நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

உள்ளங்கவர்ந்த பேராசிரியர் க.மாரியப்பனார்



 பேராசிரியர் க.மாரியப்பன் அவர்கள்
(முதல்வர், ஜி.வெங்கடசாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி)

திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலைத் தமிழ் இலக்கியம் படிக்கத் தொடங்கியபொழுது புகழ்பெற்ற பல பேராசிரியர்கள் எங்களுக்கு ஆசிரியர்களாக வாய்த்தனர். தமிழில் நல்ல புலமை பெற்றவர்களிடம் தமிழ் கற்றமை வாழ்வில் என்றும் நினைக்கத் தகுந்த ஒன்றாகும். முனைவர் கு.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ம.வே.பசுபதி, முனைவர் க.மாரியப்பன், முனைவர் சி.மனோகரன், முனைவர் ச.திருஞானசம்பந்தம் என்று என் ஆசிரியர்களின் பட்டியல் நீளும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உள்ளத்தில் பதிந்தவர்கள். இவர்களுள் முனைவர் க.மாரியப்பன் அவர்களைப் பற்றிய நினைவுகளை இங்குப் பதிந்து வைக்கின்றேன். மற்ற ஆசிரியப்பெருமக்களைப் பற்றி அவ்வப்பொழுது நினைவுகூர்வேன்.

கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும்(1987) முதல் வகுப்புக்கு வந்து பாடம் நடத்தியவர் முனைவர் க. மாரியப்பன் ஆவார். மெலிந்த தோற்றமும், அறிவு முதிர்ச்சி காட்டும் ஏறு நெற்றியும், சிவப்புநிற உடலும் முழுக்கைச் சட்டையுமாக வந்து எங்களுக்குச் சமகால இலக்கியங்களை வகுப்பெடுத்தார். நேரம் தவறாமை, கடமையை உயிர் எனப்போற்றுவது, மாணவர்களை மதிப்பிற்குரியவர்களாக நடத்துவது இவர் இயல்பு. அவையல் கிளவிகளைப் பயன்படுத்தமாட்டார். 

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் ஒரு வரியை ஒருமணி நேரம் விரிவாக எடுத்து மாமழைபோல் பொழிவாற்றி ஓய்வார். பாரதியார் படைப்புகளில் நல்ல மதிப்பும் ஈடுபாடும் இவருக்கு உண்டு. அதுபோல் சிலப்பதிகாரத்திலும் நல்ல பயிற்சி. எங்களைக் கைபிடித்து அழைத்துக்கொண்டு பூம்புகாருக்கும், மதுரைக்கும் கொண்டுபோவதுபோல் சிலப்பதிகாரக் காட்சிகளை விவரிப்பார். கண்ணகி நீதிகேட்டு மதுரைக்குச் செல்வதைப் பாடமாக நடத்திய காட்சிகள் இன்றும் என் கண்முன் விரிகின்றன. சிலம்பில் எனக்கு ஈடுபாடு வந்தமைக்குக் காரணம்  எங்கள் பேராசிரியர் க.மாரியப்பன் அவர்களும் ஒருவர்.

கல்லூரியில் நுழைந்த ஓரிரு வாரங்களில் பேச்சுப்போட்டி ஒன்று நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் நடந்தது. பேராசிரியர் க.மாரியப்பனாரிடம் உரையாடித் தகவல்களைப் பெற்று, நானும் போட்டியில் கலந்துகொண்டேன். மூன்றாண்டுப் படிப்பு இல்லாமல் இருந்து, உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்து புதியவனாகக் கல்லூரியில் நுழைந்த என்னை ஊக்கப்படுத்திப் போட்டிக்கு ஆற்றுப்படுதியவர் க. மாரியப்பனார் ஆவார்.

முதுகலை மாணவர்கள், இளம் முனைவர் பட்ட மாணவர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்ட போட்டியில் இளங்கலை முதலாண்டு மாணவனாகிய நான் முதல் பரிசுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றேன். அதுமுதல் கல்லூரியிலும், பிற இடங்களிலும் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள், தங்கப்பதக்கம், வெள்ளிச் சுழற்கோப்பைகள் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொண்டு மிகுதியான பணப்பரிசில்களைப் பெற்று வந்தேன். அதனால்தான் பின்னாளில் என் நூலுக்கு அணிந்துரை வழங்கிய எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் பின்வருமாறு என்னைப் பற்றி குறித்தார்: “ இவர் போட்டி ஒன்றில் பங்குகொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி: இரண்டாம் பரிசு யாருக்கு? “(அச்சக ஆற்றுப்படை அணிந்துரை, 1992). இத்தகு தன்னம்பிக்கையை உள்ளத்தில் விதைத்த பேராசிரியர் க.மாரியப்பனார் அவர்களிடம் ஐந்தாண்டுகள் தமிழ் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

நாங்கள்  கல்லூரியில் பயின்ற காலத்தில்தான் எங்கள் பேராசிரியர் க.மாரியப்பனாருக்கு அவரின் பிறந்த ஊரான புளியங்குடியில்(நெல்லை மாவட்டம்) திருமணம் நடந்தது. நாங்கள் இளங்கலை மாணவர்கள் அந்தத் திருமணத்திற்குச் செல்ல நினைத்தோம்.

திருமண நாளின் முதல்நாள் தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எங்கள்  ஊருக்கு அருகில் உள்ள பொன்பரப்பியில் உரையாற்றும் நிகழ்வு. அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். முற்றாக அந்த நிகழ்ச்சியில் இருக்கமுடியவில்லை. சிறிது நேரம் இருந்து பாவலரேறு அவர்களின் பேச்சைக் கேட்டோம். முன்னரே ஐயாவிடம் நாங்கள் சொல்லியிருந்ததால் இடையில் விடைபெற்றுக்கொண்டோம்.

இரவு புறப்பட்டு செயங்கொண்டம்-திருச்சி-மதுரை வழியாகப் புளியங்குடித் திருமண நிகழ்வுக்குத் திருமண நேரத்தில் சென்று சேர்ந்தோம். பேராசிரியர் அவர்கள் புளியங்குடியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். எங்கள் ஆசிரியரின் திருமணத்தில் நாங்கள் கலந்துகொண்டமை அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தத் திருமணத்தில்தான் நாங்கள் முதன்முதலாகக் குலவைச் சத்தம் கேட்டோம். எங்களுக்குப் புதியதாக இருந்தது. ஒருவாரம் தங்கிச் சுற்றுப் பகுதிகளைப் பார்த்து, அருவிகளில் நீராடி, கோயில் குளங்களைப் பார்வையிட்டு, பத்தமடை சென்று பாய்வாங்கி, மகிழ்ந்து மீண்டோம். ஆண்டுகள் உருண்டோடின.

நான் முனைவர் பட்டம் பெற்ற பிறகு பின்பொருமுறை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஒரு நேர்காணலுக்குச் செல்ல நேர்ந்தது. அப்பொழுது போட்டியாளர் வரிசையில் எங்கள் பேராசிரியர் க. மாரியப்பனார் அவர்களும் எங்களுடன் இருந்தார்கள். ஆசிரியரும், மாணவரும் ஒரே நேர்காணலில் போட்டியிடும் ஒரு களமாக அதனை நினைத்து நான் தயங்கினேன். ஆனால் பண்பிற் சிறந்த எங்கள் பேராசிரியர் அவர்கள் என்னை வாழ்த்தி நேர்காணல் நடந்த அறைவரை என்னை அழைத்துவந்து வழியனுப்பி மகிழ்ந்தார். அந்தத் தாயுள்ளத்தை இன்று நினைப்பினும் நெகிழ்ந்து போவேன். பேராசிரியர் க.மாரியப்பனாரைப் பற்றி அவ்வப்பொழுது நெல்லை நண்பர்கள் வழியாக வினவி மகிழ்வேன். மீண்டும் ஆண்டுகள் உருண்டோடின.

தமிழ் இணையத்தை அறிமுகம் செய்யக் குற்றாலம் பராசக்திக் கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தபொழுது. அப்பொழுது பேராசிரியர் க.மாரியப்பனார் அவர்களின் செல்பேசி எண் கிடைத்தது. அவர்களுடன் உரையாடித் தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன் என்ற விவரம் கூறியவுடன் உடன் வந்து சந்திக்க இசைவு தந்தார்.

நண்பர் ஒருவரின் வழிகாட்டலில் மேலகரத்தில் உள்ள பேராசிரியர் க. மாரியப்பனார் இல்லம் சென்றேன். பலவாண்டுகள் இடைவெளிக்குப் பிறகும் பேராசிரியர் அவர்கள் என்னை நினைவில் வைத்து நலம் வினவினார்கள். அவர்களை வணங்கி வாழ்த்துப் பெற்றேன். என் தமிழ் இணையப் பணிகளையும், அயலகத் தமிழறிஞர்கள் பற்றிய ஆய்வுகளையும் அறிந்து மகிழ்ந்தார்கள். நாட்டுப்புறவியல் துறையில் அமைந்த என் முயற்சிகளை அறிந்து சில நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்காட்டும்படி குறிப்பிட்டார்கள். சில பாடல்களைப் பாடி, தமிழ் இலக்கணக் கூறுகள் இதில் அமைந்துள்ள பாங்குகளை எடுத்துரைத்தேன். திரைப்படம் பார்த்த மனநிறைவை இவ்விளக்கம் தந்ததாகக் குறிப்பிட்டு வாழ்த்தினார்கள். அதற்குள் பழங்களையும் மாச்சில்லுகளையும் பிஸ்கட்டு) கொணர்ந்து விருந்தோம்பினார். உணவு உண்ணும்படி பன்முறை அன்புக் கட்டளையிட்டார்கள். பேராசிரியர் அவர்களின் துணைவியாரும் எங்களை அன்பொழுக நன்மொழிகள் கூறி விருந்தோம்பினார்கள். கையுறையாக இணையம் கற்போம், அயலகத் தமிழறிஞர்கள், நாட்டுப்புறவியல் என்ற என் நூல்களை வழங்கி ஐயாவிடம் நீங்கா விடைபெற்றேன்.

பேராசிரியர் க. மாரியப்பனார் அவர்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர்  ஆவார். இவரிடம் காலம் தவறாக் கடமையுணர்ச்சி அதிகம். மாணவர்களிடத்து இவர் அன்பும் மதிப்பும் கொண்டவர், பணிபுரியும் நிறுவனத்தின் மேல் மீளாமதிப்பு கொண்டவர். இத்தகு பெருமைக்குரிய இவரைக் கல்லூரி முதல்வராக அமர்த்தி அழகு பார்த்துள்ளனர் என்ற செய்தியறிந்து வியந்துபோனேன். பேராசிரியர் க.மாரியப்பனார் அவர்களின் அறிவையும், நிர்வாகத் திறமையையும் நன்கு உணர்ந்து பயன்படுத்திக்கொண்ட கோவில்பட்டி ஜி.வெங்கடசாமி நாயுடு கல்லூரியின் நிர்வாகத்தை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். போற்றுகின்றேன். தமிழுக்கு மதிப்பளித்த தகுதியாளர்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.


முனைவர் மு.இளங்கோவன், முனைவர் க.மாரியப்பன்


3 கருத்துகள்:

Balasubramaniyan சொன்னது…

அன்பு நண்பரே பேராசிரியர் க.மா வை மறக்க முடியாது. நமது கா,சா,சு.கலைக் கல்லூரியின் சிறந்த பேராசிரியர்களுள் இவரின் இடம் தனி. பல ஆராய்ச்சி கருத்துகளை இவர் புன்னகையுடன் எடுத்து கூறும் அழகு மறக்க முடியாது. இவரின் படத்தை இணைத்தமைக்கு நன்றி.
அன்பன். சு.பாலசுப்ரமணியன்.

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

மகிழ்ச்சி. பாராட்டுகள்:-)

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் தேவமைந்தருக்கு நன்றியன்