நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 21 ஏப்ரல், 2011

பாவேந்தர் நினைவுநாள் காட்சிகள்


பாவேந்தர் சிலை(நினைவில்லத்தில்)

பாவேந்தரின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாவேந்தர் அருங்காட்சியகத்தில்(நினைவில்லம்) காலை பத்துமணிக்குத் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள்,அரசு அதிகாரிகள், திராவிட இயக்கம்சார்ந்த தோழர்கள், பாவேந்தர் குடும்பத்தினர், பாவேந்தர் பற்றாளர்கள் வந்து சேர்ந்தனர்.

பாவேந்தரின் இளைய மகள் அம்மா வசந்த தண்டபாணி அவர்கள் முன்னதாகவே வந்து சேர்ந்தார்கள். பாவேந்தர் நினைவுகளை அவர் வழியாக அறிந்தேன். பாவேந்தர் எழுதிய பாட்டுச் சூழல்களை வசந்தா அம்மா அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். அவற்றைச் சிறிது நேரம் ஒலிப்பதிவு செய்துகொண்டேன்.

பாவேந்தரின் திருமகனார் ஐயா மன்னர்மன்னன் அவர்களும் பாவேந்தரின் பெயரர் பாவலர் பாரதி அவர்களும் பாவேந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நினைவில்லம் வந்தனர். அவர்களின் வருகையை ஒட்டிக் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அவர்கள் பாவேந்தர் சிலைக்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தினார். அதன்பிறகு ஒவ்வொருவராக மலர்தூவி வணக்கம் செலுத்தினோம். பாவேந்தர் பற்றாளர்கள் பாவேந்தரை நினைவுகூர்ந்து உரையாடினர். சிலர் பாவேந்தரின் இசைப் பாடல்களைப் பாடி மகிழ்ச்சியூட்டினர். பாவேந்தரின் நினைவு தமிழ் வாழும் காலம் எல்லாம் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு காட்டியது.


சட்டமன்ற உறுப்பினர் இ.இலட்சுமிநாராயணன் மலர்தூவி வணங்குதல்


முனைவர் மு.இளங்கோவன் மலர்தூவி வணக்கம் செலுத்துதல்


பாவேந்தரின் கொள்ளுப்பெயர்த்தி,மன்னர்மன்னன்,மு.இளங்கோவன்,சிவ.இளங்கோ


பாவேந்தரின் இளையமகள் வசந்தா,மு.இ


மு.இளங்கோவன்,மன்னர்மன்னன்,கோ.பாரதி

4 கருத்துகள்:

Saravanabavan சொன்னது…

வாழ்க தங்கள் பணி -சரவணபவானந்தன்

Saravanabavan சொன்னது…

வாழ்க தங்கள் பணி -சரவணபவானந்தன்

Muthu Nilavan சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்.
நானும் இன்றிங்கு நடந்த வேறொரு நிகழ்வில் பாரதிதாசனை நினைவு கூர்ந்தேன். ஆனால், ‘பெரியவர்கள்’ பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வில் வேறுயாரும் பாரதிதாசன் பற்றிப் பேசவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். ஆனால், நான் அந்தப் புரட்சிக்கவியின் பாடல் ஒன்றினைப் பாடிமுடித்து ‘இன்று பாரதிதாசனின் நினைவுநாள்’ என்று சொன்னவுடன் எழுந்த மக்களின் கையொலி அடங்கச் சிறிது நேரமாயிற்று என்பதே எனக்கு மகிழ்ச்சி.

தாங்கள் அந்த மாகவியின் நினைவில்லத்திலேயே அரசும், அவரது குடும்பத்தினரும், அவரது பற்றாளர்களும் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது.
அவரது மகள் மற்றும் மகனுடன் பேசிய- நேர்கண்ட –செய்திகள் குறித்து மேலும் தெரிவித்தால் மிகவும் மகிழ்வோம். தங்களின் தமிழ்ப்பணி சிறக்கட்டும். அன்புடன் -நா.மு.

போளூர் தயாநிதி சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் அந்த மாகவியின் நினைவில்லத்திலேயே அரசும், அவரது குடும்பத்தினரும், அவரது பற்றாளர்களும் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது.
வாழ்க தங்கள் பணி