நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மயங்கொலிகள் (உயிர்எழுத்து வரிசை)

அவ்வப்பொழுது இலக்கணம் சார்ந்த ஐயங்களுக்குத் தெளிவு வேண்டி எனக்கு சில தொலைபேசிகள் வருவதுண்டு. இதழியல்துறை சார்ந்தவர்கள் அச்சேறும் செய்தியில் பிழை நீக்கி வெளியிட விரைந்து அழைப்பதும் உண்டு. நான் அந்த நேரம் வகுப்பில் இருந்தாலும், பேருந்துகளில் சென்றாலும் விடை சொல்ல முடியாமல் தவிப்பது உண்டு.

அண்ணன் வையை கோ.வீரக்குமரன் அவர்கள் (வணிகவில் பேராசிரியர், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம்) தமிழை எழுதும்பொழுது ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள இணையத்தில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எனக்கு அவ்வபொழுது அன்புக்கட்டளை போடுவார்கள். ஆங்கிலத்தில் அடிக்கடித் தவறு செய்யும் இடங்களை அடையாளப்படுத்தி, ஆங்கிலத்தைப் பிழையின்றி எழுத வழிவகுத்துள்ளதாகவும் தமிழில் அதுபோன்று செய்யவேண்டும் என்றும் கூறுவார்கள்.

எனக்கிருக்கும் பல்வேறு பணிகளில் இவற்றில் ஈடுபடமுடியாமல் இருந்தேன். இவ்வாறு பல மணி நேரம் முயன்று செய்தாலும் தமிழகத்துக் கல்விச் சீர்கேட்டுச்சூழலில் இவற்றுக்கெல்லாம் எவ்வகையான மதிப்போ, சிறப்போ இல்லை என்பதை அண்மைக் காலமாக அறிந்து மனம் வருந்தி இருக்கும்பொழுது அயலகத்தில் வாழும் தமிழ் உணர்வுபெற்ற தமிழர்களுக்காக இம்முயற்சியில் ஈடுபட்டுச் சில மயங்கொலிச் சொற்களை எடுத்துக்காட்டி அவற்றின் பொருள்வேறுபாட்டை எழுதுகிறேன்.

வேலூர்ப் பேராசிரியர் கா.பட்டாபிராமன் ஐயா, புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் மு.சதாசிவம், முனைவர் மருதூர் அரங்கராசன் போன்றவர்கள் இத்துறையில் மிகுதியாக உழைத்துள்ளனர். அவர்களின் நூல் செய்திகள் இணையத்தில் ஏறும்பொழுது உலகத் தமிழர்களுக்குப் பெரும் பயன் நல்கும். உயிர்எழுத்து வரிசைச்சொற்கள் சிலவற்றை இப்பொழுது தொகுத்து வழங்குகின்றேன். பிறகு உயிர்மெய்எழுத்து வரிசைச் சொற்களைத் தொகுத்தளிப்பேன்.

றகர-ரகர வேறுபாடு

அ வரிசை

அறம் – தருமம்
அரம் – அராவும் கருவி

அரவு - பாம்பு
அறவு – அறுதி

அரவே – பாம்புதான்
அறவே – முழுவதும்

அரன்- சிவன்
அறன் – தருமம்

அரா – பாம்பு
அறா – நீங்காத

அரி- திருமால்
அறி- தெரிந்துகொள்

அரிந்தவர் –காய்கறி வெட்டியவர்
அறிந்தவர் – கல்வியறிவு பெற்றவர்

அறிப்பு- உணர்கை
அரிப்பு- தினவு

அருகு – பக்கம்
அறுகு – அறுகம்புல்

அருபொருள் – அருமையானபொருள்
அறுபொருள் – பரம்பொருள்

அறுவர் – ஆறுபேர்
அருவர் – தமிழர்

அறுமை- நிலையின்மை
அருமை- மிகச்சிறப்பு

அறவை- ஆதரவற்ற நிலை
அரவை – மாவு அரைத்தல்

அறை –வீட்டின் சிறியபகுதி
அரை- பாதி

ஆ வரிசை

ஆற – குணமாதல்
ஆர – நிறைய

ஆறல்- குணமாதல்
ஆரல் – மீன்

ஆரறிவு- நிறைந்த அறிவு
ஆறறிவு – ஆறு அறிவு

ஆறாத –தனியாத
ஆராத – பொருந்தாத

இ வரிசை

இற- செத்துப்போ
இர- பிச்சை

இறக்கம்- கீழே இறங்குதல்
இரக்கம்- கருணை

இரந்தகாலம்-பிச்சை எடுத்தகாலம்
இறந்தகாலம்- கடந்த காலம்

இறா-ஒருவகைமீன்
இரா-இரவு

இரு-இரண்டு
இறு- வடிகட்டு

இருவரை-இரவர்(எண்ணிக்கை)
இருவறை- பெரிய மலை

இறைத்தல்- நீரை இறைத்தல்
இரைத்தல்-மூச்சிரைத்தல்

ஈ வரிசை

ஈறல்- நெருக்கம்
ஈரல்- உறுப்பு

ஈறு- கடைசி
ஈரு- பேன்

உ வரிசை

உறவு- சொந்தம்
உரவு-- வலிமை(அறிவு)

உறல்- பெறுதல்
உரல்- கல் உரல்

உறி- மோர்ப்பானை வைக்கும் தூக்கு
உரி- நார் உரித்தல்

உருக்குதல்- உள்ளம் இளகுதல்
உறுக்குதல்-மிரட்டுதல்

உறுமு- கத்துதல்
உருமு-இடி,அச்சம்

உறை - இருப்பிடம்,புத்தக உறை,தலையணை உறை
உரை- பேசு,நூலுக்கு உரை(பரிமேலழகர் உரை)

உறைப்பு- காரம்,
உரைப்பு –சொல்லுதல்

ஊ வரிசை

ஊற- கிணற்றில் நீர் ஊறல்
ஊர- மெல்ல நகர்தல்

ஊறு-இடையூறு
ஊரு- அச்சம்

எ வரிசை

எறி-வீசு
எரி-நெருப்பு

எறிப்பு- கடுமையான வெயில்
எரிப்பு-பொறாமை

ஏ வரிசை

ஏரல்-கிளிஞ்சல்
ஏறல்- ஏறுதல்

ஏரி-நீர்நிலை
ஏறி- மரத்தில் ஏறி

ஏறு- அரிமா(சிங்கம்)
ஏரு- ஏர்(கலப்பை)

ஒ வரிசை

ஒரு-ஒன்று
ஒறு-தண்டித்தல் (ஒறுத்தாரை-திருக்குறள்)

ஒறுத்தல்-தண்டித்தல்
ஒருத்தல்-விலங்கினத்தில் ஆண்

2 கருத்துகள்:

மணிச்சுடர் சொன்னது…

முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் வலைப்பூவில் ‘மயங்கொலிகள்’ இடுகை கண்டேன். அயலகத் தமிழர்கள் மட்டுமல்ல, தாயகத் தமிழர்களே மயங்கிப் பொருள் மாற்றிச் செய்யும் தமிழ்க்கொலைகளைத் தடுக்க, தங்களின் அயராத பணிகளுக்கிடையே தமிழ் இலக்கணப் பணியினை மேற்கொண்டுள்ளமைக்குப் பாராட்டுகள். தமிழில் வெளியாகும் பல நாள், வார, திங்களிதழ்கள் கவலையின்றி இப்பிழைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றன. தங்களின் முயற்சி அவற்றுள் சிலதுகளையாவது திருத்திக் கொள்ள ஏதுவாக அமையும் என நம்புகிறேன். ர,ற மயங்கொலிகள் போன்று ழ,ள.ல. மற்றும் ன.ண மயங்கொலிகள் பற்றியும் தொடர்ந்து வெளியிடுங்கள்.. தமிழருக்காவது தமிழ் நெறிப்படட்டும். வhழ்த்துகளுடன்.. பாவலர் பொன்.கருப்பையா,புதுக்கோட்டை.

HK Arun சொன்னது…

அன்புடன் முனைவர் மு.இளங்கோவன்

தமிழில் எழுத முனையும் போது அடிக்கடி ஏற்படும் தவறுகளை திருத்திக்கொள்வதற்கு இந்த "மங்கொலிச் சொற்கள்" பேருதவியாக இருக்கும்.

இவ்வாறான பணிகளை உங்களை போன்றோர் செய்யத் தவறினால் வேறு எவர் செய்வர்? எனவே தொலைதூர நோக்கு பார்வையுடன் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் பணி தொடர பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

பி.கு:தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்வாக்கத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அன்புடன்
அருண் HK Arun