நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 21 பிப்ரவரி, 2009

மக்கள் தொலைக்காட்சியில் மானம்பாடிகள் நிகழ்ச்சியில் வை.கோ.பேச்சு

மக்கள் தொலைக்காட்சியில் இன்று 21.02.2009காரி(சனிக்)கிழமை இரவு ஒன்பதுமணி முதல் பத்துமணி வரை "மானம்பாடிகள்" என்ற தலைப்பில் திரு.வை.கோ.அவர்கள் அரியதொரு சொற்போர் நிகழ்த்தினார்.

காலம்,இடம்,நேரம் உணர்ந்து பேசப்பட்ட அரிய பேச்சு.திரு.வை.கோ.அவர்கள் தமிழ் இலக்கியங்களில் நல்ல பயற்சியுடையவர் என்பதை அவரின் அரசியல் எதிரிகள்கூட ஒத்துக் கொள்வார்கள்.அதுபோல் உலக அரசியல்,இலக்கியங்களில் தோய்ந்த அறிவுடையவர் என்பதும் அவரின் அறிவாற்றல் உணர்ந்தவர்களுக்கு விளங்கும்.

இன்றைய பேச்சில் மான உணர்வுக்கு முதன்மையளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சங்க இலக்கியத்தின் புறநானூறு(சேரமான் கணைக்கால் இரும்பொறையின் பாடல்), சிலப்பதிகாரம், கம்பராமாயணம்,திருக்குறள், இவற்றை மேற்கோள் காட்டிப் பேசியது எம்மை வியப்பில் ஆழ்த்தியது.தமிழ்ப்பேராசிரியர்கள் செய்யவேண்டிய வேலையை வை.கோ அவர்கள் செய்தமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்.தமிழர்களின் மான உணர்வை நினைவூட்டி,தமிழர்கள் மான உணர்வுக்கு முதன்மையளிப்பவர்கள் என்றும் பழிச்சொல்லுக்கு இடம்தராதவர்கள் என்றும் அரிய மேற்கோள்களைக் காட்டிப் பேசினார்.

இந்திய விடுதலைக்கு உழைத்த சந்திரசேகர ஆசாத்,பகத்சிங்,சுகதேவ்,இராசகுரு, நேதாசி, வீரபாண்டிய கட்டப்பொம்மன்,பூலித்தேவன்,மருதுசகோதரர்கள் செய்த ஈகங்களை நினைவூட்டிப் பேசியமை மகிழ்ச்சி தந்தது.

இலியட் முதலான மேனாட்டுக் காப்பியங்கையும் பொருத்தமுற மேற்கோள் காட்டினார்.

கியூபா விடுதலைக்கு உழைத்த மாவீரன் சேகுவேரா பற்றியும் அரிய தகவல்கள் தந்தார். நிறைவாகக் கம்பராமாயணத்தை எடுத்து அதில் இடம்பெறும் இராமன் இராவணப் போர்க்காட்சிகளை விளக்கும்பொழுது அவரின் கம்பராமாயண அறிவு புலப்பட்டது.

இன்றைய நாட்டு நடப்புகளை நயம்படக்காட்ட வீடணன்,கும்பகர்ணன்,இராவணன் பாத்திரங்களை மிகச்சரியாக எடுத்துரைத்துப் பேசினார்.அரிய இலக்கியப் பாடம் படித்த பட்டறிவு எனக்கு உண்டானது.இப்பேச்சைப் படியெடுத்து மக்களுக்கு வழங்கினால் நல்ல இலக்கிய உணர்வுபெறுவர்.

நேரத்தைக் கொல்லும் பட்டிமன்ற அரட்டைகளிலும்,மாமியார் மருமகள் அழுகைகளிலும் மானாக மயிலாக ஆடும் வாலைக்குமரிகளின் பாலியல் குத்தாட்டங்களிலும் சிக்கிச் சிதறும் தமிழினத்திற்கு இந்த உரை ஓர் அருமருந்து.

5 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

காணொளிச் சுட்டி கிடைக்கப் பெற்றால் தெரியப் படுத்துங்கள் முனைவரே!
தகவலுக்கு மிக்க நன்றி!!

சுதேசன் சொன்னது…

காணொளிச் சுட்டி கிடைக்கப் பெற்றால் தெரியப் படுத்துங்கள்.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல தகவல்.நன்றி

karu சொன்னது…

dear sir .thank for ur news/ if u got the link pl.let me know thanx

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் அன்பர்களே!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதைக் கண்டேன்.யாரும் இணையத்தில் ஏற்றியதாகத் தெரியவில்லை.தெரிந்தால் தெரிவிப்பேன்.
மு.இளங்கோவன்