் என்று புலவர்கள் வழங்கினர். நிரோட்டகம் என்பது நிர்+ ஒட்டகம் என்னும் இரு சமற்கிருதச்சொற்களில் இணைப்பாக உள்ளது. நிர் என்றால் இல்லாதது என்று நேர்பொருள் தரினும் இங்கு ஒட்டாதது என்று பொருள். ஓட்டகம் என்றால் உதடு என்று பொருள். நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாதது என்று பொருள். பாடலை நாம் ஒலிக்கும்பொழுது நம் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று குவியாமல் அமைவது ஆகும். இதற்குத் தக இதழ் குவிதல் இல்லாத தன்மையில் பாடல் இருக்கும். அதாவது இதழ் குவிதலுக்குக் காரணமான எழுத்துக்கள் இல்லாமல் பாடல் புனையப்பட்டிருக்கும்.

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

என்னும் குறட்பாவை என் பேராசிரியர் எடுத்துரைத்தார்.

உ, ஊ, ஒ, ஓ, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வராதலால் உதடுகள் குவியாமலும், ஒட்டாமலும் இதைப் படிக்க முடிகிறது. இதில் உ, ஊ, ஒ, ஓ, ஔ, என்ற உயிரெழுத்துகள் ஐந்தும் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும்.


“உஊ ஒஓ ஔ என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்” (தொல்.பிறப். 87)


உ ஊ ஒ ஓ ஔ இதழ்க் குவிவே (நன்னூல், நூற்பா 78)).


பம என்ற இரண்டு உயிர்மெய் எழுத்துகளும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.


“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (தொல்.பிறப். 97)


“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்” (நன்னூல், நூற்பா 81).


ஆனால் வ என்ற எழுத்தை ஒலிக்கும் பொழுது மேற்பல் கீழிதழைப் பொருந்தும் என்று தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன.


“பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்”(தொல்.பிறப். 98)

இந்த நூற்பா கூறும் நுட்பத்தைக் கவனிக்கவேண்டும். இங்குக் குவிதல் இல்லாமல் மேற்பல் கீழிதழைப் பொருந்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் பார்க்கும்பொழுது வ என்பது உருவாகும்பொழுது இதழ் குவிதல் இல்லை என்று கணக்கிட்டால் 28 குறட்பாக்கள் திருக்குறளில் இதழ் குவிதல் இல்லாமல் இடம்பெற்றுள்ளன எனக் கொள்ளலாம்.

ஆனால் மொழியியல் அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் வ என்ற ஒலி உருவாகும்பொழுது கீழ்இதழுடன் மேற்பல் பொருந்துவதால் வகரமும் அதன் இன எழுத்துகளும் இடம்பெறும் குறட்பவை இதழகல் குறட்பா எண்ணிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.

வ என்பதை இதழ்க்குவிதலாக் கொண்டு கணக்கிட்டால் திருக்குறளின் இதழகல் குறட்பாக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும். அதுபோல் உ,ஒ என்பனவற்றை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றதே தவிர இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே உ,ஊ,ஒ,ஓ, எழுத்துள்ள குறட்பாவை இதழகல் குறட்பாவாகக் கொள்ளலாம். குறளும் மரபு இலக்கணமும் கற்றுவல்ல சான்றோர்கள்தான் இதுகுறித்த முடிவை அறிவிக்கவேண்டும்.

இதழகல் செய்யுளுக்கு 119 தமிழ் எழுத்துகளை பயன்படுத்த முடியாது என்று சிலர் கணக்கிட்டுள்ளனர்(பார்க்க: சந்தவசந்தம் குழு உரையாடல், தங்கமணி)

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் x 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

இதில் வரும் உ,ஊ என்ன்னும் எழுத்துகளை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றனவே தவிர இதழ் ஒட்டவில்லை என்பதை ஆய்ந்துணர்க.

ஒட்டகம் என்பது அலங்காரம் என்று மாறனலங்காரம் குறிப்பிடுகின்றது.

கவனக அறிஞர்கள் குறிப்பிடும் இதழகல் குறட்பாக்கள்:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃஃதறி கல்லா தவர். 427

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387

உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177

உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080

ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472

கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.1296

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208

தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679

நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213

நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179

வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

முற்றிலும் இதழகல் வெண்பா

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341


(இக்கட்டுரை குறித்த மாற்றுக்கருத்துகள் / மேம்பட்ட கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)

புதன், 21 டிசம்பர், 2011

மருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்

திருக்குறள் நூல் பன்னெடுங் காலத்திற்கு முன்பு பெரும்பேராசான் திருவள்ளுவரால் தமிழகத்தின் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சுவையுணர்ந்த சான்றோர்கள் பலர் அவர்தம் காலச்சூழல், பட்டறிவு, கல்வியறிவு, கொள்கை ஆகியவற்றிற்கு ஏற்பத் தத்தம் விளக்கங்களைக் - கருத்துகளை உரையாக வரைந்துள்ளனர். இவ்வுரைகளில் மூல நூலாசிரியர் வழிநின்றும், மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மூல நூலாசிரியர் சுருக்கிச் சொன்னதை விரித்தும், அவர் ஒரு கருத்து எல்லையில் நின்று உரைத்ததைத் தம் கால நூலறிவுகொண்டு பன்மடங்கு வகைப்படுத்தியும் உரைக்கும் போக்கினையும் உரையாசிரியர்கள் கைக்கொண்டுள்ளனர். இவ்வுரை வரையும் போக்குகள் பல அறிவுக்கருத்துகளை முன்வைக்கின்றன. இதனை மருந்து எனும் அதிகாரக் குறட்பாக்களின் துணைகொண்டு அவற்றிற்கு எழுந்த பல்வேறு உரைகளை ஒப்பிட்டு விளக்கும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்து அதிகாரத்தின் சிறப்பு

திருக்குறளின் அனைத்து அதிகாரச் செய்திகளும் முதன்மை வாய்ந்தவையாகும். திருவள்ளுவரே தம் ஒவ்வொரு அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தியும், தம் ஒவ்வொரு கருத்துகளையும் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் உயர்வுப்படுத்தியும் உரைப்பதை அவரின் குறட்பாக்கள் வழியாகவே உணரமுடியும்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் 300)

என்று வாய்மையின் மேன்மையைப் போற்றிப் பாடுவார். அவரே,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)

எனக் குழந்தைப்பேற்றின் சிறப்பினைக் கொண்டாடுவார்.

இவ்வாறு திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அனைத்துச் செய்திகளும் உயர்வானதாகவே இருக்கின்றன. திருவள்ளுவரின் மற்ற அதிகாரங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு “மருந்து” அதிகாரத்திற்கு மட்டும் உண்டு.

கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெருமையைப் போற்றுவார். புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கள் பேற்றின் மாண்பினை எடுத்துரைப்பார். ஆனால் மருந்து எனும் அதிகாரத் தலைப்பிட்டு எழுதிய திருவள்ளுவர் மருந்து வேண்டாம் என்று புதுமையான முறையில் கருத்தினை முன்வைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவமுறை நோய் வராமல் காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை மருத்துவமுறையாகும். உணவுச்சார்பு, பழவினை, மரபுவழி(Generation), சுற்றுச்சார்பு காரணமாக நோய் வந்தால் அதனைப் போக்கிக்கொள்ளும் முறையினையும் திருவள்ளுவர் தம் மெய்யறிவு புலப்பட வரைந்துள்ளார்.

மருந்து என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பாக்கள் உணவே மருந்து என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்குகின்றன. மேலும் இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைகள் மருத்துவம் - உடல் ஓம்பல் குறித்த மேலதிகத் தகவல்களைத் தருகின்றன.

திருக்குறளின் மருந்து அதிகார முதல் குறட்பா ஊதை(வளி), பித்தம், கோழை(ஐ) என்னும் மூவகை உடற்கூறும் மிகினும் குறையினும் நோய் உண்டாகும் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதனை அடுத்து நோய் வராமல் தடுக்கும் முற்காப்பினை அடுத்த ஆறு குறட்பாக்கள் குறிப்பிடுகின்றன. நிறைவாக உள்ள மூன்று குறட்பாக்களில் உணவுத் தவறாலும், பிற காரணங்களாலும் நோய் வந்துற்றபொழுது மருத்துவர் செய்யும் மருத்துவமுறைகள்- நோயாளிகளின் கடமைகளைக் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் தமிழ் மக்களின் வாழ்வியல்-அரசியல்-வணிகம்-மெய்ப்பொருளியல் முதாலன எண்ணங்களைப் பதிவுசெய்தவர். அதுபோலவே தமிழக மருத்துவமுறைகளை உளங்கொண்டு தம் குறட்பாக்களை எழுதியுள்ளார். அதனை உணராதவர்போல் பரிமேலழகர் வடமொழிச் சார்பான விளக்கங்களைப் பல இடங்களில் முன்வைத்துள்ளார். குறிப்பாக மருந்து அதிகாரத்தில் பரிமேலழகர் ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவநூல் முறையைப் பின்பற்றி உரை வரைந்திருப்பதைப் பாவாணர் போன்ற உரையாசிரியர்கள் தக்கவாறு தம் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்த உடல்களை நோய் தாக்குவதற்குப் பல காரணங்களை இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. மரபு வழியாகவும், நோய்த்தொற்று அடிப்படையிலும், உணவு, உடை, நஞ்சு, போர், அச்சம், சுற்றுச்சூழல்(காற்று, ஒலி, நீர்) முதலியவற்றின் காரணமாகவும் நோய் மாந்தர்களை, விலங்குகளை, பறவைகளைத் தாக்குகின்றன. திருக்குறள் ஆசிரியரோ சுருக்கிச்சொல்வதுபோல் உடலில் உள்ள ஊதை(வளி), பித்தம், கோழை என்னும் மூன்றும் தம் சுரத்தல் தொழிலில் மிகுதியாக இருப்பினும் குறைவாக இருப்பினும் உடலில் நோய் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றார்.

ஊதை, பித்தம், கோழை(ஐ) என்னும் மூன்றும் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதன. மூச்சு, பேச்சு, உட்பொருள் இடம் மாற்றம், வெளியேற்றத்திற்குத் தனியாகவும் பிற தாதுக்களுடன் இணைந்தும் ஊதை(வளி) செயல்புரிகின்றது. அதுபோல் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்குப் பெரிதும் உதவுவது பித்தநீர் ஆகும். தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்குக் கோழை உதவுகின்றது. இவை மருத்துவ அறிஞர்களின் கருத்தாக இருப்பதைப் பாவாணர் கற்று உணர்ந்து தம் உரையில் எழுதியுள்ளார். இம்மூன்றும் குறைவதற்கும் மிகுவதற்கும் பல காரணங்கள் உண்டு. உணவு, உடை, செயல்கள், ஒவ்வாமை, பழக்கவழக்கங்கள், மரபுவழி எனக் காரணங்களைச் சுட்டலாம். இம்மூன்றின் இயக்கமும் சரியாக இருக்கும்பொழுதே உடல்நோய் இல்லாமல் இருக்கும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார்.

பாவாணர் போன்ற தமிழ்நெறி சார்ந்தவர்கள் திருவள்ளுவரின் கருத்துக்கு இயையவே உரை கண்டுள்ளனர். ஆனால் பரிமேலழகரோ மிகினும் குறையினும் என்பதற்கு உணவும் செயலும் அவரவர் உடல் வலிவுக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் எனவும் இதில் மிகுதியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய் உண்டாகும் எனவும் விளக்கம் தருகின்றார்.
பரிமேலழகர் உரையின்படி நோய்க்குக் காரணம் உணவும், செயலும் மிகுவதும் அல்லது குறைவதும் என்பது பெறப்படுகின்றது. மணக்குடவரும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் நோய்தரும் என விளக்கம் தருகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகள் சரி எனப்படினும் ஆனால் இவை மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணியதாகப்படுகின்றது. ஏனெனில் வள்ளுவப் பெருந்தகை தம் குறட்பாவில் வளி முதலான மூன்றும் என்று குறித்தாரேயன்றி, உணவையோ, செயலையோ நேரடியாகத் தம் குறட்பாவில் இடம்பெறச் செய்தாரில்லை. எனவே பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகளை ஏற்கத் தயக்கம் ஏற்படுகின்றது.

உணவுநெறி

உடல் தோற்றம், செயல்பாடுகள், அறிவுமலர்ச்சி, நோயின்மை இவற்றிற்குத் தக்க உணவுகளே அடிப்படையாக அமைகின்றன. இத்தகு உணவினைப் பயன்படுத்தும் முறைகளில் மாறுபாடுகள் உண்டானால் மேற்கண்ட யாவும் குலையும். பெரும்பாலும் நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, பொருந்தா உணவு, மிகை உணவு என்பனவாகும். எனவே உடல் பாதுகாப்பு, வாழ்க்கைக் காப்பிற்கு உதவும் உணவுகளை உண்ணுவதாலும், உண்ணாமையாலும் ஏற்படும் நோய்களை - உடல்மாறுபாடுகளைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இதற்கென இவர் ஆறு குறட்பாக்களைத் தருகின்றார்.

முன்பு உண்டது செரித்துப் பசித்த பிறகு உண்ண வேண்டும்(944). அளவுடன் உண்ணவேண்டும்(946). குறைவாக உண்ணவேண்டும்(947) உடல்கூறு, பருவம், விருப்பம், காலம், இடம் இவற்றிற்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும்(945). நாவின் சுவைக்கு இடம் தராமல் வயிற்றில் வெற்றிடம் இருக்கும்படி உண்ணவேண்டும் என்று உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தும்படி குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கருத்துகளைத் திருக்குறளின் வழியாக அறியும் அதே நேரத்தில் உரையாசிரியர் பரிதியார், செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டுகூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒருகூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியைவிட்டு அசனம் பண்ணக்கடவன்” என விளக்குவது உணவு உண்ணும்பொழுது கவனத்தில்கொள்ளவேண்டியதை நினைவூட்டுகின்றது.

எனவே நம் முன்னோர்கள் உணவு உண்ணுவதில் மிகச்சிறந்த நெறிகளைப் பின்பற்றியதால் நெடிதுய்க்கும்(943) முறையினைத் தெரிந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

“மாறுகொள்ளாத உண்டி”யை உண்ணும்படி வள்ளுவரும் வள்ளுவர் குறளுக்கு உரைவரைந்த உரையாசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாறுகொள்ளுதல் என்பது உண்ணும் அளவு, காலம், சுவை, வீரியம் இவற்றில் இருத்தல்கூடாது. உண்ணும் அளவில் மிகுதலும், பகலில் உண்பதை இரவிலும், இரவில் உண்பதைப் பகலிலும், மழைக்காலத்தில் உண்பதை வேனிற்காலத்திலும் வேனிற்காலத்தில் உண்பதை மழைக்காலத்திலும் மாற்றி உண்பதும், சுவை கருதி நெய்யும் தேனும் சம அளவுகலந்து உண்டால் நஞ்சாக மாறிக்கொள்ளும் என மணக்குடவர் உரையில் விளக்கம் தருவர்.

இன்றைய நிலையில் Food Poison எனும் நோய்க்கு இதுவே காரணம். இறைச்சி அல்லது காலம் கடந்த மாவு, பூச்சியுற்ற பொருளில் செய்யும் உணவு யாவும் நஞ்சு உணவாக மாறித் துன்பம் செய்யும்(இக்காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பெறும் பண்ணியங்களை உண்பதால் புற்றுநோய் உண்டாதலும் எண்ணிப்பார்க்கவும்). எனவே உடலுக்கு மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பசித்திருக்கச் சொன்னார்கள் போலும்(!).

உணவை உண்ணுவதில் தோன்றும் மகிழ்ச்சியைவிட உண்ட உணவு செரிப்பதில்தான் மகிழ்ச்சி. உண்ட உணவு இல்லாமல் போவதுதான் பெரு மகிழ்ச்சியை நமக்குத் தரும்.

இதனை உணர்ந்து பார்த்த வள்ளுவர் காமத்துப்பாலில்

“உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலி னூடல் இனிது(1326) என்பார்.

எனவே வயிற்றில் உணவு அற்றுப்போகும் தன்மையில்தான் உண்மை இன்பம் உண்டு என்பதைப் பொறி புலன்களால் உணர்ந்து அறிக!.

உலக உயிர்களில் மாந்தப் பிறப்பு உயர்வானதாகும். இம்மாந்தப் பிறப்பு வாய்க்கப்பெற்றவர்கள் தத்தம் உடம்பினைப் பேணிக்காத்து நெடிதுநாள் வாழவே விரும்புவர். துறவிகளோ இப்பிறவி வேண்டாம் என்றும் பிறப்பு நீக்கிச் செம்பொருள் நுகர்வு வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் திருவள்ளுவப் பேராசான் போன்ற சித்தர் மரபினர் உடம்பினைப் பேணிக் காப்பதைத் தேவையென மாந்த குலத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”(724) “உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”(725) என்பர் திருமூலர். இவ்வுடம்பினைப் போற்றும் வகை தெரியாமல் மிகுதியாக உண்டோ அல்லது வேறு வகையில் உண்டோ உடல்நலம் கெட்டால், உய்யும்பொருட்டு மருத்துவம் பார்த்தல் குறித்த பல செய்திகளைத் திருவள்ளுவரும் அவரின் குறட்பா வழி உரையாசிரியர்களும் தருகின்றனர்.

நோயாளியின் சொல்லாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் முதலான கழிபொருள்களின் இயல்பாலும் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து- அந்த நோய் தோன்றியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பிறகு அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை மருத்துவன் கைக்கொள்ள வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர் வழிநின்று பாவாணர்(948).
நோய்நாடி எனத்தொடங்கும் குறட்பாவில் திருவள்ளுவர் “நாடி” எனும் சொல்லை நோய்நாடி, நோய்முதல்நாடி, வாய்நாடி என மூன்று முறை பயன்படுத்தியுள்ளது குறிப்பாக நாடிப்பார்த்தல் எனும் தமிழ் மருத்துவமுறையை உள்ளம்கொண்டே எனப் பாவாணர் கருதுகின்றார். ஏனெனில் நாடிப்பார்த்து நோய்தீர்க்கும் முறை தமிழர்கள் பன்னெடுங்காலம்தொட்டுச் செய்துவரும் மருத்துவமுறையாகும்.

மேலும் “உற்றவன் தீர்ப்பான்..” (950) எனத்தொடங்கும் குறட்பாவில் அரிய மருத்துவத்துறைச் செய்திகளைத் திருவள்ளுவர் வைத்துள்ளார். அவற்றைக் கண்டு காட்டும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரும், பாவாணரும் பல புதிய நுட்பங்களைத் தருகின்றனர். மருத்துவம் வெற்றியாக நிறைவேற நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அம்மருத்துவனுக்குக் கருவியான மருந்து அல்லது மருத்துவமுறை, அம்மருத்துவனுக்குத் துணையாக இருந்து மருந்துகொடுப்பவன் எனும் நான்கு கூறுகளையும் விரித்துக்காட்டும் பரிமேலழகரும், பாவாணரும் மிகச்சிறந்த உலகியல் அறிவுகொண்டு இக்குறட்பாக்களுக்கு விளக்கம் வரைந்துள்ளனர். மருந்து அதிகாரக் குறட்பாக்களும், உரைகளும் தமிழர்களின் மருத்துவமுறையினை எடுத்துக்காட்டுவதில் முன்னிற்கின்றன.

வியாழன், 10 நவம்பர், 2011

கடலூர் நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் விழா


திருக்குறள் நூல் பெற்ற மாணவர்களும் வழங்கிய தமிழார்வலர்களும்

குவைத்தில் இயங்கும் பொங்குதமிழ் அறக்கட்டளையினர் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் 250 ஐ வழங்கும் விழாவை இன்று(10.11.2011) மாலை பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மிகச்சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்குக் கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையினரும் ஆதரவாக இருந்தனர்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் திரு.இராம.சனார்த்தனன் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பொங்குதமிழ் அறக்கட்டளையின் சார்பில் பொறியாளர் திரு.சேது மாதவன் அவர்கள் வரவேற்றார். பொங்கு தமிழ் மன்றம் குவைத்தில் ஆற்றிவரும் தமிழ்ப்பணிகளை எடுத்துரைத்து, தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் திட்டத்தைப்பற்றி மிகச்சுருக்கமாக உரையாற்றினார்.

கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையின் தலைவர் இராம.சனார்த்தனன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாணவர்களுக்குத் திருக்குறள் நூல்களை வழங்கித் தொடர்ந்து திருக்குறளைப் படித்து அதன் வழியில் நிற்கவேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் திருக்குறள் நூல் பற்றியும் நிகழ்ச்சியின் சிறப்பு பற்றியும் விளக்கவுரையாற்றினார். திருக்குறள் சிறப்புகளை எடுத்துரைத்து மாணவர்கள் திருக்குறளைத் தொடர்ந்து படித்து அதன் வழியில் நிற்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளத்தில் பதியும்படியாக அரியதொரு சிறப்புரையாற்றினார். இவரின் பேச்சில் திருக்குறள் உரைகள், மொழிபெயர்ப்புகள், வெளிநாட்டினரின் பணிகளை நினைவுகூர்ந்தார்.

நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.உதயகுமார் சாம் அவர்கள் இத்தகு சிறந்த நிகழ்ச்சியை நடத்தி மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கிய பொங்கு தமிழ் மன்றத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். உலகத்திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நகராட்சிப்பள்ளியின் ஆசிரியர்கள்,மாணவர்கள், கடலூர்த் திரைப்பட இயக்கத்தின் பொறுப்பாளர் சாமிக் கச்சிராயர், கடலூர்ப்பகுதி சார்ந்த பெருமக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


இராம.சனார்த்தனன் அவர்கள் தலைமையுரை


வரவேற்புரையாற்றும் திரு.சேதுமாதவன் அவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


விழாவில் பங்கேற்ற மாணவர்கள்


முனைவர் மு.இளங்கோவன் விளக்கவுரை


மாணவர்களுக்குத் திருக்குறள் நூல் வழங்கும் ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி


உதயகுமார்சாம் அவர்கள் நன்றியுரை

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலூரில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா



குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிரல்

நாள்: 10.11.2011
நேரம்: பிற்பகல் 3.30 மணி

இடம்: நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கடலூர்

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: திரு.இராம.சனார்த்தனன் அவர்கள்

வரவேற்புரை: திரு.சேது மாதவன் அவர்கள்

விளக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

வாழ்த்துரை: பேராசிரியர் இரா.ச.குழந்தைவேலனார் அவர்கள்

நன்றியுரை: திரு.உதயகுமார் சாம் அவர்கள், தலைமையாசிரியர்

அனைவரும் வருக!

தொடர்புக்கு: சேதுமாதவன்(கடலூர்) + 91 9443916234

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 11,12,13-02.2011 ஆகிய நாள்களில் நடைபெறுகின்றது.

தமிழகம்,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர்,இலண்டன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

இன்று(11.02.2011) காலை பத்து மணிக்குப் புதுச்சேரிப் பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன்பிறகு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் கவிப்பொழிவு நிகழ்த்தியும் விழா நடைபெறும்.

தொடக்க நிகழ்வு பல்கலைக்கழக அரங்கில் பகல் இரண்டு மணிக்குத் தொடங்குகிறது.
நடுவண் அமைச்சர் சா.செகத்ரட்சகன், முனைவர் க.ப.அறவாணன், திரு.சுகி.சிவம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.

நாளை நடைபெறும் நிகழ்வில் பேராசிரியர் அப்துல்காதர், அமுதன் அடிகள் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். சொர்ணமால்யாவின் நாட்டிய நிகழ்வும்,மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற உள்ளது.

கருத்தரங்க அமைப்பாளர்
முதுமுனைவர் ம.சா.அறிவுடைநம்பி அவர்கள்.
தொடர்புஎண் + 91 9360327019

புதன், 5 ஜனவரி, 2011

திருக்குறள் திலீபன் வளர்க! வாழ்க!


திருக்குறள் திலீபன்

 இடைவிடாத பணிகளுக்கு இடையே அவ்வப்பொழுது மகிழ்ச்சிச் செய்தி ஏதேனும் காதில் விழுந்து ஊக்கம் தருவது உண்டு. அவ்வகையில் ஓரிரு நாளுக்கு முன்பு செல்பேசியில் ஓர் அழைப்பு வந்து. திருவாளர் ம. தங்கச்சாமியார் பேசினார். காரைக்குடியில் வாழும் அண்ணன் மு.பாரி அவர்கள் அந்த அன்பரை என்னிடம் ஆற்றுப்படுத்தியிருந்தார் என்று அறிந்தேன்.

 திரு.தங்கச்சாமியார் மகன் பெயர் திலீபன் என்றும் பதினொன்றாம் வகுப்பில் படிக்கின்றார் என்றும் அறிந்தேன். கவனகக் கலையில் வல்லவர் என்றும் திருக்குறளின் குறட்பாக்கள் அனைத்தும் மனப்பாடம் என்றும் குறிப்பிட்டார். கி.பி.முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 10,000 ஆம் ஆண்டு வரை உள்ள எந்த மாதம், ஆண்டு, நாள் குறிப்பிட்டாலும் கிழமையைச் சொல்லும் பேராற்றல் பெற்றவன் என்றும் அறிந்தேன். தன்னையொத்த குழந்தைகளுக்கு இலவசமாக நினைவுக்கலையையும், திருக்குறளையும் பயிற்றுவிக் கின்றாராம். குறள்மணிகள் சிறுவர் நூலகம் அவர் இல்லில் உள்ளது. உலக நாடுகளின் பெயரை ச்சொன்னால் தலைநகரைச் சொல்வார் என்றார். தமிழக அரசு திருக்குறள் முழுமையும் சொன்னால் மாதந்தோறும் 1000 உருவா வழங்கும் திட்டத்தில் திலீபன் நிதியுதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்(பல ஆண்டுகள் ஆகியும் நிதி இன்னும் யாருக்கும் வழங்கப்படவில்லை). அப்படி என்றால் அவர் பற்றிய குறிப்பை உடன் அனுப்பும்படி வேண்டிக்கொண்டேன். அதன்படி இன்று ஒரு குறுவட்டும், செய்திக்குறிப்பும் வந்தன. குறுவட்டை இயக்கிப் பார்த்தேன்.

செயா தொலைக்காட்சியில் திருக்குறள் திலீபனை இயக்குநர் விசு அவர்கள் அறிமுகப்படுத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன். முன்பே நான் திருக்குறள் பிரதிபா அவர்களின் கவனகக் கலையைக் கண்டு வியந்தவன். அவர்களைப் போல் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தவன். நான் முன்பு பணி செய்த கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் பணி செய்த இரமேசு என்ற அஞ்சல் அதிகாரி என்னைப் பற்றி அறிந்து ஆரணி அடுத்துள்ள திமிரி என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவியை அழைத்து வந்து என்னிடம் அறிமுகம் செய்தார்.

அந்த மாணவியின் பெயர் தீபா. எட்டாம் வகுப்பு அவர் படித்தார் என்று நினைவு. அவரின் திருக்குறள் ஆர்வத்தை அறிந்து அவர்களை நெறிப்படுத்தி 1330 குறட்பாக்களும் அறிந்தவராக மாற்றினேன். எங்கள் கல்லூரியின் தாளாளரும் மிகச்சிறந்த திருக்குறள் பற்றாளருமாகிய சக்தி ப.அன்பழகன் அவர்களின் கவனத்திற்குத் தீபாவின் திருக்குறள் ஈடுபாட்டைச் சொல்லி அறிமுகப்படுத்தினேன். எங்கள் தாளாளர் அவர்கள் பணப்பையை எடுக்க மறந்தாலும் அவர் வழிப்பயணத்தில் திருக்குறளை மறவாமல் எடுத்துச் செல்வதும், ஓய்வு நேரங்களில் படிப்பதும் நம் போலும் தமிழறிஞர்களிடம் திருக்குறள் பற்றி, வள்ளலார் பாடல் பற்றி உரையாடுவதும் அவர்களின் வழக்கம். எங்கள் தாளாளர் சக்தி ப.அன்பழகன் அவர்கள் பள்ளி மாணவி தீபாவைத் தம் செலவில் கல்லூரியில் உரிய காலத்தில் படிக்க வைக்க விரும்பினார்கள். அவருக்கு ஓர் உயர்பரிசில் உடனடியாக வழங்க நினைத்துத் தம் அறையில் அழகுடன் காட்சி தந்த ஒரு விலை உயர்ந்த கடிகாரத்தைப் பரிசிலாக வழங்கினார்கள். இவ்வாறு திருக்குறள் அறிந்தவர்களைப் போற்றிய எனக்குத் திலீபன் பற்றி செய்தி கிடைத்தால் விடுவேனா?

திருக்குறள் திலீபன் காரைக்குடியில் உள்ள மீ.சு.வி.மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கின்றார். இந்தப் பள்ளி கவியரசு முடியரசனார் உள்ளிட்ட பெருமக்கள் பணிபுரிந்த பெருமைக்குரியது. 97 ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றும் இந்தப் பள்ளியில்தான் இயக்குநர் சுப.முத்துராமன் உள்ளிட்டவர்கள் படித்தனர்.


மழலைகளுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்கும் திருக்குறள் திலீபன்


திருக்குறள் திலீபன்(இன்னொரு தோற்றம்)

அப்பள்ளியில் நன்கு படித்து வரும் திருக்குறள் திலீபன் எதிர்காலத்தில் உயர்படிப்பைத் தொடர உதவுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகக் கருதுகின்றேன். திருக்குறள் திலீபனின் தந்தையார் திரு.ம.தங்கச்சாமி ஐயா அவர்கள் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிகின்றார். தமிழ்ப்பற்றும்,இனப்பற்றும் கொண்ட பெருமகனாரின் குழந்தை அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் உரிய குழந்தை என்று கருதிவிட முடியாது. திருக்குறள் திலீபன் உலகத் தமிழரின் சொத்து. அவரைப் போற்றுவதும் பாராட்டுவதும் உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களின் கடமையாகும். திரைப்பட நடிகைகளை, நடிகர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும் அழைத்துத் தமிழ்ச்சங்கம் திறப்புவிழா நடத்தும் தமிழர்கள் தங்கள் செயலை நிறுத்தித் திருக்குறள் திலீபன் போன்ற அறிவுச்செல்வங்களைப் போற்றினால் நம் இனத்தில் இன்னும் பல திலீபன்கள் தோன்றுவார்கள்.

திருக்குறள் திலீபன் பதின்கவனகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

அவை: 1.குறள் கவனகம், 2.எண் கவனகம் 3. எழுத்துக் கவனகம் 4. கூட்டல் கவனகம், 5.பெயர்க் கவனகம், 6.ஆண்டுக் கவனகம், 7. மாயக் கட்டம் 8. வண்ணக் கவனகம், 9.தொடு கவனகம், 10.ஒலிக் கவனகம்

திலீபனின் தந்தையார் திரு. தங்கச்சாமியார் மேல் எனக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் திலீபன் என்னும் அறிவுச்செல்வத்தை வழங்கியது மட்டும் அன்று. திரு.தங்கச்சாமியார் அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மேல் பெரும் மதிப்புடையவர் என்பதும் ஐயாவுடன் பல காலம் பழகியவர் என்பதும் அறிந்து அவர்மேல் பன்மடங்கு மதிப்பு ஏற்பட்டது.

திருக்குறள் திலீபனைத் தொடர்புகொள்ள:

திருக்குறள் த.திலீபன்,
த / பெ. திரு.ம.தங்கச்சாமி,
4 / 1 நான்காவது வீதி,
முடியரசன் சாலை,
காரைக்குடி-630 001
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
மின்னஞ்சல் : dhileebanthangam@gmail.com

செல்பேசி + 91 94865 62716
செல்பேசி + 91 94872 14745