நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று எச்சங்கள்...


கங்கைகொண்டசோழபுரம் கோயில்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்.

முதலில் தஞ்சாவூர் சோழர்களுக்குத் தலைநகராக இருந்தது.சோழநாட்டின் எல்லை இராசராசசோழன் காலத்தில் விரிவடைந்த காரணத்தால் படைக்குத் தலைமை ஏற்றுப் பல போர்களைச் செய்த இராசேந்திரசோழன் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு (கி.பி.1012-1044) கொள்ளிடக்கரையின் வடக்கே இருந்த மிகப்பெரிய நிலப்பரப்பைச் சீர்செய்து கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை உருவாக்கினான்.கங்கைப் படையெடுப்பில் வெற்றி பெற்றதன் அறிகுறியாக இந்த நகர் உருவானதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர்.

தலைநகரில் கங்கைகொண்டசோழீச்சுரம் கோயிலும்,கோயிலின் மேற்கே மாளிகையும் அதன் மேற்கே சோழகங்கம் என்ற பொன்னேரியும் உருவாக்கினான். கங்கைகொண்டசோழபுரம் சார்ந்த பல ஊர்களுக்குத் தன் வெற்றியின் அறிகுறியாகத் தம் வெற்றிப்பெயர் விளங்கும்படி ஊர்களை உருவாக்கியுள்ளான்.

இன்றைய மலேசியாவில் உள்ள "கெடா" என்ற ஊர் முன்பு கடாரம் என அழைக்கப்பட்டது. இந்தக் கெடா வெற்றியை நினைவூட்டும் வகையில் கடாரம் கொண்டான் என்ற ஊர் உருவாக்கினான்.இன்றும் கங்கைகொண்டசோழபுரத்திற்கு தென்மேற்கே 5 கல் தொலைவில் இந்த ஊர் இன்றும் உள்ளது. சோழப்படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான இடம் ஆயுதக்களம் என்று அழைக்கப்பட்டது.இன்றும் இந்தப்பெயர் ஊருக்கு வழங்கப்படுகிறது. கட்டடங்கள்,மாளிகைகள் கட்ட சுண்ணாம்பு உருவாக்கிய இடம் சுண்ணாம்புக்குழி என்று அழைக்கப்படுகிறது.

கோட்டை இருந்த இடம் உள்கோட்டை எனப்படுகிறது.யுத்தப்பள்ளம் என்ற ஊர் சண்டை நடைபெற்றதை நினைவூட்டி இன்றும் வழங்கப்படுகிறது.இதன் அருகே திறந்தவாயில் இருந்துள்ளது(தொறந்தவாசல் என மக்கள் இன்று அழைப்பர்).வானதிரையன் குப்பம் என்ற ஊரும் அதனை ஒட்டி வீரசோழபுரம் என்ற ஊரும் சோழர்களின் வரலாற்றைச் சொல்லிக்கொண்டுள்ளன. வானவன்நல்லூர், சோழன்மாதேவி, தென்கச்சிப் பெருமாள்நத்தம்(தென்கச்சி சுவாமிநாதன் பிறந்த ஊர்),வாணதிரையன்பட்டினம்,நாயகனைப்பிரியாள், செயங்கொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு வரலாறு சொல்வன.

சோழபுரம், சோழதரம், வானவன்மாதேவி, கங்கவடங்கன்நல்லூர்,படைநிலை, உள்ளிட்ட ஊர்களும் வரலாற்று முதன்மை உடையன.உலகளந்த சோழன்வெளி என்ற ஊர் ஒன்றும் கோயிலுக்கு அருகில் உள்ளது.உலந்தவெளி எனப் பேச்சுவழக்கில் உள்ளது.

மெய்க்காவல்புத்தூர் ஊரும் குறிப்பிடத்தக்க ஊராகும்.குருகாவலப்பர்கோயிலில் புகழ்பெற்ற வீரநாராயணப் பெருமாள்கோயில் உள்ளது.அரிய சிலைகள்,சிற்பங்கள் உள்ள ஊர். கணக்கவிநாயகர்கோயில் விநாயகர்சிலை உலகப் புகழ்பெற்றது.

சலுப்பை,சத்திரம்,செங்கல்மேடு,பாப்பாக்குடி,மீன்சுருட்டி உள்ளிட்ட ஊர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களாகும். கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து வடநாட்டுக்குச் செல்ல இருந்த பெருவழியில் சத்திரம் அமைத்துப் பலரும் தங்கிச் செல்ல வசதிகள் இருந்துள்ளன. பாண்டிய படையெடுப்புக்குப் பிறகு இந்தப் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாப் பகுதியாகி விட்டது. நாயாக்கர்,சமீன்தார்கள் ஆட்சியில் இந்தப் பகுதியில் மக்கள் குடியேறி காடுவெட்டி,மண்திருத்தி நிலபுலங்களை வளப்படுத்தியுள்ளனர்.வராலற்று வீரம் செறிந்த மண் இன்றும் வீரம் செறிந்த பகுதியாக விளங்குகிறது.

விக்கிரமசோழன்மங்கலம் என்ற ஊர் அடையாளம் இழந்து விக்கிரமங்கலம் எனப்படுகிறது. இங்குச் சமண,பௌத்த கோயில்கள் இருந்துள்ளன.இதன் அடையாளமாக இந்த ஊரில் கோயில் சிலைகள் உள்ளன. சிலைகளைப் பற்றிய வரலாற்று உணர்வு இல்லாத மக்கள் இச்சிலைகளில் காதுப் பகுதியில் உள்ள துளைகளில் ஆடுமாடுகளைக் கட்டி வைத்திருந்ததை யான் கண்டுள்ளேன்.இப்பொழுது பாதுகாக்கப்படுகிறது.

கங்கைகொண்டசோழபுரத்தின் நான்கு புறத்திலும் நான்கு காளிக்கோயில்கள் இருந்துள்ளன. இவற்றை எல்லைக் காளிகளாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.அவ்வகையில் செங்கல்மேடு(கிழக்கு),இடைக்கட்டு(மேற்கு),வீராரெட்டித்தெரு(தெற்கு),அழகர் கோயில் (வடக்கு) பகுதியில் உள்ள காளியின் சிலைகள் சிறப்புடையன.கலிங்கநாட்டுச்சிற்பங்கள் என்று ஆய்வாளர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.பல ஆண்டுகள் வரை சரியாகப் பராமரிக்கப் படாமல் இச்சிலைகள் வயல்வெளிகளில் மழையிலும், வெயிலிலும் நின்றன. வெளிநாட்டுக் காரர்களுக்குப் பல சிலைகளை முன்னோர்கள் குறைந்த விலைக்கு விற்றதாகவும் மக்கள் வாய்மொழியாகச் சொல்கின்றனர்.

பல வயல்களில் அழகிய கலைவடிவப் பிள்ளையார் சிலைகள் இன்றும் உள்ளன. ஏரி, குளங்களில் துணி துவைக்கப் பயன்படும் கல்களில் அரிய கல்வெட்டுகள் இருப்பதும் உண்டு.மாளிகைமேட்டுப் பகுதிகளில் உள்ள நிலங்களில் களைவெட்டும் பெண்கள் பொற்காசுகள் கிடைகும் என்பதற்காக இந்தப்பகுதிக்குக் களை வெட்ட வருவது உண்டு.முன்பு செங்கல் வீடு கட்டுபவர்கள் மாளிகைமேட்டு அருகே கிணறு தோண்டுவார்கள்.கிணறும் கிடைத்துவிடும்.வீடு கட்டுவதற்கு உரிய கல்லும் கிடைத்துவிடும்.

கங்கைகொண்ட சோழபுரத்து மதில் சுவர்கள் இடிபாடுகள்தான் இன்றைய அணைக்கரையில் உள்ள அணைகட்ட உதவிய கற்களாகும்.

சிதம்பரத்திற்கு அருகே உள்ள கிள்ளை,பிச்சாவரம் பகுதிகள் சோழர்காலத்தில் துறைமுக நகராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனச் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ஒரிசா வரை தமிழர்கள் கடல்வழியாகப் பரவிப்போர் செய்துள்ளமைக்குப் பல சான்றுகள் உள்ளன என்கிறார்.கிழக்குக் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ் அடையாளங்களுடன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர் என்கின்றார்.

கங்கைகொண்ட சோழபுரத்தின் வராலற்றுச் சிறப்பு உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரன் அவர்கள் இராசேந்திரச்சோழனுக்கு அவன் பிறந்த மார்கழி மாதம் திருவாதிரை விண்மீனில் விழா எடுத்தும் அகழாய்வுப்பணிகளை விரைவுப்படுத்தியும் வெளியுலகிற்கு இந்த அரிய இடத்தை வெளிப்படுத்தினார். அவர்காலத்தில் ஊக்கம் பெற்ற அகழாய்வுப் பணிகள் இன்று பராமரிப்பின்றி எருமை மாடுகள் வெயில் நேரத்திற்கு விழுந்து புரளும் நீர்க்குழிகளாக உள்ளன.

சிலைகள் சரியாகப் பராமரிக்காமல் மழை,வெயிலில் நனைந்து நிற்கின்றன.பிற்காலத்தில் உருவான அழகர்கோயில் பகுதியில் உள்ள யானைச்சிற்பம் கண்கவர் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.பழங்காலச் சிற்பம் என்பதால் இப்பொழுது இடிபாடுகளுடன் சிதைந்து காணப்படுகிறது.பழைமை மாறாமல் அதனைப் பாதுகாப்பது அரசுக்கும் மக்களுக்கும் உரிய கடமையாகும்.

தொடர்புடைய என் முந்தையப் பதிவுகள்
1.செங்கல்மேடு கலிங்கச்சிற்பம்

2.வீரராகவ ரெட்டித்தெரு காளியம்மன்கோயில்


2.மாளிகைமேடு அகழாய்வுக்குழிகள்,சிலைகள்

3.அழகர்கோயில் யானைச்சிற்பங்கள்

4.இடைக்கட்டு பிடாரியம்மன்

நன்றி :
தமிழ் ஓசை களஞ்சியம்,01.02.2009

3 கருத்துகள்:

sshsoldstudents சொன்னது…

Respectable Scholar Mr. M.I,
Sir, unable to type in tmail. Please accept my comments.
Wonderful article has written by you. We would like to wish and pray to God for you long live. I hope you may know ther is a street name in Singapore is named "Chaulia street". And also a Mosque also named as " Masjid Chaulia". These areas are still majority Tanjore district people living.
Thank you sir,
Basheer from New Delhi

sshsoldstudents சொன்னது…

Respectable Scholar Mr. M.I,
Sir, unable to type in tmail. Please accept my comments.
Wonderful article has written by you. We would like to wish and pray to God for you long live. I hope you may know ther is a street name in Singapore is named "Chaulia street". And also a Mosque also named as " Masjid Chaulia". These areas are still majority Tanjore district people living.
Thank you sir,
Basheer from New Delhi

சிம்ம‌பார‌தி சொன்னது…

மிக அருமையான பயனுள்ள தகவல்கள். நான் ஒருமுறை இக்கோவிலை சென்று காணும் வாய்ப்பு பெற்றேன். ஆனால்
இதுபோன்ற வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசாங்கம் ஏதேனும் வழிவகை செய்துள்ளதா?.
நாங்கள் துபாயில் 'தமிழ்தேர்' என்ற ஒரு மாத இதழை கடந்த 3 வருடங்களாக நடத்தி வருகிறோம். நீங்கள் இதுபோன்ற
பயனுள்ள கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் அதனை தங்களது பெயரில் பிரசுரித்து இங்கு உள்ள அனைவரும் அறியும்
வகையில் செய்ய விரும்புகிறோம்.

எனது பெயர் சிம்மபாரதி, மின்னஞ்சல்:reachsimma@gmail.com or simmabharathi@gmail.com

நன்றி