நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 4 ஜூலை, 2026

திருக்குறள் மணி சுப. சுப்பையா

  

திருக்குறள் மணி சுப. சுப்பையா
(23.09.1947 - 08.09.2021)

[சுப சுப்பையா அவர்கள் மலேசியாவின், சித்தியவான் என்னும் ஊரில் பிறந்தவர். சித்தியவான் பகுதியில் திருக்குறள் பரப்பும் பணியில் முன்னின்று உழைத்தவர். தொல்காப்பியக் கருத்தரங்கை மலேசியாவில் 1986 ஆம் ஆண்டில் நடத்தியவர். சித்தியவான் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உழைத்தவர். தமிழ் இளைஞர் மணிமன்றப் பணிகள், கூட்டுறவுக் கழகம், திருக்கோவில் பணிகளிலும் ஆர்வமுடன் உழைத்தவர்]. 

திருக்குறள் தொண்டர், திருக்குறள் மணி எனப் போற்றப்படும்  சுப. சுப்பையா PJK அவர்கள் மலேசியாவின், சித்தியவானில் வாழ்ந்த சுப்பிரமணியம்  நாகம்மாள் ஆகியோரின் மூத்த மகனாக 23.09.1947-ஆம் ஆண்டு பிறந்தவர். தன் மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்த இவர் தனித்து வாழ்ந்த தாயால் வளர்க்கப்பட்டவர் ஆவார். இவருக்கு இரண்டு உடன்பிறந்தார் உண்டு. இவர்களின் பெயர்  நல்லையா, சந்திரன் என்பனவாகும். 

சுப. சுப்பையா தொடக்கக் கல்வியைச்  சுங்கை வாங்கித் தோட்டத்தில் பயின்றவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றிருந்த இவர், வறுமையின் காரணமாகத்  தனது கல்வியைத் தொடர முடியவில்லை. தம்முடைய கல்வியைத் தொடர முடியாமல் தோட்டத்திலேயே வேலைக்கு சேர்ந்தார்

 சுங்கை வாங்கித் தோட்டத்தில் திருக்குறள் வளர்ச்சிப் பணிக்குப் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர். தம்முடைய வாழ்வில் திருக்குறள் நெறியை இலக்காகக் கொண்டு வாழ்ந்தவர்

12.04.1970-இல் இராசம்மா என்ற பெண்மணியைத் தமிழ்த் திருமணம் புரிந்தவர். இவரின் இத்தமிழ்த் திருமணம் பெரியார் கு. மணியம் அவர்களின் தலைமையில், தமிழ்க்குயிலார் கா. கலியபெருமாள் அவர்களின் வாழ்த்துரையுடன் நடைபெற்றது. சுப. சுப்பையா – இராசம்மா ஆகியோருக்குக் கலைவாணன், கதிரவன், இராதை(மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பொறுப்பு வகிப்பவர்), கம்பன் என்னும் பெயர்களில் நான்கு பிள்ளைகளும் ஆறு  பெயரப்பிள்ளைகளும் உள்ளனர்

சுப. சுப்பையா அவர்கள் 1981-ஆம் ஆண்டு சனவரி  4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரையில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சியில் நடத்திய ஐந்தாவது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமிழகம் சென்றவர். இவர்  . சுங்கை வாங்கித் தோட்டத்தில் மூன்று திருக்குறள் கருத்தரங்குகளையும், ஒரு தொல்காப்பியக் கருத்தரங்கையும் நடத்தி, சாதனை புரிந்துள்ளார் என்பது பெருமைக்குரியது.

 

தமிழ்க்குயில் கா. கலியபெருமாள், செல்லையா இராசதுரை, சுப. சுப்பையா 
(தொல்காப்பியக் கருத்தரங்கு, சித்தியவான்)

தொல்காப்பியக் கருத்தரங்கில் சுப. சுப்பையா (இடப்புறம்), 
ஆறு. நடராசன்( விழாவின் செயலாளர்), மற்றும் நடனக்குழுவினர்

தொல்காப்பியக் கருத்தரங்கின் பார்வையாளர்கள்

சுப. சுப்பையா அவர்கள்  மலேசியாவில் முதல் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடத்தியவர் ஆவார். இத் தொல்காப்பிய கருத்தரங்கிற்கு 12. 04 . 1986 அன்று மலேசியாவுக்கான இலங்கைத் தூதரும், மிகச் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்களை அழைத்து வந்த பெருமையும் இவரைச் சாரும்

இப்பொழுது நம்மிடையே பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருக்கும் தமிழர் திருநாளைச் சுப. சுப்பையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு சுங்கை வாங்கித் தோட்டத்தில்  தொடங்கியவர்களில் ஒருவராவார். சுப. சுப்பையா அவர்கள் கோ. சாரங்கபாணியாரின் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மேல் தீராத நம்பிக்கை கொண்டவராக  விளங்கியவர்

சமயப் பணியாக அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின்  பொருளாளராகவும், ஆலயத் திருப்பணிச் செயற்குழுவின்  நிர்வாகியாகவும் பணியாற்றியவர்

சுங்கை வாங்கித் தோட்ட இடுகாட்டு நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகப் பல துன்பங்களை அனுபவித்தவர். இன்று அந்த இடுகாடு சுங்கை வாங்கி மக்களுக்குப்  பொதுவாக இருப்பதற்கு இவர்  காரணமென்றால் அது மிகையில்லை. இவர் தோட்ட மக்களுக்கு ஒரு கூட்டுறவு வேண்டும் என்பதற்காகத் தமது நண்பர்களோடு “ சுங்கை வாங்கி கூட்டுறவுக் கழகத்தை”  அமைத்தவர்

சுப. சுப்பையா  1986 - ஆம் ஆண்டு சுங்கை வாங்கி . . கா கிளையை அமைத்து, அதன் துணைத் தலைவராகப்  பதவி வகித்தவர்.  அதன்  பின்னர்த் தலைவராகப் பொறுப்பேற்றவர்

சுப. சுப்பையாவுக்கு    ரவுப் தமிழ்ச் சங்கம்”  “திருக்குறள் தொண்டர்என்ற விருதினை வழங்கிச் சிறப்பித்தது

சுப. சுப்பையா அவர்கள் திருக்குறளை மக்களிடையே பரப்பியதற்காகக் கோலாலம்பூர் தமிழ்நெறிக் கழகம்,   திருக்குறள் மணி ”  என்ற சிறப்பு ஆரத்தை (விருதை) வழங்கிச் சிறப்பித்தது. இவருடைய அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளைப் பாராட்டி, பேரா மாநில அரசர் அவர்களால் PJK பட்டம் வழங்கப்பட்டது. 

சமயம், அரசியல், திருமண நிகழ்வுகள், கூட்டுறவுச் சங்கங்கள் என எந்தச் சூழ்நிலையிலும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளில், அவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடாமுயற்சியுடன் தொண்டாற்றியவர் இவர். சமூகப்பணிக்காக தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஒப்படைத்தவர் என்பதும் இவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது

சுப. சுப்பையா அவர்கள் 08.09.2021 இல் இயற்கை எய்தினார். 

திருக்குறள் மணி திரு. சுப. சுப்பையா அவர்கள் தமிழ்ப்பணியைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர் என்பதால் மலேசியத் தமிழர்களால் என்றும் போற்றப்படுவார். 

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும்;

தெய்வத்துள் வைக்கப் படும்” 

என்னும் தமிழ் மறையின் வழியில் வாழ்ந்த சுப. சுப்பையா அவர்களின் பெருமையை நினைவுகூர்வோம்.

 

நன்றி:

முனைவர் அருள் ஆறுமுகம் கண்ணன், முத்தமிழ்ப் பாவலர் மன்றம், ஈப்போ

திரு. சுப. கதிரவன், சித்தியவான்

கருத்துகள் இல்லை: