நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பேராசிரியர் முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தில் வாழ்ந்த திருவாளர் அ.மகாலிங்கப் படையாட்சி அவர்களுக்கும் அஞ்சலைக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர்(22.05.1954). மராட்டிய அரசரின் மனைவி  பெயரில் உருவாக்கப்பட்ட சத்திரம் - அம்மணி அம்மாள் சத்திரம் என்று பெயர்பெற்றுக் காலப்போக்கில் அம்மாசத்திரம் என்று இவரின் ஊர் பெயர் பெற்றது. இந்த ஊரில் சத்திரத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்(1958-63). அதனை அடுத்துத் தேப்பெருமாள் நல்லூரில் அமைந்த நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை(1963-66)பயின்றவர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சிறியமலர் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் பள்ளிக்கல்வியை முடித்தபிறகு குடந்தைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில்(Natural Science) சேர்ந்து பயின்றவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் 1971-74 வரை பயின்றவர். முதுகலைக் கல்வியும் இக்கல்லூரியில் அமைந்தது. முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறிய பெருமைக்குரியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ மேற்பார்வையில் தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டார். தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்(1980-84).

30.03.1977 இல் பானுமதி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுத் திருமணம் புரிந்துகொண்டவர். மக்கட்செல்வங்களாகச் செந்தமிழ்ச்செல்வி, அன்பரசி என்ற பெண் மக்களும், மகேந்திரன் என்ற ஆண் மகவும் உள்ளனர். திருமதி பானுமதி சத்தியமூர்த்தி அவர்கள் குடந்தைத் தமிழ்ப்பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழறிஞர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியும், அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் தமிழ்ப்பணியில் இணைந்துகொண்டார்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் 13.09.1984 இல் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். பின்னர் விழுப்புரம், தஞ்சாவூர், குடந்தைக் கல்லூரிகளில் பணியாற்றி இப்பொழுது சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகின்றார். முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பத்திற்கும் மேற்பட்டோர் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினாரக இருந்து ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் இருந்தவர்.

முனைவர் ம.சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலக்கணம், இலக்கியம், பதிப்பியல், நாட்டுப்புறவியல், தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்டோர் வாழ்வியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உண்டு.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் தமிழ்க்கொடைகள்:

1.   தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும் 1992
2.   தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்  1994
3.   தியாகச் செம்மல் எல்.கிருஷ்ணசாமி பாரதியார்  1995
4.   தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு  1997
5.   திருப்புறம்பயத் தமிழறிஞர் இரா. கிருஷ்ணமூர்த்தி 1997
6.    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் பு.ம.ஆதிகேசவ நாயகர் 1999
7.   தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு 2000
8.    தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்(விரிவாக்கப் பதிப்பு) 2001
9.   ஒடுக்கப்பட்டோர் உரிமைப்போரில் சமூகநீதிக் காவலர் 2002
10. குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள் 2004

முனைவர் ம.சத்தியமூர்த்தி பதிப்பித்த நூல்கள்

1.   ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் (1992)
2.   தி.வை.சதாசிவப் பண்டாராத்தார் ஆய்வுக்கட்டுரைகள் (1998)
3.   மன்னான் சின்னாண்டிக் கதைப்பாடல் (1999)

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, கு.கோதண்டபாணி நூற்றாண்டு விழா, ஆதிகேசவ நாயகர் நூற்றாண்டு விழாவையும், மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழாவையும் பாவாணர் நூற்றாண்டுக் கருத்தரங்கினையும், மேலும் பல இலக்கிய நிகழ்வுகளையும் பொறுப்பேற்று நடத்திய பெருமைக்குரியவர்.

10 கருத்துகள்:

ரா. செழியன் சொன்னது…

திரு.அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள், எனது பாட்டனார் புலவர் ரா.கிருக்ஷ்ணசாமியையும் வெளியுலகத்துக்கு அற்முகப்படுத்திய பெருமைக்குறியவர் ஆவார்.

ரா. செழியன் சொன்னது…

திரு.அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள், எனது பாட்டனார் புலவர் ரா.கிருக்ஷ்ணசாமியையும் வெளியுலகத்துக்கு அற்முகப்படுத்திய பெருமைக்குறியவர் ஆவார்.

alagan சொன்னது…

பேராசிரியர் சத்தியமூர்த்தி அய்யாவின் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவல்களுக்கு நன்றி ஐயா...

Prem s சொன்னது…

தமிழ் பணி தொடரட்டும்

M.SENTHIL KUMAR சொன்னது…

சத்தியம் போற்றும் சத்தியம் !

Ramalingam Ramalingam சொன்னது…

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி பணிகள் குறித்து எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்
தங்கள் பணிக்கு வணக்கம்
அய்யாவின் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறோம்
தங்கள் நல்லாரை அறிமுகப்படுத்தும் பணி நாளும் .தொடர்க......

Ramalingam Ramalingam சொன்னது…

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி பணிகள் குறித்து எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்
தங்கள் பணிக்கு வணக்கம்
அய்யாவின் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறோம்
தங்கள் நல்லாரை அறிமுகப்படுத்தும் பணி நாளும் .தொடர்க......

Ramalingam Ramalingam சொன்னது…

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி பணிகள் குறித்து எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்
தங்கள் பணிக்கு வணக்கம்
அய்யாவின் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறோம்
தங்கள் நல்லாரை அறிமுகப்படுத்தும் பணி நாளும் .தொடர்க......

Ramalingam Ramalingam சொன்னது…

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி பணிகள் குறித்து எங்களைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்
தங்கள் பணிக்கு வணக்கம்
அய்யாவின் தமிழ்ப்பணிக்கு தலை வணங்குகிறோம்
தங்கள் நல்லாரை அறிமுகப்படுத்தும் பணி நாளும் .தொடர்க......