நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்


பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

 தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை,கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

 நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள். இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985 இல் முனைவர் (Ph. D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.

 பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970-72-75)காலங்களில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975 ஆகத்து மாதம் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978 சனவரியில் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார். தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற இவர் படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத் துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார்.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயற்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டவர். இவர் தமிழ் - இந்து நாகரிகம் மற்றும் நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியவர். மேலும் முதுகலை முது தத்துவமாணி (M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர். இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் புலமையுடையதுடன் சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப் பணியிலும் வல்லவர்.

 நா.சுப்பிரமணியன் அவர்களின் குடும்பம் இயல்பிலேயே சமய ஈடுபாடுடைய குடும்பம். தந்தையார் வழியாக அமையப்பெற்ற சமயநூல் பயிற்சி இவருக்கு இயல்பாகக் கிடைத்தது. கந்தபுராணத்தை ஆழமாகப் பயின்ற இவர் இளம் அகவையிலேயே அதனைப் பொருள் உணர்ந்து மற்றவருக்கு விரித்துரைக்கும் திறன் பெற்றிருந்தார். சென்னையில் தங்கிக் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தியதும் அதனை மிகச்சிறந்த நூலாக வெளியிட்டுத் தமிழுலகிற்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க பணிகளாகும். சற்றொப்ப அறுபதாண்டுகள் கந்தபுராண ஈடுபாட்டால் விளைந்த நூல் "கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்" என்பதாகும்.இந்த நூலின் நடைநலம் தெளிந்த நீரோடைபோல் அமைந்து இவரின் புலமை காட்டி நிற்கிறது.

 இந்தியச் சிந்தனைமரபு என்னும் தலைப்பில் அமைந்த இவரின் புத்தகம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம் - ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியத் தத்துவங்களை நமக்கு ஒருசேரத் தொகுத்துத் தருகின்றது.

 வேதங்கள் சங்கிதைகள் உபநிடதங்கள் இவற்றின் துணைகொண்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார். மிகச்சிறந்த வரலாற்று உணர்வும் இலக்கியப்புலமையும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்களால்தான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்தமுடியும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம். பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் அவர்கள் முன்வைத்துள்ளது அவர்தம் சமகாலப் பார்வையைக் காட்டுகிறது.

 நால்வர் வாழ்வும் வாக்கும் என்ற இவரின் அரியநூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றை அழகுற எடுத்துரைத்துப் பகுத்தறிவுக்கண்கொண்டு பார்த்துள்ள பாங்கு போற்றத்தக்கது. மிகைச் செய்திகள் என சிலவற்றையும் சமயப்பூசலில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனச் சிலவற்றையும் சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளது அவரின் ஆய்வுத்திறம் சமயம் கடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.


பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் தரமான திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர்.தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து 2002 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார். சிலகாலம் தங்கியிருந்துவிட்டுக் கனடாவில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார். கனடாவிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்து வருகின்றார்.

 ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் என்றும் சுப்பிரமணியனாரின் பெயரைச் சொல்லும்வண்ணம் அரிய நூல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், இந்தியச் சிந்தனைமரபு, தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி, நால்வர் வாழ்வும் - வாக்கும் கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதிகள் :1 மற்றும் 2), காலத்தின் குரல், திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள் ஆகிய நூல்கள் பேராசிரியரின் தமிழ்பணிக்குச் சான்றாகும்.

 பேராசிரியரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி ஈழத்திலும் தமிழகத்திலும் கனடாவிலும் பல்வேறு அமைப்புகள் பாராட்டு பரிசுகள் நல்கி மதித்துள்ளன. அவற்றுள் தமிழக அரசு சிறந்த நூலுக்காக இந்தியச்சிந்தனை மரபு என்ற நூலைத் தேர்தெடுத்துப் பரிசில் வழங்கியது. பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை என்ற நூல் இயற்றியமைக்கு இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது. முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது. கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

 கந்தபுராணத்தில் பேரறிவு பெற்றமைக்குத் தந்தையாரே காரணம் எனக் குறிப்பிடும் சுப்பிரமணியனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் வழிகாட்டல் பேருதவியாக அமைந்ததை நன்றியுடன் குறிப்பிடுவார். பேராசிரியரின் துணைவியார் கௌசல்யா அவர்கள் இவர்தம் ஆய்வுத்துறைக்குப் பேருதவியாக இருந்து உதவியவர். இருவரும் இணைந்தும் இலக்கியப் படைப்புகளை வழங்கியவர்கள்.

 இசையில் நல்ல புலமைபெற்ற அம்மையார் அவர்கள் தமிழிலக்கியத்திலும் நல்ல பயிற்சி பெற்றவர்கள். மேலும் இதழியில், நாடகவியல் துறைகளில் நல்ல அறிவு பெற்றவர். அறிவுடைய மனைவியாரைப் போலவே மக்கட் செல்வங்களும் பேராசிரியரின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது போற்றுதலுக்கு உரியது. 67 அகவையிலும் இந்தத் தமிழறிஞர் தமிழ்ப் பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார்.


நனி நன்றி:
தமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், தொடர் 22, நாள்: 22.02.2009
திருவாட்டி கௌசல்யா சுப்பிரமணியன், முனைவர் பொற்கோ, பேராசிரியர் பசுபதி(கனடா), பிரஞ்சு நிறுவன நூலகம், புதுச்சேரி

கருத்துகள் இல்லை: