நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 23 மார்ச், 2012

தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா. இராசன்


பேராசிரியர் கா.இராசன் 

  அண்மையில் பேராசிரியர் கா. இராசன் அவர்களின் தமிழகத் தொல்லியல், அகழாய்வு குறித்த உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல மாதங்களாக நண்பர் ஒரிசா பாலு அவர்கள் பேராசிரியர் கா. இராசன் அவர்களைக் கண்டு உரையாடும்படி அன்புக்கட்டளை இடுவார். எனக்கிருக்கும் மலையளவு வேலைகளில் எங்கும் அசையமுடியாதபடி அழுத்தம் இருந்து வந்தது. பலநாள் திட்டமிட்டது அண்மையில் கைகூடியது. எதிர்பாராமல் கிடைத்த அரிய வாய்ப்பாகப் பேராசிரியர் கா.இராசன் அவர்களின் உரையைக் கருதினேன்.

  பேராசிரியர் கா. இராசன் அவர்கள் அகழாய்வுப் பணிக்கெனத் தம் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்ட மூத்த ஆய்வாளர் ஆவார். இவரின் முப்பதாண்டுக்கால உழைப்பால் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் பல அரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ்ச் சான்றுகளைத் தொகுப்பதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். இவர்தம் அகழாய்வுப்பணிகளுள் பொருந்தல் அகழாய்வு, தாண்டிக்குடி அகழாய்வு, கொடுமணல் அகழாய்வு குறிப்பிடத்தக்கன. இதுவரை ஆங்கிலத்தில் 12 நூல்களை எழுதியுள்ளார். தமிழில் தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

 கோவை மாவட்டம் கரடிமடையில் 12.04.1955 பிறந்த பேராசிரியர் கா. இராசன் அவர்களின் பெற்றோர் திருவாளர் காரைக் கவுடர், முத்தம்மாள் ஆவர்.

 சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் பயின்ற பேராசிரியர் கா.இராசன் அவர்கள் மைசூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். “கோவை மாவட்டப் பெருங்கற்படைப் பண்பாடு” என்பது இவர்தம் முனைவர் பட்ட ஆய்வாகும்.

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். பல நாடுகளில் இவர் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பட்டறிவுடையவர். இவர் பணியேற்ற நாள்முதல் கோடைவிடுமுறையை அகழாய்வுப் பணிக்கெனத் திட்டமிட்டு ஒதுக்கிப் பணிபுரிகின்றமையை அறிந்து நானும் நண்பர்களும் வியந்து போனோம். எந்த வகையிலாவது விடுப்பெடுத்துக்கொண்டு வாழ்நாளை வீழ்நாளாகக் கழிக்கும் பொழுதுபோக்கு ஊழியர்களைப் போல் அல்லாமல் குடும்பம், உறவு மறந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர் இராசன் போன்றவர்கள் வளரும் தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

பேராசிரியர் கா.இராசன் உரையில் தெறித்த சில அறிவுப்பொறிகள்:

இதுவரை 300 சங்க கால ஊர்ப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் 600 சதுரமீட்டரில் 160 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இந்த முதுமக்கள் தாழிகளைக் கணக்கிட்டு இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள்தொகையைக் கண்டுபிடித்துவிடமுடியும்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனை நினைவூட்டும் ஒல்லையூரில் 300 -  இற்கும் மேற்ட்ட கற்பதுக்கைகள் இருந்தன. இன்று 30 பதுக்கைகள்தான் உள்ளன. ஊரிலிருந்து பல கல்பதுக்கைகளை வரலாற்று உணர்வு இல்லாமல் தரைமட்டமாக்கிவிட்டனர்.

 சவ்வாது மலைப்பகுதியில் உள்ள கீழ்ச்சேப்புளி என்னும் ஊரில் ஆயிரக்கணக்கான கற்பதுக்கைகள் உள்ளன. முன்பு நடுகல் வேலிபோல் ஊரில் இருந்துள்ளன. பனைமரத்தைவிட உயரமான நடுகற்கள் உண்டு.

 கொடைக்கானல் அருகில் உள்ள ஊர் தாண்டிக்குடி ஆகும். இது தான்றிக்குடி என முன்பு அழைக்கப்பட்டது. தான்றி என்பது மரமாகும். தான்றி மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவக்குணம் கொண்டவை.

 தமிழகத் தொல்லியல் சின்னங்கள் பல வெளிநாடுகளில் உள்ளன. பனை ஒறி என்னும் பெயர் பொறித்த மட்பாண்டம் எகிப்துநாட்டில் உள்ளது. கொற்றப்பூமான் என்னும் பெயர் பொறித்த இலங்கைநாட்டு தொல்பொருள் கெய்ரோ காட்சியகத்தில் உள்ளது.

 வத்தலகுண்டு அருகில் உள்ள தாதப்பட்டி என்னும் ஊரில் கிடைத்துள்ள தொல்பொருளில் “அடி ஓன் பாகல் பானிய் கல்” என்ற குறிப்பு உள்ளது. அடியோன் என்பதை அடி ஓன் என்று எழுதியுள்ளதைப் பேராசிரியர் விளக்கினார்.

 மேலும் வத்தலகுண்டு அருகில் உள்ள ’புலிமான் கோம்பை’ என்ற இடத்தில் கிடைத்துள்ள நடுகல்லில்(இந்தியாவில் கிடைத்துள்ள காலத்தால் முந்திய முதல் நடுகல்) “ பேடு தீயன் அந்தவன்” “கூடல் ஊர் ஆகோள்” என்று எழுதப்பட்டுள்ளது.

 உம்பற்காடு என்பது பாலக்காடு பகுதியில் உள்ள பகுதியாகும். பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் ஊராகும். வேழம் தாவளம் என்று இன்றும் ஊர் உள்ளது.

 முத்துக்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் விளைவதற்குரிய இயற்கைச்சூழல் உண்டு.

 வீர சேகரப் பெருவழி, அதியமான் பெருவழி என்னும் பெயரில் அக்காலத்தில் பெருவழிகள் இருந்துள்ளன.

 அதியன் பெருவழி 27 காதம் என்ற குறிப்பு உள்ளது.
 ஒரு காதம் என்பது 5 மைல் அதாவது 8 கி.மீ. ஆகும்.

 வயல்நாடு என்பது இன்று வயநாடு என்று அழைக்கப்படுகின்றது.

 பொருந்தல் என்னும் ஊர் பழனி அருகில் உள்ளது. “பொருந்தலான இராஜராஜபுரம்” என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்துள்ள நெல்மணிகள் பயிரிடப்பட்டதை அறிவியல் அடிப்படையில் உறுதிசெய்த்தள்ளார். இதற்கு நெல்மணிகள் Beta Analytic Laboratory, U.S.A ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு, இந்த நெல்மணிகளின் காலம் கி.மு. 490, கி.மு.450 என்று உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு இந்த நெல் விதைக்கப்பட்டுத் தயாரானதா? நாற்றாக உற்பத்தி செய்து பயிரிடப்பட்டதா என்று உறுதிப்படுத்தும் பணியில் உள்ளார்.

 அகழாய்வில் கரூர் பொன்வணிகன், எண்ணெய் வணிகன், மணிய வண்ணக்கன், திருமணிக்குயிலன் என்னும் பெயர்கள் கிடைத்துள்ளன.

 ஆப்கான் பகுதியில் கிடைக்கும் வைடூரியம் என்னும் நீலமணிகள் கொடுமணல் பகுதியில் மிகுதியாகக் கிடைத்துள்ளன.


 நம் கொற்கை முத்து சகாரா பாலைவனத்தில் கிடைக்கின்றன. அசோகர் அரண்மனையில் பாண்டிய நாட்டு முத்துகள் இருந்தன. பெரும்படை என்பது படையல் பொருள்களாகும். இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் இந்தப் பெரும்படை என்னும் படையல் பொருள்கள் இருந்துள்ளன. சாதவாகனர்கள் முன்பு நூற்றுவன் கண்ணர்(சிலப்பதிகாரம்) என்று அழைக்கப்பட்டனர்.

 பழைய பூம்புகார் கடலுக்கு அடியில் 65 அடி ஆழத்தில் தடயங்களைக் கொண்டுள்ளது. சேந்தமங்கலம் என்னும் ஊர் கோச்செங்கனான் வரலாற்றுடன் தொடர்புடையது.

 இன்றைய இந்திய அரசின் சின்னமான நான்கு சிங்கத் தலைக்கு மேலே ஒரு தருமச்சக்கரம் இருந்துள்ளது. இதனைத் தாய்லாந்தில் காணும் சிங்கத்தலைச் சிற்பத்தில் காணலாம். அந்த தருமச்சக்கரம் நீங்கிய அமைப்பில்தான் இன்றைய அரசின் சிங்கத்தலைகள் உள்ளன.

சங்க இலக்கியத்தில் காணப்படும் தொழில்நுட்பம், சங்க காலத்தில் குறிப்பிடப்படும் ஊர்கள், இடங்கள், முத்து, மலைவளம், வணிக உறவு, அயலக உறவுகள் குறித்த மேலாய்வுகளுக்குச் சங்க இலக்கியம் இடம்தருவதாக உள்ளது என்று பேராசிரியர் கா.இராசன் அவர்கள் பல செய்திகளை முன்வைத்தார்.


பேராசிரியர் கா.இராசன் அவர்களுடன் மு.இளங்கோவன்

3 கருத்துகள்:

PRINCENRSAMA சொன்னது…

அரிய தகவல்கள்... அறிய வேண்டிய தகவல்கள்... தமிழரின் மாண்பை புரிய வைக்கும் இத்தகைய பதிவுகளைத் தொடர்ந்து மேற்கொள்க! தொன்மையை மறந்து திரியும் நம்மினம் தொல்லியல் மீது ஆர்வம் கொள்ள இத்தகையோர் பணி அவசியம்!

lemuriya & kumarikandam சொன்னது…

மிக்க மகிழ்ச்சி நான் வெகு நாளாக எதிர் பார்த்தது
நன்றிகள் பல

உங்கள் பணிகள் மிக முக்கியமானவை

கி.நாச்சிமுத்து சொன்னது…

பல நல்ல ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் தொல்லியல் அறிஞரை நன்கு அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.பணிகள் தொடரட்டும்.கல்வித்துறையில் குறிப்பாகத் தமிழாராய்ச்சித்துறையில் புதிய ஒழுகு முறைகளை இவர்களைப்போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இத்தகைய பதிவுகள் உதவும்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
கி.நாச்சிமுத்து