நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தருமபுரி மருத்துவர் கூத்தரசன் அவர்கள் மறைவுதருமபுரியில் புகழ்பெற்று விளங்கிய மருத்துவரும் தமிழ்ப்பற்றாளரும் தமிழறிஞர் தகடூரான் அவர்களின் மகனுமான மருத்துவர் கூத்தரசன் ஐயா அவர்கள் 04.08.2013 விடியற்காலை4.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், தருமபுரித் தமிழ்ச்சங்கத்துத் தோழர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் சித்தமருத்துவத்தில் பட்டம்பெற்று தம் மருத்துவப்பணியைத் தருமபுரியில் ஆற்றிவந்தார். தந்தையார் தகடூரான் அவர்களின் நூல்களைப் பதிப்பித்துத் தமிழுலகிற்குக் கிடைக்கச்செய்தார். தருமபுரித் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்து தமிழறிஞர்களை அழைத்துத் தமிழ்ப்பொழிவுகள் நடைபெறக் காரணமாக அமைந்தவர். இணையத்துறையில் ஈடுபாட்டுடன் உழைத்துவரும் தகடூர் கோபி, முகுந்து, மு.இளங்கோவன் ஆகியோரை அழைத்துத் தருமபுரியில் 14.09.2008 இல் ஒரு பாராட்டு நிகழ்வை நடத்தியவர். தமிழ் இணையப் பயிலரங்கு நடத்தி அப்பகுதியில் பலருக்குத் தமிழ் இணைய ஈடுபாடு வரக் காரணமாக இருந்தவர். தமிழில் சித்தர் அறிவியல் என்ற இதழையும் தொடர்ச்சியாக நடத்தி வந்தவர். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பெற்று, மருத்துவம் பயன் அளிக்காமல் இயற்கை எய்தினார்.

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் 22.10.1957 இல் பிறந்தவர். இவருக்குசெந்தில்வடிவு என்ற மனைவியும்(ஆசிரியர்,ஔவையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி), மலர்விழி, திருவரசன் என்ற மகனும் உள்ளனர்.


மருத்துவர் கூத்தரசன் அவர்களின் இறப்பு தருமபுரிக்கு மிகப்பெரிய இழப்பாகும். 

2 கருத்துகள்:

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

மருத்துவர் கூத்தரசன் அவர்கள் மிகச்சிறந்த மனிதர். தமிழ் பற்றாளர். தனிப்பட்ட முறையில் என் சிறு வயது முதலே அவரை நன்கு அறிவேன். நாம் அவருடன் சந்தித்த கணங்கள் மறக்க முடியாதவை. அன்னாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனது ஆழ்ந்த இரங்கல்கள்.