நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
இலண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலண்டன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 பிப்ரவரி, 2015

இலண்டனில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் ஆவணப்படம் அறிமுகம்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தைத் திரு . நாகதேவன்  வெளியிட, திருவாட்டி தவமணி மனோகரன் பெற்றுக்கொள்ளும் காட்சி

 இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு, சனவரித் திங்கள் 31ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாளைத் தலைவர் பூ.நாகதேவன் தலைமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடின.


செயலாளர் இர. அன்பழகன் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினார்.

பொங்கல் விழாவை ஆடல், பாடல், கவிதை, திருக்குறள் சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகளைத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.

இவ்விழாவில், முனைவர் மு.இளங்கோவன் எழுதி இயக்கிய 'பண்ணாராய்ச்சி வித்தகர்' குடந்தை .சுந்தரேசனார் பற்றிய ஆவணப்பட முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர், இந்த ஆவணப்படத்தைத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு பூ.நாகதேவன் வெளியிட, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருவாட்டி தவமணி மனோகரன் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பூபதி ராஜ் நன்றி உரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.



செவ்வாய், 10 டிசம்பர், 2013

இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா




இலண்டனில் உலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டை நடத்திய செல்வா. செல்லதுரை அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் 14.12.2013 இல் நடைபெறுகின்றது. மூத்த வழக்கறிஞர்  இரா. காந்தி அவர்களின் தலமையில் நடைபெறும் விழாவில் இரா. மதிவாணன் அவர்கள் வரவேற்புரை வழங்குகின்றார். முனைவர் ஔவை நடராசன், முனைவர் கோ. விசயராகவன், முனைவர் மு.முத்துவேலு உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இலண்டனில் வாழும் செல்வா. செல்லதுரை அவர்கள் ஏற்புரை வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடு: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், இந்திய ஒன்றியம்.

புதன், 18 செப்டம்பர், 2013

தொல்காப்பிய மன்றம், இலண்டன்


தமிழ்மொழியின் சிறப்பை நிலைநாட்டுவதற்கு நமக்குக் கிடைத்துள்ள அரிய ஆவணம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலாகும். இந்த நூலின் சிறப்பினைத் தமிழ் கற்றோர் அறிவர். மொழியியல் கற்றோர் உணர்வர். மற்றையோர் அறியார்.

தமிழில் உள்ள மற்ற நூல்களைப் பரப்பவும், போற்றவும் நினைவுகூரவும் தனிமாந்தர்களும், அமைப்புகளும், கழகங்களும், மன்றங்களும், திருமடங்களும் உள்ளனர். ஆனால் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லவோ, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கவோ அறிஞர்கள் யாரும் செயல்படுவதாகத் தெரியவில்லை, அவ்வாறு ஓரிருவர் இருப்பினும் அவர்கள் கல்விப்புலத்தில் இருப்பவர்களாகவே இருப்பர்.

சிலப்பதிகாரத்திற்கு ஒரு ம.பொ.சி. அவர்களைப் போலும், திருக்குறளுக்கு அறிஞர் திருக்குறள் முனிசாமியார் போலும் பொதுமக்களிடம் தொல்காப்பியத்தைக் கொண்டு சென்று சேர்க்க ஓர் அறிஞரைக் காண விரும்பினோம். தொல்காப்பியம் என்ற இந்த நூல் தமிழர்கள் அனைவராலும் போற்றத்தகுந்த பெருமைக்குரியது என்பதை நினைவூட்டத், தக்கவர்களைத் திரட்டி ஒருங்கிணைக்கும் முயற்சியில் இலண்டனில் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இலண்டன் தொல்காப்பிய மன்றம் தொல்காப்பியம் தொடர்புடைய ஓலைச்சுவடிகளைத் திரட்டவும், இதுவரை தொல்காப்பியம் குறித்து வெளிவந்துள்ள பதிப்புகளைத் திரட்டவும், தொல்காப்பிய ஆய்வுகளை மின்னியல் பதிப்பாக்கவும், தொல்காப்பிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அறிஞர்களின் வரலாறுகளைத் திரட்டவும், ஓர் ஆய்வடங்கல் அணியப்படுத்தவும், உலகம் முழுவதும் தொல்காப்பியப் பரப்புரை செய்யவும், தொல்காப்பிய மாநாடுகள் நிகழ்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தொல்காப்பிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்டுள்ளோம். தொல்காப்பிய மன்றத்தின் முதல் பரப்புரை மாநாடு இலண்டனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பரவலுக்குத் தங்களின் மேலான வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கின்றோம். தொல்காப்பிய ஆய்வுகளில் முன்னின்ற ஆய்வறிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்யவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொல்காப்பிய மன்றம் முதலில் இலண்டனில் பதிவுபெற்ற அமைப்பாக விளங்கும். அதன் பிறகு உலகம் முழுவதும் கிளைகள் அமைக்கப்பெறும். தமிழ்ப்பணியில் ஈடுபாடு உடையவர்கள் தொடர்புகொள்ளலாம்.

இலண்டனைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட உள்ள தொல்காப்பிய மன்றத்தினைத் திரு.சிவச்சந்திரன் அவர்கள் நிறுவுநராக இருந்து நெறிப்படுத்துவார். திரு.செகன் அவர்கள் செயலாளராக இருந்து செயல்படுவார்.

தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பினைக் குறித்த விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்துகொள்வோம்.

தொடர்புக்கு: muelangovan@gmail.com

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

மு.இளங்கோவன் இலண்டன் செலவு...



இலண்டனில்14.08.2013 முதல் 18.08.2013 வரை உலகத் தமிழியல் ஆய்வுமாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு அறிஞர் தனிநாயகம் அடிகளார் அவர்களின் நூற்றாண்டினை நினைவுகூரும் வகையில் இலண்டன் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு ஆய்வுரைகள், கட்டுரைகள் வழங்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வறிஞர்கள் வருகைதர உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஒலி ஒளி ஆவணப்படுத்தும் முயற்சிகள் என்ற தலைப்பில் கட்டுரை வழங்க முனைவர் மு.இளங்கோவன் செல்கின்றார். இலண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் உரையாற்றவும் இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் இணைய வளர்ச்சி, அயலகத் தமிழறிஞர்கள் குறித்த பொருண்மைகளிலும் பிற இடங்களில் மு.இளங்கோவன் உரையாற்ற உள்ளார். தமிழ் இணைய நண்பர்கள் சந்திப்பு, வலைப்பூ நண்பர்களின் சந்திப்பு, முகநூல் நண்பர்களின் சந்திப்பும் உண்டு.

மு.இளங்கோவனின் இலண்டன் நிகழ்ச்சி நிரல் பற்றி அறிய muelangovan@gmail.com என்ற தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

இலண்டன் தொடர்புக்கு:
திரு. தம்பு அவர்கள் 0044-1689857639
திரு. பாரிஸ் இராஜா அவர்கள் 0044 - 7904509817