நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

"கோத்த வரிக்கூத்தின் குலம்" - வீ.ப.கா.சுந்தரம் ஐயா நினைவுகள்…


தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதியை உருவாக்குவதில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுக்கு யான் உற்றுழி உதவியமை நினைந்து ஐயா அவர்கள் எனக்குக் கையொப்பம் இட்டு வழங்கிய ஆவணம்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் படித்துப் பார்த்தேன். கல்லூரியில் பயிலும்பொழுது அரங்கேற்று காதையின் 175 அடிகளும் எனக்கு மனப்பாடம். தமிழன்பர் திரு. ஆ. பிழைபொறுத்தான் அவர்கள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையைப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் பாடம் கேட்டதைச் சொல்லிச் சொல்லி எனக்கு அரங்கேற்று காதையில் ஓர் ஈர்ப்பை அப்பொழுது ஏற்படுத்துவார்.

பெரும்பாலும் அரங்கேற்று காதை நீங்கலாகவே பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும். தமிழர்களின் இசையறிவு, நாடக அறிவு என அனைத்துக் கலைக்கூறுகளும் கொண்ட அரிய கருவூலம் அரங்கேற்று காதையாகும். இளங்கோவடிகளின் பேரறிவு இப்பகுதியில் வெளிப்படுவதுடன் கலை ஈடுபாடும், புலமையும் கொண்ட இவருக்கு நிகரான புலவர் உலகில் எந்த மொழியிலும் இல்லை என்று நிறுவத் தகுந்த பகுதி இதுவேயாகும். எனவே இதனை எப்பொழுதும் மனப்பாடமாக ஓதிப் பார்ப்பது என் இயல்பு.

மனப்பாடமாகச் சொல்லும் பொழுது இறுதிப்பகுதியில் ஒரு சொல் மறந்தால்கூட மீண்டும் முதல் அடியிலிருந்து தொடங்கிச் சொல்லிப் பார்ப்பேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகும் தமிழ் ஆய்வுத்துறையில் பணிகிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டபொழுது  சிலம்பில் கவனம் குறைந்து வேறு துறைகளில் கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது.

ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்களின் அணுக்கத்தொண்டனாகவும் ஆய்வு உதவியாளனாகவும் ஒராண்டு இருந்தபொழுது சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் பதின்மூன்றாம் அடியில் இடம்பெறும் “பலவகைக் கூத்தும்” என்ற சொல்லுக்கு விளக்கம் பார்த்தோம். அடியார்க்கு நல்லார் சற்றொப்ப எட்டுப் பக்கங்களுக்கு மேல் இந்த இரு சொல்லுக்கு விளக்கம் சொல்லியுள்ளதை எண்ணி எண்ணி நானும் இசைமேதை அவர்களும் ஒக்க வியப்போம். அடியார்க்கு நல்லாரின் அந்த உரைப்பகுதியில் பழங்கால இசை, கூத்தினைக் குறித்த பல நூல்களின் அடிகள் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும். பல இசை உண்மைகளுக்கு விளக்கம் சொல்லப்பட்டிருக்கும்.

வரி என்ற சொல்லை விளக்கும்பொழுது “அவற்றின் பகுதியெல்லாம் கானல்வரியிற் கூறுதும்” என்று கானல்வரிக்கும் அடியார்க்கு நல்லார் உரைவரைந்த குறிப்பு இப்பகுதியில் இருக்கும். அதனை அடுத்துக் “கோத்த வரிக்கூத்தின் குலம்” என்று நிறைவுறும் ஒரு கலிவெண்பாட்டு உள்ளது. அந்தப் பாட்டு பின்வருமாறு அமையும்.

"சிந்துப் பிழுக்கை யுடன்சந்தி யோர்முலை,
கொந்தி கவுசி குடப்பிழுக்கை - கந்தன்பாட்
டாலங்காட் டாண்டி பருமண னெல்லிச்சி,
சூலந் தருநட்டந் தூண்டிலுடன் - சீலமிகும்,
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி,
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி - மீண்ட,
கடவுட் சடைவீர மாகேசங் காமன்,
மகிழ்சிந்து வாமன ரூபம் - விகடநெடும்,
பத்திரங் கொற்றி பலகைவாள் பப்பரப்பெண்,
டத்தசம் பாரந் தகுணிச்சங் – கத்து,
முறையீண் டிருஞ்சித்து முண்டித மன்னப்,
பறைபண் டிதன்புட்ப பாணம் – இறைபரவு,
பத்தன் குரவையே பப்பறை காவதன்,
பித்தனொடு மாணி பெரும்பிழுக்கை - எத்துறையும்
ஏத்திவருங் கட்களி யாண்டு விளையாட்டுக்,
 கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து – மூத்த,
கிழவன் கிழவியே கிள்ளுப் பிறாண்டி,
அழகுடைய பண்ணிவிக டாங்கம் – திகழ்செம்பொ,
னம்மனை பந்து கழங்காட லாலிக்கும்
விண்ணகக் காளி விறற்கொந்தி - அல்லாது,
வாய்ந்த தனிவண்டு வாரிச்சி பிச்சியுடன்,
சாந்த முடைய சடாதாரி – ஏய்ந்தவிடை,
தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டுச் சாதுரங்கம்,
தொக்க தொழில்புனைந்த சோணாண்டு - மிக்க,
மலையாளி வேதாளி வாணி குதிரை,
சிலையாடு வேடு சிவப்புத் - தலையில்,
திருவிளக்குப் பிச்சி திருக்குன் றயிற்பெண்,
டிருண்முகத்துப் பேதை யிருளன் - பொருமுகத்துப்,
பல்லாங் குழியே பகடி பகவதியாள்,
நல்லார்தந் தோள்வீச்சு நற்சாழல் - அல்லாத,
உந்தி யவலிடி யூராளி யோகினிச்சி,
குந்திவரும் பாரன் குணலைக்கூத் - தந்தியம்போ,
தாடுங் களிகொய்யு முள்ளிப் பூ வையனுக்குப்,
பாடும்பாட் டாடும் படுபள்ளி – நாடறியும்,
கும்பீடு நாட்டங் குணாட்டங் குணாலையே,
துஞ்சாத சும்மைப்பூச் சோனக- மஞ்சரி,
ஏற்றவுழைமை பறைமைமுத லென்றெண்ணிக்,
கோத்தவரிக் கூத்தின் குலம்”

இது அடியார்க்கு நல்லார் தரும் மேற்கோள் பாடலாகும்.

இந்த வரிக்கூத்தின் குலம் பற்றிய பாடல்குறித்து அரும்பத உரைகாரர் எந்தக் குறிப்பும் தரவில்லை என்றும், பதிப்பாசிரியர் உ.வே.சா. அவர்களும், உரையாசிரியர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும் அதனை அடுத்து உரை எழுதிய உரையாசிரியர்களும் இந்தப் பாடலை விளக்கவில்லை என்றும் உணர்ந்து இசைமேதை ஐயாவும் நானும் இதற்கு அகரமுதலிகளின் துணைகொண்டு விளக்கம் சொல்ல முயன்றோம். ஐயாவின் வேர்ச்சொல் ஆய்வறிவும், பன்னூல் புலமையும், துறைசார் பேரறிவும் இந்த மேற்கோள் பாடலை விளக்கப் பெரிதும் பயன்பட்டன. சற்றொப்ப எழுபத்து நான்கு சொற்களுக்கு(கூத்துகளுக்கு) விளக்கம் எழுதிய இசைமேதை அவர்கள் இந்த முடிவு முடிந்த முடிவன்று எனவும், மாறுதற்கும், முன்னேறுதற்கும் விரிவுகூறுதற்கும் உரியது என்றும் குறித்துள்ளார்(த.இ.க. களஞ்சியம் தொகுதி 4, பக்கம் 103).

இந்தப் பாட்டுக்கு உரை வரைய வேண்டும் என்றால் நாம் மலையாள நாட்டில் நிகழ்த்தப்படும் கூத்துகளையும், நாட்டுப்புறக் கலைகளையும் ஆராய வேண்டும் என்றும் அப்பொழுது சில கூத்துகள் விளக்கமுறும் என்றும் நான் குறிப்பிட்டேன். நல்ல யோசனை என்று ஐயா உடன் ஒத்துக்கொண்டார். எனக்கும் மகிழ்ச்சி.

மறுநாள் ஐயா அவர்கள் அருகே அழைத்துச் சொன்னார்கள். “இளங்கோ! நீ சொல்வதுபோல் மலையாள நாட்டுக்கெல்லாம் களப்பணிக்குச் சென்று ஆராய்ச்சி செய்து நாம் முழுமையாக வெளிப்படுத்த முயன்றால் களஞ்சியப் பணி நிறைவுறாது என்று  குறிப்பிட்டுவிட்டு, அடுத்து யாழ் குறித்து இரவு முழுவதும் தாமே ஆய்ந்து கண்டு, எழுதிய குறிப்புகளை நாற்பது பக்கத்திற்குமேல் எடுத்து என்னிடம் கொடுத்ததும் கூத்தை மறந்து, யாழ் பற்றிய சொற்களை விரிவாக எழுதத் தொடங்கினேன்…



1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஐயா வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் போற்றப்பெற வேண்டியவர்.