நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனடா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 அக்டோபர், 2018

மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் கொண்டு வழங்கிய வாழ்த்துரை




     கனடாவுக்கு முதல்முறையாகச் சென்றபோது(2016) மருத்துவர் பால் ஜோசப் அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பினைத் திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவுநர் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். அதன் பிறகு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மருத்துவருடன் தொடர்பு தொடர்ந்தது; வலுப்பெற்றது. தங்கள் குடும்பத்துள் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, அவர்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் என்றும் நன்றியுடன் போற்றுவேன். மருத்துவர் எழுதிய கவிதைகளை அவ்வப்பொழுது மின்னஞ்சலில் அனுப்புவார். படித்துச் சுவைப்பதுடன் நிறுத்திக்கொள்வேன். ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்புக்கும் விரிவான ஒரு மதிப்புரை எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் மதிப்புரை மட்டும் இதுநாள்வரை எழுதி அனுப்பவில்லை. எனக்கு அமையும் தொடர்ப்பணிகளும், ஆய்வுப்பணிகளும் இவ்வாறு செய்ய இயலாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

     நான் உருவாக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் கனடாவில் வெளியிடுவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்ட சூழலில் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் அதன் வெளியீட்டு விழாவை நடத்துவதற்குத் தாமே முன்வந்தமையை நன்றியுடன் இங்கு நினைத்துப்பார்க்கின்றேன் (கனடா விபுலாநந்தர் கலை மன்றம் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தியமை பின்பு நடந்தது). இது நிற்க.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மனிதநேயம் மிக்க மருத்துவர். பிறர் துயரங்களைக் களையும் தூய உள்ளத்தினர். மேடைகளில் நகைச்சுவை பொங்குமாறு பேசும் ஆற்றலாளர். மருத்துவத்துறை சார்ந்த செய்திகளை வானொலிகள், தொலைக்காட்சிகள், மக்கள் மன்றங்களில் எடுத்துரைத்து நோயற்ற சமுதாயம் அமைவதற்குத் தொண்டாற்றும் நன்னெறியினர். நோயாளிகளாக வருபவர்களை நோய்நீக்கி, தம் குடும்பத்துள் ஒருவராக மாற்றிக்கொள்ளும் வகையில் "அன்பெனும் பிடியுள் அனைத்து மலைகளையும்" அரவணைத்துக்கொள்ளும் நவீன வள்ளலார்.

     மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் எழுதிய அகவிதைகள், நலம் நலமறிய ஆவல் என்னும் இரண்டு நூல்களையும் அண்மைய கனடாப் பயணத்தின்பொழுது வழங்கிப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். ’வேதாளம் மீண்டும்  முருங்கை மரம் ஏறிய’ கதைதான். அந்த நூல்களும் புரட்டப்படாமல் நான் படிக்கவேண்டிய பகுதியில் கண்முன்னே காட்சி தந்தன. அண்மையில் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை மருத்துவரின் துணைவியாரும் எங்களின் அன்னையாருமான கேமாவதி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். எனக்கே உள்ள நோயான ’ஒத்திவைக்கும்’ பழக்கத்தால் இந்தச் சூழலிலும் நூலைப் படிப்பதற்குக் காலம் ஒதுக்கமுடியவில்லை. எனவே நூல்கள் படிக்கப்படாமல் இருந்தன. இரண்டு மூன்று நாள்களுக்கு முன் நூல்வெளியீட்டு விழா நினைவு வந்தது. நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். உள்ளத்தைத் தொடும் உணர்வுகளைத் தாங்கிய ’அகவிதை’ நூலும், அனைவருக்கும் பயன்படும் அரிய மருத்துவக் குறிப்புகளைத் தாங்கிய ’நலம் நலமறிய ஆவல்’ நூலும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்தன. என் உள்ளத்தில் ஊற்றெடுத்த நூல் குறித்த உணர்வுகளை எழுத்தாக்கி விழா நாளன்று அனுப்பினேன். அந்த மடல் இதுதான்.

     உலகிற்கே மனிதநேயத்தைக் கற்றுத்தரும் கனடா மண்ணில் மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்வெளியீட்டு விழா நடைபெறுவதை அறிந்து மகிழ்கின்றேன். தொலைவுகள் எம்மைப் பிரித்தாலும், இந்த அரங்கின் முதல்வரிசையில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனாக இந்த அரங்கில் என் உள்ளம் இருப்பதை அரங்கில் இருபோர் அறிய வாய்ப்பில்லை.

     தம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், இழந்த இழப்புகளைச் சரிசெய்துகொள்வதற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, முன்னேறிக் கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளுக்கு நடுவே, கடும் உழைப்பால் இச்சமூகத்தின் நோய் நீக்கும் பணியில் ஈடுபாட்டுடன் உழைக்கும் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் இரண்டு நூல்களை எழுதி வழங்கியுள்ளமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.



     அகவிதைகள் என்ற புதுப்பா நூல் தலைப்பிலயே பல நுட்பங்களைத் தாங்கியுள்ளது. விதைகள் எனவும் கவிதைகள் எனவும் அகத்தில் விளைந்த விதைகள் எனவும் அ+கவிதைகள் = அகவிதைகள் அதாவது கவிதை அல்ல என்றும் பல பொருள்தரும் வகையில் இந்த நூலின் தலைப்பு உள்ளது. 49 தலைப்புகளில் இந்தக் கவிதை நூல் 166 பக்கங்களில் அமைந்துள்ளது. கவிநாயகர் வி. கந்தவனம், பொன்னையா விவேகானந்தன் ஆகியோரின் அணிந்துரை, ஆய்வுரைகளைக் கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. அனுபவங்கள், நிகழ்வுகள், மருத்துவம், அறிவியல், உளவியல், விழிப்புணர்வு, ஈழவிடுதலை, மாந்தநேயம் குறித்த பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

     மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை அடுக்கிக்காட்டும் மருத்துவர், வரம்பின்றி இருப்பதை எடுத்துரைத்து, சின்னத்திரை தொடர்கள் போன்று நோயின் பட்டியல் நீளும் என்கின்றார்(பக்கம் 7,8).

ஆழிப்பேரலை குறித்து மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் வரைந்துள்ள கவிதை என் உள்ளம் தொட்ட கவிதை என்று உரக்கச்சொல்வேன்.

" ஏய் கடலே
ஏன் எங்கள் மீது
இவ்வளவு கோபம்.
நீலம் உனக்கு சொந்தமில்லை
அது வானத்திடம் நீ உள்வாங்கியது.
அலைகள் உனது உடைமையில்லை
அதுவும் காற்றிடம் கடன் வாங்கியது.
மீன்களும் உனக்கு உரியதல்ல
இயற்கை இன்பத்தின் இனவிருத்தி
சிப்பிகளும் வேண்டாமென்று
கரையில் துப்பிவிட்டாய்.
உப்பும் துவர்ப்பும்
இப்போது  உன்னிடம்
நிறையவே இருக்கிறது.
அது எங்களிடம் அள்ளிச்சென்ற
கண்ணீரால் வந்ததோ!:

என்று வினவும் கவிஞரின் உள்ளத்தில் சுனாமியின் சீற்றத்தால் மாந்தகுலம் சந்தித்த இழப்புகளின் பதிவுகள் தென்படுவதை உணரலாம். நீலவண்ணம், அலைகள், மீன்கள், முத்துகள் யாவும் உன்னுடையதில்லை என்று அடுக்கிக்காட்டும் கவிஞரின் கவியுள்ளத்தை இக்கவிதையில் இரசிக்க இயலும்.


" தெரிந்தோ தெரியாமலோ
எப்போதும் நாம்
அழுதுகொண்டுதானிருக்கிறோம்.
ஆனால் கண்ணீர் மட்டும்
வெளியே வழிந்தோடுவதில்லை
இன்னும் புரியவில்லையா?

கண்களில் மட்டும் கண்ணீர்
என்ற தண்ணீர் இல்லையென்றால்
காய்ந்து வறண்டுபோன
விழிகளில் ஒளியேது? (பக்கம் 18)

என்று மருத்துவர் பால் ஜோசப் கவிதைச் சொற்களால் வினவுவது அவர் ஒரு தேர்ந்த மருத்துவர் என்பதைக் காட்டுகின்றது.

     யாழ்நூலகம் அழிந்த வரலாறு என்பது மீண்டும் ஒரு குமரிக்கண்டம் அழிந்தமைக்கு நிகரானது. அதனைக் கண்ணால் கண்ட நேர்ச்சான்று நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள். தாம் கல்வி பயின்ற காலத்தில் அந்தக் கொடிய நிகழ்வு நடைபெற்றதை நம் மனத்தில் காட்சி ஓவியமாகத் தீட்டிக்காட்டுகின்றார் இவர். நூலகம் எரிந்த சோகம் தாங்காமல் பன்மொழி வித்தகர் டேவிட் அடிகளார் மயங்கி விழுந்து இறந்த செய்தியை நம் மருத்துவர் பதிவு செய்துள்ளமையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்

" அன்று நள்ளிரவு வைகாசி 31 ஆண்டு 81
பத்திரிசியார் கல்லூரி விடுதியில்
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலுள்ள வீதியெங்கும் பரபரப்பு
எழுந்துபார்த்தோம் ஜன்னல் வழியே
சற்றுத் தொலைவில் பாரிய தீப்பிழம்பு
நள்ளிரவில் செந்நிற வானம்...

மறுநாள் விடிவதற்குள்
சாம்பல்மேடாய் கருகிய தூண்களோடு
காமினி திசநாயக்காவும்
காட்டுமிராண்டி காடையரும்
கச்சிதமாய் திட்டமிட்டு
கல்வித்தாயின் கோவிலை
கரியாக்கி இடுகாடாய் மாற்றினர் (பக்கம் 104,105)

என்று எழுதியுள்ள பக்கங்களைப் படிக்கும்பொழுது கண்ணீர் நம்மையறியாமல் கன்னங்களில் கரைபுரண்டோடுவதை உணரமுகின்றது. அகவிதைகள் முளைத்து, முழுமரமாகி, சமூகம் பயன்பெற நல்ல கனிகளைத் தரட்டும்.

நூல் 2:

     மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நலம் நலமறிய ஆவல் என்ற நூல் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள அரிய மருத்துவத்துறை சார்ந்த நூல் என்று கொண்டாடலாம். இந்த நூலில் இன்று மனிதகுலம் சந்தித்துவரும் பல நோய்களை நினைவூட்டி, அவை ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. சினம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், மன அழுத்தம், செல்பேசிகளால் ஏற்படும் நோய், வீடியோகேம் போன்றவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் என்று பல்வேறு நோய்களை எளிமையாக எடுத்துரைத்து, அதற்குரிய தீர்வுகளையும் இந்த நூலில் சுட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. எளிய நடையும், எடுத்துரைக்கும் பாங்கும், சான்றுகாட்டும் அனுபவமும் இந்த நூலை இனிமையாக்குகின்றது. பெரும்பான்மையான நோய்களிலிருந்து விடுபட அண்டை அயலில் இருப்பவர்களுடன் அன்புகாட்டுதல், பாராட்டுதல், மன்னித்தல் முதலிய பண்புகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

     இதயம் பேசுவதுபோல் அமைத்துள்ள முதல் கட்டுரையின் பாங்கு சிறப்பாக உள்ளது. இதயம் சார்ந்த நோயுடையவர்கள் இந்தக் கட்டுரைப் பகுதியைப் படித்தால் நோயிலிருந்து விடுபட வழியுண்டு. இந்த நோய் இல்லாதவர்கள் இக்கட்டுரையைப் படித்தால் இந்த நோய் தம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். மன அழுத்தம் மிகப்பெரிய நோயாக இன்று உலகம் முழவதும் பரவலாகக் காணமுடிகின்றது. இதனைப் போக்கவும் மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சினம் குறித்து, திருவள்ளுவர் பலபடப் பேசியிருந்தாலும் நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மிக எளிமையாகச் சினம் குறித்து எடுத்துரைத்து, அதனால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுவதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சிக்மண்டு பிராய்டு உள்ளிட்ட மருத்துவமேதைகளைக் கொண்டாடும் இந்த உலகம் ஆயிரக்கணக்கான மனித இதயங்களாக நின்று, உளவியல் பேசிய திருவள்ளுவனைக் கொண்டாடவில்லையே என்ற கவலை நம் மருத்துவர் பால் அவர்களிடம் இருப்பதை நினைத்து அவரின் மொழியுணர்வை மெச்சுகின்றேன்.

     இன்று மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் முதன்மை நோய்களை அறிமுகம் செய்து அவை ஏற்படாமல் இருக்க அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ள நூலாக நலம் நலமறிய ஆவல் நூல் உள்ளது.

     தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் இரண்டு நூல்களை வழங்கியுள்ள மருத்துவர் பால் ஜோசப் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

பணிவுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி, இந்தியா
14.10.2018

நூல் வெளியீடு: மணிமேகலை பிரசுரம், சென்னை -17


ஞாயிறு, 20 மே, 2018

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி



பேராசிரியர் சு. பசுபதி


     கனடாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மின்னியல்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு.  பசுபதி அவர்களைச் சற்றொப்ப பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் நன்கு அறிவேன். இவர்தம் யாப்புத்துறை ஈடுபாடே இவர்மேல் மிகுந்த மதிப்பு எனக்கு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது. கவிதை இயற்றிக் கலக்கு என்ற தலைப்பில் இவர் இயற்றிய கட்டுரைகளைக் கண்டு அக்காலங்களில் வியப்புற்றேன். தொடர்ந்து இவர்தம் பல்துறைக் கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்ததுண்டு. மின்னஞ்சலில் நட்பு வளர்பிறைபோல் வளர்ந்தது. அதனால் ஈராண்டுகளுக்கு முன்பாகக் கனடா சென்றபொழுது பேராசிரியர் அவர்களை நானும் திரு. சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் தனித்துச் சந்தித்து உரையாடும் வாய்ப்பும், பல நிகழ்ச்சிகளில் கண்டு உரையாடும் வாய்ப்பும் எங்களுக்கு அமைந்தன. தொடர்ந்து மின்னஞ்சலில் தொடர்புகொண்டு வேண்டிய விவரங்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பேராசிரியருடன் பழகியதிலிருந்து அவர்தம் பல்துறைப் புலமையை அறிந்துகொள்ள முடிந்தது. அவர்தம் தமிழ்ப்பணியும், கல்விப்பணியும் தமிழகத்தார் அறிய வேண்டுவன.

     பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம். சுப்பராயன் ஆவர். சு. பசுபதியின் இளமைக்கல்வி சென்னை இராமகிருஷ்ண மிஷனில் அமைந்தது.

     சு. பசுபதி சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் படித்துத் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் (1963). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முது தொழில்நுட்பம் (எம்.டெக்) படித்தவர் (1966). அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு பட்டம் பெற்றவர்(1972).

1972 முதல் 2006 வரை டொராண்டோ பல்கலைக்கழகத்தில் மின்னியல் கணினித்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தகைசார் பேராசிரியராக அப் பல்கலைக்கழகத்தில் பணியைத் தொடர்பவர்.

     சென்னை ..டி-யில் பயின்றபொழுது நோபல் பரிசு விஞ்ஞானி சி.வி. இராமன் அவர்களின் திருக்கையால் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் (1966). 2010-இல் சென்னை ..டி-யின் புகழ்பெற்ற பழைய மாணவருள் ஒருவராய்த் (Distinguished Alumnus Award) தேர்வு செய்யப் பெற்றவர்.

            1951- இல் பரலி சு. நெல்லையப்பர், நாரண. துரைக்கண்ணன் போன்றோரின் முன் தொடங்கப்பெற்ற பாரதி கலைக்கழகத்தின் (சென்னை -1)  வாழ்நாள்  உறுப்பினர் இவர்.

  பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் துணைவியார் பெயர் ஜெயா பசுபதி ஆகும். இவர்களுக்கு வாணி என்ற ஒரு மகள் உண்டு.

         சந்தவசந்தம்இணையக் கவிதைக் குழுமத்தில் பல ஆண்டுகளாகக் கவிதைகள், யாப்பிலக்கண விளக்கங்கள் எழுதிவருபவர். டொராண்டோவில் 2006 - இல் நடந்த திருமுறை மாநாட்டில்நாயன்மார்கள்கவியரங்கம், 2016 - இல் நடந்த தொல்காப்பியக் கவியரங்கம் ஆகியவற்றிற்குத் தலைமை வகித்து நடத்தியவர். கனடாவில் நடைபெறும் தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தம் பங்களிப்பை நல்குபவர்.

 சு. பசுபதியின் படைப்புகள் கலைமகள், அமுதசுரபி, கோபுரதரிசனம், அம்மன் தரிசனம், பாரதி கலைக்கழக இதழானகவியமுதம்போன்ற ஏடுகளிலும், “திண்ணைஇணைய இதழிலும் வெளிவந்துள்ளன.

பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழிலும் இசையிலும் நல்ல ஈடுபாடு உண்டு. இத்துறை சார்ந்த பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1. கவிதை இயற்றிக் கலக்கு,(இரண்டாம் பதிப்பு, அச்சில்). 2. சங்கச் சுரங்கம் – 1,3.. சங்கச் சுரங்கம் - 2, 4.சொல்லயில் (சொல்+ அயில் = சொல்லயில்; அயில் = கூர்மை/வேல்) இவர்தம் தமிழ்க் கொடையாகும்.

கவிதை இயற்றிக் கலக்கு: நூல் அறிமுகம்

     மின்னணுவியல் துறையில் பணிபுரிந்தாலும் தமிழின்மேல் பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்கு மிகுந்த பற்று உண்டு. குறிப்பாகத் தமிழ் யாப்பு சார்ந்து மிகுதியும் எழுதியவர். முறையாக வகுப்பெடுத்துத் தமிழ் யாப்பிலக்கணங்களை மாணவர்களுக்கு விளக்கியவர். பல்கலைக்கழகத்தில் தம் பணிகளுக்கு இடையே இவர் பிறதுறை மாணவர்களுக்குத் தமிழ் யாப்பிலக்கணங்களின் அடிப்படைகளைப் புரியவைத்து, பலரை மரபுப்பாடல் புனைய வைத்தவர். யாப்பு என்றால் அஞ்சியோடும் கூட்டத்தை அன்பொழுக அழைத்து, அவர்களுக்கு எழுத்து, சீர், அசை, சீர், தளை, அடி, தொடை பயிற்றுவிக்கும் பணியை ஈடுபாட்டுடன் செய்தவர்.

பேராசிரியர் சு. பசுபதி இணையக் குழுக்களில் தம் யாப்பிலக்கணக் கருத்துகளை எழுதியதால் உலகம் முழுவதும் பலர் பேராசிரியர் பசுபதியிடம் ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுள்ளனர். அந்த வகையில் கவிதை இயக்கிக் கலக்கு என்ற தலைப்பில் ஆறாண்டுகள் பல்வேறு நிலைகளில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். 384 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், யாப்பிலக்கணங்களை எளிமையாகப் புரியவைக்கும் நூல். தேவையான விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் பயிற்சிகளும் இந்த நூலில் இருப்பதால் யாப்பு ஆர்வலர்களுக்கு இந்த நூல் மிகச் சிறந்த கையேட்டு நூலாகும்.

     பேராசிரியர் சு. பசுபதி, யாப்பிலக்கணம் குறித்த தம் கட்டுரைகளை உருவாக்கும் முன் தம் காலத்திற்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த அனைத்துவகையான இலக்கண நூல்களையும் ஆழமாகக் கற்று, தக்கவாறு சிந்தித்து யாப்பிலக்கணத்தை எளிமைப்படுத்தி இந்த நூலில் வழங்கியுள்ளார்.

     கவிமாமணி இலந்தை சு. இராமசாமியார், பேராசிரியர் வே.ச.. அனந்தநாராயணன் ஆகியோர் வழங்கியுள்ள முன்னுரையில் நூலாசிரியர் பற்றியும் நூலின் உருவாக்கம் பற்றியும் அரிய குறிப்புகள் பல கிடைக்கின்றன.



     கவிதை இயற்றிக் கலக்கு என்ற இந்த நூல் இரண்டு பகுதியாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் அறிமுகம், கவிதை உறுப்புகள், எழுத்துகள், நேரசை, நிரையசை, பாடலை அலகிடுதல், சீர்கள், தளை, அடி, ஓசை, தொடை - 1, தொடை- 2, குறள்வெண்பா: முதலடி, வெண்பாவின் ஈற்றடி, அலகிடுதல் சில நுண்மைகள், குறள் வெண்செந்துறை, ஆசிரியப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிவிருத்தம், தரவு கொச்சகக் கலிப்பா, ஆசிரியத் தாழிசை, கலித்தாழிசை, வெண்பா 1, வெண்பா 2, வெண்பா 3, கலித்துறை 1, கலித்துறை 2, கட்டளைக்கலித்துறை, அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கட்டளைக் கலிப்பா, வஞ்சிப்பா, கலிப்பா 1, கலிப்பா 2, கலிப்பா 3, மற்ற சில பாவினங்கள் என்ற தலைப்பில்  அமைந்து ஒவ்வொரு தலைப்பிலும் பொருத்தமான செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

     எடுத்துக்காட்டாகக் கட்டளைக்கலித்துறை-1 என்ற தலைப்பில் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் கட்டளைக்கலித்துறையின் வரலாற்றை நமக்குக் கொண்டு வந்து காட்டுகின்றார். காரைக்காலம்மையார்தான் முதன்முதல் இந்த வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கின்றார் (பக்கம் 149). காரிகை என்று இதற்கு வேறுபெயர் உண்டு என்கின்றார் பக்திக் காலத்தில் திருவிருத்தம் என்று கட்டளைக் கலித்துறை அழைக்கப்பட்டதை நினைவூட்டுகின்றார். இலங்கை நாட்டு அறிஞர்கள் குமாரசாமிப் புலவர், தாமோதரம் பிள்ளையின் பரிந்துரைகளை எடுத்துக்காட்டுகின்றார். பட்டினத்தார் தொடங்கி, பாரதி, கவிமணி பாடிய கட்டளைக் கலித்துறைகளை மேற்கோளாக எடுத்தாள்கின்றார். கட்டளைக் கலித்துறையில் பின்பற்றப்படும் விதிகளை அடுக்கிக் காட்டுகின்றார். இவ்வாறு ஒரு  பாத்துறைக்கு விளக்கம் தர எடுத்துள்ள முயற்சியே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இத்தகு செயற்கரிய செயல் செய்ய வேண்டுமெனில் துறைசார் ஈடுபாடு இருந்தால் மட்டுமே இயலும். அந்த வகையில் பேராசிரியர் பசுபதியின் யாப்புத்துறைப் பணி அனைவராலும் போற்றப்படும்.

  கவிதை இயற்றிக் கலக்கு நூலின் இரண்டாம் பகுதியில் சந்தப் பாக்கள், சந்த வஞ்சித்துறை, சந்த வஞ்சி விருத்தம், சந்தக் கலிவிருத்தங்கள்-1, சந்தக் கலிவிருத்தங்கள்- 2,  சந்தக் கலித்தாழிசை, சந்தக் கலித்துறை, சந்த அறுசீர் விருத்தம், சந்த எழுசீர் விருத்தம், சந்த எண்சீர் விருத்தம், விருத்தங்களின் ஒன்பது, பத்து, பதினொரு சீர்கள், பன்னிரு சீர், பதினான்கு சீர், பதினாறு சீர்கள், பரணித் தாழிசை, வண்ணப்பாடல்கள் - 1, வண்ணப்பாடல்கள் - 2,  வண்ணப்பாடல்கள் - 3, சிந்துகள், கும்மி, சிந்துகள் - 2, கிளிக்கண்ணி, சிந்துகள் - 3, இசைப்பாடல், முடிவுரை என்ற வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.

     நான்கு வகைப் பெரும்பாக்களையும், அதன் பிரிவுகளையும், பிற்காலத்தில் கிளைத்தெழுந்த சிந்துப்பாக்கள், வண்ணப்பாக்கள், கண்ணி, கும்மி ஆகியவற்றையும் பெரும்பாடுபட்டு அறிமுகம் செய்துள்ள பேராசிரியர் சு. பசுபதி அவர்களுக்குத் தமிழறிஞருலகம் மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளது.

கல்லூரியில் யாப்பிலக்கணம் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூலைப் பேராசிரியர்கள் அறிமுகம் செய்யலாம்.

வெளியீடு: 
எல்.கே.எம் பப்ளிகேஷன்
புது எண் 33, ரங்கன் தெரு,
( பழைய GRT அருகில் .
தெற்கு உஸ்மான் சாலை )
தியாகராய நகர்,
சென்னை -600017    


சு. பசுபதியின் படைப்புகளை அறிய:

இணையக் குழுமம்:  https://groups.google.com/forum/?hl=en#!forum/yappulagam
வலைப்பூ: http://s-pasupathy.blogspot.com/






மு.இ, பேராசிரியர் பசுபதி, கவிஞர் புகாரி (கோப்புப் படம்)
மு.இளங்கோவன், பேராசிரியர் பசுபதி(கோப்புப் படம்)

படங்கள் உதவி: சிவம் வேலுப்பிள்ளை(கனடா)

வெள்ளி, 26 மே, 2017

இணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகாரி...

"அன்புடன்" புகாரி

     இணையப் பெருவெளியில் இயங்குபவர்களுக்கு ’அன்புடன்’ புகாரி என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கும். "அன்புடன்" இணையக்குழு, "அன்புடன் புகாரி" வலைப்பதிவுகளால் இவருக்கு "அன்புடன்" என்னும் முன்னொட்டானது புகழ்ப்பெயராக ஒட்டிக்கொண்டது. கடந்த ஆண்டு (2016) கனடா சென்றபொழுது நினைவில் குறித்துவைத்துக்கொண்டு நான் சந்தித்த நண்பர் ’அன்புடன்’ புகாரி ஆவார். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைவான செய்திகள் உள்ளன. இணையம் வழியாக அறிமுகமான எத்தனையோ நல்ல நண்பர்களில் புகாரியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உடன்பிறந்தாரைப் போல் ஒன்றுகலந்து, பழகிய அவரின் நினைவுகள், ஆண்டு ஒன்று கடந்தாலும் அலை அலையாய் எழுந்து வந்து செல்கின்றன.

     நான் கனடாவுக்கு வந்திருப்பதை நண்பர் புகாரிக்குத் தெரிவித்து, சந்திக்க விரும்புவதைச் சொன்னவுடன் எனக்காக உரிய நாளும் நேரமும் ஒதுக்கிக் காத்திருந்தார். நானும் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் புகாரி அவர்களின் இல்லம் சென்றோம். அவரின் உள்ளம் போலவே வீடும் செய்நேர்த்தியுடன் இருந்தது. வளமனை போன்று பரந்து விரிந்திருந்த அவரின் இல்லத்தில் நுழைந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். நண்பர் சுதர்சன் அவர்களும் உடன் இருந்தார். வழக்கமான நலம் வினவலுக்குப் பிறகு புகாரி அவர்களின் கவிதைப் பணியை அறிந்து வியந்தேன். கவிதை நூல்கள் பலவற்றைக் கண்முன் வைத்தார். அவர்தம் நூல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்த சூழலை எங்களுடன் ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார். திருக்குறளுக்கு இவர் புதுக்கவிதை வடிவில் புதிய விளக்கவுரை வரைந்துள்ளதைப் படித்து உள்ளம் பூரிப்படைந்தேன். தம் நூல் வெளியீட்டுப் பணிகளைப் பற்றி  எடுத்துரைத்தார். கவிதைத்துறையில் கால்பதித்ததையும் தம் பங்களிப்பையும் அடக்கத்துடன் எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பப் பொறியாளரின் உள்ளத்தைத் தமிழும் கவிதையும் ஆட்சிசெய்வதை அறிந்துகொண்டேன்.

     பலமணி நேரம் அமைந்த எங்கள் உரையாடலை முறைப்படுத்தி, என்னுடன் ஒரு நேர்காணலைப் புகாரி அமைத்தார். அனைத்தையும் பதிவுசெய்து கொண்டோம். என் நாட்டுப்புறவியல் துறை ஈடுபாட்டையும் ஆவணப்பட முயற்சிகளையும், தமிழ் கற்ற வரலாற்றையும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டதாக நினைவு. எங்கள் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே பழங்களும் பண்ணியங்களும் பரிமாறப்பட்டன. புகாரி அவர்களின் துணைவியாரும் குழந்தைகளும் சில மணிப்பொழுதில் எங்களுக்கான இனிய புலால் உணவைச் செய்துவைத்துக் கொண்டு விருந்துண்ண அன்பொழுக அழைத்தனர். நாவை அடிமைப்படுத்தும் சுவையும், பரிந்து விருந்தோம்பிய பாங்கும் என் வாழ்வில் என்றும் பசுமையாக நிலைத்திருக்கும். அவர்களின் மத ஒழுங்குகளையும் கடந்து வந்து, நட்புக்கு அவர் தந்த முதன்மையை நன்றியுடன் என்றும் நான் போற்றுவேன்.

     புகாரியின் படைப்புகளில் அகச்செய்திகள் அதிகமாக இடம்பெற்றிருக்கும். உலக நடப்புகளை உற்றுநோக்கி எழுதிய பாக்களும் கணக்கின்றி உள்ளன. பொருத்தமான சொல்லாட்சிகளைப் பொருத்திக் கவிதை புனைவதில் இவர் உவமைக்கவிஞர் சுரதா போல நுட்பமாகச் செயல்படுபவர். அகமும் புறமும் உள்ளடக்கமாக அமைந்த இவரின் பாட்டுப் பனுவல்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும் என்று அவாவுகின்றேன்.

"கனிவான உன்முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு,
வெந்நீரில் விழும்புழுவாய்
வெளிநாடு புறப்பட்டேன்!" (அன்புடன் இதயம், பக்கம், 84)

என்று மனைவியைப் பிரிந்து வெளிநாடு செல்லும் குடும்பத் தலைவர்களின் தேசியகீதம் போன்ற வரிகளைப் படித்துப் புகாரியின் கவிதை உள்ளத்தைக் கண்டுகொண்டேன்.

போரால் உலகம் அமைதியிழந்து வருவதை கண்டு,
ஏழை வயிற்றின்
கூழைப் பறித்தெடுத்தே
ஏவுகணைகள் ஆயிரம்
செய்கின்றாய்!
பாலைவனத்தின்
எண்ணைய்க் கிணறுகளில்
தீயைமூட்டி
நாசம் செய்கின்றாய்...
உலகம் எங்கும்
அழுகுரல் எழுகிறதே
ஓநாய்க் காதுகளோ?
நிலவும் வானும்
நிம்மதி கேட்கிறது
நிறுத்து மனிதா
நிறுத்து யுத்தத்தை! (அன்புடன் இதயம், பக்கம் 49)

என்று உலகச் சிந்தனை கொண்ட உயரிய கவிஞராகப் புகாரி தெரிந்ததால் அவரின் பணிகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்.

     "அன்புடன்" புகாரி போலும் எத்தனையோ தமிழார்வலர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பிற துறைகளில் பணியாற்றினாலும் அவர்கள் தமிழை நேசிப்பதில் தயங்கியவர்கள் இல்லை. அவர்களின் தமிழார்வமும், தமிழ் வாழ்க்கையும் பதிவுசெய்யப்பெற வேண்டும். அவர்களின் எழுத்துப்பணிகளும், எதிர்காலக் கனவுகளும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பெற வேண்டும். வாழ்க்கையோட்டத்தின் இடையிலும் தம் மொழி, இனம், நாடு குறித்துச் சிந்திக்கும் நம்மவர்களை நம் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும். அந்த வகையில் கனடாவில் வாழும் அன்புடன் புகாரியின் தமிழ் வாழ்க்கையை இந்தப் பதிவில் எழுதுகின்றேன்.

உலகத் தொல்காப்பிய மன்றக் கவியரங்கில் புகாரி


     புகாரி அவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அசன்பாவா ராவுத்தர், உம்மல் பரிதா ஆகியோரின் அன்பு மகனாக 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் நாள் பிறந்தவர். ஒரத்தநாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி வழியாக 11 ஆம் வகுப்புவரை பயின்றவர்(1975).  இளங்கலை வணிக நிர்வாகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1979).       மைக்ரோசாப்ட் சான்றுறுதி வல்லுநர் ,சவூதி அரேபியா, அமெரிக்கா, கனடா நாடுகளில் படித்துப் பலவகைக் கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். தகவல் தொழில்நுட்ப அறிவுரைஞராகவும், கணினி வல்லுநராகவும் பணிபுரிந்து வருபவர்.

இல்வாழ்க்கை:

     புகாரி அவர்கள் 1985 ஆம் ஆண்டு யாஸ்மின் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு தம் இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களுக்கு ரிஸ்வானா புகாரி  என்ற மகளும், சுகைல் புகாரி என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் கனடாவில் கல்வி பயில்கின்றனர்.

     1960 முதல் 1981 வரையிலான தமிழ்நாட்டு வாழ்க்கையைக் கவிஞர் புகாரி கீழ்வருமாறு பகிர்ந்துகொண்டார்.:
      
வானூறி மழைபொழியும்;
   வயலூறி கதிர்வளையும்;
தேனூறி பூவசையும்;
   தினம்பாடி வண்டாடும்;
காலூறி அழகுநதி
   கவிபாடிக் கரையேறும்;
பாலூறி நிலங்கூட
   பசியாறும்; உரந்தையில்... நான் பிறந்தேன்.

     தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி, வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஒரு பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

     ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று சொற்களை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வழக்குச் சொற்களின் வசமானேன்; அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் இருக்கையிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

     உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடர்ந்த மனவலியை ஓர் உன்னதச் சுவையுணர்வோடு, சிந்தனை முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப், பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாயின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

     கல்லூரி முடித்ததும், நண்பர்களின் தூண்டுதலால், என் கவிதைகளை இதழ்களுக்கு அனுப்பத் தொடங்கினேன். தினமும் ஒரு கவிதையேனும் எழுதாமல் உறங்கியதில்லை.

                "அண்டா கா கசம்! அபூ கா ஹூக்கூம், திறந்திடு சீசேம்!" என்று நான் குளியளறையில் நின்று கத்தியதை அலிபாபா பத்திரிகை ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும். மகாத்மாவைப் பற்றி நான் எழுதிய கவிதையை அது வெளியிட்டது. முதன் முதலில் என் கவிதையை அச்சில் கண்ட நான் ஓரடி உயர்ந்துவிட்டதாய் உணர்ந்தேன்.

இலக்கிய நண்பர்களோடு சேர்ந்து "கயிறு" என்ற கையெழுத்து இதழினை நடத்தினோம்.

1981 முதல்  1999 வரை அமைந்த தம்  சவூதி அரேபியா வாழ்க்கையைப் பற்றி...

                1981 ஜூலை மாதம் சவூதி அரேபியா சென்றேன். கல்லூரி முடித்து நான் பணிதொடங்கிய முதல் நாடு சவூதி அரேபியாதான்.

எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் என் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. மாலனின் திசைகள் என் கவிதைகளை வரவேற்றது.

                1984, "அரபு மண்ணில் இதோ ஓர் அழகு ஊற்று" என்று தாய் ஆசிரியர் வலம்புரி ஜான் தன் ஆசிரியர்  பக்கத்தில் என் கவிதைகளை வெளியிட்டு என்னைப் பெருமைப் படுத்தினார்.

                1988, இந்தி-தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, டெல்லி பல்கலைக்கழக இந்திப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த குமாரி ஜமுனா, 1986 அக்டோபர்-நவம்பர் தீபம் இதழில் வெளிவந்த 'உலகம்' என்ற என் கவிதையை அந்த வருடத்தின் தமிழ் மாநில அடையாளக் கவிதையாய்த் தேர்ந்தெடுத்து இந்தியில் மொழி பெயர்த்து, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் (Ministry 0f Human Resources Development - India) ஆண்டு மலரான வார்சிகி 86 இல் வெளியிட்டார்.

                1988, குமுதம் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டேன். கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசு பெற்றேன்.


1999 முதல் இன்றுவரை  அமைந்த கனடா நாட்டு வாழ்க்கையைப் பற்றி....

                1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கனடா வந்தேன். கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என் கவிதைகளைக் கனடியத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் வழியே அறிமுகப்படுத்தியது.

1999 ஆம் ஆண்டு  நிலாவிலும் கற்கள் என்ற என் வலைத்தளத்தில் மின்கவிதைத் தொகுப்பொன்றைத் தொடங்கினேன்.

2000 ஆம் ஆண்டில் கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை என்ற பல்சுவைத் தமிழிதழின் ஆசிரியராய் இருந்து அதனை வெளியிட்டேன். இது என் கணினிப் படி என்று கூறலாம்.

                2001 இல்  கனடா உதயன் தமிழ் வார இதழ் தனது ஆண்டு விழாவையொட்டி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் கவிஞர்களுக்காக நடத்திய கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றை முதல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்து திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் கைகளால் தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.

                2002 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மைக் கவிஞர்களுள் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களோடு கவியரங்க மேடைகள் கண்டேன்.  கனடா உதயனின் தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வுக்குழுவில் நடுவராக இருந்தேன்.

     கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினராகவும் அதன் கவிதைத் தேர்வுக்குழுவில் ஒருவனாகவும் இருந்தேன்.

                2002 ஆம் ஆண்டில் ஏப்ரல் தமிழ் உலகம் குழுமத்தின் 'பாரதிதாசன் வைய விரி அவை' நடத்திய கவிதைப் போட்டியில் 'தோழியரே! தோழியரே!' என்ற என் கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

                2002 ஆம் ஆண்டில் என் முதல் கவிதைத் தொகுதியான வெளிச்ச அழைப்புகளைக் கனடாவில் வெளியிட்டதன் மூலம், தமிழ் நாட்டிலிருந்து வந்து கனடாவில் குடியேறிய தமிழர்களுள் தமிழ்ப் புத்தகம் வெளியிடும் முதல் தமிழன் என்ற பெருமை பெற்றேன்.

     வெளிச்ச அழைப்புகள் தொகுதிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை வழங்கி என்னைச் சிறப்பித்தார்.

     கனடியன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கனடா கீதவாணி போன்ற 24 மணிநேர கனடிய தமிழ் வானொலிகளிலும் கனடா வேங்கூவர் வானொலியிலும் கவிதைகள் வழங்கினேன். பதிவுகள், கீற்று, திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற பல இணைய மின்னிதழ்களிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன.

     அன்புடன், தமிழ்-உலகம்சந்தவசந்தம், உயிரெழுத்து, அகத்தியர் போன்ற யாகூ தமிழ் மின்குழுமங்கள் பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன்

     இணையத்தில் பல கவியரங்கங்களிலும் கலந்துகொள்கிறேன். கவியரங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறேன்.

புத்தகப்புழு இணையக் குழுவில் மட்டுநராக இருந்தேன். உயிரெழுத்துக் குழுவின் உரிமையாளராகவும் மட்டுநராகவும் இருக்கிறேன். கனடாவின் தமிழ் ஆரம் தொலைக்காட்சி என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பியது. பிப்ரவரி 14, 2003 ஆஸ்தான கவிஞராக தமிழ்-உலகம் மின்குழுமம் என்னை அறிவித்தது. தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறேன்

                2003, இணையத்தில் தமிழ்-உலகம் என்ற யாகூ குழுமம் வாயிலாகப்,  பாரதிதாசன் வைய விரி அவை நடத்திய கவிதைப் போட்டியில் என் 'அவன்தான் பாரதிதாசன்!' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 2003, இணையத்தில் புத்தகப்புழு நடத்திய காதல் கவிதைப் போட்டியில் 'கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

     கனடாவில் தமிழன்  என்ற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.

                2003 ஏப்ரல் 4 இல் மொன்றியல், கனடாவில் என் வெளிச்ச அழைப்புகள் மீண்டும் வெளியிடப்பட்டது. 2003 ஏப்ரல் 13 இல் 'அன்புடன் இதயம்' என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்பின் வெளியீடு சென்னையில் நடந்தது.

     கவிதை உறவு - ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூல்களுக்கான துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதுக்கான போட்டியில் என் 'வெளிச்ச அழைப்புகள்' கவிதை நூல் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறது. மே மாதம் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கவிதை உறவின் 31 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பரிசு வழங்கப்பட்டது. 2003 இலக்கியபீடம் தீபாவளி இதழில் 'வெட்டிப் பயல்கள் பேச்சு' என்ற என் கவிதை வெளியானது

     டிசம்பர் 13, 2003, என் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அன்புடன் இதயம்' கனடாவில் வெளியிடப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இணைய இதழான திண்ணையிலும், கனடிய நாட்டுத் தமிழ்ச் செய்தித்தாள்களிலும், வானொலிகளிலும் இவ்விழா பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளியாயின.

     எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் குழுமம் மூலம் என் அன்புடன் இதயம் கவிதைத்தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப்பட்டது. அது பற்றி மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே:

      வரலாற்றின் வைர மணித் துளியில்
      வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.
      இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
      இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
      அயல் மொழிகள் முயல்வதற்குள்
      ஆரம்பித்து விட்டோ ம் நாம்.
      சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
      அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
      அனுமதிக்கப் போவதில்லை.

என்று குறிப்பிட்டுள்ளார்.

                2004 ஜூன், நிலாவிலும் கற்கள் என்ற பெயரில் திஸ்கி எழுத்துருவில் செயல்பட்டுவந்த என் வலைத்தளத்தை முழுவதும் ஒருங்குகுறித் தமிழுக்கு மாற்றினேன்.

http://anbudanbuhari.com என்ற முகவரியில் வெளிச்ச அழைப்புகள் என்ற தலைப்பில் அது இயங்கி வருகிறது.

                2005 மார்ச்  7 இல், முழுவீச்சில் செயல்படும் 'அன்புடன்' யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே முதன் முறையாகத் தொடங்கினேன். அது வெற்றிநடை போட்டுக்கொண்டு திஸ்கி எழுதும் அனைவரையும் யுனித்தமிழுக்கு வரவேற்ற வண்ணம் இருக்கிறது.

2005 ஏப்ரல், http://anbudanbuhari.blogspot.com/ என்ற முகவரியில் ஒரு வலைப்பதிவும் தொடங்கினேன்.

                2005 மே, என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பை மாலன் தலைமையில் வெளியிட்டேன்.

                2005 மே, பச்சை மிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பு அச்சேறியது. எழுத்தாளர் .முத்துலிங்கம் அவர்கள் இதற்கான அணிந்துரையை வழங்கியுள்ளார்.

                2005 மே 9 ஆம் தேதி சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலன் தலைமையில் எனக்கு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வாழ்த்துரை வழங்குவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். இதழியல் துறையைச் சார்ந்தவர்களும் கவிஞர்களும் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்தார்கள். கவிஞர் இந்திரன், அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன், படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி ஆகியோர் சரணமென்றேன் என்ற என் மூன்றாவது கவிதை நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள்.

                2005 அக்டோபர் 1, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில், சரணமென்றேன் என்ற என் மூன்றாம் தொகுதியும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காம் தொகுதியும் திரு சிவதாசன் தலைமையில் வெளியிடப்பட்டது. கவிஞர் இரமணன் சிறப்புரையாற்ற, பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, கவிஞர் ஜெயபாரதன், கவிஞர் குலமோகன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களைத் திறனாய்வு செய்தார்கள். உதயன் ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்எழுத்தாளர் . முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.

2010 நவம்பர் 21 சென்னையில் திரிசக்தி பதிப்பகம்காதலிக்கிறேன் உன்னை எப்போதும்என்ற என் ஐந்தாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. 2010 நவம்பர் 26 திருச்சியில் உயிர் எழுத்துப் பதிப்பகம்அறிதலில்லா அறிதல்என்ற என் ஆறாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.

கனடிய தொலைக்காட்சிகளில், பட்டிமன்றத் தலைவர், கவியரங்கத் தலைவர், தமிழினி போட்டிகளின் நடுவர், தீதும் நன்றும் பேச்சாளர் போன்று பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்றுவருகின்றேன்.

புகாரியின் கவிதைத் தொகுதிகள்:

(1) தலைப்பு:                வெளிச்ச அழைப்புகள்
அணிந்துரை:      கவிப்பேரரசு வைரமுத்து
ஆண்டு:                 2002
சிறப்பு:     இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில்             முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்.  டொராண்டோ வில் வெளியிடப்பட்டது.  கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார்  இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு


(2) தலைப்பு:                அன்புடன் இதயம்
அணிந்துரை:      கவிநாயகர் வி. கந்தவனம்
வாழ்த்துரை:             இலந்தை சு. இராமசாமி
 ஆண்டு:         2003


 சிறப்பு:  எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய வரலாற்றில்   முதன் முதலாக வெளியிடப்பட்ட நூல்.  தமிழ்மொழி என்பதுடன் இல்லாமல் வேறு எந்த மொழியிலும் இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு இதுவே சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக்         கண்காட்சியில் இதன் 'தண்ணீர்' கவிதைக் காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப்  பெற்றது.   கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே  நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல்   கவிதைத் தொகுப்பில் இதன் 'தண்ணீர்' கவிதை  பங்கேற்றுள்ளது.


(3) தலைப்பு:                சரணமென்றேன்
அணிந்துரை:      மாலன்

ஆண்டு:         2004
 சிறப்புமுழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட   தொகுப்பு. சென்னையில் இதழாளர்கள் நடுவில்    கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர்   மாலன் தலைமையில் வெளியிடப்பட்டது தினம் ஒரு கவிதையில் தொடராக வருகிறது

(4) தலைப்பு:                பச்சை மிளகாய் இளவரசி
அணிந்துரை:      . முத்துலிங்கம்
 ஆண்டு:         2005
 சிறப்பு:    கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் 2005 அக்டோபர்  முதலாம் தேதி வெளியிடப்பட்டது.

(5) தலைப்பு:                 காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


பதிப்புரை:                     இசைக்கவி ரமணன்
 ஆண்டு:                           2010
சிறப்புசென்னையில் 2010 நவம்பர் 21 பாரதீய வித்யாபவனில் டாக்டர் சுந்தரராமன் வெளியிட கவிஞர் கபிலன் வைரமுத்து பெற்றுக்கொண்டு திறனாய்வு செய்தார்..

(6) தலைப்பு:                 அறிதலில்லா அறிதல்

ஆண்டு:  2010
சிறப்பு: திருச்சியில் 2010 நவம்பர் 26 ரவி குளிர்சிற்றரங்கில் வெளியிடப்பட்டது..


அன்புடன் புகாரியின் வரிகளுள் சில:

*
பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்,
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று

மாலையிட்டு மக்களீன்று
மனம் முழுதும் பசுமை பூக்க,
வேலை தந்த பாலைவனம்
வேதனையைத் தீர்த்த தெய்வம்!

பெற்ற மண்ணை, உறவை, நட்பை,
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத

பெற்றதுன்பம் கொஞ்சமல்ல,
பிரிவென்பதும் வாழ்வுமல்ல,
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா!
*
வருடங்கள் மூவாறு
வாழ்வளித்த பாலையிலே,
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்!

அரும்புகளின் கல்வியெண்ணி,
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்,
அவசரமாய்க் குடியேற்றம்!

கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனிய ரதம் கனடியமண்!

குணக்கேடு மதவெறியர்,
குத்துவெட்டு பகையில்லா,
மனிதநேயம் போற்றுமிந்,த
மண்பெருமை விண்பாடும்!

இணையத்தின் தமிழுக்கு,
இங்குவந்தே என்வணக்கம்!
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்!

அணையுடைத்துக் கவிபாடும்,
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்!

குளிர்தீண்ட கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்!

வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த ஈழத்தவர்
புகழ்பாடி கவிகொஞ்சும்!

எழுதியெழுதிக் கவிதைகளை,
இணையமெங்கும் தூவினேன்!
எழுதிவைத்த தொகுப்புகளை
இங்கிருந்தே வெளியிட்டேன்!

அழகுதமிழும் கணிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட,
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா!

குறிப்பு: என் கட்டுரைகளை எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்டுங்கள்.