மலேசியாவுக்கு அண்மையில் சென்றிருந்தபொழுது தமிழகத்திலிருந்து பல அன்பர்கள் என்னுடன் பயணம் செய்தனர். ஒருவருக்கொருவர் சென்னை வானூர்தி நிலையத்தில் அறிமுகம் ஆனோம். பாதுகாப்பு ஆய்வுகளை முடித்துக்கொண்டு வானூர்தியில் ஏறி அமர்ந்தோம். அப்பொழுது வானூர்தியில் ஓர் அகவை முதிர்ந்த பெரியவர் கையில் நாட்குறிப்பேட்டைப் பார்ப்பதும் மனப்பாடம் செய்வதுமாக வந்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற சாயல் அவரிடம் தெரிந்தது. படிப்பவர்கள், பணியில் இருப்பவர்களே புத்தகத்தைப் புரட்ட அலுத்துக்கொள்ளும் சூழலில் அந்த அகவை முதிர்ந்த பெரியவர் பொறுப்புணர்வுடன் மனப்பாடத்தில் மூழ்கியிருந்தார். தேர்வு எழுதும் மாணவரைப் போல் கண்ணை மூடியும் குறிப்பேட்டைப் பார்த்தும் நினைவைச் சரிசெய்துகொள்வதுமாக இருந்தார். தயங்கியபடியே அவரைப் பற்றி வினவி அறிந்துகொண்டேன்.
செங்கற்பட்டு ஊரைச் சார்ந்த திருக்குறள் கவனகர் சுந்தர. எல்லப்பனார் அவர் பெயர் என அறிந்தேன். அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றவர் (இதே பெயரில் வேறொரு எல்லப்பனார் இருப்பதாகவும் அவர் இவரைவிட மிகச்சிறந்த கவனக ஆற்றல் பெற்றிருப்பதாகவும் அவர் வழியாகவே அறிந்தேன்). திருவாளர் சுந்தர. எல்லப்பனாரின் நினைவாற்றலும் ஊக்கமும் அறிந்து அவர்மேல் எனக்கு அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. அவரிடம் திருக்குறள் சார்ந்த பல வினாக்களைக் கேட்டு அவரின் நினைவாற்றலை ஆய்ந்தேன். அப்பொழுது என் நினைவுக்குத் திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறள்வெண்பாவைக் குறித்த வினா எழுந்தது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள இதழகல் குறட்பாக்கள் எத்தனை என்று வினவினேன். முன்பு மூன்று இருப்பதாக நான் அறிந்திருந்திருந்தேன். ஐயாவிடம் கேட்டபொழுது 28 குறள்வெண்பாக்கள் இதழகல் குறள் வெண்பாக்கள் என்றார்கள். அவற்றைச் சொன்னார்கள். இவை பயன்படும் என்று குறித்துகொகண்டேன். அந்த குறட்பாக்களைப் பதிகின்றேன். ஆர்வலர்கள் படித்து மகிழலாம். விரைவில் இரண்டு எல்லப்பனாரையும் அறிமுகம் செய்வேன்.
இதழகல் வெண்பாவைக் குறித்தக் கட்டுரை இணையத்தில் இருக்குமா? என்று தேடினேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்புகள் மட்டும் இருந்தனவே தவிர, முழுமையான கட்டுரை எதுவும் என் கண்ணிற்குக் கிடைக்கவில்லை. என் பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்களிடம் இதழகல் வெண்பா குறித்து விளக்கம் சொல்லும்படி கேட்டேன். அவர்களுடன் உரையாடும்பொழுது இந்தத் தலைப்பை ஒட்டி மிகுதியாகச் சிந்திக்க இடம் உள்ளதை அறிந்தேன்.
இதழகல் என்று நாம் இன்று குறிப்பதைப் பண்டு நிரோட்டகம் என்று புலவர்கள் வழங்கினர். நிரோட்டகம் என்பது நிர்+ ஒட்டகம் என்னும் இரு சமற்கிருதச்சொற்களில் இணைப்பாக உள்ளது. நிர் என்றால் இல்லாதது என்று நேர்பொருள் தரினும் இங்கு ஒட்டாதது என்று பொருள். ஓட்டகம் என்றால் உதடு என்று பொருள். நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாதது என்று பொருள். பாடலை நாம் ஒலிக்கும்பொழுது நம் இதழ்கள் ஒன்றுடன் ஒன்று குவியாமல் அமைவது ஆகும். இதற்குத் தக இதழ் குவிதல் இல்லாத தன்மையில் பாடல் இருக்கும். அதாவது இதழ் குவிதலுக்குக் காரணமான எழுத்துக்கள் இல்லாமல் பாடல் புனையப்பட்டிருக்கும்.
எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
என்னும் குறட்பாவை என் பேராசிரியர் எடுத்துரைத்தார்.
உ, ஊ, ஒ, ஓ, ப, ம, வ ஆகிய எழுத்துகள் வராதலால் உதடுகள் குவியாமலும், ஒட்டாமலும் இதைப் படிக்க முடிகிறது. இதில் உ, ஊ, ஒ, ஓ, ஔ, என்ற உயிரெழுத்துகள் ஐந்தும் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும்.
“உஊ ஒஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்” (தொல்.பிறப். 87)
உ ஊ ஒ ஓ ஔ இதழ்க் குவிவே (நன்னூல், நூற்பா 78)).
பம என்ற இரண்டு உயிர்மெய் எழுத்துகளும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும்.
“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (தொல்.பிறப். 97)
“மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும்” (நன்னூல், நூற்பா 81).
ஆனால் வ என்ற எழுத்தை ஒலிக்கும் பொழுது மேற்பல் கீழிதழைப் பொருந்தும் என்று தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன.
“பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்”(தொல்.பிறப். 98)
இந்த நூற்பா கூறும் நுட்பத்தைக் கவனிக்கவேண்டும். இங்குக் குவிதல் இல்லாமல் மேற்பல் கீழிதழைப் பொருந்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் பார்க்கும்பொழுது வ என்பது உருவாகும்பொழுது இதழ் குவிதல் இல்லை என்று கணக்கிட்டால் 28 குறட்பாக்கள் திருக்குறளில் இதழ் குவிதல் இல்லாமல் இடம்பெற்றுள்ளன எனக் கொள்ளலாம்.
ஆனால் மொழியியல் அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் வ என்ற ஒலி உருவாகும்பொழுது கீழ்இதழுடன் மேற்பல் பொருந்துவதால் வகரமும் அதன் இன எழுத்துகளும் இடம்பெறும் குறட்பவை இதழகல் குறட்பா எண்ணிக்கைக்கு உட்படுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.
வ என்பதை இதழ்க்குவிதலாக் கொண்டு கணக்கிட்டால் திருக்குறளின் இதழகல் குறட்பாக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும். அதுபோல் உ,ஒ என்பனவற்றை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றதே தவிர இதழ்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே உ,ஊ,ஒ,ஓ, எழுத்துள்ள குறட்பாவை இதழகல் குறட்பாவாகக் கொள்ளலாம். குறளும் மரபு இலக்கணமும் கற்றுவல்ல சான்றோர்கள்தான் இதுகுறித்த முடிவை அறிவிக்கவேண்டும்.
இதழகல் செய்யுளுக்கு 119 தமிழ் எழுத்துகளை பயன்படுத்த முடியாது என்று சிலர் கணக்கிட்டுள்ளனர்(பார்க்க: சந்தவசந்தம் குழு உரையாடல், தங்கமணி)
உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் x 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x 15மெய்யுடன்
உறழ்ந்து,(ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.
இதில் வரும் உ,ஊ என்ன்னும் எழுத்துகளை ஒலிக்கும்பொழுது இதழ் குவிகின்றனவே தவிர இதழ் ஒட்டவில்லை என்பதை ஆய்ந்துணர்க.
ஒட்டகம் என்பது அலங்காரம் என்று மாறனலங்காரம் குறிப்பிடுகின்றது.
கவனக அறிஞர்கள் குறிப்பிடும் இதழகல் குறட்பாக்கள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர். 286
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃஃதறி கல்லா தவர். 427
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு. 387
உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். 1177
உள்ளத்தார் காத லவராக வுள்ளிநீ
யாருழைச் சேறியென் னெஞ்சு. 1249
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. 1080
ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில். 472
கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668
காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல் லவை. 1286
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து. 1211
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். 894
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.516
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446
தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு.1296
தீயவை செய்தார் கெடுத னிழறன்னை
வீயா தடியுறைந் தற்று. 208
தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
கொடிய ரெனக்கூற னொந்து. 1236
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல். 679
நனவினா னல்கா தவரைக் கனவினாற்
காண்டலி னுண்டென் னுயிர். 1213
நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.1219
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது. 419
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
யாரஞ ருற்றன கண்.1179
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678
முற்றிலும் இதழகல் வெண்பா
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து 1082
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன். 341
(இக்கட்டுரை குறித்த மாற்றுக்கருத்துகள் / மேம்பட்ட கருத்துகள் வரவேற்கப்படுகின்றன)
3 கருத்துகள்:
உதடு ஒட்டாமல் வரும் குறள் என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் இவ்வளவு செய்திகளா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.
ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02
இதழுறும் வேறு குறட்பாக்கள் யாவையெனத் தேடிப் பதியுங்கள்.
அன்புடன்
ரமணி
நிரோட்டம் இதழகல் ஒட்டாமை ஒட்டுவது
ஓட்டம் இதழுற லால்.
ஓட்டம் இதழுறல் காணும் குறட்பாக்கள்
பின்வரும் சான்றுகள் போல்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
---திருக்குறள் 035:10
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
---திருக்குறள் 002:02
இதழுறும் வேறு குறட்பாக்கள் யாவையெனத் தேடிப் பதியுங்கள்.
அன்புடன்
ரமணி
கருத்துரையிடுக