நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 பிப்ரவரி, 2009

பேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்கு

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும்,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவனமும்(நியு செஞ்சுரி)2009,பிப்ரவரி 24,25 நாள்களில் தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் எழுத்துரைகள் குறித்த இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.

தொடக்க விழாவில் தமிழியற்புல முதன்மையர் பேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

முனைவர் மே.து.இராசுகுமார் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். இவர் தொடக்கவுரையில் நா.வானமாமலை மரபுவழி ஆய்வாளர் இல்லை எனவும், மார்க்சியத்தைத் தமிழ்த்துறையில் எந்த வழியில் பார்க்கவேண்டும் எனவும் உணர்ந்தவர் என்றார்.பலதுறைகளில் இயங்கியுள்ளதுடன் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அறிஞரை உருவாக்கித் தமிழாய்வுகளை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துள்ளார் என்றார்.மார்க்சியம் என்பது மார்க்சுக்குப் பிறகும் வளர்ந்துகொண்டுள்ளது.அதுபோல் நா.வா.ஆய்வுகள் என்றால் அவர் எழுத்துகளுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது.அவர் வழிப்படுத்தியவர்களின் ஆய்வுகளையும் மதிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நா.வா.அரசியல் சார்புடையவர்.எந்த ஆய்விலும் அவரிடம் மார்க்சியப் பார்வை வெளிப்படும் என்றார்.


மே.து.இராசுகுமார்


பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் அ.பாலசுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டு நா.வானமாமலையின் பல்துறை சிறப்புகளையும் எடுத்துரைத்தார்.தம் உரையை எழுத்துரையாக அனைவருக்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்இவர் உரையில் நா.வா.வின் ஆய்வுகள் பற்றி விளக்கினார்.அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துகளைப்போல் நா.வா.வின் எழுத்துகள் அந்நாளில் தரமுடன்,சிறப்புடன் விளங்கின.அவர் பதிப்பித்த பல்வேறு கதைப்பாடல்கள் நெல்லைப்பகுதியில் வில்லிசையில் பாடப்பட்டன.முத்துப்பட்டன் கதை 24 மணிநேரமும் பாடும் கலைவடிவமாக நெல்லைப் பகுதியில் பாடப்பட்டன என்று கூறி நா.வா.வின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரிப் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், அவர்கள் மையவுரை யாற்றினார். நா.வா.இலக்கியம்(பண்டைய இலக்கியம்,இடைக்கால இலக்கியம், புதிய இலக்கியம்),அறிவியல்தமிழ்,வரலாற்றுத்துறை,சமூக மானுடவியல் துறை,நாட்டார் வழக்காற்றியல்துறை,தத்துவத்துறை(இந்தியத் தத்துவம்,மார்க்சியம்),அரசியல் ஈடுபாடு
கொண்டு விளங்கியவர் எனவும் மிகப்பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்தாலும் அவர் காலத்தில் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வந்த வருவாய் கொண்டுதான் வாழவேண்டியிருந்தது என்றார்.


பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

நா.வா அவர்களுக்கு அ.சீனிவாசராகவன்,கு.அருணாசலக் கவுண்டர்,கார்மேகக்கோனார் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிப்படுத்தியவர்கள் என்று நா.வா.வின் இளமைக்கால வாழ்க்கை முதல் அவரின் ஆய்வுப் பின்புலங்கள் வரை எடுத்துரைத்தார்.தனியாக முதுகலை படித்தவர் எனவும் சைதாப்பேட்டையில் எல்.டி.என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றவர் எனவும் குறிப்பிட்டார்.

நெல்லை ஆய்வுக்குழு உருவாக்கியும் ஆராய்ச்சி இதழ் தொடங்கியும் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.இவர் வழியில் ஆய்வு செய்ய பலர் இன்று உள்ளனர் என்று மாணவர்கள், ஆய்வாளர்களுக்குப் பயனுடைய பல தகவல்களை வழங்கினார்.

தேவபேரின்பன்,பிலவேந்திரன்,கட்டளைக்கைலாசம்,விவேகானந்தகோபால்,பக்தவச்சலபாரதி,செல்லப்பெருமாள் ஆகியோர் கட்டுரை படித்தனர்.நிறைவு விழாவில் பொன்னீலன் உரையாற்ற உள்ளார்.

2 கருத்துகள்:

தளிர் சொன்னது…

பேராசிரியர் நாவா பற்றிய கருத்தரங்கு பற்றி அறிந்து மகிழ்ச்சி. அவரின் கட்டுரைகள் இரண்டை http://noolatukku.blogspot.com என்னும் எனது வலைப்பூவில் வலையேற்றியுள்ளேன். பார்க்க. தகவலை பகிர்ந்துகொள்க.

Unknown சொன்னது…

பேராசிரியர் நாவா மீது எனக்கு பெரிய மரியாதையே உண்டு. ஆனால் அவரின் முத்துபட்டன் கதையை TUV வெப்தளத்தில் படித்தபோது அவர் குமாரசுவாமி நாடான் கதை என்ற கதையை தனது சொந்தவாதத்திர்காக அவர் கையாண்டுள்ள விதம் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. குமாரசுவாமி நாடான் திருச்செந்தூர் முருகனின் அவதாரம் ஆவார். இன்றும் அவருக்கு நிறைய கோவில்கள் உள்ளன. குமாரசுவாமி நாடான் கதை என்று ஒரு வில்லுப்பாட்டே உள்ளது. (www.kumaraswamytemples.com) இதிலிருந்து பார்க்கும் போது அவரது ஆராய்சிகள் மீண்டும் ஆராய்வதற்கு உரியவையோ என்று யோசிக்க தூண்டுகிறது.

Muthu Rajagopal