நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 14 டிசம்பர், 2015

திருக்குறள் புலவர் நாவை. சிவம் அவர்கள்!


புலவர் நாவை. சிவம் அவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்துள்ள செட்டிக்குளம் அரசுப் பள்ளியின் ஆசிரியர்களும்மாணவர்களும் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மொழிஞாயிறு பாவாணர் அவர்களை நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பள்ளியின் தமிழ் உணர்வு தழைத்த ஆசிரியர்கள் அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒரு மாட்டுவண்டியில் மேசையைப் பொருத்தித் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் அவர்களின் திருவுருவப் படத்தை அதில் வைத்தனர். ஊர்வலம் ஆயத்தமானது. படத்தின் அருகில் பாவாணர் அவர்களை அமரச் சொன்னார்கள். மறைமலையடிகளுக்கு இணையாக நானா? என்று பாவாணர் அவர்கள் ஒரு வினா எழுப்பிவிட்டு, வண்டியில் அமர மறுத்தார். பின்னர் வண்டியின் முன்பாகப் பாவாணர் அவர்கள் காலார நடந்து வந்தார். அனைவரும் ஊரை வலமாக வந்து, பள்ளியை அடைந்தனர். இந்த ஊரின் தமிழ் விழா நடைபெற்றபொழுது பத்தாம் வகுப்பில் மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார் நாவை. சிவம் அவர்கள். பாவாணரின் நூல்களில் அன்று முதல் நாட்டம்கொண்டு, தமிழ் உணர்வாளராக வளர்ந்தவர்.

புலவர் நாவை. சிவம் அவர்கள் மணப்பாறையில் இப்பொழுது வாழ்ந்து வருகின்றார். பாவாணர் பற்றாளராகவும், தனித்தமிழ் இயக்க உணர்வாளராகவும் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தமிழ்ப்பணியும் திருக்குறள் பணியும் செய்துவருகின்றார். இவர்தம் தமிழ்ப்பணிகளை இங்குப் பதிந்துவைப்போம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அடுத்த நாட்டார்மங்கலம் என்ற ஊரில் திரு. துரை. வைத்தியலிங்கம், திருவாட்டி அகிலாண்டம் அம்மாள் ஆகியோருக்கு மகனாக நாவை. சிவம் அவர்கள் 08.08.1945 இல் பிறந்தவர். இவரின் இயற்பெயர் சிவராமலிங்கம் ஆகும். செட்டிக்குளத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், முசிறியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார். கல்லக்குறிச்சி அருகில் உள்ள நயினார் பாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் 1965 ஆம் ஆண்டு இணைந்தார். புலவர், முதுகலை, கல்வி இளவல், ஆகிய பட்டங்களைப் பின்னாளில் பெற்றவர்.

புதுக்கோட்டை, விராலிமலை, மணற்பாறை ஆகிய இடங்களில் தலைமையாசிரியர், தொடக்கக் கல்வி அலுவலர் என 38 ஆண்டுகள் பணிபுரிந்தவர். மாணவர்களின் கல்வி நலனுக்கும் ஆசிரியர்களின் உரிமைக்கும் தொடர்ந்து குரல்கொடுத்தவர். ஆசிரியர் போராட்டங்களில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

சிவ ராமலிங்கம் என்ற தம் பெயரைத் தமிழ்ப்படுத்தும் வகையில் நாவை. சிவா என்று அமைத்து, பாவாணரின் ஒப்புதலுக்குக் காட்டச் சென்றார். “ஆகார இறுதிப் பெயர்ச்சொல் ஆகா” என்று பாவாணர் குறிப்பிட, சிவா சிவம் ஆனார்.

தென்மொழி, முல்லைச்சரம், தமிழ்ப்பணி முதலிய ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் தொடர்ந்து எழுதி வருபவர்.
                      பொன்னாடையில் பொலிபவர் புலவர் நாவை. சிவம் அவர்கள்

நாவை. சிவம் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டித் ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்ற விருதைத் தமிழக அரசு வழங்கிப் பாராட்டியுள்ளது. வாழ்வியல் சிந்தனைக் கலந்துரையாடல், திருக்குறள் தொடர்வகுப்புகள், தனித்தமிழ்ச் சொற்பயிற்சி வகுப்புகள், வீடுதோறும் குறள் நூலும் திருவள்ளுவர் படமும் வழங்கி வருதல், முச்சந்திகளில் முப்பால் முழக்கம், தெருவெல்லாம் தமிழ்முழக்கம், பள்ளிகளில் உள்ளும் புறமும் திருக்குறள் எழுதுவித்தல், தமிழ்முறைத் திருமண நிகழ்வுகள் என இவரின் பணிகள் நீளும்.

40 ஆண்டுகளாக இவர் தொடர்ந்து நடத்தும் திருவள்ளுவர் விழாவில் பள்ளி மாணவர்களுக்குக் குறள்போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கி வருகின்றார். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்களை அழைத்துப் பாராட்டு விழாக்களை நடத்தியுள்ளார். வெல்லும் திருவள்ளுவம், வெண்பா விளைச்சல், செந்தமிழ்ப் பூக்கள் என்பன இவரின் படைப்பு நூல்கள் ஆகும். மலேசியா, சிங்கப்பூர், மாலைத்தீவு, இலங்கை போன்ற அயல்நாடுகளுக்குத் தமிழ்ப்பயணம் செய்தவர். திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு இவருக்குத் ‘தமிழ்மாமணி’ என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.


புலவர் நாவை. சிவம் அவர்கள் நிறைந்த வாழ்நாள் பெற்று, நற்றமிழுக்குத் தொண்டாற்ற நெஞ்சார வாழ்த்துவோம்!.

கருத்துகள் இல்லை: