நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 21 ஏப்ரல், 2011

இன்று(21.04.2011) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...


பாவேந்தர் பாரதிதாசன்

தமிழர்களைத் தன்மானப்பாட்டுகள் வழியாக உணர்வுபெறச்செய்த புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட உள்ளது.

ஏப்ரல் 21 காலை 8.30 மணிக்குப் புதுச்சேரி வைத்திக்குப்பம் பாப்பம்மாள் இடுகாட்டில் உள்ள பாவேந்தரின் நினைவிடத்தில் தமிழ் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் அகவணக்கம் செலுத்துவர். காலை 10.0 மணிக்குப் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் உள்ள பாவேந்தர் சிலைக்கு மாலையிட்டு வணங்குவர். 10.30 மணிக்குப் புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் தமிழறிஞர்கள், பாவலர்கள், அரசியல்தலைவர்கள் மலர்தூவி அகவணக்கம் நிகழ்த்துவார்கள். பாவேந்தரின் திருமகனார் மன்னர்மன்னன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
பாவேந்தர் வாழ்ந்த இல்லத்துக்கு அருகில் என் வீடு இருப்பதால் நானும் கலந்துகொள்ள நினைத்துள்ளேன்.

மாலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.து.நடராசன் அவர்கள் தலைமையில் பாரதிதாசனார் படைப்புகளில் பெரிதும் விஞ்சி நிற்பவை கவிதை வளமே! கருத்துச்செறிவே! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகின்றது. விருது வழங்கும் விழாவில் நடுவண் அமைச்சர் வே.நாராயணசாமி,முனைவர் வி.முத்து,சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், மேனாள் நடுவண் அமைச்சர் க.வேங்கடபதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மா.இராமநாதன்,மருத்துவர் ச.இரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

2 கருத்துகள்:

Ilakkuvanar maraimalai சொன்னது…

பாவேந்தரை நினைவுகூர்தற்கு நன்றி.
"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'எனும் அவர் அறிவுரையைச் செயலில் காட்டுவோம்.அங்ங்அனம் இயங்குதலே அவருக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும்.

Thamizhan சொன்னது…

தமிழுக்குப் பெருமை சேர்த்தாய் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்தாய் தமிழ்ப்புலவர் வாழ்வு பெற்றே
தலை நிமிர்ந்து நிற்க வைத்தாய்
தரணி வாழ் தமிழரெல்லாம்
உன் நினைவில் வாழ்த்திடுவோம் தமிழரெல்லாம் தமிழ் பேசி
தமிழ் வளர உறுதி கொள்வோம் !