நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஒரு கிழமை உலா நினைவுகள்...


இராசகுரு பதின்நிலைப்பள்ளி, காடாம்புலியூர்(பண்ணுருட்டி வட்டம்)


மு.இளங்கோவன்,சா.செல்வம்,சி.ஆர்.இலட்சுமிகாந்தன்,இரா.குருநாதன்(தாளாளர்)

அண்மைக்காலமாக எனக்குப் பணி மிகுதியாகி வருகின்றது.அவற்றுள் வெளியூர்ச் செலவுகள் மிகுதியாவதால் உடனுக்குடன் பல செய்திகளைப் பதிந்துவைக்கமுடியவில்லை.சனவரித் திங்கள் சிங்கை, மலையகச்செலவுகள்.

பிப்ரவரியில் இரண்டு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பேராசிரியர் பணிக்கு நேர்காணலில் கலந்துகொண்டேன். மார்ச்சுத் திங்களில் வழக்கம்போல் கல்லூரிப்பணி; ஓய்வுநேரங்களில் வெளியூர்ச்செலவுகள்.

மார்ச்சு 30 இல் கோவையில் ஜி.ஆர்.தாமோதரன் கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் புத்தொளிப் பயிற்சிக் கருதரங்கில் பங்கேற்கும்படி பேராசிரியர் இரா.சானகி அம்மா அவர்கள் அழைத்திருந்தார்கள். அவர்கள் சென்ற ஆண்டு புதியதலைமுறை இதழில் என் நேர்காணல் கண்டு,அன்றிலிருந்து அவர்கள் கல்லூரியில் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று காத்திருந்தார்கள்.

அவர்களின் அன்புக்குக் கட்டுண்டு ஒருநாள் ஈட்டிய விடுப்பு எடுத்துக்கொண்டு கோவைக்குச் சென்றேன். அதற்கு முதல்நாள்தான் (28.03.2011) சுவிசு நாட்டு அறிஞர் கு.கல்யாணசுந்தரம் அவர்களைப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் பேசவைக்கும் ஒரு நிகழ்ச்சி. அதற்கு அழைப்பிதழ் அச்சடித்தல், வழங்கல், பதாகை அச்சிடல் எனப் பல பணி. சிறப்பாகச் செய்துமுடித்து ஐயா கு.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு விடைதந்து அனுப்பினேன்.

29.03.2011 இரவு கோவைக்குச் செலவு.

என் வருகை கோவை அன்பர்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டதால் பலரைக் கண்டு உரையாடும் ஒரு சூழலையும் உருவாக்கினோம்.

30.03.2011 காலை ஏழு மணிக்குக் கோவை ஜி.ஆர்.டி கல்லூரி விருந்தினர் இல்லத்தை அடைந்தேன். மைசூர் இந்தியமொழிகளின் நடுவண் நிறுவனத்தின் பேராசிரியர் நடராசபிள்ளை அவர்களும் பேராசிரியர் இரத்தினசபாபதி அவர்களும் பேராசிரியர் தூ.சேதுபாண்டியன் ஐயாவும் அங்கு இருந்தார்கள். அவர்களிடம் உரையாடியபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குப் புறப்பட அணியமானோம்.

காலை 10.30 மணியளவில் புத்தொளிப் பயிலரங்கம் நடந்தது.மொழிகற்பித்தல் சார்ந்த பயிற்சிகளைப் பயிற்றுவித்தலில் பல்லாண்டு பட்டறிவுகொண்ட நடராசப்பிள்ளை, இரத்தினசபாபதி, சேதுபாண்டியனார் ஆகியோர் தம் கருத்துரைகளை வழங்கினர்.

மாலை 3.15 மணிமுதல் 4.30 வரை தமிழ்பயிற்றுவிக்கும் இணையதளங்கள் குறித்து என் உரை அமைந்தது. அனைவரும் ஆர்வமுடன் என் உரையைச் செவிமடுத்தனர். என் நிகழ்ச்சி தொடங்கும் முன் திரு.கோபால் ஐயா அங்கு வந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அமெரிக்காவில் ஐயா அவர்கள் இருந்தபொழுது இணையம் வழி அவர்கள் எனக்குத் தொடர்புகொண்டார்கள். இப்பொழுது கோவைச் செலவில் இருவரும் நேரில் கண்டு உரையாடினோம்.மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். மேலும் நுகர்வோர் உரிமைக்குத் தொடர்ந்து குரல்கொடுப்பவர். அவர்களின் அன்பு கண்டு மகிழ்ந்தேன்.

புத்தொளிப்பயிற்சி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 5 மணி அளவில் விருந்தினர் இல்லம் சென்றேன். அங்குத் தமிழ்ப்பற்றாளர் செம்பியன் வல்லத்தரசு அவர்கள் தம் மகிழ்வுந்தில் வந்து சேர்ந்தார்கள். இருவரும் அங்கிருந்த அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நகரம் நோக்கிச் சென்றோம். நேரே எங்கள் மகிழ்வுந்து எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இல்லம் சென்றது. எங்கள் வருகையை முன்பே தெரிவித்திருந்ததால் நாஞ்சில்நாடன் எங்களை எதிர்கொண்டழைத்தார். அமைதியான சூழலில் நாஞ்சிலின் வீடு உள்ளது. எளிமையான அனைத்து வசதிகளும் கொண்டு நாஞ்சில் வீடு இருந்தது.

செம்பியன் ஐயா உரிமையுடன் தமக்குப் பசிக்கின்றது. உடன் உணவு வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டார். வீட்டில் நுழையும்பொழுது இவ்வாறு கேட்கவேண்டும் என்றால் முன்பே இவர்கள் நன்கு பழகியிருக்கவேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். ஏன் என்றால் செம்பியன் ஐயா அவர்கள் ஒரு தமிழ் ஆர்வலர் என்று மட்டும் தெரியுமே தவிர அவர் பற்றிய மற்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. 1993-1997 ஆம் ஆண்டுகளில் ஓரிருமுறை செம்பியன் ஐயாவை அண்ணன் அறிவுமதி அறையில் சென்னையில் சந்தித்தது உண்டு.அதன்பிறகு
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற பேராசிரியர் அருளி ஐயா அவர்களின் மகன் தம்பி தெள்ளியன் மணவிழாவில் சந்தித்தேன். அதனால் செம்பியன் ஐயாவும் நஞ்சில்நாடனும் உரையாடுவதை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சில தின்பண்டங்கள் உண்ணத் தந்தார்கள். உண்டபடியே எங்கள் உரையாடல் நடந்தது.

நாஞ்சில் மிக எளிதாகப் பழகினார்.அவருக்கு என் நூல்கள் சிலவற்றை அளித்தேன். அவரும் எனக்கு ஒரு நூலைப் பரிசளித்தார்கள். சிறிது நேர உரையாடலும் இலக்கியம் சார்ந்தே இருந்தது. பேராசிரியர் சிற்பி அவர்கள் பற்றியும் மகிழ்ச்சியுடன் பேசினோம்,. நாஞ்சில் ஒருமுறை சாய்க்கடையோரமாக இருந்த பழைய புத்தகக்கடையில் யாப்பருங்கலக்காரிகை புத்தகம் ஒன்றைப் பார்த்ததாகவும் குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் குறிப்பிட்டார். பின்னர் அந்தப் புத்தகத்தைக் கட்டடம் செய்து வைத்துள்ளதாகவும் காட்டினார். அதில் இடப்பட்டிருந்த கையெழுத்தைப் பார்த்த சிற்பி அவர்கள் இது சிவராசப்பிள்ளை பயன்படுத்திய நூல் என்றும் அவர் கையெழுத்து இது என்றும் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.

நாஞ்சிலுக்கு அணிந்துரைக்காக வந்த "சூரல் பம்பிய சிறுகான்ஆறு" என்ற நூல் பற்றியும் புகழ்ந்து பேசினார்கள்.

உரையாடலை நிறுத்திக்கொண்டு மரபின்மைந்தன் முத்தையா அவர்களின் அலுவலகத்திற்குச் சென்றோம்.வழியில் நாஞ்சில் அவர்களின் இலக்கிய ஈடுபாடு எழுத்தார்வம் பற்றி பேசிபடி வந்தேன். எழுத்தாளர் செயமோகன் அவர்கள் வழியாகவும் நாஞ்சில் பற்றி முன்பே அறிவேன் என்று கூறினேன்.

முத்தையா அண்ணன் எங்களை அன்புடன் வரவேற்றார். பத்துப்பேர் திரண்டிருந்தனர். தமிழ் இணையம் பற்றி உரையாடினோம். முத்தையா அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வெற்றித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர். மேலும் இரசனை ,நமது நம்பிக்கை இதழ்களின் ஆசிரியராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் விளங்குபவர். அங்கு நடந்த நிகழ்வுகளை முடித்துக்கொண்டு புறப்பட்டபொழுது ஒரு தோழர் தாடி தடவியபடி என்னை உற்றுநோக்கிய வண்ணம் இருந்தார். அவர் தயங்கியபடியே என் ஊர் என்ன? என்றார். அவரின் பேச்சைக்கொண்டு தாங்கள் இளங்கோவா என்றேன். ஆம் அவர்பெயர் இளங்கோ என்பதுதான். திருப்பனந்தாள் கல்லூரியில் நான் பயின்றபொழுது 1992 இல் அந்த இளங்கோ வணிகவியல் இளங்கலை பயின்றவர். கராத்தே பயிற்சி பெற்றவர். எங்களுடன் பல மேடைகளில் பேசியவர். சற்றொப்ப இருபதாண்டுகள் கடந்த பிறகு அன்புக்குரிய நண்பர் ஒருவரைக் கண்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. இப்பொழுது அந்த இளங்கோ கோவையில் இந்துத்தான் கல்லூரியில் வணிகவியல்துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.

நானும் செம்பியன் ஐயாவும் அன்னபூரனா உணவகத்தில் இரவு உணவு முடித்தோம். இரவு பத்துமணிக்கு எனக்குரிய பேருந்து நிலையில் கொண்டு வந்து ஐயா அவர்கள் இறக்கிவிட்டார்கள்.வரும்வழியில்தான் செம்பியன் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை அறிந்து மகிழ்ந்தேன். அவர்களின் கலையுணர்வும், தமிழ்ப்பற்றும், இறையுணர்வும், பொதுவுடைமைச்சிந்தனைகளும், போராட்ட வாழ்க்கையும் அறிந்து அவர்களின் மேல் உயர்ந்த அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. செம்பியன் ஐயாவிடம் விடைபெற்றுக்கொண்டேன்.

காடாம்புலியூர் இராசகுரு பள்ளி விழா

01.04.2011 மாலை 7 மணிக்குப் பண்ணுருட்டி வட்டம் காடாம்புலியூரில் உள்ள இராசகுரு பதின்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழாவுக்கு வரும்படி ஆறு திங்களுக்கு முன்பே தாளாளர் திரு.இரா.குருநாதன் ஐயா அவர்கள் அழைத்திருந்தார்.
தொடர்ந்து நினைவூட்டியபடி இருந்தார். கல்லூரியில் நிறைவுப்பணி நாள் என்பதால் அக்கடமையை நிறைவேற்றி ஐந்து மணியளவில் புறப்பட்டு 7 மணிக்கு நான் காடாம்புலியூர் சென்றேன். ஒரு சிற்றூர்ப்புறச்சூழலில் முதன்மைச்சாலையில் பள்ளி 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பள்ளி வளாகத்தில் முந்திரி,பலா,தேக்கு என்று மரங்களின் அழகிய காட்சி. இன்னும் சில ஆண்டுகளில் இந்தப் பள்ளி மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று தோன்றுகின்றது. முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபெறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குச் சிதம்பரம் திரு.சி.ஆர்.இலட்சுமிகாந்தன்(மேனாள் சட்ட மேலவை உறுப்பினர்) அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொடர்பு அதிகாரி திரு.செல்வம் அவர்களும் வந்திருந்தனர்.உள்ளூர் அன்பர்கள் பலரும் கலந்துகொண்டனர். நானும் திரு.குருநாதன் அவர்களின் முயற்சியைப் பாராட்டி,சிற்றூரில் இதுபோன்ற பணிகள் தேவை என்று வாழ்த்திப் பேசினேன்.
இரவு 8.30 மணியளவில் விடைபெற்றுப் புதுவைக்குத் திரும்பினேன்.


பேராசிரியர் சானகி அம்மா


முனைவர் தூ.சேதுபாண்டியன்,முனைவர் இரத்தினசபாபதி,முனைவர் நடராச பிள்ளை


மு.இளங்கோவன்,மரபின் மைந்தன் முத்தையா


முனைவர் மு.இளங்கோவன்,எழுத்தாளர் நாஞ்சில்நாடன்



தனித்தமிழ் அன்பர் செம்பியன்வல்லத்தரசு

2 கருத்துகள்:

J.P Josephine Baba சொன்னது…

வாழ்த்துக்கள்!

Job Sites சொன்னது…

உங்கள் தமிழ் பற்று கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சு போட்டி நடந்து நான் அறிந்து பல நாட்கள் கடந்துவிட்டது. அதற்க்கு ஏதும் உதவி புரிய முடியுமா ஐயா?