நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 18 ஏப்ரல், 2011

மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரித் தமிழ் இணையப் பயிலரங்கம்


தாளாளர் இர.சண்முகநாதன்

தமிழகத்தில் இணைய அறிமுகத்துக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஒவ்வொரு பட்டறிவு எனக்கு ஏற்படுவது உண்டு. பெரும்பாலும் வாய்ப்புகளை உருவாக்கவேண்டியிருக்கும். ஆனால் ஆண்டிமடம் பயிலரங்கிற்கான வாய்ப்பினை அக்கல்லூரியில் கணினித்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் இராசமோகன் அவர்கள் உருவாக்கினார். கல்லூரியின் தாளாளர் திரு.இர.சண்முகநாதன் அவர்களுக்கு என் இணையம் கற்போம் நூலினைக் கொடுத்து என்னை அறிமுகம் செய்துள்ளார்.

பேராசிரியர் இராசமோகன் அவர்கள் எனக்கு மின்னஞ்சல்வழியான நண்பர்தான். என் முயற்சிகளை அவ்வப்பொழுது இணையத்தில் கண்டு என்னைத் தாம் பணிபுரியும் கல்லூரிக்கு அழைக்க பல நாளாகத் திட்டமிட்டார். எனக்கும் வாய்ப்பான நாள் அமையாமல் இருந்தது. கோடைவிடுமுறையில் எப்படியும் என்னை அழைத்துவிடுவது என்று முடிவுசெய்தனர். நானும் ஞாயிற்றுக்கிழமை(17.04.2011) கலந்துகொள்கின்றேன் என்று உறுதியளித்தேன். அதன்படி வைகறை 4 மணிக்குப் புறப்பட்டுப் புதுச்சேரி-வடலூர்-நெய்வேலி-விருத்தாசலம் வழியாக ஆண்டிமடத்தை காலை 9.15 மணிக்கு அடைந்தேன். இடையில் விருத்தாசலத்தில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டேன்.

விடுமுறை நாள் என்பதால் மாணவர்கள் பத்துமணிக்கு வந்துசேர்ந்தனர். அரங்கை நோட்டமிட்டேன். கல்லூரி வளர்ந்துவரும் நிறுவனம் என்பதால் கட்டடங்கள் புதியதாக எழுந்தவண்ணம் இருந்தது. அடுத்த ஆண்டுகளில் கல்லூரியில் அனைத்து வசதிகளும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றியது. எனினும் நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தாளாளர் அறிந்து உடன் கிடைக்கும்படி செய்தார்கள். அவரின் இணைய இணைப்புதான் கைகொடுத்தது. உருப்பெருக்கி மட்டும் வந்தது. திரைக்கு நான்கு முழ வேட்டியைச் சுவரில்பொருத்தித் திரை உருவாக்கினோம். மின்னாக்கியும் வந்து சேர்ந்தது.
மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும் ஏற்பாடுகள் செய்தோம். எதிர்பார்த்தபடி மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர் வந்து குழுமினர். என் நண்பர் சுந்தரவடிவேல் அவர்களும் அங்கு வந்துசேர்ந்தார்.

கல்லூரியின் முதல்வர், நிர்வாக அதிகாரி, பேராசிரியர்கள், தாளாளர் என அனைவரும் 10.30 மணியளவில் ஒன்றுசேர்ந்து நிகழ்ச்சியைத் தொடங்கினோம். தொடக்க விழா எளிமையாக நடந்தது. இணைய அறிமுகத்திற்கு முதன்மையளித்துப் பேச்சைக் குறைத்துக்கொண்டோம்.

தாளாளர் இர.சண்முகநாதன் அவர்கள் இளம் அகவையினர், கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிறுவனத்தைக் கவனிக்கத் தம் பணியை விட்டுவிட்டு முழுமையாகக் கல்லூரி வளர்ச்சியில் கவனம்செலுத்துகின்றார். மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கவேண்டும் என்பதில் துடிப்பு மிக்கவராக இருந்தார். என் நூல்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தும் என் முயற்சியைப் பாராட்டியும் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.

நான் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சியை எடுத்துரைத்தேன், தமிழ்த்தட்டச்சு அறிமுகம் நடந்தது. மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், தமிழ் விசைப்பலகை அறிமுகம், மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை, நூலகம், தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, இணைய இதழ்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் இணைய மாநாடுகள், விக்கிப்பீடியா, விக்சனரி, மின்நூல்கம்,மின்னகரமுதலிகள்,இணையவழித் தமிழ்ப்பாடங்கள்,சமூகவலைத்தளங்கள் பற்றிய பல செய்திகளை எடுத்துரைத்தேன்.

மாணவர்கள் சிற்றூர்ப்புறம் சார்ந்தவர்கள் என்பதால் பொறுப்புடன் குறிப்பெடுத்துக்கொண்டனர். ஆர்வமுடன் கேட்டனர். காலை 10.30 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 வரையில் என் உரை தொடர்ந்தது. அரைமணிநேரம் உணவு இடைவேளை. பிறகு இரண்டுமணிமுதல் நான்குமணிவரை செய்முறையாக வலைப்பூ உருவாக்கம் முதல் இணையவழிக் கல்வி பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன்.

நிறைவாகப் பயிற்சி பெற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்துகளை வழங்கினர். பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பயிலரங்க நிகழ்வை விவாதித்து, மீண்டும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று செல்பேசியில் பகிர்ந்துகொண்டனர். தமிழகத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் நடந்த பயிலரங்குகளுள் ஆண்டிமடம் சொளபாக்யா கல்லூரி நிகழ்வு குறிப்பிடத்தகுந்தது. இரவு பத்து மணிக்குப் புதுச்சேரி மீண்டேன்.


ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்


கல்லூரியின் பேராசிரியர்கள், தாளாருடன் மு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: